கடந்த சில வாரங்களாக இரு புத்தகங்கள் மீள்வாசிப்பு செய்யத் தூண்டியபடியே இருந்தன. முழுவதுமாக படிக்க முடியாமலும், நீண்ட நேரம் விலகி இருக்க முடியாமலும் போன அவஸ்தை. ஒன்று, யுவன் சந்திரசேகரின் “ஏற்கனவே” சிறுகதை தொகுதி. மற்றது மனுஷ்ய புத்திரனின் “மணலின் கதை” கவிதைத் தொகுதி.
ஏற்கனவே அலாதியான கதைக் கூட்டு. ஜெயமோகனின் மண் தொகுதிக்கு பிறகு ஓர் தொகுப்பின் அத்தனை கதைகளும் என்னை ஈர்த்தது இத்தொகுதியில் தான். ஜெயமோகனின் படைப்புகள், நான் அடையவிரும்பும் ஓர் இடத்தில் இருந்து வருகின்றன. ஆனால் யுவன் அப்படி அல்ல. என் புரியாமை, நம்பிக்கையின்மை எல்லாம் அவருக்கும் உண்டு என்பதால் என் சகன் இவர் என்ற எண்ணம் என்னை வந்து கட்டிக்கொண்டது அவரது கதைகளை படித்த போது. யுவனின் இரு நாவல்களையும் (குள்ளச்சித்தன் சரித்திரம், பகடையாட்டம்) முன்னமே படித்திருந்தாலும், அதில் தெரிந்த யுவனுக்கும் இதில் தெரியும் யுவனுக்கும் நிறைய வித்தியாசங்கள்.
இத்தொகுதியின் சிறுகதைகள் பலவும் கிட்டத்தட்ட சுயசரிதை போன்றவை. கிருஷ்ணன் என்ற ஒற்றை மனிதனின் வாழ்வு. கிருஷ்ணனை யுவனாகவே பார்க்கத்தோன்றுகிறது (யுவனே ஒரு கதாப்பாத்திரமாய் ஒரு கதையில் வந்தபோதும்).
ஒரு உணர்வு அல்லது கருத்தாக்கம், அது நம்மை நமது வாழ்வில் எப்போதெல்லாம் சந்தித்துள்ளது என்பதன் பட்டியல் தான் பல கதைகளின் வடிவமாக உள்ளது. உதாரணத்திற்கு, நட்பு என்ற கருத்தாக்கம், கிருஷ்ணனை சந்தித்த கணங்களின் தொகுதி தான் “நூற்று சொச்சம் நண்பர்கள்” கதை. ஒரு மணமோ, காட்சியோ, செய்தியோ நமது நினைவுகளைக் கிளரி, வேறோர் இட்த்திற்கு அழைத்துச்செல்லும் உணர்வின் பட்டியல் தான் “புகைவழிப் பாதை”. இத்தொகுப்பின் மிகச்சிறந்த கதை “நூற்று சொச்சம் நண்பர்கள்”. பல வடிவங்கள், சொல்முறைகள் கதையினுள் பயன்படுத்தப்பட்ட அழகு தரும் அனுபவம் அலாதியானது. நட்பென்னும் அம்மெல்லிய வலையின் வீச்சில் சிக்கும் முகங்கள் தான் எத்தனை…
15 கதைகள் கொண்ட தொகுப்பு இது. தொகுப்பின் சிறந்த கதைகளாய் எனக்கு தோன்றியவை காற்புள்ளி, புகைவழிப் பாதை, நூற்றி சொச்சம் நண்பர்கள், நார்ட்டன் துரையின் மாற்றம், தெரிந்தவர், அவரவர் கதை, ஏற்கனவே மற்றும் விருந்தாளி.
தொகுதியிலிருந்து சில வரிகள்….
“என்ன சொல்ல. மொட்டை மாடி தன் விஸ்தீரணத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது. மூலையில் தேங்கியிருக்கும் மழைத்தண்ணீர் பெரும் சமுத்திரமாகிறது. தண்ணீர்தொட்டி, மகா மேருவாகிறது. பக்க சுவர்கள், கவிந்திறங்கிப் போர்த்தும் ஆகாயமாகின்றன. எட்டிப்பார்க்கும் தென்ன்ங்கீற்றில், அழிக்கப்படுவதற்கு முந்தைய ஆதிவனத்தின் பச்சை போர்த்தியிருக்கிறது. மேகம் விலகிய பின் வெளியேறிப் பாயும் சூரியக் கதிர், அநாதி காலமாய்த் தன் தன்மையை இழக்காத வெய்யிலால் அலங்கரிக்கிறது பூமியை. இந்த நிமிட்த்திலிருந்து ஆரம்பிக்கின்றன சகலமும்.”
– – விருந்தாளி
சொல்லப்போனால், அழகு என்கிறது தான் என்ன? ஒரு விகிதாசாரம் தானே –விருந்தாளி
வாழ்க்கையை பற்றி எழுதுகிறேன் என்று சொல்பவன் வாழ்க்கையை பற்றிய தன்னுடைய பார்வையை மட்டுமே எழுதுகிறான். வாழ்க்கையைப் பற்றி எழுது என நிர்ப்பந்திப்பவன், என்னுடைய வாழ்க்கையை ஏன் எழுதவில்லை என்றே ஆதங்கப்படுகிறான். உண்மையில் வாழ்க்கை என்பதாக ஒரு பொதுத்தளம் இருப்பது வெறும் தோற்றம் மட்டுமே. அவரவர் அனுபவத்தைப் பிறருடைய அனுபவத்துடன் கோர்த்த அனுபவத் தொடரை ஒற்றை அனுபவமாக எப்படி வரிக்க?
அறிவியலுக்கும் மெய்யியலுக்கும் இடையில் உள்ள பள்ளத்தாக்கில் காற்றுப் போல் சுதந்திரமாக அலைவதையே இலக்கியம் என்பேன்.
–– – சோம்பேறியின் நாட்குறிப்பு
தூண்டில் இல்லை அதனிடம்.
வலையும் இல்லை கைவசம்
நெருப்பு இல்லை வாட்டிட
அடுப்பு இல்லை பொரித்திட
கரையில் காத்து நின்றிட
இணையும் இல்லை ஸீகலுக்கு.
ஆனால், ஆனால் செம்படவா –
ஸீகலின் மீன் உனதில்லை –
ஸீகலின் கடலும் உனதில்லை
– “மீகாமரே…, மீகாமரே”
ஏற்கனவே – யுவன் சந்திரசேகர்
உயிர்மை பதிப்பகம்
2 replies on “மீள்வாசிப்பை வேண்டி நின்ற இரு நூல்கள்: 1 – ஏற்கனவே (யுவன்)”
நீண்ட நாட்களாக படிக்க விரும்பும் புத்தகங்களில் யுவனின் வரிசையும் உள்ளது. உங்களின் மீள்பார்வை என்னை வெகு விரைவில் புத்தகம் படிக்க தூண்டுகிறது. நல்ல அறிமுகத்திற்கு நன்றி.
”ஜெயமோகனின் படைப்புகள், நான் அடையவிரும்பும் ஓர் இடத்தில் இருந்து வருகின்றன. ஆனால் யுவன் அப்படி அல்ல. என் புரியாமை, நம்பிக்கையின்மை எல்லாம் அவருக்கும் உண்டு என்பதால் என் சகன் இவர் என்ற எண்ணம் என்னை வந்து கட்டிக்கொண்டது அவரது கதைகளை படித்த போது”
மிக்க சரி.. எனக்கும் இதே போல் தோன்றியது.. காற்புள்ளி, மற்றும் நார்ட்டன் துரையின் மாற்றம் என்னை மிகவும் கவர்ந்த கதைகள். நூற்றுச் சொச்சம் நண்பர்கள் வேறு மாதிரியான அனுபவம் தந்தது. அக்கதையில் பல நுட்பமான, செரிவான இடங்கள். ஆனால், அவ்வித நுண்மையான பகுதிகளுக்குப் பின்னர் வரும் இடங்கள் சரியான ஒழுங்கமைவு இல்லாதது போல் தோன்றியது. ஒருவித ’forced lightness’ உத்தி போல எனக்குப் பட்டது. தந்தையின் மரணச்சடங்கு பற்றிய கதையின் முடிவு ஒரு உதாரணம்.