பிரிவுகள்
இலக்கியம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – 2

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள்
அத்தியாயம் இரண்டு
பாடத்திட்டம்

அவரது மரணம் 1994ன் கோடையில் வந்தது. யோசித்துப்பார்க்கையில், அதற்கு வெகு முன்பே ஏதோ கெட்டது வரப்போகிறதென அவருக்கு தெரிந்துவிட்டதென்றே தோன்றுகிறது. நடனமாடுவதை நிறுத்திய நாளே அவருக்கு தெரிந்துவிட்டது.

எனது முதிய பேராசிரியர், எப்போதுமே நடனக்காரராகவே இருந்தார். இசை பற்றிக் கவலையில்லை. அதிரடி இசை, மெல்லிசை, அனைத்தையும் விரும்பினார். கண்களை மூடிக்கொண்டு, மந்தாசப்புன்னகையுடன் அவரது தனி தாளத்திற்கு ஆட ஆரம்பித்துவிடுவார். எப்போதுமே நன்றாக இருக்கும் என கூற முடியாது. ஆனால் அவருக்கு ஆட துணையேதும் தேவையில்லை. மோரி தனியாகவே ஆடினார்.

ஹார்வர்ட் சதுக்க தேவாலயத்தில் புதன் இரவுகளில் நடக்கும் “விருப்பப்படி நடனம்” (“Dance Free” correct trans?) என்ற நிகழ்விற்கு தவறாமல் செல்வார். மிண்ணும் விளக்குகளும் அதிரும் ஒலிப்பெருக்கியும் கொண்ட, பெரும்பாலும் மாணவர்களே நிறைந்த அறையில், வெள்ளை சட்டை கருப்பு பைஜாமா கழுத்தில் துண்டு சகிதமாக, எந்த இசை ஒலிக்கிறதோ, அதற்கு நடமாடிக்கொண்டிருப்பார் மோரி. சுழல்வார், திரும்புவார், கைகளை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டிருப்பார் – முதிகில் வேர்வை வழியும் வரை. பல புத்தகங்களை எழுதிய, பல வருடங்கள் கல்லூரிப் பேராசிரியராக அனுபவம் கொண்ட மிக முக்கியமான சமூகவியல் ஆய்வாளர் அவர் என்பது அங்கு யாருக்கும் தெரியாது. இவர் யாரோ வயதான பைத்தியம் என்றே அங்கு நினைத்திருந்தனர்.

ஒரு முறை டாங்கோ இசை ஒலிநாடாவை கொண்டு வந்து, ஒலிப்பெருக்கிகளில் போடச்செய்தார். பொங்கியெழுந்த டாங்கோ இசைக்கு தேர்ந்த லத்தீன் காதலரைப்போல மேலும் கீழும் முன்னும் பின்னும் என தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தார். ஆடி முடித்ததும் அரங்கில் எழுந்த கரகோஷம் அவரை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. அக்கண உணர்வை கொண்டு வாழ்க்கை முழுவது வாழ்ந்துவிட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு நாள் நடனம் நின்றது.

அறுபதுகளில் அவருக்கு ஆஸ்துமா உருவாகத்தொடங்கியது. முச்சுவிடுதல் ஓர் பணியாக மாறியது. ஒரு முறை சார்லஸ் நதிக்கரையில் நடந்துக்கொண்டிருந்த போது வீசிய குளிர்க்காற்று இவரை மூச்சுத்திணரச்செய்தது. அவசரமாய் மருத்துவமணை கொண்டுச்சொல்லப்பட்டு அட்ரலின் ஏற்றப்பட்டது.

சில வருடங்கள் கழித்து, நடப்பதில் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் தடுமாறி விழுந்துவிட்டார். இன்னோர் இரவு, திரையரங்கின் படிகளில், சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியுற, கீழே விழுந்தார்.

“அவருக்கு காத்து வேணும். தள்ளி நில்லுங்கப்பா” என்றார் ஒருவர்.

