பிரிவுகள்
பொது

ஒரு தனித்த மானுட குரல்…

2015ஆம் வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வாங்கிய ஸ்வெட்லெனா அலெக்ஸ்சோவிட்ச் எழுதிய “Voices from Chernobyl : The Oral History of a Nuclear Disaster” என்ற நூலில் இருந்து ஒரு சிறு பகுதியில் மொழிபெயர்ப்பு இது. செர்னோபில் சம்பவத்தை அதில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை கொண்டு எழுதப்பட்ட நூல் இது. 2010ல் நூலை வாசித்த உத்வேகத்தில், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்த மொழிபெயர்ப்பு. அவனது மரணத்தை நெருங்க நெருங்க தப்பி ஓட நினைத்தேன். அவன் இறக்கும் முன்பே மொழிபெயர்ப்பை நிறுத்திவிட்டேன்.

இரு நாட்களுக்கு முன்பு பிபிசி வானொலியில் ஸ்வெட்லேனா அலெக்ஸோவிட்ச் பெயரை கேட்டபோது தான் இதை மொழிபெயர்த்த நினைவு வந்தது. இந்த பகுதி செர்நோபில் வெடிப்பில் இறந்த ஒரு தீயணைப்பு வீரரின் மனைவியின் வாக்குமூலம். சம்பவம் நடந்து வருடங்கள் கழித்து அவர் சொன்னது. அத்தனை வருடங்கள் கழித்து, அந்த சம்பவத்தின் உணர்வெழுச்சிகள் அடங்கிய பிறகு சொன்னவை. சாதாரணமான விவரிப்பு தொணி தான் இதில் உள்ளது. ஆனால் எனக்கு படிக்க படிக்க பொங்குகிறது… 😦


ஒரு தனித்த மானுட குரல்

(செர்னோபில் விபத்தில் பாதிப்புற்ற தீயணைப்பு வீரனது மனைவியின் வாக்குமூலம்)

நாங்கள் காற்று; நாங்கள் பூமி அல்ல. – மெசாப் மமர்தஷ்விலி

நான் எது குறித்து பேச வேண்டும் என தெரியவில்லை – மரணத்தை குறித்தா அல்லது அன்பை குறித்தா? அல்லது இரண்டுமே ஒன்று தானா? எதை குறித்து நான் பேச வேண்டும்?

நாங்கள் புதுமண தம்பதிகள். கடைக்கு போவதாய் இருந்தாலும் கைகள் கோர்த்தபடி நடந்து சென்றோம். நான் அவனிடம் சொல்வேன், “நான் உன்னை காதலிக்கிறேன்” என்று. எந்த அளவிற்கு என அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருக்கவில்லை…. அவன் பணிசெய்த தீயணைப்பு நிலையத்தின் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்தோம். இரண்டாவது தளத்தில். எங்களுடன் மேலும் மூன்று ஜோடிகள் வாழ்ந்தனர். நாங்கள் அனைவரும் ஒரே சமையலரையை பகிர்ந்துகொண்டோம். முதல் தளத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. செந்நிற தீயணைப்பு வாகனங்கள். அவன் எங்கே எப்படி இருக்கிறான், என்ன நடக்கிறது என எனக்கு எப்போதும் தெரிந்தே இருந்தது.

ஒரு நாள் ஒரு ஓசை கேட்டு சன்னலை திறந்து பார்த்தேன். அவனும் என்னை பார்த்தான். ‘சன்னலை மூடிட்டு போய் தூங்கு மா. ரியாக்டர்ல தீ பிடிச்சிடுச்சாம். நான் சீக்கிரம் வந்துடுவேன்’

வெடிப்பு நிகழ்ந்ததை நான் பார்க்கவில்லை. தழலை மட்டுமே பார்த்தேன். அனைத்துமே ஒளிபெற்றிருந்தன. முழு வானமும். நெடிந்துயர்ந்த தழலும் புகையும். தாளவியலா அளவிற்கு வெப்பமும். அவன் இன்னமும் திரும்பவில்லை.

