பிரிவுகள்
அரசியல் சமூகம் பொது மொழிபெயர்ப்பு

கொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது – யுவால் நோவா ஹராரி

ஆங்கில மூலம் : https://time.com/5803225/yuval-noah-harari-coronavirus-humanity-leadership/

யுவால் நோவா ஹராரி

கொரோனாவைரஸ் கொள்ளைநோய்க்கு பலரும் உலகமயமாக்கத்தைப் பழி சொல்கின்றனர். இது போன்ற நோய்ப்பரவல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி சுருங்கிக்கொள்வதே என்று எண்ணுகின்றனர். மதில்களை எழுப்புதல், பயணங்களை கட்டுப்படுத்துதல், வணிகத்தைச் சுருக்கிக்கொள்ளுதல். குறுகிய கால தனிமைப்படுத்துதல் கொள்ளை நோயின் பரவலைத் தடுப்பதற்கு அவசியம் தான்; ஆனால் நீண்ட கால தனிமைப்படுத்துதல், நோய்த் தொற்றுக்கு எதிரான எந்த வித உண்மையான பாதுகாப்பையும் அளிக்காது என்பது மட்டுமல்ல, பொருளாதார சீர்குலைவிற்கும் இட்டுச்செல்லும். கொள்ளை நோய்களுக்கான உண்மையான முறிமருந்து தனிமைப்படுதல் அல்ல; மாறாக ஒத்துழைப்பே. 

உலகமயமாக்கத்தின் முன்னரும் கொள்ளைநோய்கள் கோடிக்கணக்கான மக்களை கொன்றுகொண்டு தான் இருந்தன. 14ஆம் நூற்றாண்டில் விமானங்களோ, உல்லாசக்கப்பல்களோ இல்லை. எனினும் கருப்பு மரண கொள்ளைநோய் பத்தாண்டுகளுக்குள் கிழக்காசியாவில் இருந்து வட ஐரோப்பா வரை பரவி, 7.5 கோடியில் இருந்து 20 கோடி வரை மக்களை கொன்றது – இது யூராசியாவின் மொத்த மக்கள்தொகையில் கால் பங்கு. இங்கிலாந்தில் பத்தில் நான்கு பேர் இறந்தனர். ஃப்ளாரன்ஸ் நகரத்தின் 1 லட்சம் குடிமக்களில் 50,000 பேர் இறந்தனர். 

1520, மார்ச் மாதம் ஃப்ரான்சிஸ்கோ டி இக்யுவா என்ற மனிதர், பெரியம்மை நோயுடன் மெக்சிகோவில் வந்திறங்கினார். அந்த காலத்தில் மத்திய அமெரிக்காவில் ரயில்களோ, பேருந்துகளோ ஏன் கழுதைகளோ கூட இல்லை. எனினும் டிசம்பருக்குள் பெரியம்மை, மத்திய அமெரிக்கா முழுவதையுமே நிலைகுலையச் செய்து, மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மனிதர்களைக் கொன்றது. 

1918ல் ஒரு குறிப்பிட்ட வீரிய ரக ஃப்ளூக்காய்ச்சல், சில மாதங்களுக்குள்ளாகவே உலகின் இண்டு இடுக்குகளுக்கெல்லாம் பரவி, 50 கோடி மக்களை தாக்கியது. அன்றைய மக்கள்தொகையின்படி இது மனித இனத்தின் கால் விகிதம். இந்த கொள்ளை நோய் இந்தியாவில் 5 சதவிகித மக்களைக் கொன்றது. தாஹிதி தீவினில் 14% பேர் இறந்தனர். சமோவாவில் 20%. மொத்தத்தில் ஒரு ஆண்டிற்குள் கிட்டத்தட்ட பத்து கோடி மக்களை கொன்று குவித்தது இந்தக் கொள்ளைநோய். இது, முதலாம் உலகப்போர் நான்கு ஆண்டுகளில் கொன்றழித்த மக்கட்தொகையை விடவும் அதிகம். 