அப்போது அவர் தனது எழுபதுகளில் இருந்தார். சுற்றி இருந்தவர்கள், “வயசாயிடுச்சு பா” என்று முனுமுனுத்தபடி அவரை தூக்கிவிட்டனர். ஆனால் தனது உடலினைப் பற்றிய அறிதல் நம்மை விட அதிகமான அவருக்கு பிரச்சனை வேறேதோ என தோன்றியது. இது வெறும் வயது சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல. என்னேரமும் அயற்வாகவே இருந்தது. தூங்குவதிலும் பிரச்சனைகள் இருந்தன. தான் இறந்துக்கொண்டிருப்பதை போன்று கனவுகள் வந்தன.

அவர் மருத்துவர்களை பார்க்க ஆரம்பித்தார். ரத்தத்தை பரிசோதித்தனர். சிறுநீரை பரிசோதித்தனர். பின் பக்கமாக குழாய் விட்டு குடலை பரிசோதித்தனர். இவையெதுவும் விடையளிக்காததால், ஒரு மருத்துவர் அவரது தொடை தசையை கொஞ்சம் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார். நரம்பியல் பிரச்சனை ஏதோ இருப்பதை போல பட்டதால் அவரை மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தினர். அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, நரம்புகளின் உணர்ச்சிகளை கூர்ந்து கவனித்தனர்.

“இத இன்னும் கொஞ்சம் ஆழமா பாக்கனும்” என்றார்கள் மருத்துவர்கள், அவரது சோதனை முடிவுகளை நோக்கியபடி.

“ஏன், என்ன ஆச்சு?” என்றார் மோரி

“சரியா சொல்ல முடியல. ஆனா உங்க காலம் மெதுவா இருக்கு.” காலம் மெதுவாக உள்ளதா? என்ன அர்த்தம் இதற்கு?

இறுதியாக, ஆகஸ்ட் 1994ன் வெயிலும் ஈரப்பதமுமான ஓர் நாளில் மோரியும் அவரது மனைவி சார்லட்டும் நரம்பியல் நிபுணரின் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களை அமரச்செய்து, மெல்ல அந்த செய்தியை உடைத்தார். மோரிக்கு வந்துள்ளது அம்யோடைப்பிக் லேட்டரல் ஸ்க்லெரோஸிஸ் (amyotrophic lateral sclerosis (ALS)), மிகக்கொடிய நரம்பு நோய்.

இதற்கு தீர்வு (cure) ஏதும் இல்லை.

“எனக்கு எப்படி வந்துது இது?” என்றார் மோரி. யாருக்கும் தெரியவில்லை.

“உயிர் கொல்லி நோயா இது?”

“ஆமாம்”

“அப்ப, நான் சாகப்போறனா?”

ஆமாம் என்றார் மருத்துவர். மன்னிக்கனும்.

மோரியுடனும் சார்லட்டுடனும் இரண்டு மணி நேரம் அமர்ந்து அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். அவர்கள் புறப்படுகையில், ஏ.எல்.எஸ் குறித்த சிறு சுற்றறிக்கைகளை கொடுத்தார் மருத்துவர். அவர்கள் ஏதோ வங்கி கணக்கு திறக்கப்போவதை போல. வெளியே வெயில் அடித்துக்கொண்டிருந்தது. மக்கள் அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர். ஒரு பெண் வாகன நிறுத்தத்தில் காசை போட ஓடினார். இன்னொருவர் மளிகை சாமான்களை சுமந்தபடி சென்றார். சார்லெட்டின் மனதில் ஒரு கோடி எண்ணங்கள் அலை மோதின : இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு நமக்கு? எப்படி சமாளிக்கப்போறோம் ? செலவுக்கு என்ன செய்யப்போறோம் ?

எனது பேராசிரியரை, தன்னைச்சுற்றிலும் இருந்த நிகழ்வுகளின் வழமை, தாக்கியது. உலகம் நின்றிருக்க வேண்டாமா? எனக்கு என்ன ஆனது என இவர்களுக்கு தெரியவில்லையா?

ஆனால் உலகம் நிற்கவில்லை, இவர்களை கவனிக்கக்கூட இல்லை. காரின் கதவை மெல்ல திறந்த போது, பள்ளத்திற்குள் விழுவதைப்போல உணர்ந்தார் மோரி.

இனி என்ன?

