இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் Game of Thronesநாவலில் வரும் ஒரு மன்னர் எட்டார்ட் ஸ்டார்க் (Eddard Stark). நாவலின் துவக்கத்தில் ராணுவத்தை விட்டு ஓடிய ஒருவனுக்கு அந்நாட்டு சட்டப்படி மரணதண்டனை அளிக்கிறார். அவனது தலையை துண்டிக்கும் செயலை மன்னரே செய்கிறார். முடித்துவிட்டு மாளிகைக்கு திரும்பும் பொழுது அவரது பத்து வயது மகனுக்கு தன் செயலுக்கான காரணத்தை அவர் விளக்கும் வரி ஏதோ செய்தது வாசிக்கும் பொழுது :
”நீ ஒரு மனிதனின் உயிரை பறிக்க முடிவெடுக்கிறாயெனில் அவனை கண்ணோடு கண் நோக்கி அவனது கடைசி சொற்களை கேட்கும் கடமை உனக்கிருக்கிறது. உன்னால் அதை செய்யவியலாதெனில், அவன் ஒருவேளை இறக்க வேண்டியவனாக இல்லாமல் இருக்கலாம்.
கூலிக்கு கொல்பவர்கள் பின்னால் ஒளியும் மன்னன் ஒரு கட்டத்தில் மரணம் என்றால் என்ன என்பதை மறந்துவிடுவான்….”
***********
கசாபின் தூக்கு தண்டனை தீர்ப்பு இந்த வரியை நினைவுப்படுத்தியது. மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பது அனைத்து சமூகப்பிரச்சனைகளை போலவே மிக சிக்கலான ஒரு பிரச்சனை.
மரண தண்டனை என்பது அடிப்படையில் சமூக கட்டமைப்பை சார்ந்த ஒரு விஷயம். இன்று சமூகம் என்ற பதத்தை பயன்படுத்துகிறோம். ஒரு காலத்தில் குழுநலன்/குழு ஒற்றுமை என்பதாக இருந்தது. மரண தண்டனை இரண்டு நிலைகளில் வேலை செய்வதாக படுகிறது. ஒரு நிலையில் அது குற்றம் நிகழாமல் தடுப்பதற்கான காரணியாக இருக்கிறது. மரணம் குறித்த அச்சம் குற்றத்தை தடுக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் அதை விடவும் முக்கியமாக சமூக கோவத்தின் வடிகாலாக மரண தண்டனை பயன்படுகிறது. கசாபின் மரணம் என்பது மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கோவத்திற்கான வடிகால். அதிகாரம் பரவலாக சிறுசிறு மக்கள் குழுக்களின் கைகளில் இருந்த பொழுது, தண்டித்தலுக்கும் மக்களுக்குமான நெருக்கம் மிக அதிகமாக இருந்த பொழுது ஊர்கூடி கல்லெரிந்து கொன்றோம். ஆனால் இந்த நூற்றாண்டில் நமக்கு நிகழ்ந்த இருபெரும் மாற்றங்கள் அதிகாரம் மையத்தை நோக்கி நகர்ந்ததும் தனிமனிதன் குறித்த பிரக்ஞை அதிகரித்ததும். ஒரு தனிமனிதனை தண்டனை என்ற பெயரில் கொல்வதற்கான அதிகாரம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தோ / பல்வேறு சிறுசிறு குழுக்களிடமிருந்தோ பறிக்கப்பட்டு ஒரு மைய அமைப்பிற்கு செல்கிறது.