1918 முடிந்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. இன்று வளரும் மக்கள்தொகையாலும் மேம்பட்ட போக்குவரத்தினாலும் மனித இனம், கொள்ளை நோய்களுக்கு மேலும் சாதகமாக இருக்கிறது. நவீன பெருநகரங்களான டோக்யோவோ மெக்சிகோ நகரமோ நோய்க்கிருமிகளுக்கு பண்டைய  ஃப்ளாரன்ஸ் நகரத்தை காட்டிலும் சிறந்த வேட்டைக்களமாக இருக்கும். இன்றைய உலகளாவிய போக்குவரத்து என்பது 1918ஐ காட்டிலும் மிக வேகமானது. ஒரு வைரஸ் 24 மணி நேரத்திற்குள் பாரிஸிலிருந்து டோக்யோவிற்கோ மெக்சிகோ நகரத்திற்கோ சென்றுவிட முடியும். எனில் நாம், ஒரு கொடூர நோய்த்தொற்றிலிருந்து மற்றொன்றிற்கு என்று ஒரு கொள்ளைநோய் நரகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். 

ஆனால், கொள்ளை நோய்களின் வரவும் பாதிப்பும் உண்மையில் வெகுவாக குறைந்திருக்கின்றன. மிகக்கொடிய நோய்களான எயிட்ஸும் எபோலாவும் தாக்கியபோதும், 21ஆம் நூற்றாண்டில் கொள்ளை நோய்கள், கற்காலம் தொடங்கி முன்னெப்போதையும் விட மிக குறைவான விகித மக்களையே கொன்றிருக்கின்றன. ஏனெனில் நோய்க்கிருமிகளுக்கு எதிராக மனிதர்களிடம் இருக்கும் மிகச்சிறந்த ஆயுதம் தனிமைப்படுதல் அல்ல; தகவலே. மருத்துவர்களுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் இடையிலான இந்த போரில் மனிதம் வென்றுகொண்டிருப்பதற்கான காரணம், நோய்க்கிருமிகள் கண்மூடித்தனமான மரபணுமாற்றங்களை நம்பிக்கொண்டிருக்க, மருத்துவர்களோ தகவல்களை அறிவியல் பகுப்பாய்விற்கு உட்படுத்துகின்றனர்.

நோய்க்கிருமிகளுடனான போரில் வெல்லுதல்

14ஆம் நூற்றாண்டில் கருப்பு மரணம் தாக்கியபோது அதன் காரணம் என்னவென்றோ அதற்கான தீர்வு என்னவென்றோ மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. நவீனயுகம் வரை, நோய்களுக்கு சினம் கொண்ட கடவுளரையோ, பேய்களையோ, கெட்ட காற்றையோதான் குறை சொன்னார்கள். பாக்டீரியாக்களோ வைரஸ்களோ இருப்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தேவதைகளை நம்பினர்; ஆனால் ஒரு துளி நீரில் கொடூர உயிர்கொல்லிகளின் படையே இருக்கும் என்று அவர்களால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. அதனால், கருப்பு மரணமோ, பெரியம்மையோ தாக்கினால் அதிகாரிகள் செய்யக்கூடியதெல்லாம் கடவுள்களுக்கும் துறவிகளுக்கும் கூட்டுப்பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்வதாகத் தான் இருந்தது. அது பயனளிக்கவில்லை; மாறாக, மக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடியதால் தொற்றுகள் பெருமளவில் பரவின. 

