இந்த புயலும் கடந்து போகும். ஆனால் இப்போதைய நமது தேர்வுகள் இனி வரும் ஆண்டுகளில் நம் வாழ்வை மாற்றலாம்.
ஆங்கில மூலம்: https://www.ft.com/content/19d90308-6858-11ea-a3c9-1fe6fedcca75
மனித இனம் ஒரு உலகலாவிய சிக்கலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நம் தலைமுறையின் ஆகப்பெரிய சிக்கலாக இது இருக்கலாம். அடுத்த சில வாரங்களில் அரசுகளும் மக்களும் எடுக்கும் முடிவுகள் இனி வரப்போகும் பல ஆண்டுகளுக்கு நமது எதிர்காலத்தை வடிவமைக்கலாம். நமது சுகாதார அமைப்புகளை மட்டுமல்ல, நம் பொருளாதாரத்தை, அரசியலை, பண்பாட்டையுமே கூட மாற்றலாம். நாம் துரிதமாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டும். ஆனால் நமது செயல்பாடுகளின் நீண்டகால விளைவுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். பல மாற்றுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொழுது, தற்போதைய இடரை எவ்வாறு கடப்பது என்பதை சிந்திப்பதோடு நில்லாமல், இந்த புயல் கடந்த பின் எப்படியான ஒரு உலகத்தில் நாம் வாழப்போகிறோம் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆம். இதுவும் கடந்து போகும், மனித இனம் பிழைத்து வரும், நம்மில் பலரும் உயிரோடே இருப்போம் – ஆனால் நாம் வாழப்போகும் உலகம் வேறொன்றாக இருக்கும்.
இன்றைய குறுகிய கால, இடர் போக்கும் செயல்பாடுகள் பலவும் நம் வாழ்வின் அங்கமாக மாறி இருக்கும். இதுவே இடர்காலங்களின் குணம். அவை வரலாற்று செயல்பாடுகளை துரிதப்படுத்துகின்றன. இயல்பான காலங்களில் ஆண்டுக்கணக்காக எடுக்கத்தயங்கும் முடிவுகள் சில மணி நேரங்களில் எடுக்கப்படும். முதிர்ச்சியற்ற, ஆபத்தான தொழில்நுட்பங்கள் கூட நடைமுறைபடுத்தப்படும்; ஏனெனில் செயலின்மையின் அபாயங்கள் மேலும் பெரியவை. நாடுகள் பலவும் பெரும் சமூக பரிசோதனைகளுக்கான சோதனை எலிகளாக மாற்றப்படும். அனைவரும் வீட்டில் இருந்தபடியே பணி புரிந்தால், தொலைதொடர்பு மூலமாக மட்டுமே உரையாடினால் என்ன ஆகும்? அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் இணைய வழி கூடங்களாக மாறினால் என்னாகும்? இயல்பான காலங்களில் அரசுகளோ, வணிக மற்றும் கல்வி நிறுவனங்களோ இதுபோன்ற பரிசோதனைகளுக்கு ஒரு போதும் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் இவை இயல்பான காலங்கள் அல்ல.
இந்த சிக்கலான காலகட்டத்தில் நம் முன் இரண்டு முக்கியமான தேர்வுகள் உள்ளன. முதலாவது, சர்வாதிகார கண்காணிப்பிற்கும் குடிமக்கள் அதிகாரத்திற்கும் இடையிலான தேர்வு. இரண்டாவது, தேசியவாத தனிமைப்படுதலுக்கும் உலகலாவிய ஒற்றுமைக்கும் இடையிலான தேர்வு.