கூரையின் மேல் பூசப்பட்டிருந்த எண்ணையிலிருந்து புகை எழுந்துகொண்டிருந்தது. உருகும் தாரின் மீது நடப்பதை போல இருந்தது என்றான் பின்பு. அவர்கள் நெருப்பை அனைப்பதற்க்கு போராடிக்கொண்டிருந்தனர். எரியும் கிராஃபைட்களை கால்களால் உதைத்தனர்….. கான்வாஸ் ஆடைகள் அணிந்திருக்கவில்லை. அரைக்கை சட்டைகளுடனேயே சென்றிருந்தனர். அவர்களுக்கு யாரும் சொல்லியிருக்கவில்லை. நெருப்பை அணைக்க வேண்டும் என்றார்கள். இவர்களும் அப்படியே சென்றுவிட்டனர்.

நான்கு மணி. ஐந்து. ஆறு. ஆறு மணிக்கு அவனது பெற்றோரின் வீட்டிற்கு செல்லுவதாய் திட்டம். உருளைகிழங்கு செடிகளை நட.  அவனது பெற்றோர் வாழ்ந்த ஸ்பெரிழ்யே நாங்கள் வசித்த ப்ரிப்யாட்டில் இருந்து நாற்பது கிலோமீட்டர்கள். விதைத்தல், உழுதல் – இவை அவனுக்கு மிகவும் பிடித்தமான செயல்கள். இவன் நகரத்திற்கு குடிபோவதில் அவனது தாயாருக்கு விருப்பமே இல்லை. இவனுக்கென ஒரு வீடு கூட கட்டியிருந்தனர் அங்கு. இவன் இராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டான். மாஸ்கோவின் தீயணைப்பு படையில் பணிபுரிந்து வெளியேறியதும், ஒரு தீயணைப்பு வீரனாவதை தவிர வேறெதுவும் செய்ய விரும்பவில்லை இவன். வேறெதுவும்…. [மௌனம்]

சில நேரங்களில் அவனது குரலை கேட்பதை போல தோன்றும் எனக்கு. உயிர்ப்புடைய குரல். புகைப்படங்கள் கூட குரல் தரும் இந்த உணர்வை தருவதில்லை. ஆனால் அவன் என்னை அழைப்பதே இல்லை… கனவினில் கூட. நான் தான் அவனை அழைத்துக்கொண்டிருந்தேன்.

ஏழு மணி. அவன் மருத்துவமனையில் இருப்பதாய் சொன்னார்கள். அங்கே சென்றபோது மருத்துவமனையை காவல் துறையினர் முற்றுகையிட்டிருந்தனர். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை அவர்கள். ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளே சென்றுகொண்டிருந்தன. ஆம்புலன்ஸ யாரும் நெருங்காதீங்க. அதுல கதிரியக்கம் ரொம்ப அதிகமா இருக்கு. காவல்துறையினர் கத்திக்கொண்டிருந்தனர். நான் அங்கு தனியாக இல்லை. அன்றிரவு ரியாக்டரில் பணிபுரிந்த அனைவரின் மனைவிகளும் அங்கு குழுமி இருந்தனர். அந்த மருத்துவமனையில் மருத்துவராய் பணிபுரிந்த எனது தோழியை தேடினேன் நான். அவள் ஒரு ஆம்புலன்ஸில் இருந்து வெளியே வந்தாள். அவளது வெள்ளை அங்கியை பிடித்துக்கொண்டு கத்தினேன். ‘என்ன உள்ள கூட்டிட்டு போ!”. ” என்னால முடியாது. அவன் ரொம்ப மோசமா இருக்கான். அவங்க எல்லாருமே…”. அவளை விடவில்லை நான். “சும்மா பாத்துட்டு வந்துடறேன்”. “சரி, என்னோட வா. ஆனா கால் மணி நேரம் தான் இருக்கனும்.”

அவனை பார்த்தேன். உடலெங்கும் வீங்கிபோய் இருந்தது. அவனது கண்களை பார்க்கவே முடியவில்லை.

“அவனுக்கு பால் வேணும். நிறைய பால்.” என்றாள் என் தோழி. “இவங்க எல்லாருமே ஆளுக்கு மூனு லிட்டர் பாலாவது குடிக்கனும்”. “ஆனா இவனுக்கு பால் பிடிக்காதே” ” இப்ப குடிப்பான்”. அந்த மருத்துவமனையின் அனேகம் மருத்துவர்களும் செவிலியர்களும் பின்பு நோயுற்று இறந்தனர். ஆனால் அப்போது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