எனது பேராசிரியர் விடையை தேடிக்கொண்டிருக்கையில் நோய் அவரை வெல்லத்தொடங்கியது. நாளுக்கு நாள். வாரத்திற்கு வாரம். ஒரு நாள் தனது காரை வெளியே எடுக்கையில் பிரேக்கை அழுத்த முடியாமல் போனது. அன்றுடன் வாகனம் ஓட்டுவது நின்றது.

நடக்கையில் தடுக்கியபடியே இருந்ததினால் ஒரு ஊன்றுகோல் வாங்கினார். அன்றிலிருந்து இயல்பாக நடப்பது நின்றது.

வை.எம்.சி.ஏ வில் நீச்சலுக்கு சென்றுகொண்டிருந்தார். ஆனால் தானாக உடைகளை களைய முடியாது போனது. ஆகவே, குளத்தில் இறக்கி, ஏற்ற, உடைகளை களைத்து மாட்ட தனது முதல் உதவியாளரை – டோனி என்ற சமயவியல் மாணவனை – வேலைக்கு சேர்த்தார். அதோடு அவரது தனிமை முடிவுக்கு வந்தது.

1994ன் இலையுதிர் காலத்தில் தனது கடைசி விரிவுரைக்காக பிராண்டைஸ் வளாகத்திற்கு வந்தார். அவர் இதை தவிர்திருக்கலாம். பல்கலைக்கழகம் ஒன்றும் சொல்லி இருக்காது. அவர்களுக்கு புரிந்திருக்கும். ஏன் இத்தனை மக்களின் முன் கஷ்டப்படவேண்டும்? வீட்டிலேயே இருந்திருக்கலாம். ஆனால் மோரிக்கு, வேலையை விடும் எண்ணம் தோன்றவேயில்லை.

மாறாக 20 வருடங்களாக தனது வீடு போல இருந்த அந்த வகுப்பறைக்குள் மிக மெல்ல விந்தி விந்தி நுழைந்தார் மோரி. ஊன்றுகோல் உதவியுடன் நடந்தபடியால் மெல்லமாகவே தனது இருக்கைக்கு செல்ல முடிந்தது. அமர்ந்து, கண்ணாடியை மேஜையின் மீது போட்டு விட்டு, நிசப்தத்துடன் தன்னை நோக்கிய மாணவர்களை பார்த்தார்.

“நண்பர்களே, நீங்க எல்லாம் சமூக உளவியல் படிக்க வந்திருக்கீங்கன்னு நினைக்கறேன். 20 வருஷமா இத நடத்தறேன். ஆனா முதன்முறையா சொல்றேன், இந்த பாடத்த எடுக்கறது உங்களுக்கு ஆபத்தானது. ஏன்னா எனக்கு ஒரு உயிர்கொல்லி நோய் வந்திருக்கு. ஆண்டு இறுதி வரைக்கும் உயிரோட இருப்பனான்னு சொல்ல முடியாது”

“இது உங்களுக்கு ஒரு பிரச்சனையா பட்டுதுன்னா நீங்க இந்த பாடத்துல இருந்து விலகலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது”

புன்னகைத்தார்.

அவரது ரகசியம் அதோடு முடிவிற்கு வந்தது.

ஏ.எல்.எஸ், ஏற்றிவைத்த மெழுகுவத்தியை போன்றது. நரம்புகளை உருக்கி, உடலை மெழுகுக்குவியலென ஆக்கிவிடும். பெரும்பாலும், கால்களில் தொடங்கி, மெல்ல மேலே ஏறும். உங்களின் தொடை தசைகளின் மீதான ஆளுமையை மறைந்து, நிற்பதே இயலாததாகிவிடும். இடுப்புத் தசைகள் செயலிழக்க, நேராக அமர்வது கடினமாகும். இறுதியில் இன்னும் உயிருடன் இருந்தால், நீங்கள் தொண்டையினுள் செலுத்தப்பட்ட குழாயின் மூலம் மூச்சிவிட்டுக்கொண்டிருக்க, தெளிந்த விழிப்புடன் உள்ள உங்களின் உள்ளமோ, ஒன்றிற்கும் உதவாத -கூடிப்போனால், கண்களை மட்டும் இமைக்கக்வும், நாக்கினை சொடுக்கவும் மட்டும் கூடிய – கூட்டினுள் அடைபட்டிருக்கும், அறிவியல் புனைக்கதைகளில் உடலுடன் உறைந்து போன மனிதனைப்போல. எப்படி போனாலும் நோய் வந்து 5 வருடங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது.