தோலுக்கும்-அடியில் பாயும் கண்காணிப்பு
கொள்ளைநோய்களைத் தடுக்க, மொத்த மக்கள்தொகையும் சில வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும். இதை இரு வழிகளில் சாத்தியப்படுத்தலாம். ஒன்று, அரசு மக்களை கண்காணித்து, வழிகாட்டுதல்களை மீறுபவர்களை தண்டிக்கலாம். இன்று, மனித வரலாற்றில் முதன்முறையாக எல்லா மக்களையும் எல்லா நேரங்களிலும் கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பம் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், கேஜிபியால் (சோவியத் ரஷ்யாவின் உளவுத்துறை) 240 மில்லியன் சோவியத் குடிமக்களை 24 மணி நேரமும் கண்காணிக்கவோ, கண்காணிப்பில் சேகரித்த தகவல்களை ஆய்வு செய்யவோ முடியவில்லை. மனித உளவாளிகளையும் ஆய்வாளர்களையுமே கேஜிபி நம்பியிருந்தது. ஒவ்வொரு குடிமகனையும் பின் தொடர ஒரு உளவாளியை வைக்க முடியாது. ஆனால் இன்று அரசுகள், இரத்தமும் சதையுமான மனிதர்களை விட எங்கும் நிறைந்திருக்கும் உணரிகளையும் (sensors) சக்திவாய்ந்த அல்காரிதம்களையும் நம்பலாம்.
கொரோனாவைரஸுக்கு எதிரான இந்த போரில், இப்போதே பல அரசுகள் நவீன கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இதில் மிகவும் கவனிக்கத்தக்க நாடு, சீனா. மக்களின் அலைபேசிகளை உன்னிப்பாக கண்காணித்ததன் மூலமாகவும், கோடிக்கணக்கான “முகங்களை கண்டுணரும்” கேமராக்களை பயன்படுத்தியதன் மூலமாகவும், மக்களை தங்களின் உடல் வெட்பத்தையும் உடல்நிலையையும் பரிசோதித்து அறிவிக்குமாறு கட்டாயப்படுத்தியதன் மூலமாகவும், சீன அதிகாரிகளால் மிக வேகமாக கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும் அவர்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்களை சேகரிக்கவும் முடிந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அருகாமையை குறித்து குடிமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் அலைபேசி நிரல்கள் பல வந்துவிட்டன.
இது போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாடு கிழக்காசியாவோடு மட்டும் நிற்கவில்லை. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யாஹு, தீவிரவாதிகளை கண்காணிப்பதற்கு பயன்படுத்தும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்டு, கொரோனாவைரஸ் நோயாளிகளை கண்காணிப்பதற்கான ஒப்புதலை அளித்தார். இதற்கான பாராளுமன்ற துணைக்குழு இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த பொழுது, நெடன்யாஹு இதை “இடர்கால ஆணை”யாக நிறைவேற்றினார்.
இதில் புதியதாக என்ன இருக்கிறது என்று நீங்கள் வாதிடலாம். கடந்த சில ஆண்டுகளாக அரசுகளும் நிறுவனங்களும் மிக நுட்பமான தொழில்நுட்பங்களால் மக்களை கண்காணித்து வருகிறது. ஆனால், இப்பொழுது நாம் கவனமாக இல்லையென்றால், இந்த கொள்ளைநோய், கண்காணிப்பின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துவிடும். இதுகாரும் இப்படியான கண்காணிப்புகளை மறுத்த நாடுகளிலும் கூட பெருந்திரளான மக்களை கண்காணிக்கும் கருவிகளின் பயன்பாடு சாதாரணமாகவிடும். ஆனால் அதை விடவும் முக்கியமான காரணம் – இதன் மூலம், கண்காணிப்பு என்பது, “தோலுக்கு மேலான” கண்காணிப்பு என்பதில் இருந்து தோலுக்கு-உள்ளேயுமான கண்காணிப்பாக பெருமாற்றம் அடையும்.
இதுவரை, உங்கள் விரல் உங்களின் அலைபேசி தொடுதிரையை தொட்டு ஒரு சுட்டியை அழுத்தியபோது, அரசு உங்கள் விரல் எந்த சுட்டியை அழுத்தியது என்பதை அறிய விழைந்தது. ஆனால் இந்த கொரோனாவைரஸ் அரசின் கவனத்தை மாற்றி இருக்கிறது. இப்பொழுது அரசு அறியவிழைவது அழுத்திய உங்களின் விரலின் வெட்பத்தையும் அதன் தோலுக்கு உள்ளே ஓடும் இரத்தத்தின் அழுத்ததையும்.