காலை பத்து மணிக்கு புகைப்பட கலைஞன் ஷிஷெனோக் இறந்திருந்தார். முதல் நாளின் முதல் பலி அவர் தான். இன்னொருவரை இடிபடுகளுக்கு உள்ளேயே விட்டு விட்டனர் – வெலேரா கோடெம்சக். அவரை இவர்களால் நெருங்கவே முடியவில்லை. கான்கிரீட்டில் புதைத்துவிட்டனர் அவரை. இவர்கள் ஒரு தொடக்கம் மட்டுமே என அப்போது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

“வஸ்யா, நான் இப்ப என்ன செய்யட்டும்?” என்றேன் நான். “போயிடு. இங்க இருந்து வெளிய போயிடு. நம்ம குழந்தை வளருது உனக்குள்ள” என்றான். எப்படி விட்டு போவது அவனை? “போ., போ. நம்ம குழந்தைய காப்பாத்து”. “முதல்ல உனக்கு பால் வாங்கிட்டு வரேன். அப்பறம் முடிவெடுக்கலாம் என்ன செய்யறதுன்னு”. என் தோழி தான்யா கிபோனெக் ஓடி வந்தாள் அப்போது. அவள் கணவரும் இங்கு தான் இருந்தார். அவளுடன் அவளது தந்தையும் வந்திருந்தார். அவரது காரில் ஏறி, எங்கள் நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிராமத்திற்கு சென்றோம், பால் வாங்கி வர. ஆறு மூன்று லிட்டர் பாட்டில்களை வாங்கிக்கொண்டோம். ஆனால் அவர்கள் குடித்ததும் வாந்தி எடுத்தனர். விஷ வாயுவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றார்கள் மருத்துவர்கள். கதிரியக்கம் பற்றி அப்போது ஏதும் சொல்லவில்லை. நகரில் வந்து குவிந்த இராணுவத்தினர் நகரின் அனைத்து சாலைகளையும் அடைத்தனர். வாகனங்களும் இரயில்களும் நின்றுவிட்டன. சாலைகளை எல்லாம் ஏதோ ஓர் வெள்ளை பொடி கொண்டு கழுவினர். மறுநாள் பால் வாங்க எப்படி போவது என்பது என் கவலை. யாரும் கதிரியக்கம் பற்றி பேசவில்லை. இராணுவத்தினர் மட்டுமே கதிரியக்க கவச உடை அணிந்திருந்தனர். நகரத்து மக்கள் அனைவரும் கடைகளில் இருந்து ரொட்டிகளை திறந்து பைகளில் வாங்கிச்சென்றனர். கேக்குகளை தட்டில் வைத்து உண்டனர்.

அன்று மாலை மருத்துவமனைக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கூட்டம் அதை சுற்றி. நான் அவர் இருந்த அறையின் சன்னலுக்கு கீழே நின்றுகொண்டேன். அவன் சன்னலருகே வந்து ஏதோ கூறினான். இந்த கூச்சலில் அது விளங்கவில்லை. யாரோ சொன்னார்கள். அவர்களை அன்றிரவே மாஸ்கோ அழைத்துச்செல்கின்றார்களாம். மனைவிகள் எல்லாம் ஒன்றுபட்டோம். நாங்களும் உடன் செல்வதென முடிவெடுத்தோம். எங்கள் கணவர்களுடன் சென்றே தீருவோம். குத்தினோம், குதறினோம். ஆனால் இராணுவத்தினர் எங்களை உள்ளே விடவில்லை. பின்பு மருத்துவர்கள் வெளியே வந்தார்கள். ஆம். நாங்கள் இன்றிரவே மாஸ்கோ செல்கிறோம். உங்கள் கணவர்கள் அணிந்திருந்த உடைகளை எரித்து விட்டோம். அவர்களுக்கு வேறு உடைகளை கொண்டுவாருங்கள் என்றார்கள். பேருந்துகள் ஓடுவது நின்றுவிட்டன. நாங்கள் ஓடிச்சென்றோம் உடைகளை எடுத்துவர. திரும்ப வந்தபோது விமானம் சென்றுவிட்டிருந்தது. எங்களை ஏமாற்றிவிட்டனர். நாங்கள் இருந்திருந்தால் கத்தி கூச்சலிட்டிருப்போம்.

