கான் அப்துல் கஃபார் கான். ராமகிருஷ்ணரை போன்ற முக அமைப்பும், தாடியும் கொண்ட மனிதர். எல்லை காந்தி என்ற பெயரை எடுத்தவர். பாஷ்டுன் இனத் தலைவர். பள்ளிக்கூடத்தில் படித்ததில் ஞாபகத்தில் இருப்பது இவ்வளவு தான். இன்று மிதவாதம் பற்றிய ஒரு கட்டுரையை விக்கிபீடியாவில் வாசித்துக்கொண்டிருந்த போது தான் அவர் ஆரம்பித்த “குதாய் கித்மத்கர்” இயக்கத்தை பற்றி அறிய நேர்ந்தது.
ஒருங்கினைந்த இந்தியாவின் வட மேற்கு எல்லைப் பகுதியில் (North-West Frontier Province [NWFP]) பஷ்துன் இனத்தில் 1890 பிறந்தார் கான் அப்துல் கஃபார் கான். கானின் சமுதாயப்பணி, பாஷ்துன் இன மக்களுக்கு கல்வியை சேர்ப்பதில் தான் தொடங்கியது. பல்வேறு வெளிக்காரணிகளாலும், பழியுணர்ச்சியும் வன்முறையும் இயல்பானதாகிவிட்ட பாஷ்தூன் கலாச்சாரத்தாலும் பாஷ்தூன் இன மக்கள் மிகவும் பின் தங்கியிருந்ததை உணர்ந்த கான், தனது 20ஆவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற ஊரில் துவக்கினார்.
மக்களுடனான நெருக்கம் கூடக் கூட கானின் பார்வையும் அகல விரிய ஆரம்பித்தது. இக்காலக்கட்டத்தில் கான், பல சமூக சீர்த்திருத்த அமைப்புகளை உருவாக்கினார். அஞ்சுமன்-இ-இஸ்லா உல்-அஃப்கானியா (1921), அஞ்சுமன்-இ-ஜமீந்தாரன் என்ற உழவர் அமைப்பு (1927) மற்றும் பாஷ்துன் ஜிர்கா என்ற இளைஞர் அமைப்பு (1927) ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. பாஷ்தூன் விவகாரங்களைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாக்தூன் என்ற பத்திரிக்கையையும் 1928ஆம் ஆண்டு தொடங்கினார். இக்காலக்கட்டத்தில் கான் பாஷ்தூன் மாகானத்தின் மக்களிடையே பாத்ஷா கான்(மன்னர்) என அறியப்படலானார்.
ஒரு கட்டத்தில், தனது பணி ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க உதவுவதே என உணர்ந்த கான், 1929ஆம் ஆண்டு நவம்பர் குதாய் கித்மத்கர் (கடவுளின் சேவகர்கள்) என்ற அமைப்பை தொடங்கினார். கான், காந்தியின் மிதவாத,அஹிம்சை கருத்துக்களால் கவரப்பட்டது குதாய் கித்மத்கர் அமைய முக்கிய காரணமாக இருந்தது. இஸ்லாம் மற்றும் பாஷ்தூன் மரபின் ஆதாரம் அஹிம்சை தான் என தீவிரமாக நம்பினார் கான். தனது அமைப்பின் அங்கத்தினரிடம் இவ்வாறு கூறினார்:
“நான் உங்களுக்கு தரப்போகும் ஆயுதத்திற்கு எதிராக காவல்துறையும் இராணுவமும் எதுவுமே செய்ய இயலாது. இது இறைதூதரின் ஆயுதம், ஆனால் உங்களுக்கு அதைப் பற்றி தெரியவில்லை. சகிப்புத்தன்மையும் அற உணர்வுமே அவ்வாயுதம். உலகின் எந்த சக்தியாலும் இதை எதிர்த்து நிற்க முடியாது.”