பேரிடர்காலப் புட்டு
அதீத கண்காணிப்பு வேண்டுமா வேண்டாமா என்ற விவாதத்தில் நாம் எங்கே நிற்கிறோம் என்று முடிவெடுப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது – எவ்வகையில் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பது யாருக்கும் துல்லியமாக தெரியாது. வரும் காலங்களில் அது என்னவாக மாறும் என்பதும். கண்காணிப்பு தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு அறிவியல் புனைவை போல தோன்றிய ஒன்று இன்று பழைய செய்தியாக தெரிகிறது. ஒரு சிந்தனை பரிசோதனையாக (thought experiment) இதை எண்ணிப்பாருங்கள். ஒரு கற்பனையான அரசு, தன் குடிமக்கள் அனைவரும், 24 மணி நேரமும் உடல் வெட்பத்தையும் இதயத்துடிப்பையும் கண்காணிக்கும் பயோமெட்ரிக் வளையலை அணிந்துகொள்ளவேண்டும் என்று ஆணையிடுவதாக கொள்வோம். அதில் இருந்து சேகரிக்கப்படும் தகவல்கள் அரசின் அல்காரிதம்களால் ஆராயப்படுகின்றன. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்ற விவரம் உங்களுக்கு முன்பே அந்த அல்காரிதமிற்கு தெரிந்துவிடும். அத்தோடு, அந்த காய்ச்சலோடு நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்கள், யாரையெல்லாம் சந்தித்தீர்கள் என்ற தகவல்களையும் அது அறியும். தொற்றுநோயின் சங்கிலிகள் இதன் மூலமாக அதிரடியாக குறைக்கப்படலாம். ஏன், முழுவதுமாக தடுக்கக்கூட படலாம். இதன் மூலமாக கொள்ளைநோய்களின் பரவலை சில நாட்களுக்குள்ளாகவே தடுத்துவிடலாம். கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது, இல்லையா?
இதன் தீங்கு என்னவெனில், இது, அச்சமூட்டும் புதியவகை கண்காணிப்பிற்கு சட்டப்பூர்வமான ஒப்புதலை அளித்துவிடும். உதாரணமாக, நீங்கள் சி.என்.என் சுட்டிக்கு பதிலாக ஃபாக்ஸ் நியூஸ் சுட்டியை அழுத்தினீர்கள் என்றால், தற்போதைய கண்காணிப்பு முறைகளை கொண்டு, உங்களின் அரசியல் பார்வை என்ன என்று அறியலாம். இன்னும் கொஞ்சம் முயன்றால், உங்களின் குணவார்ப்பு என்ன என்று கூட உத்தேசிக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு காணொலியை பார்க்கும் பொழுது உங்களது உடல் வெட்பத்திற்கும், இரத்த அழுத்தத்திற்கும், இதயத்துடிப்பிற்கும் என்ன ஆகிறது என்பதை கண்காணிக்க முடிந்தால், உங்களை எது சிரிக்கவைக்கிறது, எது அழ வைக்கிறது, எது உங்களை உண்மையிலேயே கோவமூட்டுகிறது என்பதை அறியலாம்.
இங்கே நாம் முக்கியமாக உணர வேண்டியது கோவமும், மகிழ்ச்சியும், சலிப்பும், அன்பும், காய்ச்சலையும் இருமலையும் போன்ற உயிரியல் நிகழ்வுகளே. இருமலை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை கொண்டே சிரிப்பையும் அடையாளம் காணலாம். அரசுகளும் பெருநிறுவனங்களும் நமது பயோமெட்ரிக் தகவல்களை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யத்துவங்கினால் நம்மை பற்றி நம்மை விட அவர்கள் அதிகம் அறிந்துகொள்வார்கள். நம் உணர்வுகளை கணிப்பதோடு நில்லாமல் நாம் என்ன உணரவேண்டும் என்பதையும் அவர்களால் தீர்மானிக்கமுடியும். இதன் மூலமாக நம்மிடம் எதையும் – அது நுகர்பொருளோ அல்லது அரசியல்வாதியோ – அவர்களால் விற்க முடியும் . பயோமெட்ரிக் கண்காணிப்போடு ஒப்பிட்ட்டால் கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா தகவல் ஹாக்கிங் உத்திகள் கற்கால தொழில்நுட்பங்கள் போல தோன்றும். 2030ல் வடகொரியாவை கற்பனை செய்யுங்கள். குடிமக்கள் யாவரும் 24 மணி நேரமும் பரோமெட்ரிக் வளையலை அணிய வேண்டிய நிலை வரலாம். பெரும் தலைவரின் உரையை கேட்டுக்கொன்டிருக்கும் பொழுது அந்த வளையல் ஒரு மனிதரின் கோவத்தை கண்டுணர்ந்ததென்றால் அந்த மனிதரின் நிலை என்ன?