கடந்த நூற்றாண்டில், உலகம் முழுவதுமிருந்து விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் செவிலியர்களும் தாங்கள் அறிந்த தகவல்களை தொகுத்து, கொள்ளைநோய்க்குப் பின்னால் உள்ள இயங்குமுறை குறித்தும், அதனை எதிர்கொள்வது குறித்தும் புரிந்துகொண்டனர். புதிய நோய்கள் ஏன், எப்படி உருவாகின்றன என்றும், பழைய நோய்கள் எப்படி மேலும் வீரியம் கொள்கின்றன என்றும் பரிணாமக் கோட்பாடு விளக்கியது. மரபணுவியலின் துணை கொண்டு விஞ்ஞானிகள் நோய்க்கிருமிகளின் மரபணு ரகசியங்களை உளவு பார்த்தனர். அன்றைய மனிதர்களால்  கருப்பு மரணத்திற்கான காரணத்தை கடைசி வரை கண்டுபிடிக்கவே இயலவில்லை. ஆனால் இன்று இரண்டு வாரங்களுக்குள்ளாக, நம் விஞ்ஞானிகளால், புதிய கொரோனா வைரஸை அடையாளம் கண்டு , அதன் மரபுத்தொகுப்பினை வரிசைப்படுத்தி, மனிதர்களிடம் நோய் பாதிப்பைக் கண்டறிய நம்பகமானதொரு சோதனையையும் உருவாக்க முடிந்திருக்கிறது.

கொள்ளைநோய்களுக்கான காரணம் என்ன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவுடன் அவற்றை எதிர்கொள்வது எளிதாகிவிட்டது. தடுப்பூசிகள், நோயெதிர்ப்பு நுண்ணுயிர் மருந்துகள், மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ கட்டமைப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்து இந்த கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமிகளுக்கு எதிரான போரில், நமது கைகளை வலுப்பெற செய்திருக்கின்றன. 1967ல் கூட பெரியம்மை 1.5 கோடி மக்களை தாக்கி 20 லட்சம் பேரை கொன்றது. ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் உலகளாவிய பெரியம்மை தடுப்பூசி இயக்கம் எத்தனை வெற்றிகரமாக இருந்ததென்றால், 1979ல் உலக சுகாதார அமைப்பு, பெரியம்மைக்கு எதிரான போரில் மனித இனம் வென்றுவிட்டதாகவும் பெரியம்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அறிவித்தது. 2019ல் ஒருவர் கூட பெரியம்மையால் தாக்கப்படவோ இறக்கவோ இல்லை. 

எல்லையை பாதுகாத்தல்

தற்போதைய கொரோனா வைரஸ் கொள்ளைநோயைப் பற்றி வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன? 

முதற்பாடம் : உங்கள் எல்லைகளை மூடுவதன் மூலம் நோய்ப்பரவலை தடுக்க முடியாது. உலகமயமாக்கலுக்கு வெகு முன்பே, மத்திய காலகட்டத்தில் கூட, கொள்ளைநோய்கள் வேகமாகப் பரவின என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆக, நமது உலகளாவிய தொடர்புகளை 1348ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தொடர்பு அளவுகளுக்கு கொண்டு சென்றாலும் கூட போதாது. தனிமைப்படுத்தலின் வழியாக நம்மை உண்மையிலேயே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் இடைகாலகட்டத்திற்கு சென்றால் போதாது; கற்காலத்திற்கு செல்ல வேண்டும். நம்மால் அது முடியுமா?

இரண்டாவதாக, நம்பகமான அறிவியல் தகவல்களை பகிர்ந்துகொள்வதும் உலகளாவிய ஒற்றுமையுமே உண்மையான பாதுகாப்பை நமக்கு தரும் என்பதே வரலாறு நமக்குச் சொல்வது. ஒரு நாடு கொள்ளை நோயால் பாதிக்கப்படும்போது, அந்நாடு பொருளாதாரப் பேரழிவு குறித்த அச்சமின்றி தகவல்களை நேர்மையாக பகிர வேண்டும். அதே நேரம் மற்ற நாடுகளும் அத்தகவல்களை நம்ப வேண்டும்.  பாதிக்கப்பட்ட நாட்டினை ஒதுக்கிவைக்காமல், அதற்கு உதவிக்கரம் நீட்டவேண்டும். இன்று சீனா உலக நாடுகளுக்கு கொரோனாவைரஸ் குறித்த பல முக்கியான பாடங்களை கற்றுத்தர இயலும். ஆனால் அதற்கு அதிக அளவிலான பன்னாட்டு நம்பிக்கையும் ஒத்துழைப்பும் அவசியம். 

