முல்க் ராஜ் ஆனந்தின் கதை ஒன்று. ஒரு குழந்தை தாயுடன் சந்தைக்கு போகிறது. சந்தையில் பஞ்சு மிட்டாய்களையும் ராட்டினங்களையும் கோமாளிகளையும் பார்த்து ஆச்சரியம். தாயிடம் ஒவ்வொன்றிற்காய் அழுகிறது. தாயும் பேசாம வா என்றபடி முன்னே நடக்கிறாள். குழந்தை வழி தவறி விடுகிறது. இன்னொருவர் அதை தூக்கி கொண்டு, என்ன டா வேணும் என்கிறார். அம்மா வேணும் என்று அழுகிறது. இந்த பஞ்சு முட்டாய் வேணுமா? ராட்டினத்துல போறீயா? கோமாளி பாரு, கோமாளி பாரு… உஹும்.அம்மா தான் வேணும்.
இந்த கதைக்கும் நான் இன்று படித்து முடித்த நாவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உதாரணம் கூட சொல்ல முடியாது. ஆனால் நாவலை படித்து முடித்த போது, எப்போதோ பள்ளியில் படித்த இந்த முல்க் ராஜ் ஆனந்தின் கதையில் வரும் குழந்தை தான் நினைவிற்கு வந்தது. ஏன் என தெரியவில்லை.
சினுவா ஆச்சிபி நைஜீரிய எழுத்தாளர். 1930ல் பிறந்த இவர், 1958ஆம் ஆண்டு வெளியிட்ட நாவல் தான் “சிதைவுகள்”. மிக நேரடியான கதை அமைப்பு கொண்ட நாவல். முதல் வாசிப்பில் மிக எளிய நாவல் போன்ற தோற்றத்தை தரவல்லது. ஆனால் மிக ஆழமான படைப்பு என்றே எனக்கு தோன்றுகிறது.
ஆப்பிரிக்காவில் ஓர் பழங்குடி சமுதாயத்தில் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையால் நிகழும் மாற்றங்களை பற்றிய நாவல் இது. நாவல் ஒக்கொங்வோ என்ற ஈபோ இன மனிதனை பற்றியது. இவன் மூலமாக இவனது இனத்தையும் நாகரீகத்தையும் நமக்கு காட்டுகிறார் சினுவா. அவனுடையது பழங்குடி சமுதாயம். அதற்கே உரிய மூடப்பழக்கங்களையும் நெறிமுறைகளையும் சமுதாய அமைப்பையும் சிறு தெய்வங்களையும் நிலத்துடன் இயைந்த வாழ்வையும் கொண்டது. அம்மண்ணில் இருந்து தோன்றிய சமுதாயம் அது. அம்மண்ணுக்கே உரிய கரடு முரடோடே காட்சி அளிக்கிறது. நாவலின் இரண்டாவது பகுதி இம்மண்ணிற்கு ஆங்கிலேயர்களின் வருகையையும் அதன் சமுதாய தாக்கங்களையும் பற்றியது. ஆங்கிலேயர்களின் வழமையான தந்திரமான முதலில் மதம் பிறகு கல்வி பின்னர் ஆட்சி என்ற அதே வழிமுறை தான் இங்கும். மதம் இவ்வினத்தை பிரிக்கிறது. கல்வி நிலையங்கள் அதற்கு எண்ணை ஊற்றுகின்றன. கடைசியில் ஆட்சி கைமாறுகிறது. என்ன நிகழ்கின்றதென உணரும் முன்பே எல்லாம் நடந்து முடிகிறது இவர்களுக்கு.
நாவலின் மிகப்பெரிய பலமாக நான் கருதியது, ஆசிரியர் நாவலில் தன்னுடைய சொந்த கருத்தை சொல்லாதது தான். நடந்தது இது தான் என விவரிக்கிறார். ஆனால் எந்த இடத்திலும், இது சரி இது தவறு ந்ன சொல்லும் தொனி இல்லை. அதை வாசகர்களிடமே விட்டு விடுகிறார். 180 பக்கங்களே கொண்ட ஓர் சிறு நாவலில் இத்தனை கணமான விஷயங்களை ஆழமாக அலசியது ஆச்சர்யத்தை அளித்தது.
இந்நூலை பற்றி இன்னொன்றை சொல்லியே ஆகவேண்டும். இந்நூலின் மொழிபெயர்ப்பு. என்.கே.மகாலிங்கம் என்ற இலங்கை தமிழர் இதை செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பு நூல்களை நான் அளவிடும் அளவுகோள் இது தான். அந்நாவல் மொழிபெயர்பு நாவல் போல இருக்கிறதா? இல்லை என்றால் அது மிழிபெயர்ப்பளரின வெற்றி. அவ்விதத்தில் இதில் மகாலிங்கம் அவர்களுக்கு வெற்றி தான். நாவலின் ஒரு இடத்திலும் மொழிபெயர்ப்பு துருத்திக்கொண்டு நிற்கவில்லை. அதற்காக இவரை பாராட்டியே ஆகவேண்டும். இவர் நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவராம். அந்த மக்களுடன் பழகியதால் மொழிபெயர்ப்பு இன்னும் இயல்பாய் இருக்கிறதோ என்னவோ…
இந்நாவலை ஒட்டி இன்னோர் குறிப்பு. இந்நாவல் பல வகைகளில் நான் கல்லூரி சமயத்தில் படித்த இன்னொரு ஆப்பிரிக்காவை பற்றிய நாவலை நினைவு படுத்தியது. அலெக்ஸ் ஹெய்லி எழுதிய வேர்கள் (roots) என்ற நாவல் தான் அது. உங்களில பலர் அதை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நாவலாசிரியரான அலெக்ஸ் ஹெய்லி ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க தந்தைக்கும் வெள்ளை அமெரிக்க தாயாருக்கும் பிறந்தவர். இவரது தந்தையின் சந்ததியினர் எப்படி ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தனர் என்பதை பற்றிய நாவல் இது. இருபது வருடங்கள் ஆராய்சிக்கு பிறகு எழுதிய நாவல். என்னை மிகவும் பாதித்த நாவல்களில் இதுவும் ஒன்று. இன்னொரு கிளை செய்தி, தனது தாயாரின் மூதாதையர் இங்கிலாந்திலிருந்து எப்படி அமெரிக்கா வந்தனர் என்பதை பற்றியும் ராணி (queen) என்ற நாவலை எழுதினார் இவர். 🙂
One reply on “சிதைவுகள் – சினுவா ஆச்சிபி”
Dear sir, No longer at ease – Novel Tamil version availability is there . If its there please share me sir.
Thanks