வழமையாக வன்முறையையே வாழ்க்கைமுறையாக கொண்ட பதான்களிடமிருந்து அகிம்சையை பிரித்தானியர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. குதாய் கித்மத்கர் இயக்கத்தினரின் போராட்டங்களை அடக்க பிரிட்டிஷ் அரசு மிக கடுமையான வழிமுறைகளை கையாண்டது. பெஷாவரில் 1930ல் நடந்த மோசமான தாக்குதலில் 200 குதாய் கித்மாத்கர் உருப்பினர்கள் கொல்லப்பட்டனர். மிதவாத அகிம்சா வழிகளைப் பற்றி ஆராய்சி செய்த ஜீன் ஷார்ப் இந்நிகழ்வைப் பற்றி இவ்வாறு எழுதினார்:
“முன்வரிசையில் இருந்தவர்கள் குண்டு பாய்ந்து சரிந்து விழுகிறார்கள். பின்னால் நிற்பவர்கள் வெற்று மார்புடன் முன்னால் வந்து நின்று துப்பாக்கி சூடுக்கு தயாராக நிற்கிறார்கள். சிலர் மார்பில் 21 குண்டுகள் துளைத்தெடுக்கிற அளவுக்கு தாக்குதல் நடக்கிறது. கண்முன் சரிந்து விழுவதைக் கண்டும் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்களே தவிர யாரும் பயந்து ஓடவில்லை. அரசு சார்பான லாகூரைச் சேர்ந்த ஆங்கிலோ இந்திய பத்திரிகையே, ‘ மக்கள் ஒருவர் பின் ஒருவராக துப்பாக்கி சூட்டின்போது வரிசையாக வந்து நின்றார்கள். சரிந்து விழுந்தவர்களை இழுத்துப் போட்ட பின் அடுத்து வரிசையில் வந்து நிற்கிறார்கள். இப்படி பதினோரு மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடந்தது. சடலங்கள் குவிந்த பிறகு அரசாங்கத்தின் ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து அவற்றை அள்ளிச் சென்றன’ ”
(மொழிப்பெயர்ப்பு: கல்பனா சோழன், திண்ணை)
இந்திய படையினரில் ஒரு சாரார் இனி சுட மாட்டோம் என மறுத்த பிறகே இவ்வன்முறை நின்றது. உத்தரவை மீறியமைக்காக இவ்வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
இவ்வளவிற்கு பிறகும் குதாய் கித்மத்கர்கள் அமைதி வழியிலேயே போராட்டத்தை மேற்க்கொண்டனர் என்பது இன்றைய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆச்சரியத்தையும் ஆழமான நம்பிக்கையையும் தருகிறது.
இந்து-இஸ்லாமிய ஒற்றுமைக்காக குரல் கொடுத்த கான், இந்தியப்பிரிவினையை வன்மையாக எதிர்த்தார். இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவதை அவர் வன்மையாக கண்டித்தார். மேலும் பாகிஸ்தான் என்ற சிறிய நாட்டின் கீழ் இருப்பதைக் காட்டிலும், அகண்ட இந்தியாவின் கீழ் இருப்பதே பாஷ்துன்களுக்கு நல்லது என அவர் கருதினார். பாகிஸ்தான் உருவானதும், பாஷ்தூன்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இந்நிகழ்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு கித்மத்கர்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கியது. இவ்வமைப்பு தடைசெய்யப்பட்டு, கான் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலடைக்கப்பட்டார்.
இவரது செயல்கள் தேச விரோதமானவை என பாகிஸ்தான் கருதிய காரணத்தாலேயே இவரது வரலாறு பாகிஸ்தான் அரசினால் ம(றை)றக்கப்பட்டது. பாகிஸ்தான் பாடத்திட்டத்தில் கானை பற்றிய மிக சிறு குறிப்பே கொடுக்கப்படுகிறது. நிறைய பாகிஸ்தானியர்களுக்கு கான் யார் என்பது கூட தெரியாது. மேலும் கான், காந்தி அளவிற்கு அதிகம் எழுதியதில்லை. இவை காரணமாக காந்தி அளவிற்கு கானின் பெயர் அதிகம் பிரபலம் அடையவில்லை.
கான் அப்துல் கஃபார் கான், 1988ல் தனது 98வது வயதில் பெஷாவரில் உயிர்நீத்தார். காந்தி,மார்ட்டின் லூத்தர் கிங் வரிசையில் அகிம்சை போரட்ட முறையின் நடைமுறை பயன்பாட்டையும் திரனையும் எடுத்துக்காட்டிய 20ஆம் நூற்றாண்டு தலைவர்களும் மிக முக்கியமானவர் கான் அப்துல் கஃபார் கான்.