இந்த நகர்வு மெல்ல வன்முறைக்கான தேவையை/பயன்மதிப்பை குறைத்துக்கொண்டே வருகிறது. நம் வரலாற்றில் இன்றை போல வன்முறை குறைவாக நிகழும், வன்முறை பரவலாக வெறுக்கப்படும் வேறோர் காலகட்டம் இருந்ததில்லை என்றே படுகிறது. வன்முறையின் உன்னதப்படுத்தப்பட்ட வடிவமாக ”வீரம்/மறம்” சென்ற தலைமுறையைவிட இந்த தலைமுறையில் குறைவாகவே மதிக்கப்படுகிறது. கழுவிலேற்றுவதை ஊரே சென்று பார்ப்பதும், ஊர் கூடி கல்லெரிந்து கொல்வதும் பொதுவழக்கமாக இருந்த காலகட்டத்தை தாண்டி வந்துவிட்டோம். ஒரு இனமாக நாம் மென்மேலும் உன்னதமாகிக்கொண்டிருக்கிறோம் என்றே நம்புகிறேன். ஒரு சிறுகுழுவின் அங்கமாக மட்டுமே என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்பதே சென்றகாலத்தில் ஒரு தனிமனிதனின் பொது மனநிலையாக இருந்தது. அங்கிருந்து மெல்ல நகர்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையே மனித உரிமைக்கு இன்று உருவாகியுள்ள முக்கியத்துவம் காட்டுகிறது. இந்த பின்னணியில் மரண தண்டனைக்கான எதிர்ப்பு என்பது மிக இயல்பான ஒன்றே.
ஆனால் மரண தண்டனையே கூடாதா? என்ற கேள்விக்கு இன்னும் என்னிடம் தெளிவான விடை இல்லை. தனிமனிதனுக்கான ஒழுக்கவிதிகளே அரசுக்கும் என்பது ஒரு உன்னத நிலை தான் என்றாலும் யதார்த்தம் என்பது மிக சிக்கலானதல்லவா?
மரணதண்டனை எதிர்ப்பு என்பது மனித உயிரின் முக்கியத்துவத்தை அரசிற்கு முன் பறைசாற்றும் செயல். சமூக நலன் என்ற போர்வையில் தனிமனிதன் நசுக்கப்படுவதற்கு எதிரான கூக்குரல். இந்த எதிர்ப்பு தண்டிக்கப்பட்டவனின் மீதான இரக்கத்தில் இருந்து எழுவதில்லை. தண்டிப்பவனின் மீதான கண்காணிப்பு உணர்வில் இருந்து எழுவது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் நிலையாகிவிடக்கூடாதென்பதற்காக எழுவது.
மன்னன் எடார்ட் ஸ்டார்கின் வரி : கூலிக்கு கொல்பவர்கள் பின்னால் ஒளியும் மன்னன் ஒரு கட்டத்தில் மரணம் என்றால் என்ன என்பதை மறந்துவிடுவான்…
இந்த மறதி நிகழாதிருக்கவே, ஒவ்வொரு மரண தண்டனையில் பொழுதும் தண்டிக்கப்படுபவன் யாராக இருந்தாலும் அவன் குற்றம் என்னவாக இருந்தாலும் எதிர்ப்பு எழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
4 replies on “அறவினை யாதெனின்…”
அந்த Game of Thrones வரிகளை கிண்டிலில் ஹைலைட் செய்ததாக ஞாபகம்.
ஆனால் சற்று நேரத்துக்குள்ளாகவே கதை பயங்கரமாகக் குழப்ப ஆரம்பித்தது. (என்னுடைய ஆகச்சிறிய attention span காரணமாக இருக்கலாம்). நெடுந்தொடரைப் பார்த்துக்கொள்ளலாம் என்று கைவிட்டுவிட்டேன்.
மரண தண்டனையானது, ‘இது குற்றங்களினும் பெரிய குற்றம்; இதற்கு தண்டனைகளினும் மேலான ஒரு தண்டனை விதிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தின் வெளிப்பாடோ?
இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கூட, ‘rarest of the rare’ கேஸ்களுக்குத்தான் மரண தண்டனை பொருந்தும்.
(மரணம்தான் ஆகப்பெரிய தண்டனையா? என்பதும் யோசிக்கவேண்டிய விஷயம். 🙂 )
அடுத்த மரணதண்டனை வரும் போது தெளிவு கிட்டுமாவென பார்ப்போம்
அருமை
100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்…click me…