ஏற்காடு இலக்கிய முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததுமே காயத்ரி தான் ’போயேன் பா’ என்றாள். சபலம் சபலம் :)… பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காயத்ரி தான் முன்னின்று செய்தாள். நோகாமல் நோன்பிருக்கும் கலையில் தேர்ச்சி பெறுவதையே மணவாழ்வென்று உணரும் தருணங்கள் தொடர்ச்சியாக வாய்க்கின்றன. நல்லூழ்.. வேறென்ன சொல்ல… 😉
பயண நாளுக்கு முந்தைய மாலை தான் விடுப்பை உறுதி செய்தார்கள் அலுவலகத்தில். நகம் கடிக்க வைப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் என் மேலாளருக்கு.
இது நான் கலந்துகொள்ளும் முதல் இலக்கிய முகாம். உண்மையில் என்ன எதிர்பார்ப்பது என்று தெரியாமலேயே சென்றேன். ஆனால் என்னளவில் மிக மிக நிறைவான ஒரு அனுபவமாக இது மாறியது. முகாம் குறித்து பலரும் பல கட்டுரைகள் எழுதி இருப்பதால், சொன்னதையே திரும்ப சொல்லாமல், என் கோணத்தில் சில குறிப்புகளை மட்டும் முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
கம்பராமாயண வாசிப்பு. இரண்டு விஷயங்கள் ஈர்த்தன :
- ஜடாயு அவர்களின் கம்பராமாயணம் குறித்த ஞானம். பல பாடல்களை நினைவில் இருந்தே சொன்னார். அதையும் ஒரு வெளிக்காட்டலாக அல்லாமல், சூழலுக்கு தகுந்தவாரு செய்தது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது.
- நாஞ்சில் நாடன் கம்பராமாயணத்தை அணுகும் விதம். ஜடாயு உயிர் நீத்த படல பகுதியில் சில பாடல்களை வாசிக்கும் பொழுது அவருக்கு குரல் தழுதழுத்தது. ஒரு காப்பியத்தின் மீதாக நிகழ்த்தக்கூடிய ஆகப்பெரிய வாசிப்பு இது என்று பட்டது. காப்பியத்தினுள் சென்று கரைதல்…. திடீரென, ‘மலைய தரைதலைன்னு சொல்றார் கம்பர் இங்க. இந்த வார்த்தைய இதுக்கு முன்ன நான் பாத்தது இல்ல’ என்றார். அவர் சொன்ன விதத்தில் சொல் ஆராய்ச்சியோ மேதமையை காட்டும் தொணியோ இருக்கவில்லை. ஒரு அழகான கூழாங்கல்லை எடுத்து பெருமையுடன் காட்டும் சிறுமியின் செயலை ஒத்தது இது. இது வாசிப்பின் இன்னொரு எல்லை என்று பட்டது.
சிறுகதை வாசிப்பு :
- நிகழ்வில் விவாதிக்கப்பட இருக்கும் படைப்புகளை அனைத்தையுமே (வாசிக்கப்பட இருக்கும் கம்பராமாயண பாடல்கள் உட்பட) இரண்டு வாரங்களுக்கு முன்பே அனுப்பி வைத்தது மிக நல்ல விஷயம். பெரும்பாலானோர் கதைகளை படித்துவிட்டே வந்திருந்தனர். கதை சொல்ல வேண்டிய தேவை இல்லாமல், நேரடியாக விவாதத்திற்குள் நுழைய இது வழிவகுத்தது.
- முதல் கதையாக ராஜகோபாலன் தேர்ந்தெடுத்த “Am I Insane?” வாசிக்கப்பட்டது. இந்த கதையில் மூன்றே பாத்திரங்கள் தான். அவன், அவள், ஒரு குதிரை. கதை முழுவதுமே அவனது கோணத்திலேயே விரிகிறது என்பதால் முழு கதையின் மீதும் ஒரு பனி படர்ந்திருந்தது. விவாதத்தின் போது இது தெரிந்தது.
- இந்த முழு நிகழ்வில் என்னை மிகவும் பாதித்த சிறுகதை என ரேமண்ட் கார்வரின் “So much water, so close to home” கதையை சொல்வேன். இக்கதையை ஒட்டி எழுந்த விவாதம் இந்நிகழ்வின் மிகச்சிறந்த விவாதங்களுள் ஒன்று. சிறு உதாரணம். இக்கதையின் தலைப்பு எனக்கு வீட்டின் அருகேயே நமை மூழ்கடிக்கும் தயாராக இருக்கும் அணைக்கட்டை நினைவுப்படுத்தியது. பெரும் அறமின்மையை காண நாம் எங்கேயோ செல்லவேண்டியதில்லை என்பதையே இத்தலைப்பு குறிப்பதாக எனக்கு பட்டது. ஆனால் இவ்விவாதத்தின் போது வேறு ஒரு கோணத்தில் இந்த தலைப்பு ஆராயப்பட்டது. நீர் என்பது கருணையையும் அன்பையும் குறிக்கலாம். எனில் இத்தலைப்பு உண்மையில் பேச வருவது அன்பை தேடி வெகுதூரம் செல்லத்தேவையில்லை. அதுவும் நம் அருகிலேயே உள்ளது என்பதாக ஒருவர் சொன்னார். அந்த மனைவியின் கதாபாத்திரத்தை முன்வைத்து யோசித்தால் இதுவும் சரியென்றே தோன்றும். கதையை அறிமுகப்படுத்திய விஜயராகவன் அவர்களுக்கு நன்றிகள் பல….
