உண்ணும் அனைத்தையும் விண்ணுக்கு கொண்டு செல்லும் ஓயாப்பெருநடனமே காப்பியம் என்க. மண்ணில் அதற்கு உணவாகாத எதுவும் இல்லை. தீண்டும் அனைத்திலும் தாவி ஏறி உண்டு தன்னைப் பெருக்கிக் கோடிகோடி இதழ்விரித்து எங்கும் நிறையும் முடிவற்ற நாக்கு அது. துடிதுடித்தும் தவிதவித்தும் உரையாடிக் கொண்டிரிக்கிறது ஊழியூழிக் காலங்களாய். அது கூறுவது அழியாத ஒற்றைச் சொல்லையே என்றரிந்தனர் மண்ணை மீறி விண்ணில் உளம் எழுந்த அறவோர். திசையழிந்த வெளியெங்கும் நிரம்பிய ஒளியே மண்ணில் தீ என உறைகிறது என்று உணர்ந்தனர்.
தீ தொட்டபின் எதுவும் அழுக்கு அல்ல. எதுவும் இழுக்கும் அல்ல. ஊன்வாய் திறந்து மண்ணில் விழும் உடல் உண்டு உயிர்த்து கண்டு கற்று அடையும் அழுக்குகளையெல்லாம் தீயுண்ணக் கொடுத்தபின்னரே அதனுள் சிறையுண்ட சீவம் தன்னிலை இழந்து சிவமாகும் என்றனர். தீயுண்ணும் அனைத்தும் தீய்மை எனப்பட்டது. தீயுண்ணவே தூய்மை என்றானது. தீ எனும் ஒலியே தீங்குக்கும் தீஞ்சுவைக்கும் சொல்லாயிற்று. தீ உறையாத பரு ஏதும் இல்லையென்றனர் அறிவர். பச்சைபசுங்குருத்திலும் மென்மலர் இதழிலும் குளிர்ச்சுனை நீரிலும் தாய்முலைப்பாலிலும் தீ உறைகிறது என்றனர். ஒவ்வொன்றிலும் உறையும் தீயை பொருளின் ஆணவம் அணைகட்டி அணைத்து நிறுத்துகிறது. அணை மீறுகையில் அது எரியும் எரியாகிறது என்றரிந்தனர். சொல்லில் உறையும் தீ தன் சிறை மீறுதலே காப்பியம் என்றனர் கற்றோர். காப்பியங்களுக்கு அவியாகி அவிதற்பொருட்டே மண்ணில் மாந்தர் பிறந்திருப்பதாகச் சொன்னது மண் மறந்த பேரிலக்கண நூல் ஒன்று. கனன்றெரிந்து கரியாகி உப்பாகி மண்ணில் மறைவர் மாந்தக் கோடிகள். மாசற்று ஒளிபெற்று மீள்பவர் சிலரே. அவர்களை எரிமலரிதழ் நடுவே இலங்கும் இறைவடிவென்பர் கற்றோர். ஆம், அவ்வாறே ஆகுக!
– ஜெயமோகன் (கொற்றவை பக்:333 )
2 replies on “கொற்றவையிலிருந்து – 3 : காப்பியம் கூறியது”
இதை கொற்றவையின் மிக ஆரம்பத்திலேயே படித்ததாய் ஞாபகம் (பாயிரம் என்று நினைக்கிறேன்). மிகவும் கடினமான நடையாக இருந்ததால் படிப்பதை ஒத்திப்போட்டுவிட்டேன். விஷ்ணுபுரம், கொற்றவை எல்லாம் படிக்கும்போது ஜெயமோகன் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்பது வருத்தமளிக்கிறது. (நான் கேள்விப்பட்டது வதந்தியாய் இருந்தால் நன்றாக இருக்கும் 🙂
ஜெயமோகன் தற்போது அவரது அடுத்த நாவலான ‘அசோகவனம்’ வேலையினில் ஈடுபட்டுள்ளார். அது தனது நேரத்தை எடுத்துக்கொள்வதாக கூறினார்.