மோரியின் மருத்துவர்களின் அனுமானத்தின் படி, அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தன. ஆனால் அதை விடவும் குறைவே என அவருக்கு தெரிந்திருந்திருந்தது.

தலைக்கு மேல் கத்தி தொங்க, மருத்துவமணையில் இருந்து வெளியேறிய நிமிடம், மோரி ஓர் மிகப்பெரிய முடிவெடுத்தார். நான் இனி உதிர்ந்து மறைவதா அல்லது மீதமிருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்குவதா? என தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.

அவர் உதிரப்போவதில்லை. மரணத்தின் முன் அவமானப்படப்போவதில்லை.

மாறாக, மரணத்தை தனது கடைசி திட்டப்பணியாய், இனிவரும் நாட்களின் மையமாய் ஆக்கபோகிறார். அனைவரும் இறக்கப்போகிறோம் என்பதால், அவர் முக்கியமான VALUE, அல்லவா? அவர் ஒரு ஆய்வாகலாம். ஒரு மனித பாடப்புத்தகம். எனது மெதுவான, நிதானமான மரணத்தில் என்னை படியுங்கள். எனக்கு என்ன நேர்கிறதென காணுங்கள். மெல்ல, என்னுடன் கற்றுக்கொள்ளுங்கள்.

மோரி வாழ்விற்கும் இறப்பிற்குமான அந்த இறுதி பாலத்தை கடப்பார், தனது பயணத்தை விவரித்தபடி.

இலையுதிர்கால பாடகாலம் விரைவில் முடிந்தது. மாத்திரைகள் அதிகரித்தன. சிகிச்சை, அன்றாட நிகழ்வானது.

மோரியின் தளரும் கால்களுக்கு செயலூட்ட அவரது இல்லத்திற்கு வந்த செவிலிகள், அவரது கால்களை முன்னும் பின்னுமாக, கிணற்றிலிருந்து நீர் இரைப்பதை போல, நகர்த்தி தசைகளை உயிர்ப்பிக்க முயற்சித்தனர். மசாஜ் வல்லுனர் வாரமொருமுறை வந்து கால்களில் படரும் இறுக்கத்தை போக்க முயற்சித்தார். தியான ஆசிரியருடனான சந்திப்புகளில், கண்களை மூடி, அலைபாயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தனது முழு உலகத்தையும், ஒரு சுவாசத்திற்கும் அடக்க முயற்சித்தார். உள்ளே, வெளியே, உள்ளே, வெளியே…

ஒரு நாள் ஊன்றுகோலுடன் நடந்த போது, படிகளில் காலிடறி விழ நேர்ந்தது. ஊன்றுகோல் போய், நடப்பான் (Walker) வந்தது. அவரது உடல் வலுவிழந்துகொண்டிருந்ததனால், கழிப்பறைக்கு சென்று வருவது பாரமாய் மாறியது. பெரிய குடுவையில் சிறுநீர் கழிக்கத்தொடங்கினார். இதை செய்யும்போது அவர் தன்னைத்தானே தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் குடுவையை வேறொருவர் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

நம்மில் பலருக்கு இவையெல்லாம் அவமானமாக இருந்திருக்கும், குறிப்பாக மோரியின் வயதில். ஆனால் மோரி நம்மில் பலரைப்போல அல்ல. தன்னைக்காண வரும் நெருங்கிய நண்பர்களிடம் “இதோ பார். நான் மூத்திரம் போகனும். கொஞ்சம் உதவ முடியுமா? உனக்கொன்னும் பிரச்சனை இல்லையே?” என்பார்.