இரவு. வீதியின் ஒரு புறம் முழுக்க பேருந்துகள். நூற்றுக்கணக்கானவை. நகரில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருந்தனர்.  மறுபுறம் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வண்டிகள். எங்கெங்கிருந்தோ வந்து சேர்ந்தன. சாலை வெள்ளை நுரை போர்த்தி இருந்தது. அழுது சாபமிட்டபடி அதன் மீது நடந்தோம். வானொலியில் அறிவிக்கப்படுகிறது. 3 – 5 நாட்களுக்கு நகரில் இருந்து வெளியேறி அருகாமை காடுகளில் வசிக்க வேண்டி இருக்கலாம். கூடாரங்களில். வெப்ப உடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்- இது சுற்றுலா போல இருந்தது அவர்களுக்கு. இவ்வாண்டு மே தினத்தை அங்கு கொண்டாடலாம். வழமையிலிருந்து ஒரு விலகல். பார்பிக்யூக்கள் தயார் செய்யப்பட்டன. கிட்டார்களையும் வானொலிப்பெட்டிகளையும் எடுத்துக்கொண்டார்கள். பாதிக்கப்பட்ட கணவர்களின் மனைவிகள் மட்டுமே அழுதுகொண்டிருந்தோம்.

என் பெற்றோரின் கிராமத்திற்கு எப்படி வந்தடைந்தேன் என நினைவில்லை. அம்மாவை பார்த்ததும் விழித்தெழுந்தது போல உணர்ந்தேன். “அம்மா வஸ்யாவ மாஸ்கோ எடுத்துக்கிட்டு போயிருக்காங்க. தனி விமானத்துல…”. தோட்டத்தில் செடிகளை நட்டு முடித்தோம் [ஒரு வாரத்தில் இக்கிராமங்கள் காலிசெய்யப்பட்டன]. யாருக்கு தெரியும்? அப்போது யாருக்கு தெரியும்?  அன்று மாலை நான் வாந்தி எடுத்தேன். ஆறு மாதம் கர்பினி. ஏதோ போல உணர்ந்தேன். அன்றிரவு அவர் தூக்கத்தில் என்னை அழைப்பதை போல கனவு கண்டேன் : “ல்யுஸ்கா! ல்யுசென்கா!”. ஆனால் அவர் இறந்தபின் ஒரு முறை கூட என்னை அழைக்கவில்லை. ஒரு முறை கூட. [அழ ஆரம்பிக்கிறார்]. மறுநாள் காலை விழித்ததும் தனியாக மாஸ்கோ செல்வதென முடிவெடுத்தேன். அம்மா அழுதாள் “எங்கடி போற? நீ இப்ப இருக்கற நிலைல?”. அப்பாவையும் உடன் அழைத்துக்கொண்டேன். அவர் வங்கிக்கு சென்று இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டார்.

அந்த பயணம் எனக்கு நினைவிலில்லை. மாஸ்கோ சென்றடைந்ததும் எதிர்பட்ட முதல் காவலதிகாரியை கேட்டோம், “செர்னோபில் தீயணைப்பு வீரர்கள எங்க வெச்சிருக்காங்க?” அவர்களுக்குமே அது ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் அவர்களை ரகசியம் ரகசியம் என பயமுறுத்திக்கொண்டிருந்தார்களாம். “ஷ்ஷுகின்ஸ்காயா நிறுத்தத்தில் உள்ள ஆறாம் எண் மருத்துவமனையில்”.

கதிரியக்கவியலுக்கான விசேஷ மருத்துவமனை அது. நுழைவுச்சீட்டு இன்றி யாருக்கும் அனுமதி இல்லை. கதவருகே நின்றிருந்த பெண்ணுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தேன். “ம்ம்.. உள்ள போ” என்றாள். பின் இன்னொருவரிடம் கேட்கவெண்டியிருந்தது. கெஞ்ச வேண்டியிருந்தது. கடைசியாக ஆஞ்செலினா வசில்யெவ்னா குஸ்கோவா என்ற தலைமை கதிரியக்கவியலாளரின் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். எனக்கு அவள் யார், பெயர் என்ன, எதுவும் அப்போது நினைவில் இல்லை. அவனை காண வேண்டும் என்று மட்டுமே தெரிந்தது. என்னை பார்த்தவுடன் அவள் கேட்டாள் “குழந்தைகள் இருக்கிறதா உனக்கு?”

என்ன சொல்வது அவளுக்கு? நான் சூல்கொண்டிருப்பதை மறைக்க வேண்டும் என்று உடனே புரிந்துவிட்டது. அவனை காண விடமாட்டார்கள். நான் ஒடிசலாக இருந்தது நல்லதாக போயிற்று. பார்த்ததும் கர்பம் என்று தெரியாது.