இது போன்ற பயோமெட்ரிக் கண்காணிப்புகள் பேரிடர் காலங்களில் எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே; பேரிடர் கடந்ததும் இவற்றை நீக்கி விடலாம் என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் தற்காலிக நடவடிக்கைகளுக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. பேரிடர் கடந்த பின்னும் அவை அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். குறிப்பாக அடுத்த பேரிடர் எப்பொழுது வேண்டுமானாலும் வந்துவிடலாம் அல்லவா? உதாரணமாக, எனது நாடான இஸ்ரேல், 1948ல் விடுதலைப்போரின் போது அவசரக்கால நிலையை கொண்டுவந்தது. இதழியல் தணிக்கை, நிலம் கையகப்படுத்துதல் முதல் புட்டு சமைப்பதில் மேற்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் (விளையாட்டல்ல. உண்மையாகவே) வரை பல்வேறு தற்காலிக நடவடிக்கைகளை இந்த சட்டம் நியாயப்படுத்தியது. போர் முடிந்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. ஆனால் இன்னமும் இந்த அவசரகால நிலை விலக்கப்படவில்லை. 1948ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பல “தற்காலிக” நடவடிக்கைகள் இன்னமும் நடமுறையில் இருக்கின்றன. (அந்த புட்டு சமையல் கட்டுப்பாடுகள் 2011ல் ஒரு ஆணையின் மூலமாக கருணையுடன் விலக்கப்பட்டன).
கொரோனாவைரஸின் பாதிப்பு முற்றிலுமாக குறைந்துவிட்டாலும் கூட, சில தகவல் பசியெடுத்த அரசுகள் இந்த பயோமெட்ரிக் கண்காணிப்பு அமைப்புகளை தொடர வேண்டும் என வாதிடலாம். கொரோனாவைரஸின் இரண்டாம் கட்ட தாக்குதல் வரலாம்,. மத்திய ஆப்ரிக்காவில் புதிய வகை எபோலா உருவாகி இருக்கலாம், அல்லது… காரணங்களா இல்லை? நமது தனியுரிமையை சுற்றி ஒரு பெரும் போர் கடந்த சில ஆண்டுகளாக நடந்துவந்திருக்கிறது. இந்த கொரோனாவைரஸ் சிக்கல் அந்த போரின் திருப்புமுனையாக அமையலாம். ஏனெனில் தனியுரிமையா (Privacy)) அல்லது உடல்நலமா என்றால், பெரும்பாலான மக்கள் உடல்நலத்தை தான் தேர்ந்தெடுப்பார்கள்.
சோப் போலிஸ்
சொல்லப்போனால், தனியுரிமை அல்லது உடல்நலம் இவையிரண்டில் ஏதேனுமொன்றைத் தேர்ந்தெடுங்கள் என மக்களிடம் சொல்வதுதான் பிரச்சினையின் ஆணிவேர்.இந்த தேர்வு அடிப்படையிலேயே போலியானது. தனியுரிமை, உடல்நலம் ஆகிய இரண்டையுமே அனுபவிக்க நம்மால் இயலும். சர்வாதிகார கண்காணிப்புகளை விட மக்கள் அதிகாரத்தை அதிகரிப்பதன் வழியாக நம்மால் இந்த கொரோனாவைரஸ் பரவலை தடுக்கவும் நம் உடல்நலத்தை பேணவும் இயலும். சமீப வாரங்களில் கோரோனாவைரஸுக்கு எதிரான மிக வெற்றிகரமான செயல்பாடுகளை நிகழ்த்திய நாடுகள் தென் கொரியா, தாய்வான் மற்றும் சிங்கப்பூர். இந்த நாடுகள் சில கண்காணிப்பு கருவிகளை பயன்படுத்தி இருந்தாலும், இந்த கருவிகளை விடவும் பரவலான மருத்துவ சோதனைகளையும், நேர்மையான அறிக்கை சமர்பித்தல்களையும், பொதுமக்களின் விருப்பத்தின் பேரிலான ஒத்துழைப்பையும் அதிகமாக நம்பின.
