மாணவன்
அந்த கோடை நாளில் எனது பேராசிரியரை கட்டிப்பிடித்து, தொடர்பில் இருப்பேன் என கூறிய பிறகு எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த கட்டத்தில் சொல்ல வேண்டும்.
நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.
உண்மையில், என்னுடன் பியர் குடித்த தோழர்கள், நான் முதன்முதலில் படுத்துறங்கி விழித்தப்பெண் என நண்பர்கள் பலருடனும் எனக்கு தொடர்பற்றுபோயிருந்தது. பட்டமளிப்பிற்கு பின் வந்த வருடங்கள், கல்லூரியை விட்டு நியூ யார்க் சென்று, திறமைகளை உலகிற்கு அர்ப்பணிக்க துடிக்கும், திக்கிப்பேசும் பட்டதாரியிலிருந்து என்னை வெகுவாய் மாற்றி இருந்தன.
உலகம், அவ்வளவு ஒன்றும் சுவாரஸ்யமானது அல்ல என்பதனை கண்டறிந்தேன். எனது இருபதுகளின் முற்பகுதியை வாடகை கொடுத்தபடியும், விளம்பரங்களை படித்தபடியும், இந்த விளக்கு எனக்கு மட்டும் ஏன் பச்சையாக மாற மறுக்கிறது என எண்ணியபடியும் கழித்தேன். புகழ்பெற்ற இசைக்கலைஞனாவதே என் கனவாக இருந்தது (நான் பியானோ வாசித்தேன்).
இருண்ட, காலியான இரவுவிடுதிகள், முறிந்த வாக்குறுதிகள், உடைந்த இசைக்குழுக்கள், என்னைத்தவிர மற்ற அனைவரிடமும் ஆர்வம் காட்டிய தயாரிப்பாளர்கள் என கழிந்த வருடங்கள் என் கனவுகளை புளிப்பேறச்செய்தன. முதன் முறையாய் என் வாழ்வில் நான் தோற்கிறேன்.
இதே காலகட்டத்தில் தான் மரணத்துடனான என் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது.
எனக்கு இசையை கற்றுத்தந்த, வாகனமோட்டக் கற்றுத்தந்த, என் தோழிகள் குறித்து பகடி செய்த, என்னுடன் கால்பந்து விளையாடிய, ‘நான் வளர்ந்ததும் இவரைப்போல ஆகவேண்டும்’ என் எண்ண வைத்த என் மாமா (அம்மாவின் தம்பி) கணைய புற்றுநோயால் தனது நாற்பத்து நான்காம் வயதில் இறந்தார். சற்றே குள்ளமானவர். தடித்த மீசை வைத்த அழகன். அவரது வாழ்வின் கடைசி ஆண்டினை அவருடன் தான் கழித்தேன், அவரது வீட்டிற்கு ஓர் அடுக்கு கீழே. அவரது உறுதியான உடல் இளகி, பின் ