பிரிவுகள்
இலக்கியம் மொழிபெயர்ப்பு

ஓ.வி. விஜயன் – ஓர் அறிமுகம்

ஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 – மார்ச் 30, 2005) 

பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.

ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி  என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது.  1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.

ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.

கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :

…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.

“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.

“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.

“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.

“அக்காவை மறந்துவிடுவாயா?”

“மாட்டேன்”

“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”

இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.

… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”  

 இக்கட்டுரை ஏப்ரல் 2007 வலம்புரி இதழில் வெளிவந்தது.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “ஓ.வி. விஜயன் – ஓர் அறிமுகம்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s