பிரிவுகள்
இலக்கியம்

ஜெயமோகனின் தனிமொழிகள்

“வாழ்விலே ஒரு முறை”.ஜெயமோகனின் சிறுகதை தொகுதி. அதில் ஒரு பகுதி, அவர் அவரது டைரியில் எழுதி வைத்திருந்த சில வரிகள்.கவிதையாகவும் ஆகாமல், கதையிலும் உபயோகிக்க இயலாமல் எஞ்சி நின்ற வரிகள். அவற்றில் சில….

  • எதிர்காற்றில் நடந்துவரும் சுடிதார்ப் பெண்போல் என் மொழியில் என் சுயம் வெளிப்பட வேண்டும், தெரியக்கூடாது.
  • பரதநாட்டிய உடையில் சந்தைக்கு போகமுடியாதென யாராவது நம் கவிஞர்களுக்குச் சொல்லக்கூடாதா?
  • மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல்தான் அதற்கு எத்தனை பாரம்!
  • உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.
  • யானை குனிந்துகொள்ளுமென நம்பி மரக்கிளையில் மண்டை இடித்துக் கொண்ட ஒரு யானை பாகனை நான் அறிவேன்.
  • சிந்தனையாளர்களை ஒற்றை மேற்கோளாக மாற்றிவிடுகிறோம், மரத்தை பின்னோக்கித் தள்ளி விதையாக்குவது போல.
  • கண்ணில்லாதவர் முறித்து தாண்டும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பவை, ஒலிகள்.
  • ரயில் முழக்கம் ஒரு காதசைவுக்கு மட்டுமே என நினைக்கும் சேற்றெருமையின் உலகில்தான் எத்தனை நிம்மதி.
  • அம்மாவை அசடாக எண்ணிக் கொள்வதற்கு அவள் பாசம் தான் காரணமா?
  • முற்போக்கு இலக்கியத்திற்கும் அரசாங்கப் பிரசாரத்திற்கும் இடையேயான வேறுபாடு என்னவென்றால் முன்னதற்கு அரசாங்கம் இல்லை.
  • மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று.
  • ஓடும் பேருந்தின் ஓரத்து வீடுகளிலெல்லாம் ஒரு கணம் வாழ்ந்து வாழ்ந்து சென்றேன்

[ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை]
— சித்தார்த்

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

5 replies on “ஜெயமோகனின் தனிமொழிகள்”

ஐயோ எல்லாமே சூப்பர்! எங்கும் உபயோகிக்கவே வேண்டாம். தனித்தனியாக ஒவ்வொரு வாக்கியமுமே ஒரு கவிதை, கதை அல்லது நாவல் அளவுக்கு கனம். நன்றி.

புத்தாண்டில் புது வலைப்பூ தொடங்கி ஜெயமோகனின் அருமையான கவிதை வரிகளை அளித்த சித்தார்த்துக்கு நன்றி.
எருமையின் காதசைவு, அம்மாவை அசடாக நினைப்பது, ஓடும் பேருந்தின், மற்றும் பரதநாட்டிய உடை எனக்கு மிகவும் பிடித்த யதார்த்தமான வரிகள்.

மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.

தனது டயறிக் குறிப்பொன்றைக்கூட “சும்மா” விட்டுவிடாமல் கதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ வரவேண்டுமென நினைக்கிற எழுத்தாளரின் அல்லது அக்கதையின் கதாபாத்திரத்தின் எண்ணம்/மனம் பெரிது;
ஆனால் மேலுள்ள வரிகள் எல்லாவற்றிலுமே
மிகவும் பாவலாப் பண்ணிக்கொண்டு “சிந்திக்கிற” தனம்தான் எனக்குத் தெரிகிறது; வேறொன்றுமில்லை (தலையில அடித்துக்கொள்ளலாம் என்றும் தோன்றுகிறதுதான்).
——————–
இது ஜெ.மோகனின் தனிமொழிகள்(?!) குறித்துத் தோன்றுவது….
மற்றப்படி
உங்கட வலைப்பதிவு வடிவமும் உள்ளடக்கமும் நல்லா இருக்கு.
நன்றி

[…] சம்பந்தப்பட்டவரின் அகவை, அறுபதைத் தாண்டிவிட்டால் லைஃப் எக்ஸ்பெக்டன்சி அளவுகோலைத் தொட்டு விட்ட திருப்தி கிடைத்து விடுகிறது. உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை. – ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை […]

பின்னூட்டமொன்றை இடுக