- ஒரு மாதத்திற்கு முன்னமே “சமகால உலக சிறுகதை” ஒன்றை தேர்ந்தெடுத்து அதை குறித்து நான் பேச வேண்டும் என்று கூறப்பட்டது. நான் நேதன் இங்க்லாண்டரின் “Free Fruits for Young Widows” சிறுகதையை தேர்ந்தெடுத்திருந்தேன். இது எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. இக்கதையின் மீதான என் வாசிப்பு, இது தான் : ஒரு மனிதனின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு முன்பு அவனை கொஞ்சம் empathyயுடன் அணுக வேண்டும். அவனுக்கும் இதில் ஒரு கோணம் உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு நான் எந்த முடிவுக்கும் வரலாம். சென்னையில் வட இந்திய இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை குறித்த ஜெவின் கட்டுரை நினைவிற்கு வந்தது இந்த கதையை படித்த பொழுது.
- ஆனால் ஜெ இக்கதையை மிக உறுதியாக மறுத்தார். இன்று பெரும் நிறுவனமான ஆகியிருக்கும் யூத பிரச்சார அமைப்பின் ஆசியுடன் வந்திருக்கும் ஒரு பிரச்சார படைப்பே இது என்றார். உண்மையில் ஜெவின் கருத்துக்கள் அல்ல, அந்த கணம் வரை இக்கதையின் மீதான என் வாசிப்பில் பாலஸ்தீனர்களை நான் உட்படுத்தவே இல்லை என்பதே எனக்கு மிகப்பெரிய அடியாக இருந்தது. இஸ்ரேல் குறித்த என் வாசிப்பின் ஆரம்ப கட்டம் என்பது பிரச்சார நூல் வாசிப்பே. Leon Uris (Exodus, Mila 18, Haj) , Max I Dumont (Jews, God and History, Indestructible Jews) போன்ற எழுத்தாளர்களின் நூல்கள். Haj நூலை வாசிக்கும் பொழுது தான் இது ஒரு பிரச்சாரம் என்பது உறைத்தது. பிறகு குவைத் வந்து பாலஸ்தீனியர்களுடன் நெருங்கிப்பழகிய பிறகு இவ்வரலாற்றின் இன்னொரு கோணம் புரிபட தொடங்கியது. இன்றும் நான் இஸ்ரேல் எனும் தேசத்தின் இருப்பை அங்கீகரிப்பவனாகவே இருக்கிறேன். ஆனால் இதன் காரணம் இஸ்ரேல் குறித்த பெருமித உணர்வு அல்ல, ஒரு நான்காயிரம் ஆண்டு பயணம் மிக இயல்பாக வந்து சேர்ந்த இடம் இது என்ற புரிதலே… இந்த அங்கீகாரம் பாலஸ்தீனர்களின் இருப்பை மறுத்தே நிகழவேண்டும் என்பதில்லை. நிச்சயமாக காசா மற்றும் மேற்குக்கரையின் பகுதிகளில் இஸ்ரேல் அமைக்கும் குடியேற்றங்களை அறவுணர்வுள்ள அனைவரும் எதிர்க்கவேண்டும். ஜெவின் விமர்சனம் இஸ்ரேல் குறித்த பெருமித உணர்வு என்னுள் இன்னும் மிச்சமிருப்பதை காட்டியது. நன்றிகள் பல…
- இந்திய சிறுகதை வாசிப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை பெருமாள் முருகனின் “நீர் விளையாட்டு”. மிக சாதாரண யதார்த்த கதையாக தொடங்கும் இது ஏதோ ஒரு நுட்பமான கணத்தில் சட்டென்று வேறு ஒரு தளத்தை அடைகின்றனது. இந்த genre shift அலாதியான குறுகுறுப்பை தந்தது. இது நேரடி கதை அல்லாமல் கவிதைக்கு அருகில் நின்றதால் இதன் மீதான விவாதமும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.