பெரும்பாலும், இதில் பிரச்சனையேதும் இல்லாதது, அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

உண்மையில் அவர் இப்போது தன அதிகமாக விருந்தினர்களை சந்திக்க ஆரம்பித்தார். மரணத்தை குறித்து, அதன் அர்த்தத்தை குறித்து, அதை புரிந்துகொள்ளாமலேயே, அதை கண்டு பயப்படும் நமது சமூகத்தை குறித்தெல்லாம் கருத்தரங்குகள் நிகழ்த்தினார். மோரி தனது நண்பர்களிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் இது தான். தனக்கு உதவவேண்டும் என தோன்றினால், அவர்கள் செய்யவேண்டியதெல்லாம், தன்னை பரிதாபதுடன் பார்க்காமல், எப்பொழுதும் போல தன்னை சந்தித்தும், உரையாடியும், தங்களது பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டும் இருக்க வேண்டும். மோரி பொறுமையாக நாம் கூறுவதை கேட்கக்கூடியவர் என்பதனால், அவரிடம் தங்களது பிரச்சனைகளை பகிர்ந்துகொள்வது நண்பர்களுக்கு வாடிக்கை.

இத்தனைக்கு பிறகும், மோரியின் குரல் பலமும், வரவேற்பும் நிறைந்ததாகவும், மனம் ஒரு கோடி எண்ணங்களுடனும் துடிப்புடனும் இருந்தது. “இறத்தல்” என்பதன் அர்த்தம் “உபயோகமற்று போதல்” எனும் எண்ணத்தை தகர்க்கவேண்டும் என்ற வேட்கையுடன் செயல்பட்டார்.

புத்தாண்டு வந்து போனது. யாரிடமும் கூறவில்லையெனினும், இதுவே தனது கடைசி ஆண்டு என மோரிக்கு தெரிந்திருந்தது. அவர் இப்போது சக்கர நாற்காலி உபயோகிக்கத்தொடங்கியிருந்தார். தனக்கு பிரியமானவர்களிடன் கூற நினைத்ததையெல்லாம் கூறிவிடவேண்டுமென காலத்துடம் போராடிக்கொண்டிருந்தார்.

பிரண்டேயில் தனது சகபணியாளர் மாரடைப்பு காரணமாக இறந்த போது அவரது இறுதிச்சடங்கிற்கு சென்று சோகமாய் வீடு திரும்பினார்.

“ச்ச, எல்லாம் வீண்” என்றார் அவர். “ அத்தன பேர் அருமையான விஷயங்கள சொன்னாங்க. ஆனா அதயெல்லாம் கேக்க இர்வ் இல்ல”.

மோரிக்கு ஒரு யோசனை தோன்றியது. சில தொலைபேசி அழைப்புகள். தேதி குறித்தல். ஓர் குளிர்ஞாயிறு மதியம், நண்பர்களும் உறவினரும் புடைசூழ, மோரியின் “வாழும் இறுதிச்சடங்கு” நடந்தது. சிலர் அழுதனர். சிலர் சிரித்தனர். ஒரு பெண் கவிதை வாசித்தார்.

“My dear and loving cousin …
Your ageless heart
as you move through time, layer on layer,
tender sequoia …”

அவர்களுடன் சேர்ந்து மோரியும் அழுதார், சிரித்தார். நமது பிரியமானவர்களிடம், மனதின் அடியாழத்திலிருந்து நாம் கூற விரும்புவதையெல்லாம், அன்று மோரி கூறினார். “வாழும் இறுதிச்சடங்கு” பெரும் வெற்றியானது.

மோரி இறக்கவில்லை.

கூறப்போனால், அவரது வாழ்வின் மிக விநோத பகுதி இனிதான் வரவிருந்தது.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

17 replies on “மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – 2”

This story is very nice to read, but at the end of the story explains the real face of our life. Here, our hero has experienced his end before. Every one what and why they are living for is an endless question that has comes in our entire life, the answer is unknown of all of them, But this has expresssed the think in a best way. Keep it up.

தங்கள் தளம் பற்றி எஸ்.ரா தனது தளத்தில் குறிப்பிட்டுள்ளார் அதனை கண்டு இங்கே வந்தேன்,
மிக அருமையான தொடக்கம் மோரியின் நாவல். இந்தப்பணி சிறக்கவேண்டும். இரண்டு அத்தியாயங்களையும் படித்தேன் மிக நன்றாக உள்ளது.

தங்களின் தளத்தை தொடர்ந்து படிக்க தூண்டுகிறது நன்றியும் வாழ்த்துக்களும்.

ரமாசெல்வி

என்ன சார்,

தொடரை தொடருங்கள், தினமும்
வந்து ஏமாந்து செல்கிறேன்.

அன்புடன்
அதிரை தங்க செல்வராஜன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s