பயனுள்ள தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் பன்னாட்டு ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தனிமைப்படுத்தலும் ஊரடங்கு உத்தரவும் கொள்ளைநோய் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள். ஆனால், நாடுகளுக்கு இடையே நம்பிக்கையின்மை இருந்தால், இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க அரசுகள் தயங்கும். உங்கள் நாட்டில் 100 பேருக்கு கொரோனாவைரஸ் இருப்பதை அறிந்தால், உடனடியாக எல்லா நகரங்களையும் பிராந்தியங்களையும் பூட்டிவிடுவீர்களா? அது பெருமளவில் மற்ற நாடுகளில் இருந்து நீங்கள் என்ன விதமான எதிர்வினையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தது. உங்கள் நகரங்களை முழுவதுமாக மூடுதல் என்பது, பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கும். மற்ற நாடுகள் உங்களின் உதவிக்கு வரும் என்று நீங்கள் நம்பினால் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் சாத்தியங்கள் அதிகம். ஆனால் மற்ற நாடுகள் உங்களைக் கைவிடும் என நினைத்தால், நிலைமை மிகவும் மோசமாகும் வரை நடவடிக்கை எடுக்கத் தயங்குவீர்கள். 

கொள்ளை நோய்களைப் பற்றி மக்கள் உணர வேண்டிய ஒன்று உண்டு: ஒரு நாட்டிற்குள் நோய் பரவுவது முழு மனித இனத்திற்குமே பேராபத்து. ஏனெனில் வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. கொரோனா போன்ற வைரஸ்கள் வௌவால் போன்ற விலங்குகளில் உருவாகின்றன. அவை மனிதர்களுக்குத் தாவும் பொழுது, தொடக்கத்தில் மனித உடலுக்கு அவை பொருந்தாது. மனித உடலினுள் அவை பல்கிப்பெருகும் பொழுது, எப்போதாவது அவற்றின் மரபணுக்களில் சில திடீர் மாற்றங்களை அடைகின்றன. பெரும்பாலான திடீர்மாற்றங்கள் பாதிப்பில்லாதவை. ஆனால் அவ்வப்போது சில திடீர் மாற்றங்கள் இவ்வைரஸை மென்மேலும் தொற்றக்கூடியதாகவும், மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்த்து நிற்கும் வல்லமை கொண்டதாகவும் மாற்றமடைய செய்கின்றன. இவ்வாறாக திடீர்மாற்றம் அடைந்த வைரஸ், மக்களிடையே விரைவாகப் பரவத் தொடங்குகிறது. ஒரு தனிமனிதனின் உடலுக்குள் கோடிக்கணக்கான வைரஸ்கள் தொடர்ச்சியாக பல்கிப்பெருக முடியும் என்பதால், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மனிதரும் வைரஸ்களுக்கு, மனித உடலுக்கேற்றவாறு தன்னைத் தகவமைத்துக்கொள்ள  கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை அளிக்கிறார். ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மனிதரும் வைரஸ்களுக்கு கோடிக்கணக்கான லாட்டரிச் சீட்டுகளை அளிக்கும் ஒரு சூதாட்ட இயந்திரம் போல செயல்படுகிறார். வைரஸ்கள் அவற்றில் இருந்து, பரிசுக்குரிய அந்த ஒற்றை சீட்டை தேர்ந்தெடுத்தால் போதும்.