முகாமின் மிக livelyயான அமர்வு கவிதை அமர்வே என்று தோன்றுகிறது. க. மோகனரங்கனின் உலக கவிதைகள் தொடங்கி சாம்ராஜின் தற்கால தமிழ் கவிதைகள் வரை அனைத்து கவிதைகளுமே மிக நல்ல அனுபவத்தை தந்தன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் : மணிகண்டன் இரண்டு மலையாள கவிதைகளை தேர்ந்தெடுத்திருந்தார். இரண்டுமே அனிதா தம்பியின் கவிதைகள். இந்த இரண்டு கவிதைகளையும் இணைக்கும் முகமாக சங்க சித்திரங்களில் இடம்பெற்ற ஊஞ்சலாட்டம் குறித்த ஒரு குறுந்தொகை பாடலை தேர்ந்தெடுத்து ஒரு வாசிப்பை நிகழ்த்தினார். இது மிக நல்ல வாசிப்பாக எனக்கு பட்டது. ஆனால் இவ்விதமான வாசிப்பு அக்கவிதைகளை தனித்தனி கவிதைகளாக அணுகவிடாமல் செய்வதாக ஒரு விவாதம் எழுந்தது. மணிகண்டன் தன் வாசிப்பை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும்.
பொறாமை கொள்ள வைக்கும் செயலூக்கம் மிக்க நண்பர்களை பார்ப்பது ஒரு புத்துணர்வு தரும் அனுபவம். ஜெவும், சுனிலும், அரங்காண்ணனும் ஜாஜாவும் ராமும் சுரேஷும் ஜடாயுவும் சுசீலா அம்மாவும் நாஞ்சில் நாடனும் தேவதேவனும் அதை தான் தந்தார்கள்.
இந்த வருடம் புதிதாக பல நண்பர்களை சந்தித்தேன்.
- அதில் சாம்ராஜ் முக்கியமானவர். இவர் எழுதிய “மலையாளிகளின் துரோகம்” கட்டுரை தொடர் குறித்து நண்பர் ஸ்டாலின் ஃபெலிக்ஸிடம் விரிவாக மறுத்து விவாதித்திருக்கிறேன். அந்த கட்டுரை தந்த பிம்பம் ஒன்று இருந்தது என்னுள். அது இவரை நேரில் சந்தித்த பொழுது முற்றிலுமாக உடைந்தது. அலாதியான மனிதர்….
- அருணா. பெண்ணியம் முதல் இலக்கியம் வரை சகலத்தையும் விவாதித்தோம். எல்லாவற்றை பற்றியும் இவருக்கு ஒரு தீர்க்கமான கருத்து இருந்தது. கருத்து என்ன என்பது இரண்டாம் பட்சம். அப்படி ஒரு கருத்து இருப்பதே இவரை சுவாரஸ்மயாக ஆக்கியது. 🙂
- சங்கீதா ஸ்ரீராம். அமர்வுகளின் போது மிக அமைதியாக இருந்தார். இரவு கச்சேரியின் போது நன்றாக பாடினார். கடைசி நாளில் தான் இவர் பசுமை புரட்சியின் கதை நூலினை எழுதியவர் என்று தெரிந்தது. குழந்தை கல்வி குறித்த அவரது கருத்துகள் அத்தனை radical ஆனவை. ஊரில் இருந்து வந்ததில் இருந்து இவரது வலைப்பதிவில் (http://sangeethasriram.blogspot.in) மேய்ந்துகொண்டிருக்கிறேன். parenting குறித்த இவரது கட்டுரைகள் முக்கியமானவை. இன்னும் நிறைய பேசி இருக்க வேண்டும் இவருடன் என்று இப்போது தோன்றுகிறது.
- நினைக்க நினைக்க உற்சாகம் பொங்கும் இருவர் வல்லபியும் வானவன்மாதேவியும். இன்னும் அதிகம் பேசியிருக்க வேண்டும் இவர்களிடம்.
என் வாழ்வை “நான் யாருடனும் போட்டியில் இல்லை” என்ற மனநிலையுடனே அணுக வேண்டும் என்று விரும்புவேன். உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் அம்மனநிலையை மேலும் மேலும் வளப்படுத்துகின்றன. நன்றி ஜெ…
3 replies on “ஏற்காடு இலக்கிய முகாம் 2013.”
அன்புள்ள சித்தார்த்,
நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப்போல ஏற்காடு ஒரு நிறைவான அனுபவம்தான். சங்கீதா ஸ்ரீராம் அவர்களின். குழந்தை கல்வி குறித்த கருத்துகள் மிரட்சியூ ட்டின. நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள். எனினும் கருத்தளவில் அவற்றை மறுக்க இயலவில்லை. நம் சந்திப்பை நினைவுகூர்ந்து அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறேன்,,,மதுரை ரவி
[…] https://angumingum.wordpress.com/2013/07/04/yercaud_meet_2013 […]
என் வாழ்வை “நான் யாருடனும் போட்டியில் இல்லை” என்ற மனநிலையுடனே அணுக வேண்டும் என்று விரும்புவேன். – thank you sir for these valuable lines. siva