வழிகாட்டு நெறிமுறைகளின்படி மக்களை இயங்கச் செய்வதற்கு, தொடர் கண்காணிப்பும், கடும் தண்டனைகளும் மட்டும் தான் வழி என்றில்லை. மக்களுக்கு அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டால், அந்த உண்மைகளை சொல்லும் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், மக்கள் இயல்பாகவே இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவர். சுய உந்துதல் உடைய, அறிவார்ந்த மக்கள் கூட்டம் என்னாளும் கண்காணிக்கப்படும் அறியாமை கொண்ட சமூகத்தை காட்டிலும் பலம்வாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
சோப்பினை கொண்டு கை கழுவுவதை எடுத்துக்காட்டாக கொள்வோம். மனித சுகாதாரத்தின் ஆகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்று இது. இந்த எளிய வழிமுறை ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்களை காக்கிறது. இன்று இதை நாம் ஒரு பெரிய விஷயமாக கருதுவதில்லை என்றாலும்,. 19ஆம் நூற்றாண்டில் தான் விஞ்ஞானிகள் சோப்பினை கொண்டு கை கழுவுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். அதற்கு முன், மருத்துவர்களும் செவிலியர்களும் கூட ஒரு அறுவைசிகிச்சையில் இருந்து மற்றொன்றிற்கு கையை கூட கழுவாமல் தான் சென்றார்கள். இன்று கோடிக்கணக்கான மக்கள் உலகமெங்கும் சோப்பினை கொண்டு கை கழுவுவது ஏதோ சோப் போலிஸுக்கு பயந்து அல்ல, உண்மையை அறிந்துகொண்டதனால் தான். எனக்கு வைரஸ்கள், பாக்டீரியாக்கள் பற்றி தெரியும் என்பதாலும் அந்த நுன்னுயிர்கள் நோய்கள் தரும் என்பது புரிந்ததாலும் சோப் இவற்றை நீக்கும் என்பதை அறிந்ததாலும் தான் சோப் கொண்டு கை கழுவுகிறேன்.
ஆனால் இந்த அளவிலான கீழ்படிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நம்பிக்கை தேவைப்படுகிறது. மக்கள் அறிவியலை, அரசை மற்றும் ஊடகங்களை நம்ப வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் அறிவியலின், அரசின், ஊடகங்களின் மீதான நம்பிக்கைகளை திட்டமிட்டுக் குலைத்திருக்கின்றனர். இப்பொழுது அதே அரசியல்வாதிகள், பொது மக்களை நம்ப முடியாதென்றும் அதீத கண்காணிப்பே ஒரே வழி என்றும் சொல்லக்கூடும்.
வழக்கமாக, ஆண்டாண்டு காலங்களாக இழந்த நம்பிக்கையை ஒரே நாளில் மீட்டுவிட முடியாது. ஆனால் இது வழக்கமான காலம் அல்ல. பல்லாண்டுகளாக தீவிரமாக சண்டையிட்ட உடன்பிறந்தோருடன், ஏதோ ஒரு இடர் பொழுதில், மனதில் அக்கரையும் நம்பிக்கையும் துளிர்க்க, பாய்ந்து சென்று ஒருவருக்கு ஒருவர் உதவுவதில்லையா? ஒரு கண்காணிப்பு ஆட்சிமுறையை கட்டி எழுப்புவதற்கு பதில் அறிவியலின் மீதும் பொதுத்துறைகளின் மீதும் ஊடகங்களின் மீதுமான மக்களின் நம்பிக்கையை வளர்தெடுக்கும் பணியினை செய்யலாம். அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. நாம் நிச்சயம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். ஆனால்; அத்தொழில்நுட்பங்கள் மக்களின் அதிகாரத்தை வளப்படுத்துமாறு அமையவேண்டும். எனது உடல் வெட்பத்தையும் இரத்த அழுத்தத்தையும் தொடர்ச்சியாக கண்காணிப்பதில் எனக்கு உடன்பாடு தான். ஆனால் அப்படி சேகரிக்கப்படும் தகவல்கள் ஒரு சர்வ வல்லமை பொருந்திய அரசின் உருவாக்கத்திற்க்காக இருக்கக்கூடாது. மாறாக, அந்த தகவல்கள் என்னை மேலும் தெளிவாக சுயதேர்வுகள் எடுக்க உதவுவதாகவும், அரசை தன் முடிவுகளுக்கு பொறுப்பேற்க செய்வதாகவும் இருக்க வேண்டும்.
