தன் வாலை உண்ணும் பாம்பெனக் காலம்
உலகம் பருப்பொருட்களால் ஆனது. பருப்பொருட்கள் எல்லையுடையவை. பருப்பொருட்கள் காலத்தின் மீதேறி பயணிக்கின்றன. காலம் எல்லையற்றப் பெருவெளி. எல்லையற்றக் காலத்தின் மீது பயணிக்கும் எண்ணிலடங்கும் பருப்பொருட்களின் கூட்டின் விளைவான நிகழ்வுகள், மீண்டும் மீண்டும் நிகழ்ந்தாகவேண்டும். இன்று இதோ இவ்வரிகளை நான் எழுதும் இந்நிகழ்வு, இன்னோர் காலத்தில் இதே கைகளால் எழுதப்படும்.
🙂 சுவாரஸ்யமான கற்பனை. ஜெயமோகனின் "ஜகன்மித்யை" என்ற சிறுகதை இதை பற்றியது. காலத்தின் மீது நிகழ்வு கொள்ளும் சுழற்சியின் சூத்திரத்தை அறிய விரும்பும் ஓர் மேதையை பற்றியது. தன் வாழ்வை, கானல் நெருப்பிற்கு அவிஸாய் தந்ததை எண்ணி அவன் மரணப்படுக்கையில் வருந்துவதுடன் முடிகிறது கதை.
History repeats itself என்ற இக்கொள்கையை தனிமனித நிலையில் வைத்து ஆராய்ந்த இரு படங்களை பற்றி பேசலாமென….
முதல் படம் 1950களில் வெளிவந்த All about Eve. பெட்டி டேவிஸ், ஆன்னே பாக்ஸ்டர் நடித்தது. ஹாலிவுட் என்னும் மாய விளக்கில் தினந்தோரும் விழும் விட்டில் பூச்சிகளில் ஒருத்தி ஆன்னே பாக்ஸ்டர். பெட்டி டேவிஸின் தீவிர ரசிகை. மெல்ல மெல்ல அந்நடிகையை நெருங்கி, அவளின் நம்பிக்கைக்குறியவளாய் மாறி, பிறகு சமயம் கூடும்போது அவளின் இடத்தை பிடிக்கிறாள். வஞ்சிப்பது பெண் என்பதாலேயே இத்துரோகத்தின் தீவிரம் கூடிவிட்டதாய் தோன்றியது. இப்போது ஆன்னே பாக்ஸ்டர் முன்னனி நடிகையாய் திகழ, அவளை காண வருகிறாள் ஓர் இளம் ரசிகை. அந்த ரசிகையின் முதல் துரோக கணத்துடன் முடிகிறது படம்.
படத்தின் முக்கிய அம்சங்களாய் எனக்குத் தோன்றியவை.
- கதையின் இடையில் தொடங்கி காலத்தில் பின்னோக்கிச் சென்று, பிறகு முன்னோக்கிச்செல்லும் யுக்தி.
- கருப்பு வெள்ளையில் மிளிரும் ஆன்னே பாக்ஸ்டரின் கண்கள். இது காஸபிளாங்காவில் இங்க்ரிட் பெர்க்மெனின் மிளிர்விற்கு இணையானது. (காலத்தை கடந்தது எனது வழிதல் :D)
- துரோகம், சூழ்ச்சி, ஏமாற்றம், ரசிகையின் பேறுவகை, நிராகரித்தலின் வலி என அனைத்தும் மெல்லிய அங்கதத்துடனும் யதார்த்தின் கரை மீறாமலும் வெளிப்பட்ட வசனங்கள்.
சென்ற மாதம் காணக்கிடைத்த கொரிய திரைப்படமொன்று. Spring, Summer, Fall, Winter, and Spring. இது காலத்தின் சுழற்சியை மிக மிக நேரடியாய், ஜென் தத்துவப்பிண்ணனியில் பதிவு செய்தப்படம்.