“ம்ம்.. இருக்காங்க” என்றேன்.

“எத்தன குழந்தைக?”

யோசித்தேன் : “இரண்டு என்று சொல்ல வேண்டும். ஒன்று என சொன்னால் என்னை உள்ளே விட மாட்டார்கள்”.

“ஒரு பையன், ஒரு பொண்ணு”.

“ம்ம்… இதுக்கு மேல குழந்தைகள் தேவையில்ல. சரி. நல்லா கேட்டுக்கோ : அவரோட நரம்பு மண்டலமும் கபாலமும் முழுக்க பாதிப்படைஞ்சு இருக்கு.”

யோசித்தேன். ஆக, இனி அவன் கொஞ்சம் நிலையில்லாமல் இருப்பான்.

“இன்னொன்னும் கேட்டுக்கோ” அழ ஆரம்பிச்சன்னா உடனே வெளிய துரத்திடுவேன். கட்டிப்பிடிக்கறது முத்தம் கொடுக்கறது எதுவும் கூடாது. அவர் கிட்ட கூட நீ போக கூடாது. உனக்கு அரை மணி நேரம் தரேன்.”

நான் இங்கிருந்து வெளியேற போவதில்லை என எனக்கு தெரிந்திருந்தது. நான் வெளியேருவதானால் அது அவனுடன் தான். நான் உள்ளே நுழைந்தபோது அவர்கள் படுக்கைகளில் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர்.

“வஸ்யா!” என்று கத்தினார்கள்.

அவன் திரும்பிப்பார்த்தான்.

“ம்ம்… ஆட்டம் முடிஞ்சுது போ.இங்க கூட என்ன கண்டுபிடிச்சிட்டாளே இவ!”

அவனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. 48 அளவு உடை அணிந்திருந்தான். அவனது அளவு 52. உடையின் கையும் காலும் மிகச்சிறியதாக இருந்தன. அவன் முகத்தின் வீக்கம் குறைந்திருந்தது. ஏதோ மருந்து கொடுத்திருந்தனர்.

“எங்கடா ஓடி போயிட்ட நீ?” என்றேன் நான்.

அவன் என்னை கட்டிப்பிடிக்க விழைந்தான். ஆனால் மருத்துவர் விடவில்லை. “உக்காரு, உக்காரு” என்றாள் அவள். “கட்டி எல்லாம் பிடிக்க கூடாது.”

அந்நிலையை ஒரு நகைச்சுவையாக மாற்றிவிட்டோம். பின் எல்லோரும் வந்தனர். ப்ரிப்யாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட எல்லோரும். அந்த விமானத்தில் 28 பேர் வந்திருந்தார்கள். என்ன நடக்கிறது? அங்கு நகரத்தில் எப்படி இருக்கின்றன எல்லாம்? நான் நகரிலிருந்து அனைவரும் வெளியேற்றப்படுவதை பற்றி கூறினேன். அவர்களில் இரு மகளிரும் இருந்தனர். தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள். அவர்களும் ஒருத்தி அழத்தொடங்கினாள்.

“கடவுளே! என் குழந்தைங்க… என்ன ஆச்சோ அவங்களுக்கு?”

ஒரு நிமிடமேனும் அவனுடன் தனித்திருக்க விரும்பினேன். மற்றவர்களுக்கும் அது புரிந்தது. ஒவ்வொருவரும் ஏதோ ஓர் சாக்கு சொல்லி அங்கிருந்து கலைந்தனர். அனைவரும் சென்றதும் அவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டேன். அவன் விலகிச்சென்றான்.

“என் பக்கத்துல உக்காராத. போய் ஒரு நாற்காலி கொண்டுவா”.

“ஏய்! சும்மா விளையாடாத” என்று அவன் கூறியதை நிராகரித்தேன். “வெடிச்சத நீ பாத்தியா? என்ன ஆச்சு அங்க? நீங்க தான அங்க முதல்ல போனவங்க?”

“யாரோ வேணும்னே அத செஞ்சிருக்காங்க. பசங்க எல்லாம் அப்படி தான் நினைக்கறாங்க”

மக்கள் அப்போது அப்படி தான் பேசிக்கொண்டார்கள். அதை தான் உண்மையென்றும் நம்பினார்கள்.

