நுண்ணோக்கு – தொலைநோக்கு – ஓர் மட்டைப்பந்து
மட்டை விட்டகன்று
நேர்கோட்டில் பயணித்து
எல்லையில் நின்றவனின் கைநழுவி
சாலையில் வழிந்தோடிய சிறுபந்து
என் பாதம் தொட்டு நின்றது.
வரும் வழியில்…
சில்லரை திருட்டிற்காய் சிக்கி
கடைசி கணம் தப்பித்ததை
குறித்த மட்டைக்காரனின் நினைவையும்
கிடைக்கவிருந்த முத்தம்
கைப்பட்டுச்சிதறிய
கண்ணாடிக்கோப்பையின்
ஒலி பாய்ந்து முறிந்ததை
குறித்த எல்லை நின்றவனின் நினைவையும்
…சுமந்தே வந்திருக்கும்.
எண்ணற்ற மட்டைகளை விட்டகன்ற பந்துகள்
பேரிரைச்சலுடன் பாய்ந்தோடும்
இந்த நிச்சய-அநிச்சய பள்ளத்தாக்கின்
மறுபுறம் ஒளிந்திருக்கிறது
கைசேரும் நழுவும் பந்துகளின் (முத்தங்களின் / தண்டனைகளின்) ரகசியப்பட்டியல்.
‘அங்கிள்… பால்..’ என்ற விளிக்கு பதிலியாய்
ஒரு ஜதை
வெறும் கண்கள்
கொண்ட சக பயணி
வீசிய பந்தை லாவகமாய் பிடித்து
புன்னகை உமிழ்ந்தான் சிறுவன்.
One reply on “நுண்ணோக்கு – தொலைநோக்கு – ஓர் மட்டைப்பந்து”
azhaku kavithai.. 🙂