மனுஷ்ய புத்திரனின் மணலின் கதை அவரது தொகுதிகளிலேயே மிகச்சிறந்தது என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு விதத்தில் ஒரு உச்சம் கூட. இத்தொகுதிக்கு பிறகு பத்திரிக்கைகளில் வந்த மனுஷ்ய புத்திரனின் கவிதைகளில் இந்த ஈர்ப்பு தன்மை காணக்கிடைக்கவில்லை. தீராநதியில் புரோஜக்ட் போன்ற தட்டையான கவிதைகளும் வந்தன. அவர் அந்த விஷயத்தை அப்படி தான் சொல்லி இருக்க இயலும் என்றார். இருந்தாலும், ப்ராஜக்ட் போன்ற ஒரு கவிதையை எழுத மனுஷ்ய புத்திரன் தேவையில்லை என்பது என் எண்ணம். அவரிடமும் சொன்னேன். அப்படியா என்றார்.
மணலின் கதைக்கு வருவோம். இக்கவிதை தொகுதியை படித்து முடித்தவுடன் ஒரு கோப்பை green tea அருந்திய உணர்வு. ஒரு நல்ல green tea போல, ஒவ்வொரு கவிதையும் மெல்லியவை, ஆனால் ஆழமானவை. இத்தொகுதியின் சிறப்பம்சமாய் எனக்கு பட்டது, எந்த கவிதையும் என்னை புரிந்துகொள் என நம்மை கட்டாயப்படுத்துவதில்லை. புரிந்துகொள்ளாதே என பூடகப்படுத்துவதும் இல்லை.
தொகுதியிலிருந்து சில கவிதைகள்…
மணலின் கதை
மேற்கொண்டு எதையும்
அளிக்கவியலாத என் பிரியம்
ஒரு நாள் தன்னை
ஒரு மணல் துகளாக்கிக் கொண்ட்து
கொஞ்ச நேரம்
வெறுமனே
கண்களில் விழுந்து உறுத்துயது
உனது
ஒரு கண்ணீர்த் துளியோடு
அது இறுதியாக வெளியேற்றப்பட்ட்து
கடற்கரையில்
காத்திருந்தன
மேற்கொண்டு எதையும் அளிக்கவியலாத
கோடானுகோடி மனிதர்களின்
கோடானுகோடி மணல் துகள்கள்
வேறெங்கும் போகமுடியாத
என் பிரியத்தின் மணல் துகள்
மெல்லத் த்ன்னை அம்மணல் பரப்போடு
இணைத்துக்கொண்டு
நான் என் குழந்தைகளுக்கு
இந்தக் கதையைச் சொன்னேன் :
எவ்வாறு மணல் பரப்புகள் உருவாகிறதென்று
எதனால் விரைந்து நடக்கவிடாமல்
கால்களை உள்ளிழுக்கிறதென்று
எதற்காக அவை அவ்வளவு பிடிவாதமாக
ஒட்டிக்கொண்டு
வீடுவரை வந்துவிடுகின்றன என்று
கொஞ்சம் அவகாசம் கொடு
வெய்யில் சற்றே தணியட்டும்
என் குழந்தைகள் வீடு திரும்பவேண்டும்
நான் என் காலணிகளை உரிய இட்த்தில் வைத்துவிடுகிறேன்
இந்த அறை இவ்வளவு ஒழுங்கற்று இருக்கலாகாது
நான் ஒரு பழைய கடித்த்தைப் படிக்க வேண்டும்
ஒரு பழைய புகைப்பட்த்தைப்
பாதுகாப்பாக ஒப்படைக்கவேண்டும்
என் நாயின் கண்களில் படரும்
சந்தேகத்தைப் போக்க வேண்டும்
இறுதியாக எல்லாத் தடயங்களையும் அழுத்துவிட வேண்டும்
கொஞ்சம் அவகாசம் கொடு
அமைதி வேளை
உன் அமைதி வேளை
ஒரு கண்ணாடி சமவெளி
இலைகள் உதிர்வதில்லை
நீர்த்துளிகள் சொட்டுவதில்லை
காலடிகள் கேட்பதில்லை
ஒரு பறவையும் துயில் கலைவதில்லை
எந்தக் குறுக்கீடும் நிகழாத
உன் அமைதி வேளை
திடீரென
ஒரு நாள்
தன்னைத் தானே கலைத்துக்கொண்டு
தேம்புகிறது
மணலின் கதை – மனுஷ்ய புத்திரன்
உயிர்மை வெளியீடு
2 replies on “மீள்வாசிப்பை வேண்டி நின்ற இரு நூல்கள்: 2 – மணலின் கதை (மனுஷ்ய புத்திரன்)”
மனுஷ்யபுத்திரனின் “படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்”.”நீராலனது”,”காத்திருந்த வேளையில்” ஆகிய படைப்புகள் படித்திருக்கிறேன். இப்போதுதான் இந்த தொகுதி பற்றிய அறிமுகம் படிக்கிறேன். முழுதும் படிக்கும் ஆவல் பிறந்துள்ளது.
நன்றி.
எனக்கும் மணலின் கதை மிக மிக பிடிக்கும். ஆனாலும் அதையே மனுஷ்ய புத்திரனின் உச்சம் என்று சொல்ல மாட்டேன். முழுவதும் வேறுபட்ட நடையில் அவர் எழுதிய நீராலானது தொகுதியில் சில கவிதைகளும், கால்கள் – போன்ற படுக்கையறையில்…. தொகுதி கவிதைகளும் மணலின் கதை கவிதைகளை விட பிரமாதம் என்பது என் கருத்து