மறுநாள் அவர்கள் அனைவரும் தத்தம் அறைகளில் தனித்தனியாக படுத்திருந்தார்கள். அவர்கள் கூடத்திற்கு செல்வதோ ஒருவரோடு ஒருவர் பேசுவதோ தடைசெய்யப்பட்டிருந்தது. தங்கள் கை முட்டியினால் சுவர்களை குத்தினர். dash-dot. dashdot. ஒவ்வொருவரின் உடலிலும் கதிரியக்கத்தின் செயல்பாடு ஒவ்வொரு விதமாக இருக்கும் என்றனர் மருத்துவர்கள். ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாததை மற்றொருவரின் உடல் ஏற்றுக்கொள்ளும். இவர்களை அடைத்து வைத்த அறைகளின் சுவர்களின் கதிரியக்க அளவை கூட கணக்கிட்டனர். இடம், வலம் ம்ற்றும் கீழ் தள அறைகளின் கதிரியக்க அளவையும். இவ்வறைகளின் கீழ் தளத்திலும் மேல் தளத்திலும் இருந்த நோயாளிகளை வெளியேற்றினர். அந்த இடத்தில் யாருமே எஞ்சி இருக்கவில்லை.

மூன்று நாட்களுக்கு மாஸ்கோவில் என் தோழிகளுடன் இருந்தேன். “இந்த பாத்திரத்த எடுத்துக்கோ, தட்ட எடுத்துக்கோ, என்ன வேணுமோ அத எடுத்துக்கோ” என்றார்கள். ஆறு பேருக்கு வான்கோழி சூப் வைத்துக்கொடுத்தேன். என் கணவனுக்கும் அவனுடன் அதே பணிநேரத்தில் பணிபுரிந்த ஆறு தீயணைப்பு வீரர்களுக்கு : பாஷுக், கிபெநோக், டிடெனோக், ப்ராவிக், டிஷுரா. நான் கடைக்கு சென்று அவர்களுக்கு தேவையான பற்பசை, குளியல் சோப், சிறிய தூவல்கள் எல்லாம் வாங்கிவந்தேன். இது எதுவும் மருத்துவமனையில் இல்லை. மீள்பார்வையில், என் நண்பர்களை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது : அவர்களுக்கு பயம் இல்லாமல் இல்லை. அது எப்படி இல்லாமல் இருக்கும் ? அப்போதே வதந்திகள் வர ஆரம்பித்துவிட்டன. ஆனாலும் சொல்லிக்கொண்டே இருந்தனர் : உனக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்! அவர் எப்படி இருக்கிறார்? அவர்கள் எப்படி இருக்கின்றனர்? பிழைப்பார்களா? Live [அவள் அமைதியாகிறாள்]. அப்பொழுது நிறைய நல்லவர்களை சந்தித்தேன். அவர்கள் அனைவரும் இப்போதி என் நினைவில் இல்லை. தரை துடைக்கும் வயதான பெண்ணை நினைவிருக்கிறது. “குணப்படுத்த முடியாத நோய்கள் சிலது இருக்கு. பக்கத்துல உக்காந்து பாத்துட்டு மட்டும் தான் இருக்கனும்” என்பதை அவளே எனக்கு கற்றுத்தந்தாள். 

அதிகாலையிலேயே சந்தைக்கு போவேன். அங்கிருந்து நண்பர்களின் வீட்டிற்கு. அங்கு தான் சூப் செய்வேன். எல்லாவற்றையும் துருவி, பின் மசிக்க வேண்டும். ஒருவன் “எனக்கு ஆப்பிள் ஜூஸ் வாங்கிட்டு வாயேன்” என்றான். 6 அரை லிட்டர் போத்தல்களுடன் வருகிறேன், எப்போதும் அறுவருக்கும் ! அங்கிருந்து மருத்துவமனைக்கு விரைவேன். மாலை வரை அங்கேயே இருப்பேன். பின்பு நகரின் மறுமூலைக்கு. எத்தனை நாட்களுக்கு இதை செய்திருக்க முடியும் என்னால் என்று தெரியவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் மருத்துவ பணியாளர்களின் குடியிருப்பினில் தங்கிக்கொள்ள அனுமதி அளித்தார்கள். கடவுளே, எத்தனை நிம்மதி !

“இங்க சமையலறையே இல்லையே? எப்படி சமைப்பேன்?”