எனது உடல்நலத்தை 24 மணி நேரமும் என்னால் கண்காணிக்க முடியும் என்றால், அத்தகவல்களை கொண்டு நான் பிறரது உடல்நலத்திற்கு ஆபத்தாக இருக்கிறேனா என்பதை மட்டுமல்ல, எனது எந்த பழக்கங்கள் என் உடல்நலத்திற்கு உதவுகின்றன என்பதையும் உணர முடியும். கொரோனாவைரஸ் பரவலை குறித்த நம்பகமான புள்ளி விவரங்களை என்னால் அணுகவும் பகுத்தாயவும் இயலுமென்றால், அரசு உண்மையை சொல்கிறதா, நோய் பரவலை தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கின்றனவா என்று என்னால் கண்டுகொள்ள முடியும். மக்கள் கண்காணிப்பை பற்றி பேசும் பொழுது, ஒன்றை உணர வேண்டும். கண்காணிப்பு தொழில்நுட்பம் மக்களை அரசு கண்காணிக்க மட்டுமல்ல, அரசை மக்கள் கண்காணிக்கவும் பயன்படலாம்.
இந்த கொரோனாவைரஸ் கொள்ளைநோய் நம் குடிமைக்கு விடுக்கப்பட்ட பெரும் சவால். இனி வரும் நாட்களில், நீங்கள் ஒவ்வொருவரும் சதி கோட்பாடுகளையும் சுயநல அரசியல்வாதிகளையும் விட அறிவியல் தகவல்களையும் சுகாதார நிபுணர்களையும் நம்பவேண்டும். இந்த சரியான தேர்வை நாம் இப்பொழுது எடுக்காமல் போனால், நம் சுகாதாரத்தைக் காக்க ஒரே வழி என்று நினைத்து விலைமதிப்பில்லாத நமது சுதந்திரத்தை, இலவசமாக விற்றவர்கள் ஆகிவிடுவோம்..
நமக்கு தேவை ஒரு உலகலாவிய திட்டம்
நம் முன் இருக்கும் இரண்டாவது மிகப்பெரிய தேர்வு தேசியவாத தனிமைப்படலுக்கும் உலகலாவிய ஒற்றுமைக்குமானது. இந்த கொள்ளைநோயும், அதனால் விளையப்போகும் பொருளாதார வீழ்ச்சியும் உலகலாவிய சிக்கல்கள். அவற்றை உலகலாவிய ஒத்துழைப்புடன் தான் தீர்க்க முடியும்.
மிக முக்கியமாக, இந்த வைரஸை வீழ்த்த அனைத்து நாடுகளும் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். இதுவே வைரஸ்களிடம் இல்லாத, ஆனால் மனிதர்களுக்கு இருக்கும் வசதி.சீனாவில் இருக்கும் ஒரு கொரோனாவைரஸும் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கொரோனாவைரஸும் மனிதர்களை எப்படி தாக்குவது என்பதை பற்றிய குறிப்புகளை பரிமாறிக்கொள்ள முடியாது. ஆனால் சீனா, அமெரிக்காவிற்கு கொரானாவைரஸ் குறித்தும் அதை எதிர்கொள்வது குறித்தும் பல தகவல்களை கற்றுத்தர முடியும். காலையில் மிலானில் ஒரு இத்தாலிய மருத்துவர் கண்டுபிடிக்கும் ஒரு தகவல் மாலையில் தெஹரானில் உயிர்களை காக்க உதவலாம். இங்கிலாந்து அரசு பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்க தயங்கும் பொழுது அதே போன்ற சிக்கல்களை முன்னர் சந்தித்த கொரிய அரசு அறிவுரை வழங்கலாம். இது நிகழ, உலகலாவிய ஒத்துழைப்பும் நம்பிக்கையும் தேவை.