இது வெறும் ஊகம் அல்ல. ரிச்சர்ட் பிரெஸ்டன் எழுதிய Crisis in the Red Zone எனும் நூல், 2014 எபோலா பாதிப்பில் இப்படியான ஒரு நிகழ்வுத்தொடர்ச்சியை விவரிக்கிறது. எபோலா நோய்த் தொற்று,  எபோலா வைரஸ் வௌவாலில் இருந்து மனிதனுக்குத் தாவியபோது ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இது மனிதர்களுக்குக் காய்ச்சலை ஏற்படுத்தியபோதும், எபோலா வைரஸ்கள் பெருமளவில் வௌவ்வாலின் உடலுக்கு தகவமைந்த ஒன்றாகவே இருந்தன. மனிதர்களுக்கு மிக அரிதான நோயாக இருந்த எபோலாவை, தெற்கு ஆப்பிரிக்காவின் மகோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு மனிதருக்கு தொற்றிய, எபோலா வைரஸின் ஒரே ஒரு மரபணுவில் நடந்த ஒற்றை மரபணுப்பிறழ்ச்சி தான், மிக பயங்கரமான கொள்ளைநோயாக மாற்றியது. இந்த மரபுபிறழ்ச்சி திடீர் மாற்றமடைந்த எபோலா வைரஸ் ரகம் மனித செல்களின் கொலஸ்டிரால் கடத்திகளுடன் தன்னை பொருத்திக் கொள்ள வழிவகுத்தது. இப்போது, கொழுப்பிற்கு பதிலாக எபோலா வைரஸ்கள் செல்களுக்குள் இழுக்கப்படும். இந்த மகோனா வகை வைரஸ், மனிதர்களிடம் நான்கு மடங்கு அதிகமாகத் தொற்றக்கூடியது. 

இவ்வரிகளை நீங்கள்  வாசிக்கும் பொழுதுகூட, ஒருவேளை இது போன்ற ஒரு திடீர்மாற்றம் தெஹரானிலோ, மிலானிலோ அல்லது வூஹானிலோ பாதிக்கப்பட்ட ஒருவரின் உள்ளே நிகழலாம். அப்படி நிகழ்ந்தால், பாதிப்பு ஈரானுக்கோ, இத்தாலிக்கோ, சீனாவுக்கோ மட்டுமல்ல, உங்களுக்கும் கூடத்தான். கோரோனா வைரஸிற்கு இப்படியான ஒரு வாய்ப்பை அளிக்கக்கூடாது என்பது உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்வா சாவா பிரச்சினை. அதாவது நாம் ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு மனிதரையும் காப்பாற்ற வேண்டும். 

1970களில் மனித இனம் பெரியம்மையை அடியோடு வீழ்த்தியதற்கு, அனைத்து நாடுகளின், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதே காரணம். ஒரே ஒரு நாடு, தனது மக்களுக்கு இந்த தடுப்பு மருந்தை கொடுப்பதில் தோல்வியடைந்திருந்தாலும் மொத்த மனித இனத்தையும் அது ஆபத்துக்குள்ளாக்கி இருக்கும். ஏனெனில் உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவரின் உள்ளே பெரியம்மை வைரஸ் இருக்கும் வரையில், அது பரிணாம வளர்ச்சி அடைந்து எல்லா இடங்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. 

வைரஸ்களுக்கு எதிரான இந்த போரில் மனித இனம் தனது எல்லைகளை கவனமாக காக்க வேண்டியது அவசியம். ஆனால் நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை அல்ல. மனிதர்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையே இருக்கும் எல்லைகள் கவனமாக பாதுகாக்கப்படவேண்டும். பூமி எண்ணிலடங்கா வைரஸ்களால் நிரம்பியுள்ளது. மரபணு மாற்றங்களால் புதிய வைரஸ்களும் உருவாகியவண்ணம் உள்ளன. இந்த வைரஸ்-வெளிக்கும் மனித உலகிற்கும் இடையிலான எல்லைக்கோடு, உலகின் ஒவ்வொரு மனிதனின் உடலுக்கு உள்ளேயும் இருக்கிறது.  உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு அபாயகரமான வைரஸ் இந்த எல்லைக்கோட்டை தாண்டினாலும் அது மனித இனத்திற்கே ஆபத்தாகும். 