படம் தொடங்குவது ஓர் வசந்தகால காலையில். சுற்றிலும் மலைகள் சூழ அவற்றினிடையில் அமைந்துள்ள அமைதியான ஏரியின் மீதமைந்துள்ளது அந்த புத்தபிக்குவின் ஆசிரமம். புத்த பிக்கு, அவரது 10 வயதே நிரம்பிய சீடன், இருவர் மட்டுமே அக்குடிலில். அந்த காலையில் பிக்குவும் சீடனும் ஏரியை தாண்டி மூலிகை பறிப்பதற்காய் மலைநிலம் செல்கின்றனர். சிறுவன் ஓர் மீனையும், தவளையையும் பாம்பையும் கல்லில் கட்டி விடுகிறான். இதை கண்ட பிக்கு, மறுநாள் காலை அச்சிறுவனின் முதுகில் ஓர் கல்லை கட்டுகிறார். அழும் சிறுவனிடம், "இதை தானே நீ அச்சீவன்களுக்கு செய்தாயென கூறி, அவற்றின் மீது கட்டிய கல்லை நீக்கிவிட்டு வா, உன் மீதிருக்கும் கல்லை நான் நீக்குகிறேன்", என்கிறார். பாம்பும் தவளையும் இறந்துவிட, மீனை மட்டுமே காப்பாற்ற முடிகிறது சிறுவனால்.
பிறகு வருகின்றன கோடைகளும், இலையுதிர்காலங்களும், கடும் குளிர்காலங்களும். அலைதல்களினூடாக பெற்ற அனுபவங்கள் அச்சிறுவனை முதிரவைக்க, வேறோர் வசந்த காலத்தில் ஓர் புத்த பிக்குவாய் திரும்புகிறான். அவனிடம் சீடனாய் வரும் சிறுவன் ஒருவன் ஓர் மீனையும் தவளையையும் பாம்பையும் கல்லில் கட்டி துன்புறுத்துவதை புத்த பிக்கு பார்ப்பதோடு முடிகிறது படம்.
இப்படத்தில் என்னை மிகக்கவர்ந்தது அதன் அமைதி. எதையுமே அதிரச்சொல்லவில்லை. சொல்லும் அனைத்தையும் மிக மெல்லிய ஒலியுடனும் அழகியல் பார்வையுடனும் முன்வைக்கிறது. படத்தின் மிக முக்கிய அம்சம் அந்த மலையும் ஏரியும். பருவங்கள் தோறும் அது கொள்ளும் மாற்றங்கள் கவிதையாய் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
8 replies on “தன் வாலை உண்ணும் பாம்பெனக் காலம் – திரைப்படப் பதிவு”
Spring, Summer, Fall, Winter, and Spring
இது பற்றித் தங்கமணி முன்னர் எழுதியிருக்கின்றார்.
http://bhaarathi.net/ntmani/?p=103
அவர் சுட்டி(த்தான்) பார்த்தேன். பிடித்திருந்தது.
All About Eve வகையிலே பழைய நடிகைகளின் / நடிகர்களின் பின்னைய (அவல)வாழ்க்கை குறித்த படங்கள் கணிசமாக வந்துவிட்டன.
[…] அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: சித்தார்த் […]
சித்தார்த்,
உங்க நட்சத்திர வாரத்திற்கு என் வாழ்த்துகள்.
சித்தார்த், உங்களது நட்சத்திர வாரத்திற்கு எனது வாழ்த்துகள். மிகவும் மாறுபட்ட துவக்கம். அதிலும் மிகவும் மாறுபட்ட திரைப்படங்கள் இரண்டை அறிமுகம் செய்திருக்கின்றீர்கள். இந்த வாரம் இனிய வாரமாக இருக்க எனது வாழ்த்துகள்.
சித்தார்த்,
நட்சத்திர வாரம் மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி. உங்கள் இடுகைகள் மிக கடினமான கருத்துக்களையும் ஆக்கங்களையும் எளிமையாக அறிமுகப் படுத்துகின்றன. வாழ்த்துக்கள்.
feb 17 க்கு பிறகு நேரம் கிடைக்கவில்லையோ ? இனி நாளொரு இடுகை எதிர்நோக்குவோம் 🙂
சித்தார்த், சந்தர்ப்பம் இருக்கையில் தொடர்ந்து எழுதவும்… வாழ்த்துக்கள்.
வாங்க சித்தார்த்
தங்கை திருமணம் இனிதாய் நடைபெற்றிருக்கும்.இங்கிருந்து வாழ்த்து அனுப்பினேன்.கிடைத்ததா?
நட்சத்திர வாழ்த்தும் இப்ப.
அங்கிங்கெனாதபடி எல்லா பக்கமும் ஒளிருங்க.
அதுக்குள்ள ஊருக்கு வந்தாச்சா
பதிவைப்படிக்கும் போது நீங்க சொன்ன பிக்குவின் கதை கேட்டபோது ஓடின படமாய்,வாசிக்கும்போதும் திரைப்படமாய் ஓடிச்சுங்க சித்தார்த்
நட்சத்திர வாரம் சிறப்பாய் இருக்கட்டும்.
[…] முழுதும் வாசிக்க […]