அம்மா அழாதே
———————–
அம்மா அழாதே
நமது துயரைச் சுமக்க மலைகள் இல்லை
உனது கண்ணீர் கரையவும்
ஆறுகள் இல்லை.
தோளிலே தாங்கிய குழந்தையை
உன்னிடம் தந்ததும்
வெடித்தது துவக்கு.
புழுதியில் விழுந்த உன் தாலியின்மீது
குருதி படிந்தது.
சிதறிய குண்டின் அனல் வெப்பத்தில்
உன் வண்ணக்கனவுகள் உலர்ந்தன.
நின் காற்சிலம்பிடை இருந்து தெறித்தது
முத்துக்கள் அல்ல,
மணிகளும் அல்ல
குருதி என்பதை உணர்கிற பாண்டியன்
இங்கு இல்லை
துயிலா இரவுகளில்
‘அப்பா’ என்று அலறித் துடிக்கிற
சின்ன மழலைக்கு
என்ன தான் சொல்வாய்?
உலவித் திரிந்து நிலவைக் காட்டி
மார்பில் தாங்கி
‘அப்பா கடவுளிடம் போனார்’
என்று சொல்லாதே
துயரம் தொடர்ந்த வகையை சொல்
குருதி படிந்த கதையை சொல்
கொடுமைகள் அழியப்
போரிடச் சொல்
— சேரன் (ஈழத்துக் கவிஞர்), நீ இப்போது இறங்கும் ஆறு தொகுப்பிலிருந்து.
ஜெயமோகன் , சங்க சித்திரத்தில் ஒரு இடத்தில் சொல்வார். எவ்வளவு படித்தாலும், இந்திய தமிழனுக்கு இலங்கை தமிழனின் கோபம் புரியாதென. சேரனின் இந்த கவிதை தொகுப்பு படித்த போது எனக்கு தோன்றியது இது தான். நான் வாழ்வது முற்றிலும் வேறு உலகம். இக்கவிதைகளை நான் விமர்சிக்க கூடாது. எனக்கு அந்த அருகதை இல்லை. நான் எப்படி சொல்ல எல்லா கவிதைகளுமே புலம்பல்களாக உள்ளதென? போர் பூமியிலிருந்து சேகுவாரா தோன்றாமல் சார்லி சாப்ளினா தோன்றுவார்?
இக்கவிதையில் எனக்கு பிடித்தது போகிற போக்கில் “நின்காற்சிலம்பிடை: என சிலப்பதிகாரத்தை உள்ளே நுழைத்த விதம்.
– சித்தார்த்
One reply on “அம்மா அழாதே – சேரன் (இலங்கை)”
nanbargale
nan covai il irundhu eludhugiran,nan tamil manam valiel tharshanin
meena vai santhitta vidam en manathai uraya vaithadhu.ilangai val makkalukku enathu anudhabangal.