ஒளியும் ஒலியும்
1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள். ஏ.பி.சி தொலைக்காட்சியின் “நைட்லைன்” நிகழ்ச்சியை நடத்தும் டெட் கோப்பலின் கார் மேற்கு நியூட்டன், மாஸஷூடஸ்சில் உள்ள பனிபடர்ந்த மோரியின் வீட்டை அடைந்தது…
இப்போதெல்லாம் மோரி எந்நேரமும் சக்கர நாற்காலியிலேயே இருந்தார். தன்னை தனது உதவியாளர்கள் சாக்கு மூட்டையைப் போல படுக்கைக்கும் நாற்காலிக்கும் மாற்றுவதற்கு பழக்கப்பட்டுக்கொண்டிருந்தார். சாப்பிடும்போது இருமல் வரத்தொடங்கியது. மெல்லுவது பெரும் பணியென்றானது. அவரது கால்கள் இறந்துவிட்டிருந்தன. இனி ஒருபோதும் அவரால் நடக்கவியலாது.
இருந்தும், மோரி சோர்வடைய மறுத்தார். பதிலாக, புதுப்புது எண்ணங்களின் ஊற்றக்கண்ணாக மாறினார். தனக்கு தோன்றிய எண்ணங்களையெல்லாம் குறிப்பேடுகள், அஞ்சலுறைகள், துண்டு காகிதங்கள் என கிடைத்த இடமெல்லாம் எழுதினார். மரணத்தின் நிழலில் வாழ்வதைக் குறித்த சின்னச்சின்ன தத்துவங்கள் எழுதினார் : “உன்னால் எதை செய்யமுடியும் எதை செய்ய முடியாது என்று ஆராய்ந்து ஏற்றுக்கொள்.” , “கடந்தகாலத்தை கடந்தகாலமாகவே ஏற்றுக்கொள், மறுக்கவோ மாற்றவோ முயற்சிக்காதே”, “உன்னையும் மற்றவர்களையும் மன்னிக்கக் கற்றுக்கொள்”, “காலம் கடந்துவிட்டது, இனி எப்படி அப்பிரச்சனையுள் தலையிட என நீயாக எண்ணிக்கொள்ளாதே”.
விரைவிலேயே இது போன்ற 50 “தனிமொழிகள்” சேர, இவற்றை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். இச்சொற்றொடர்களால் மிகவும் கவரப்பட்ட மௌரி ஸ்டேய்ன் என்ற மோரியுடன் பணிபுரிந்த நண்பர், இவற்றை தொகுத்து பாஸ்டன் க்ளோப் இதழின் நிருபருக்கு அனுப்ப, அவர் இதை கொண்டு ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டார். கட்டுரையின் தலைப்பு :
ஒரு பேராசிரியரின் கடைசி பாடம் : தன் மரணம்
இந்த கட்டுரை “நைட்லைன்” நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஒருவரின் கண்ணில் பட, அவர் இதை வாஷிங்டன்னில் இருந்த டெட் கோப்பலின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
“இத படிச்சு பாரேன்” என்றார் தயாரிப்பாளர்.
விளைவு… இதோ, மோரியின் வீட்டினை ஒளிப்பதிவாளர்கள் சூழ்ந்திருக்க, டெட் கோப்பலின் கார் வாயிலை அடைகிறது.
கோப்பலைக் காண மோரியின் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வீட்டில் குழுமியிருந்தனர். கோப்பல் உள்ளே நுழைந்ததும் அங்கு படர்ந்த பரவசம் அனைவரையும் தொற்றிக்கொண்டது, மோரியைத் தவிர. சக்கர நாற்காலியில் மெல்ல முன்னே வந்து புருவம் உயர்த்தி, உரத்த, பாடுவதைப் போன்ற குரலில்,
“டெட், பேட்டிக்கு ஒத்துக்கறத்துக்கு முன்ன உங்கள கொஞ்சம் சோதிச்சுப் பாக்கனுமே நானு” என்றார் மோரி.
அங்கு பரவிய சங்கடமான மௌனத்தினூடே அவ்விருவரும் அறைக்குள் சென்றனர். கதவு சாத்தப்பட்டது. “டெட் மோரிய ரொம்ப படுத்தாம விட்டுடுவாரா?” என்றார் ஒருவர். “அட போப்பா… மோரி டெட்ட ரொம்ப கஷ்டப்படுத்தாம விடனுமேன்னு நான் கவலைப்படறேன்” என்றார் மற்றொருவர்.
உள்ளே, டெட்டை அமர்ந்துகொள்ளுமாறு சைகைகாட்டினார் மோரி. கைகளை மடியில் கட்டிக்கொண்டு புன்னகையுடன்,
“உங்க மனசுக்கு பக்கத்துல இருக்கற எதையாவது பத்தி பேசுங்க”, என்றார்.