உதவி:
http://en.wikipedia.org/wiki/Khudai_Khidmatgar
http://en.wikipedia.org/wiki/Khan_Abdul_Ghaffar_Khan
http://progressive.org/mag_amitpalabdul
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20202171&edition_id=20020217&format=html
5 replies on “எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கான்”
நல்ல பதிவு.
கான் அப்துல் கஃபார் கான் அவர்கள் குறித்து அறிய தந்தமைக்கு நன்றி.
அவர் ஷியா முஸ்லீம் என்பதால், சுன்னி முஸ்லிம்களின் பாகிஸ்தான் அரசு அவரை பற்றி அதிகம் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.
// மேலும் பாகிஸ்தான் என்ற சிறிய நாட்டின் கீழ் இருப்பதைக் காட்டிலும், அகண்ட இந்தியாவின் கீழ் இருப்பதே பாஷ்துன்களுக்கு நல்லது என அவர் கருதினார்.//
சுன்னி முஸ்லீம்களின் கீழ், ஷியா முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று நினைத்திருப்பார். மேலும், பதான்களின் நலன்களை முன்னிறுத்தியவர் என்பது தெளிவாகின்றது. தன் இன நலன்களை காப்பது குறித்து சிந்தித்தவர் என்பதும் புலனகின்றது.
ஆமாம், ஏன் பாதான்களுக்கு தனி தேசம் கேட்டு போராடாமல், பாகிஷ்தானுடன் ஐக்கியமானார் இந்த ‘எல்லை காந்தி’ என்பது எனக்கு தெரியவில்லை.
விளக்குவீர்களா?
Very informative post. Thanks
கருத்து கூறிய சிவபாலன், “வணக்கத்துடன்” மற்றும் பரமேஸ்வரிக்கு நன்றிகள் பல.
//அவர் ஷியா முஸ்லீம் என்பதால், சுன்னி முஸ்லிம்களின் பாகிஸ்தான் அரசு அவரை பற்றி அதிகம் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.//
இருக்கலாம். ஆனால் இதை பற்றி நான் எங்கும் படிக்கவில்லை. நீங்கள் சொல்லி தான், பிரச்சனையின் இந்த பரிமாணத்தை பற்றி தெரிய வந்தது.
//சுன்னி முஸ்லீம்களின் கீழ், ஷியா முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று நினைத்திருப்பார். மேலும், பதான்களின் நலன்களை முன்னிறுத்தியவர் என்பது தெளிவாகின்றது. தன் இன நலன்களை காப்பது குறித்து சிந்தித்தவர் என்பதும் புலனகின்றது.
ஆமாம், ஏன் பாதான்களுக்கு தனி தேசம் கேட்டு போராடாமல், பாகிஷ்தானுடன் ஐக்கியமானார் இந்த ‘எல்லை காந்தி’ என்பது எனக்கு தெரியவில்லை. //
அவர் முதலில் ஒரு பதான். பதான்களின் நிலையை சரி செய்வது தான் அவரது சமூகப்பணிகளின் துவக்கமாக இருந்தது. அதனால் அவர் அவர்களின் நலனுக்காய் அக்கரைப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. விடுதலைக்கு பிறகு, பதான்களுக்கு தனி பிராந்தியம் (பாஷ்துனிஸ்தான்) வேண்டும் என்றார். ஆனால் அது பாகிஸ்தானின் ஆளுமைக்கு உட்பட்டு இருக்க வேண்டுமா அல்லது தனி நாடாக இருக்க வேண்டுமா என கூறவில்லை. பாகிஸ்தான் அரசு இக்காலகட்டத்தில் மிக கடுமையான நடவடிக்கைகளை கித்மத்கர்களுக்கு எதிராய் மேற்கொண்டது. இவரும் 10 ஆண்டுகள் சிறையில் கழித்தார். அதனால் இது வலுவிழந்து போனது. ஆயினும் கித்மத்கர்களின் சமுதாயப்பணி தொடர்ந்து வந்தது.
ஆறு வருடங்களுக்கும் மேலான பின் இந்தப் பதிவைப் படிக்கிறேன்…. பிறந்து கால் நூற்றாண்டுகள் கழிந்த பின் இந்த உத்தமரைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். என் முன்னோர் வரலாறு எனக்கே தெரியாததைப் பற்றி வருந்துகிறேன், பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரர்.