கடந்த நூற்றாண்டில், மனித இனம் இந்த எல்லையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரண் அமைத்திருக்கிறது. பெரும்பாலான சுகாதார அமைப்புகள் இந்த எல்லைக்கோட்டின் மதில்களாகவே செயல்படுகின்றன. செவிலியரும், மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் காவலர்களாக ரோந்து வந்து எதிரிகளை விரட்டுகின்றனர். ஆனால் இந்த எல்லையின் பெரும் பகுதிகள் இன்னமும் காவலின்றியே இருக்கின்றன. உலகமெங்கும் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் அடிப்படை சுகாதார வசதிகளின்றி வாழ்கின்றனர். இது நம் அனைவருக்குமே ஆபத்து.  சுகாதாரம் என்பதை அவரவர் தேசிய அளவிலேயே சிந்திக்க நாம் பழகி இருக்கிறோம். ஆனால், அடிப்படை சுகாதார வசதிகளற்ற ஈரானியர்களுக்கும் சீனர்களுக்கும் வழங்கப்படும் மேம்பட்ட சுகாதார சேவைகள், வளர்ந்த நாடுகளான இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கூட கொள்ளைநோய்களில் இருந்து காக்க உதவும். இந்த எளிய உண்மை அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலகின் மிக முக்கியமான மனிதர்கள் பலருக்கும் இது தெரியவில்லை. 

தலைமையற்ற உலகம்

இன்று மனித இனம், பெரும் சிக்கலை சந்திப்பதற்கு கொரோனா வைரஸ் மட்டும் காரணம் அல்ல; மனிதர்களுக்கு இடையே உள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம். ஒரு கொள்ளை நோயினை ஒழிக்க, அனைவரும் அறிவியல் வல்லுனர்களை நம்ப வேண்டும், குடிமக்கள் தங்களது அரசை நம்ப வேண்டும், நாடுகள் ஒன்றையொன்று நம்ப வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் அறிவியலின், அரசின், பன்னாட்டு ஒத்துழைப்பின் மீதான நம்பிக்கைகளை திட்டமிட்டுக் குலைத்திருக்கின்றனர். விளைவாக, நம்மை ஊக்குவித்து, ஒன்றுதிரட்டி, ஒரு ஒருங்கிணைந்த பன்னாட்டு எதிர்வினைக்கு நிதி திரட்டக்கூடிய, நல்ல தலைவர்கள் இல்லாமல் நாம் இன்று இந்த பெரும் சிக்கலை சந்திக்கிறோம்.

2014 எபோலா கொள்ளைநோயின் பொழுது, அமெரிக்கா அது போன்றதொரு ஒருங்கிணைந்த தலைமையாக செயல்பட்டது. 2008 பொருளாதார வீழ்ச்சியின் பொழுதும் அமெரிக்கா, தன்னுடன் பல்வேறு நாடுகளை சேர்த்துக்கொண்டு, ஒரு உலகளாவிய பொருளாதார பெருவீழ்ச்சி நிகழ்ந்து விடாமல் தடுத்தது. ஆனால் தற்போது அமெரிக்கா, தான் வகித்து வந்த  உலகத் தலைமைப் பதவியை ராஜினாமா செய்துவிட்டது. தற்போதைய அமெரிக்க அரசு, உலக சுகாதார மையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளுக்கான தனது ஆதரவை குறைத்துக்கொண்டதோடல்லாமல், உலக நாடுகளிடம் தான் கொண்டிருப்பது உண்மையான நட்பல்ல, அது ஆதாயங்கள் சார்ந்தது என்பதை தெளிவாக்கி இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ் விவகாரம் வெடித்த பொழுது, அமெரிக்கா ஓரமாகவே நின்றது. இது வரையிலும் தலைமை பொறுப்பை ஏற்காமலேயே இருக்கிறது. இனி அது இந்த விவகாரத்தில் தலைமை பொறுப்பை ஏற்க நினைத்தாலும் கூட, உலக அளவில் தற்போதைய அமெரிக்க அரசின் மீதான நம்பிக்கையின்மையின் காரணமாக, வெகுசில நாடுகள் மட்டுமே அதன் பின்னால் நிற்கும். “என் நலனே முக்கியம்” என்று சொல்லும் தலைவரின் பின்னால் நீங்கள் நிற்பீர்களா?