“மனசுக்கு?”
கோப்பல் அந்த முதியவரை கூர்ந்து நோக்கினார். “ம்ம். சரி” என்று தனது குழந்தைகளைக் குறித்து பேசத்துவங்கினார். குழந்தைகள் மனதிற்கு அருகிலிருப்பவர்கள் தான் அல்லவா?
“ம்ம். நல்லது,. உங்க நம்பிக்கைகள பத்தி ஏதாவது சொல்லுங்க” என்றார் மோரி.
டெட் நெளிந்தார். “சந்திச்சு கொஞ்ச நேரமே ஆனவர் கிட்ட இதப்பத்தி எல்லாம் எப்படி பேச?”
“டெட், நான் செத்துக்கிட்டு இருக்கேன். என் கிட்ட நேரம் அதிகம் கிடையாது”
டெட் சிரித்துவிட்டார். சரி, நம்பிக்கை…. தனக்கு மிகவும் பிடித்த மார்க்கஸ் ஔரிலியஸின் வாக்கியம் ஒன்றை கூறிவிட்டு,
“நான் ஒன்னு கேக்கறேன். என் நிகழ்ச்சிய பாத்திருக்கீங்களா நீங்க?” என்றார் டெட்.
“ம்ம். பாத்திருக்கேன். ரெண்டுமுறைன்னு நினைக்கறேன்.”
“ரெண்டுமுறையா? அவ்வளவு தானா?”
“ரொம்ப கவலைப்படாதீங்க. ஓஃப்ரா வ ஒரு முறை தான் பாத்திருக்கேன்.”
“ரெண்டுமுறை பாத்திருக்கீங்களே… என்ன நினைக்கறீங்க நிகழ்ச்சிய பத்தி?”
மோரி இடைவெளி விட்டு, “உண்மைய சொல்லவா?” என்றார்.
“ம்ம்”
“நீங்க ஒரு தன்மோகியா தான் (narcissist) பட்டீங்க எனக்கு”
“தன்மோகியா இருக்க முடியாத அளவுக்கு அசிங்கமானவன் மோரி நானு” என்றார் டெட் சிரித்துக்கொண்டே.
கோப்பல் கச்சிதமான நீல நிற சூட்டும், மோரி தொள தொளவென்றிருந்த சாம்பல் நிற ஸ்வெட்டரும் அணிந்திருக்க, வரவேற்பறையில் ஒளிப்பதிவு துவங்கியது. ஆடம்பர உடைகளோ ஒப்பனையோ வேண்டாமென மறுத்துவிட்டார் மோரி. மரணம் வெட்கப்படவேண்டிய விடயம் அல்ல என்பது அவர் சித்தாந்தம். இப்போது போய் அவர் மூக்கிற்கு பௌடர் அடித்துக்கொள்ளப்போவதில்லை.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததனால் அவரது தளர்ந்த கால்கள் ஒளிப்பதிவின் போது மறைந்தே இருந்தன. வாழ்வின் அந்தியை எதிர்கொள்வதைப் பற்றி பேசுகையில் – கைகள் இன்னும் வலுவிழக்காததால் – இரு கரங்களையும் ஆட்டி ஆட்டி பேசினார் மோரி, பெரும் உற்சாகத்துடன்.
“டெட், இதெல்லாம் தொடங்கினப்ப என்னையே நான் கேட்டுக்கிட்டேன். எல்லாரையும் போல நானும் உலகியல்ல இருந்து விலகி இருக்க போறனா, இல்ல வாழனும்னு முடிவெடுக்கப்போறனான்னு. வாழனும். கன்னியமா, தைரியமா, புன்னகையோட, நிதானமா வாழனும். அல்லது அதற்கான முயற்சியாவது எடுக்கனும்னு முடிவு செஞ்சேன்.”
“சில விடியல்கள் கழிவிரக்கம் பொங்க, அழுகையோட தான் விடுயுது. சில விடியல்கள் கோபமும் கசப்புமா. ஆனா ரொம்ப நேரம் நீடிக்காது இதெல்லாம். எழுந்து எனக்கு நானே சொல்லிப்பேன். நான் வாழனும்… வாழனும்…..”
“இது வரைக்கும் என்னால முடிஞ்சிருக்கு இத செய்ய. இனிமேலும் தொடர்ந்து இருக்க முடியுமா இப்படி? நிச்சயமா சொல்லத் தெரியல. என் மேலையே நான் பந்தயம் கட்டறேன், என்னால முடியும்னு”.
கோப்பல் மோரியின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார். மரணம் தரும் பணிவு குறித்து கேட்டார்.
“அதாவது, ஃப்ரெட்” என்ற மோரி, தன் தவறை உணர்ந்து “இல்ல, இல்ல, டெட்…” என கூற,
“இது உண்மையாவே பணிவ தர்ர விஷயம் தான்” என்றார் டெட், சிரித்துக்கொண்டே.