“நீ இனி சமைக்க வேணாம். அவங்களால உணவ ஜீரணிக்க முடியாது இனி”

அவன் மாறத்துவங்கினான் – ஒவ்வொரு நாளும் ஒரு புதிய மனிதனை சந்தித்தேன். எரிபுண்கள் மேலெழ ஆரம்பித்தன. அவனது வாயினில், நாக்கினில், கன்னங்களில் – முதலில் சிறு புண்ணாக உருவாகி, பின் வளர்ந்தது.வெள்ளை தாள்களை போல ஏடு ஏடாக உதிர ஆரம்பித்தது… அவனது முகத்தின்…உடலின் நிறம்…நீலம்…சிகப்பு…சாம்பல்-பழுப்பு. இவையெல்லாம் எத்தனை எனது! இதை விளக்கவியலாது! எழுதவியலாது! கடக்கவும் இயலாது. என்னை அந்த நேரத்தில் காப்பாற்றியது ஒன்று தான். இவை அனைத்தும் மிக வேகமாக நிகழ்ந்தன; எனக்கு சிந்திக்க நேரம் இல்லை, அழவும் நேரமில்லை. 

நான் அவனை காதலித்தேன்! எந்த அளவிற்கு என்று எனக்கே தெரியவில்லை! எங்களுக்கு அப்பொழுது தான் திருமணம் ஆகியிருந்தது. நாங்கள் வீதிகளில் நடக்கையில், சட்டென என் கைபற்றி சுழற்றி முத்தமிடுவான். முத்தமிடுவான். புன்னகைத்தபடியே மக்கள் கடந்துபோவார்கள். 

அது மிகு கதிரியக்கத்திற்கு ஆளானவர்களுக்கான மருத்துவமனை. பதினான்கு நாட்கள். பதினான்கு நாட்களில் இங்கு ஒரு மனிதன் இறந்துவிடுவான்.

குடியிருப்பின் நான் வந்த முத ல் நாளே எனது அனைத்து பொருட்களையும் கதிரியக்க அளப்பான் கொண்டு சோதனை செய்தனர். என் உடைகள், பை, காலணி – இவை அனைத்துமே “சூடாக” இருந்தன. இவற்றை அவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர். எனது உள்ளாடைகளைக்கூட. என்னிடம் இருந்த பணத்தை மட்டும் தான் அவர்கள் விட்டு வைத்தார்கள். எடுத்தவற்றிக்கு பதிலாக மருத்துவமனை அங்கி ஒன்றையும் (அளவு 56),  43 அளவுள்ள காலணிகளையும் தந்தனர். என் ஆடைகளை திருப்பித்தரலாம், அல்லது தராமலும் போகலாம் என்றனர். ஏனெனில் அந்த ஆடைகளை “சலவை” செய்ய முடியாத நிலை. இந்த கோலத்தில் தான் அவனை பார்க்க வந்தேன் முதல் நாள். அவனை அச்சமுறச்செய்தேன். “ஏய் பொண்ணே! என்னாச்சு உனக்கு” என்றான். இப்பொழுதும் அவனுக்கு என்னால் சூப் தயாரிக்க முடிந்தது. ஒரு கண்ணாடிக் கோப்பையில் நீரை கொதிக்க வைத்து அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச்சிறிய கோழி இறைச்சித் துண்டுகளை போட்டேன். பிறகு, யாரோ ஒருவர் (பாத்திரம் கழுவும் பெண் என்று நினைக்கிறேன்) எனக்கு ஒரு சட்டியை தந்தார். வேறொருவர் காய்கறி நறுக்கும் பலகையை தந்தார், கீரை நறுக்க. என்னால் மருத்துவமனை அங்கியில் சந்தைக்கு போக முடியாது. மக்கள் எனக்கு காய்கறிகளை வாங்கித்தந்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் எந்த பயனும் இல்லை. அவனால் எதையும் குடிக்கக்கூட முடியவில்லை. பச்சை முட்டையை விழுங்கக் கூட முடியவில்லை அவனால். ஆனாலும் அவனுக்கு ஏதாவது சுவையாக சமைத்துத்தரவேண்டும் என்றிருந்தது எனக்கு! அதற்கேதும் பயன் இருக்குமா என்ன? தபால் நிலையம் ஓடினேன். “பெண்களே, இவானோ-ஃப்ரான்கோவ்ஸ்க்ல இருக்கற என்னோட பெற்றோர கூப்பிடனும் உடனே. என் கணவர் இறந்துக்கிட்டு இருக்கார்” என்றேன். அவர்களுக்கு உடனேயே புரிந்துவிட்டது, நான் யார், என் கணவர் யார் என. இணைப்பை தந்தார்கள். அன்றே என் தந்தையும் சகோதரியும் சகோதரனும் மாஸ்கோ வந்தனர். என் உடைகள் மற்றும் பணத்துடன். அன்று மே ஒன்பது. அவன் எப்போதும் என்னிடம் சொல்வான் : “மாஸ்கோ எத்தனை அழகு தெரியுமா! குறிப்பா வெற்றி நாள் கொண்டாட்டம் நடக்கும் போது வானவேடிக்கைகள் வெடிக்கும். அப்ப உனக்கு மாஸ்கோவ காட்டனும்னு எனக்கு ஆசை” 

