பிரிவுகள்
அமெரிக்க இலக்கியம் சமூகம் நூல் அறிமுகம்

இடிக்கும் கேளிர்க்கு உலகறிவித்தல்

ஜார்ஜ் – அலெக்ஸ் ஜீனோ

மூடிய சிறிய அறைகள் எனக்கு என்றுமே பயம் அளிப்பவை. குறுகிய வெளியில் அடைபட்டு கிடப்பதை போல நினைத்துப்பார்த்தாலே உடல் பயத்தில் சிலிர்த்துக்கொள்ளும். ஒரு குறுந்தொகை பாடல் உண்டு… அந்த கவிதையை, அதன் ஆதார உவமையை நினைக்கும் போதெல்லாம் இந்த claustrophobic உணர்வு வரும்…

இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே!

வெள்ளிவீதியார் (குறுந்தொகை – 58)

இந்த காதல் கட்டுப்படுத்தப்பட வேண்டியது என்று என்னை இடித்துரைக்கும் நண்பா! உன் பேச்சை நான் கேட்கவில்லை என்று உனக்கு மனக்குறை. எனக்கும் கேட்க வேண்டும் என்று தான் இருக்கிறது. ஆனால் முடியவில்லையே! வெயில் காயும் பாறை மேல் வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெயை கண்களாலேயே காவல் காக்கும் கையில்லாத ஊமையின் நிலை என்னுடையது. வெண்ணெய் உருகும் போது அதை கையில் எடுக்கவும் முடியாமல் கத்தி உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலை தான் எனதும். இந்த காதல் நோயென என்னுள் பரவிக்கொண்டிருக்கிறது… தாங்கிக்கொள்ள முடியவில்லை இதை…

ஆற்றாமையை, உடலினுள்ளேயே சிறைபடுதலை எத்தனை எளிதாக சொல்லிச்செல்கிறது இக்கவிதை! அந்த “பரந்தன்று இந்நோய்; நோன்றுகொளற் கரிதே” என்ற நிலையை… அதன் முன் ஒருவர் கையில்லாத ஊமையாக ஆற்றாமையுடன் தலை குனிந்து நிற்பதை நாம் ஒவ்வொருவரும் பார்த்திருப்போம்.

அலெக்ஸ் ஜீனோ

சென்ற மாதம் அலெக்ஸ் ஜீனோ எழுதிய ஜார்ஜ் (George – Alex Gino) என்ற சிறார் நாவலை வாசித்தேன். நாவல், 9 வயதான ஜார்ஜ் எனும் சிறுவனை பற்றியது. ஜார்ஜ் தன்னை ஒரு பெண் என்று உணர்கிறாள். அவளால் இந்த உணர்வுகளை புரிந்துகொள்ளவோ பகிர்ந்துகொள்ளவோ முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே புழுங்குகிறாள். தனக்கு Mellissa என்ற பெண்பால் பெயரை சூட்டிக்கொள்கிறாள். ஆனால் இந்த பெயரை பகிர்ந்துகொள்ளவும் அவளுக்கு ஒரு இடம் இல்லை. தாயிடமோ அண்ணனிடமோ தன் நெருங்கிய தோழியிடமோ கூட பேச முடியாமல் தன்னுள்ளேயே சிறையில் இருக்கும் ஜார்ஜ் என்ற சிறுவன் மெலீசா என்ற சிறுமியாக மாறும் பயணமே இந்த நாவல். இதை வாசிக்கும் பொழுது இந்த “கையில் ஊமன் கண்ணில் காக்கும்” வரி தான் மனதில் வந்து கொண்டே இருந்தது. மெலீசாவிடம் சென்று, நீ ஜார்ஜ் எனும் சிறுவன்… நீ பெண் அல்ல; அந்த நினைவை அகற்று என்று சொன்னால், அவள் என்ன செய்வாள்? உடலுக்கு உள்ளேயே சிறைபடுதல் அல்லவா இது? “பரந்தன்று இந்நோய்; நோன்றுகொளர்க்கு அரிதே” என்று கைவிரிக்க மட்டும் தான் முடியும் அவளால். இங்கே ஒரு சிறு விளக்கம்: ஒரு திருநர் தன் உண்மையான பால் அடையாளத்தை சென்று அடைவதை நோய் என்று சொல்லவில்லை நான். அதை புரிந்துகொள்ளாத உலகின் முன் அவர்கள் அடையும் அனுபவத்தையே நோய்மை என்கிறேன்.

