அட்டவணை (The Curriculum)
எனது முதிய பேராசிரியரின் கடைசி விரிவுரை , வாரமொரு முறை அவரது இல்லத்தில், அழகிய செம்பருத்திச் செடி இளஞ்சிவப்பு இலைகளை உதிர்ப்பதை அவர் காண ஏகுவாக, படிப்பறையின் ஜன்னலருகே நிகழ்ந்தது. வகுப்பு செவ்வாய்க்கிழமைகளில் காலை உணவிற்கு பிறகு கூடியது. பாடம் – வாழ்க்கையின் அர்த்தம். அனுபவத்திலிருந்து கற்றுத்தரப்பட்டது .
மதிப்பெண்கள் ஏதும் தரப்படவில்லையெனினும், வாய்மொழித் தேர்வுகள் வாரம்தோறும் நடந்தன. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது, நீங்களும் சொந்தமாக கேள்விகள் கேட்கவேண்டும் என்றும் எதிர்ப்பாக்கப்பட்டது. எப்போதாவது சில வேலைகளும் செய்ய வேண்டிவரும், பேராசிரியரின் தலையை தலையணையில் வசதியாக வைத்தல், அவரது கண்ணாடியை மூக்கில் சரியாக மாட்டுதல், இப்படி. விடைபெரும் போது முத்தம் தருவது அதிக மதிப்பெண்களை ஈட்டித்தரும் .
புத்தகங்கள் ஏதும் தேவையில்லை. ஆனால் பல்வேறு தலைப்புகள் அலசப்பட்டன. அன்பு, உழைப்பு, சமூகம், குடும்பம், மூப்படைதல், மன்னித்தல், கடைசியாக, மரணம். கடைசி உரை சிறியதாகவே இருந்தது. சில சொற்கள் மட்டுமே .
பட்டமளிப்பு விழாவாக இறுதிச்சடங்கு நிகழ்ந்தது.
இறுதித்தேர்வு ஏதும் கொடுக்கப்படவில்லையெனினும் ஓர் நீண்ட அறிக்கை தயார் செய்யப்படவேண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது . அந்த அறிக்கை இங்கே சமர்ப்பிக்கப்படுகிறது .
எனது பேராசிரியரின் வாழ்வின் கடைசி வகுப்பில் கலந்துகொண்டது ஒரு மாணவன் மட்டுமே.
நானே அந்த மாணவன்.
அது 1979ஆம் ஆண்டின் வசந்ததில் வெப்பமும் ஈரப்பதமும் கூடிய ஓர் சனிக்கிழமை மதிய வேளை. பிரதான கூடத்தில் மரத்தாலான மடிப்பு நாற்காலிகளின் நீண்ட வரிசைகளில் நூற்றக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறோம் . நீல நிற நைலான் அங்கிகளை அணிந்திருக்கிறோம். நீண்ட உரைகளை பொறுமையற்று கேட்டுக்கொண்டிருக்கிறோம் . விழா முடிந்ததும் தொப்பிகளை காற்றில் எறிகிறோம். மாஸஷுஸட்ஸ் மாகாணம் வெல்தாம் நகரத்தின் பிரெண்டேய் பல்கலைக்கழகத்தின் மேல்நிலை வகுப்பின் பட்டதாரிகள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. எங்களில் பலருக்கு , குழந்தைமையின் மீது திரை விழுந்துவிட்டது .
பிறகு, எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான மோரி ஷ்வார்ட்ஸை கண்டுப்பிடித்து எனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அடுத்த வரப்போகும் வலிமையான காற்று அவரைத் தூக்கி மேகங்களுக்கிடை போட்டுவிடும், என எண்ணும்படியான சிறிய உருவமும் நடையும் கொண்டிருக்கிறார். பட்டமளிப்பு விழா அங்கியில், விவிலிய இறைத்தூதரையும் கிருஸ்துமஸ் குள்ளனையும் சேர்த்தார்ப்போல காட்சியளிக்கிறார். பிரகாசிக்கும் நீல-பச்சை கண்கள், நெற்றியில் விழும் அடர்த்தியற்ற வெள்ளி நிற மயிர்கற்றைகள், பெரிய காதுகள், முக்கோண மூக்கு, நரைக்கத்தொடங்கியுள்ள புருவம். பற்கள் கோணலாகவும், கீழ் வரிசை உள்வாங்கியப்படி இருந்தும் – யாரோ எப்போதோ குத்தி உள்ளே தள்ளியதைப் போல – அவர் சிரிக்கையில் அவரிடம் நீங்கள் ஏதோ உலகின் முதல் நகைச்சுவை துணுக்கை சொன்னதைப்போல இருக்கிறது .
என் பெற்றோர்களிடம் நான் எப்படி அவர் எடுத்த ஒவ்வொரு வகுப்பிற்கும் வந்தேன் என கூறிக்கொண்டிருக்கிறார். “உங்க மகன் விசேஷமானவன் ” என்கிறார். வெட்கி, நிலம் நோக்குகிறேன். பிரியும் முன்பு, அவருக்கென வாங்கியிருந்த பரிசை – அவர் பெயரின் தொடக்க எழுத்தக்கள் பொறிக்கப்பட்ட தோல் பை – தருகிறேன். அதற்கு முன்தினம் அங்காடியில் வாங்கியது. அவரை நான் மறக்கக் கூடாது என நினைத்தேன். ஒரு வேளை அவர் என்னை மறக்கக்கூடாது எனவும் நான் நினைத்திருக்கலாம்.
“மிட்ச், நீ நல்ல பசங்கள்ல ஒருத்தன் பா ” என்கிறார், தோல்பையை பார்த்தப்படி. பிறகு என்னைக் கட்டிப்பிடிக்கிறார். அவரது ஒல்லியான கரங்களை எனது முதுகில் உணர்கிறேன். அவரை விட நான் உயரமானவன். என்னை அவர் கட்டிக்கொள்ளும் போது சங்கடமாக, வயதானதைப்போல தோன்றுகிறது ஏதோ நான் பெற்றவன் போலவும் அவர் மகன் போலவும் .
தொடர்பில் இருக்க முடியுமா என கேட்கிறார். தயக்கமேதுமின்றி, “நிச்சயமா” என்கிறேன் .
விலகும் போது அவர் அழுவதை காண்கிறேன்.