நாடுகள் தங்களிடம் உள்ள தகவல்களை வெளிப்படையாக பகிர வேண்டும். அடக்கத்துடன் அறிவுரைகள் கேட்க வேண்டும், பிற நாடுகளிடம் இருந்து பெறும் தகவல்களை நம்பவேண்டும். மருத்துவ கருவிகளை தயாரிக்கவும் வினியோகிக்கவும் உலகலாவிய முயற்சி தேவை. குறிப்பாக மருத்துவ சோதனை கருவிகள் மற்றும் மூச்சு இயந்திரங்கள். ஒவ்வொரு நாடும் தனக்கான தேவைகளை தானே உற்பத்தி செய்துகொண்டு, தேவைக்கதிகமான கருவிகளை தானே பதுக்கிக்கொள்வதை விட உலகலாவிய ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியின் மூலம் கருவிகளின் உற்பத்தி வேகத்தை அதிகரிப்பதோடு உயிர்காக்கும் கருவிகளை தேவைக்கேற்ப நியாயமான முறையில் வினியோகிக்கவும் முடியும். போர் காலங்களில் நாடுகள் தங்களின் முக்கியமான தொழில்களை தேசியமயமாக்குவதை போல கொரோனாவைரஸுக்கு எதிரான மனிதர்களின் இந்த போரில் மிக முக்கியமான உற்பத்திகள் மனிதமயமாக்கப்பட வேண்டும்.மிக சில நோயாளிகளை மட்டுமே கொண்ட ஒரு வளம் மிகுந்த நாடு, மிக அதிகமான நோயாளிகளை கொண்ட வளம் குறைந்த நாட்டிற்கு அத்தியாவசிய கருவிகளை கொடுத்துதவ வேண்டும். இதை, தனக்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது பிற நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
நாம் உலகவாவிய ஒரு மருத்துவர் குழுவை குறித்தும் சிந்திக்கலாம். குறைவாக பாதிப்பிற்கு உள்ளான நாடுகளில் இருந்து மருத்துவர்கள் அதிக பாதிப்படைந்த நாடுகளுக்கு சென்று உதவலாம். இது உதவியாகவும் இருக்கும், அதே நேரம் இந்த சிக்கலை எதிர்கொள்ள தேவையான அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கும்.
பொருளாதார பிரச்சனைகளுக்கும் இது போன்ற உலகலாவிய ஒத்துழைப்பு தேவை. உலக பொருளாதாரமும் வினியோக தொடர்களும் (Supply chains) செயல்படும் விதத்தையும் கணக்கில் கொண்டால், ஒவ்வொரு அரசும் மற்ற நாடுகளை பற்றி சிந்திக்காமல் தனியாக செயல்படுவது குழப்பத்தை விளைவித்து இந்த சிக்கலை மேலும் ஆழமாக்கவே உதவும். நமக்கு ஒரு உலகலாவிய திட்டம், அதுவும் மிக விரைவாக, தேவை.
இப்போதைய மற்றொரு தேவை, பயணம் குறித்த ஒரு உலகலாவிய ஒப்பந்தம். மாதக்கணக்கில் பன்னாட்டு பயணங்களை ரத்து செய்வது சிக்கலை பெரிதாக்கி கொரோனாவைரஸுக்கு எதிரான இந்த போரிற்கு இடரையே விளைவிக்கும். அத்தியாவசியமான பயணிகளை (விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள்) மட்டுமாவது பயணம் செய்ய அனுமதிக்கக்கூடிய ஒத்துழைப்பை நாடுகள் நல்க வேண்டும். அவர்கள் தங்களின் நாடுகளில் இருந்து கிளம்பும் பொழுது கடைபிடிக்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை குறித்த உலகலாவிய உடன்படிக்கை ஏற்பட்டால், அவர்கள் சென்றிரங்கும் நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்வது எளிதாகும்.