அமெரிக்காவின் விலகலால் உருவான பாழ்வெளியை வேறு யாரும் இதுவரை நிரப்பவில்லை. அதற்கு மாறாக இன்று, பிறநாட்டு மக்களின் மீதான அச்சம், தனிமைப்படுதல், நம்பிக்கையின்மை ஆகியவையே பெரும்பாலான நாடுகளின் இயல்பாக இருக்கிறது. நம்பிக்கையும் உலக ஒற்றுமையும் இன்றி இந்த கொரோனா வைரஸ் சிக்கலை நம்மால் தடுக்க முடியாது. இனி வரும் காலங்களில் இது போன்ற இன்னும் பல கொள்ளைநோய்களை நாம் பார்ப்போம். ஆனால் ஒவ்வொரு சிக்கலும் ஒரு வாய்ப்பும் கூட. தற்போதைய இந்த கொள்ளைநோய், இன்றைய இந்த உலக ஒற்றுமையின்மையின் ஆபத்துகளை உணரச்செய்யும் என்று நம்புவோம். 

எடுத்துக்காட்டாக, இந்த கொள்ளைநோய், ஐரோப்பிய கூட்டமைப்பு (European Union) சமீப காலங்களில் இழந்திருக்கும் மக்கள் ஆதரவை மீட்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு. ஐரோப்பிய கூட்டமைப்பின் வசதி வாய்ந்த நாடுகளால், துரிதமாகவும் தாராளமாகவும் நிதி திரட்டி, மிகவும் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு நிதியும், கருவிகளும், மருத்துவ குழுவும் அனுப்ப முடிந்தால், அவ்வுதவி,  ஒன்றுபட்ட ஐரோப்பிய கனவின் மகத்துவத்தை எத்தனை பெரும் உரைகளை விடவும் பலமாக பறைசாற்றுவதாக அமையும். மாறாக, ஒவ்வொரு நாடும் தனக்கான தேவைகளை தானேதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை எழுந்தால், அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒலிக்கப்பட்ட சாவுமணியாகவே அமையும். 

இந்த சிக்கலான காலகட்டத்தில், மனித இனத்திற்கிடையே ஒரு முக்கியமான போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை இந்த கொள்ளைநோய், நம்மை இன்னும் அதிகமான ஒற்றுமையின்மைக்கும் மனிதர்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மைக்கும் இட்டுச்சென்றால், அதுவே இந்த வைரஸின் மிகப்பெரிய வெற்றியாக அமையும். மனிதர்கள் சண்டையிடும் பொழுது – வைரஸ்கள் பல்கிப்பெருகும். மாறாக, இந்த கொள்ளைநோய் நம்மை இன்னும் நெருக்கமான பன்னாட்டு ஒத்துழைப்பிற்கு வழிவகுத்தால், அந்த வெற்றி கொரோனாவைரஸுக்கு எதிரானது மட்டுமல்ல, இனி வரப்போகும் அனைத்து நோய்க்கிருமிகளுக்கும் எதிரானதாக அமையும். 

தமிழில் : சித்தார்த் வெங்கடேசன்

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “கொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது – யுவால் நோவா ஹராரி”

[…] கொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமை…: ஆங்கில மூலம் : யுவால் நோவா ஹராரி கொரோனாவைரஸ் கொள்ளைநோய்க்கு பலரும் உலகமயமாக்கத்தைப் பழி சொல்கின்றனர். இது போன்ற நோய்ப்பரவல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி சுருங்கிக்கொள்வதே என்று எண்ணுகின்றனர். மதில்களை… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s