ஜார்ஜுக்கு 9 வயதே ஆவதால் அவளது அனுபவங்கள் பால் உணர்வு தீண்டாத இடத்தில் இருந்து எழுகின்றன. இங்கே ஆதார சிக்கல் பால் உணர்வல்ல; பால் அடையாளமே. இதனால் இந்த சிக்கலை நம்மால் மேலும் அணுக்கமாக உணர்ந்துகொள்ள முடிவதாக பட்டது. நாவலின் முடிவில் ஜார்ஜ் முழுவதுமாக மெலீசாவாக மாறிவிடுகிறாள். நாவலின் கடைசி அத்தியாயத்தில் மெலீசா ஒரு பெண்கள் கழிவறையுள் முதன்முறையாக நுழைந்த அதை பயன்படுத்துகிறாள். அந்த கணத்தில் அவள் அடையும் விடுதலை உணர்வை படித்தபொழுது கண் கலங்கியது. இது அடிப்படையில் ஒரு சிறார் நாவல். இதை வாசிக்கும் சிறார்களுக்கு இது எல்லா அடையாளங்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய உலகிற்கான வாசலை திறக்கும் என்பது உறுதி.

நாவல் முடித்ததும் சில கேள்விகள் எழுந்தன… மெலீசாவான அவள் கண்ணாடியின் முன் நிற்கும் போது அவள் கண்களுக்கு தெரியும் ஜார்ஜ் யார்? தன் நடையில் மெலீசாவின் மெண்மையும் நளினமும் தெரியாதபடி மறைக்குந்தோறும் அவளுள் நிகழ்வது என்ன? ஒவ்வொரு நொடியும் தன்னுள் உணரும் தனக்கும் உலகம் காணும் தனக்குமான அந்த பெரும் பாழ்வெளியை கடக்கவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் சிக்கித்தவிப்பவர்களுக்கு நம் பதில் தான் என்ன? இந்த நடிப்பை / பாவனையை ஆண்டுக்கணக்காக செய்யும் நிலையில் இருப்பவர்களின் ஆளுமையில் ஏற்படும் பிளவு என்றேனும் ஆறுமா? இந்த கோணத்தில் சிந்தித்தால், பால் புதுமையினரின் மேல் இந்த சமூகம் நிகழ்த்துவது எத்தனை பெரிய வன்முறை!

இங்கே பிரச்சனை இடிக்கும் கேளிர் தான். ஒரு மண்ணும் புரியாமல் தன் கோணத்தில் தெரியும் உலகம் மட்டுமே உண்மை என்று நம்பி இடிக்கும் அந்த கேளிருக்கு பால் புதுமையினரின் உலகை குறித்து அறிமுகப்படுத்தினால் போதும் என்று தோன்றுகிறது.

மிக எளிய சூத்திரம் தான்:

  • திருநர்களுக்கும் பால்புதுமையினருக்கும் தேவை ஒரு பாதுகாப்பான வெளி =>
  • அதை அவர்களின் அணுக்கர்களே தர முடியும். =>
  • அதற்கு புரிந்துணர்வு முக்கியம். =>
  • அது முளைத்தெழ பரிச்சயம் என்ற சிறு நிலம் தேவைப்படுகிறது. =>
  • அந்த பரிச்சயத்தை கலைகள் மிக வெற்றிகரமாக செய்ய முடியும். =>
  • அலெக்ஸ் ஜீனோ போன்ற திருநரும் பால் புதுமையினரும் தங்களின் உலகங்களை கலைப்படுத்தும் ஒவ்வோர் படைப்பும் அந்த உலகிற்கு ஒரு வாசல்.

இன்னும் இன்னும் என திசையெங்கும் வாசல்கள் திறந்திடுக!

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s