துரதிர்ஷ்டவசமாக, தற்பொழுது நாடுகள் இவற்றில் பலதை செய்வதில்லை. சர்வதேச சமூகம் முடக்குவாதம் வந்ததை போல இருக்கிறது. அறையினில் பொறுப்புமிக்க பெரிவர்கள் யாருமே இல்லை என்பதை போல தோன்றுகிறது. வாரங்களுக்கு முன்பே உலக தலைவர்களின் அவசர சந்திப்பு நிகழ்ந்திருக்கும் என்றும் நாம் நினைப்போம். ஆனால், இந்த வாரம் தான் ஜி7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக சந்தித்திருக்கிறார்கள். அதிலும் கூட முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
முந்தைய உலகலாவிய பேரிடர்களின் போது (உதா: 2008 பொருளாதார நெருக்கடி, 2014 எபோலா கொள்ளைநோய்) அமெரிக்கா உலக தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. ஆனால் தற்போதைய அமெரிக்க அரசு அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டது. மானுடத்தின் எதிர்காலத்தை விட அமெரிக்காவின் மேன்மையே தனக்கு முக்கியம் என்பதை அது தெளிவுபடுத்திவிட்டது.
இந்த அமெரிக்க அரசு தனது நெருங்கிய கூட்டாளிகளையும் கூட கைவிட்டு விட்டது. ஐரோப்பிய ஐக்கியத்தில் இருந்து அனைத்து பயணங்களையும் அது ரத்து செய்த போது, ஐக்கிய ஐரோப்பாவை கலந்தாலோசிப்பதை விடுங்கள், முன்கூட்டியே அறிவிப்பினை கூட அது தரவில்லை. கொரோனாவைரஸ் தடுப்பூசிக்கான ஏகபோக உரிமைக்காக அமெரிக்கா, ஒரு ஜெர்மானிய மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் வழங்க விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போதைய அமெரிக்க அரசாங்கம் தலைமை ஏற்க ஒரு வேளை நினைத்து, உலகலாவிய செயல் திட்டம் ஒன்றை முன்வைத்தாலும் கூட, பொறுப்பை ஏற்காத, தவறுகளை ஒப்புக்கொள்ளாத, பழியினை பிறர் மேல் போட்டுவிட்டு வெற்றிகளுக்கு மட்டும் தன்னை முன் நிறுத்திக்கொள்ளும் ஒரு தலைவரை அதிக நாடுகள் பின் தொடராது.
அமெரிக்கா விட்டுச்சென்ற இந்த பாழ்வெளியை வேறு நாடுகள் நிரப்பவில்லை என்றால், தற்போதைய இந்த கொள்ளைநோயை தடுப்பது கடினமாவதோடு, இனி வரும் ஆண்டுகளில் உலக நாடுகளுக்கிடையிலான உறவுகளை கெடுக்கவும் செய்யும். எனினும், ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பும் கூட. மனித இனத்திற்கு இந்த உலகலாவிய ஒற்றுமையின்மையால் விளையக்கூடிய தீமைகளை இந்த கொரோனாவைரஸ் உணரவைக்கும் என்று நம்புவோம்.
மனித இனம் இப்பொழுது ஒரு தேர்வை செய்தாகவேண்டும். இந்த ஒற்றுமையின்மையின் பாதையிலேயே பயணிக்கப்போகிறோமா அல்லது உலக ஒற்றுமைக்கான ஒரு புதிய பாதையை சமைக்கப்போகிறோமா? ஒற்றுமையின்மையை தேர்வு செய்தால், தற்போதைய சிக்கலில் இருந்து வெளியேறுவதற்கு தாமதமாவது மட்டுமல்ல, எதிர்காலத்தில் மேலும் பல பேரிடர்களை சந்திக்கவும் நேரிடும். உலக ஒற்றுமையை தேர்ந்தெடுத்தால், அது இந்த கொரோனாவைரஸுக்கு எதிரான வெற்றியாக மட்டும் அல்ல; 21ஆம் நூற்றாண்டில் மனிதகுலம் காணப்போகும் எல்லா கொள்ளைநோய்களுக்கும் பேரிடர்களுக்கும் எதிரான வெற்றியாக அமையும்.
தமிழில் : சித்தார்த் வெங்கடேசன்
One reply on “கொரோனாவைரஸுக்கு பின்னான வாழ்வு – யுவால் நோவா ஹராரி”
[…] கொரோனாவைரஸுக்கு பின்னான வாழ்வு – யுவ… […]