அவனருகில் அமர்ந்திருக்கிறேன். அவன் கண்களை திறந்தான். 

“இது பகலா இரவா?” 

“இரவு ஒன்பது மணி” 

“ஜன்னல திற! வானவேடிக்கைகள் வெடிக்கப்போறாங்க இப்ப!”

ஜன்னலை திறந்தேன். நாங்கள் எட்டாவது மாடியில் இருந்தோ. முழு நகரமும் எங்களில் முன் விரிந்திருந்தது. தீ பூங்கொத்துக்களாக வானில் வெடித்துக்கொண்டிருந்தது. 

“அத பாரேன்!” என்றேன்.

“நான் உனக்கு மாஸ்கோவ காமிப்பேன்னு சொன்னேனில்ல. இந்த விடுமுறைல உனக்கு பூக்கள் தர்ரேன்னும் சொன்னேனில்ல…” 

திரும்பி அவனை பார்த்தேன். தலையணையின் அடியிலிருந்து மூன்று ரோஜாப்பூக்களை எடுத்தான். செவிலியிடம் பணம் கொடுத்து வாங்கிவைத்திருந்தான் ரோஜாக்களை. 

ஓடிச்சென்று அவனை முத்தமிட்டேன். 

“என் உயிரே! என் உயிரே!”

அவன் கத்தினான். “மருத்துவர் என்ன சொன்னாங்க? கட்டிப்பிடிக்கவோ முத்தமிடவோ கூடாதுன்னு சொன்னாங்க இல்ல!”

அவனை கட்டிப்பிடிக்க அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. அவனை படுக்கையில் அமரச்செய்தேன். தெர்மாமீட்டரை பொருத்தினேன். மலத்தட்டை எடுத்து கழுவி கொண்டுவந்து வைத்தேன். இரவெல்லாம் அவனுடனேயே இருந்தேன். 

அறையின் வெளியே எனக்கு தலை சுற்றியது. ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு நின்றேன். கடந்து சென்ற மருத்துவர் என் கைகளை பற்றினார். திடீரென “நீ கர்பமா இருக்கியா?” என்றார். 

“இல்ல, இல்ல!” வேறு யாராவது கேட்டுவிடுவார்களோ என பயமாக இருந்தது. 

“பொய் சொல்லாத” என்றார்.

மறுநாள் காலை தலைமை மருத்துவரின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். 

“ஏன் என் கிட்ட பொய் சொன்ன? ” என்றார் அவர். 

“எனக்கு வேற வழி தெரியல. நான் உண்மைய சொல்லி இருந்தா நீங்க என்ன வெளிய அனுப்பி இருப்பீங்க. நல்ல விஷயத்துக்காக சொன்ன பொய் இது”

“நீ என்ன செஞ்சிருக்க தெரியுமா?”

“ஆனா அவன் கூட இருந்தனே…..”

நான் என் வாழ்நாள் முழுக்க ஏஞ்சலீனா வசில்யெவ்னா குஸ்கோவாவிற்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். வாழ்நாள் முழுக்க! மற்றவர்களின் மனைவிகளும் வந்தனர். ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய தாயார்கள் மட்டும் என்னுடன் தங்கவைக்கப்பட்டனர். வோலோட்யா ப்ராவிக்கின் தாய் கடவுளிடம் இறைஞ்சினார் : “அவனுக்கு பதில் என்னை எடுத்துக்கோ”. மருத்துவர். கேல் என்ற அமெரிக்க பேராசிரியர் – இவர் தான் எலும்பு மஞ்ஞை அறுவைசிகிச்சை செய்தவர் – என்னை சமாதானப்படுத்த முயன்றார்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “ஒரு தனித்த மானுட குரல்…”

பின்னூட்டமொன்றை இடுக