நோய்க்குப்பின்னான வாழ்வினைக்குறித்து இருவரும் பேசினர். மோரி மற்றவர்களை அதிகம் சார்ந்திருப்பதைப் பற்றி பேசினார். உண்ண, அமர, அங்கும் இங்கும் செல்ல என இப்பொழுதே எல்லாவற்றிற்கும் அவர் மற்றவர்களை தான் நம்பியிருந்தார். இந்த மெல்ல நிகழும் உதிர்தலில் எதை நினைத்து மிகவும் அஞ்சுகிறீர்கள் என மோரியை கேட்டார் டெட்.
மோரி சற்று அமைதியாகி… அந்த விடயத்தை தொலைக்காட்சியில் கூறலாமா என வினவினார்.
ம்ம் என்றார் டெட்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பேட்டியாளரை கண்ணோடு கண் நோக்கி மோரி கூறினார், “டெட். இன்னும் சில நாட்கள்ல எனக்கு கால் கழுவிவிட யாராவது வேணும்.”
நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. டெட் கோப்பல் அதிகாரம் தெறிக்கும் குரலில் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
“மோரி ஷ்வார்ட்ஸ் யார்? இவ்விரவின் முடிவிற்குள் உங்களில் பலரும் அவர் மேல் ஏன் அக்கரை கொள்ளப்போகிறீர்கள்?”
ஆயிரம் மைல்களுக்கு அப்பால், குன்றில் மேல் அமைந்த என் வீட்டில் சாவகாசமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது தான் அந்த வாக்கியம் எனை தாக்கியது. “மோரி ஷ்வார்ட்ஸ் யார்?”. உரைந்து போனேன்.
நாங்கள் இருவரும் இணைந்த முதல் வகுப்பு அது. 1976ஆம் ஆண்டின் வசந்த காலம். மோரியின் பெரிய அலுவலக அறையுள் நுழைந்ததும் சுவற்றை நிறைத்து நின்ற எண்ணற்ற புத்தகங்கள் கண்ணைக் கவர்ந்தன. சமூகவியல், தத்துவம், ஆன்மீகம், உளவியல் என வகைவகையாய் புத்தகங்கள். மரத்தாலான தரையின் மீது பெரிய கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. வளாகத்தின் நடைபாதையை பார்த்தபடி ஒரு ஜன்னல். கைகளில் புத்தகமும் அட்டவணையுமாய் பத்து பன்னிரண்டு மாணவர்கள் தான் நின்றிருந்தனர் அங்கு. பெரும்பாலானோர் ஜீன்ஸும், சாதாரண ஷூக்களும், அரைக்கைச்சட்டையும் அனிந்திருந்தனர். இத்தனை சிறிய வகுப்பில் இருந்து தப்பித்து வெளியேறுவது கடினம் என கருதி, திரும்பிவிடலாமா என யோசிக்கையில்,
“மிட்சேல்?” என பதிவேட்டில் இருந்த பெயரைப் படித்தார் மோரி. நான் கை தூக்கினேன்.
“மிட்ச் ன்னு கூப்பிடவா, இல்ல மிட்சேல்னு தான் கூப்பிடனுமா?”
இதுவரை எந்த ஆசிரியரும் இப்படி வினவியதில்லை. ஒருமுறை அவரை மேலும் கீழும் பார்த்தேன். மஞ்சள் சட்டை, பச்சை கால்ச்சட்டை. நெற்றியை மறைத்த வெள்ளி நிற முடி. அவர் புன்னகைத்துக்கொண்டிருந்தார்.
மிட்ச், என்றேன் நான். “நண்பர்கள் என்ன அப்படி தான் கூப்பிடுவாங்க”
“ம்ம். அப்ப மிட்ச் தான்”, என்றார் மோரி. “அப்பறம், மிட்ச்?”
ம்ம்?
“ஒரு நாள் என்னையும் உன்னோட நண்பனா நினைப்பன்னு எதிர்பாக்கறேன்”
6 replies on “மோரியோடான செவ்வாய் கிழமைகள் – 4”
adadaaa…!
ஆங்கிலத்தில் படித்து விட்ட போதும், உங்கள் மொழி பெயர்ப்பு
இன்னும் நெருக்கத்தை தருகிறது.
அன்புடன்
அதிரை தங்க செல்வராஜன்
Please post your remaining Tamil translation of Tuesday with morie .thank you
தமிழில் முழுவதும் கிடைக்குமா?
மோரியுடன் செவ்வாய் கிழமைகள் இதர பாகங்களை தயவுகூர்ந்து பகிரவும் மிகவும் அறுமை
மோரியுடன் செவ்வாய்கிழமைகள் இதர பாகங்கள் தயவுகூர்ந்து பகிரவும் நன்றி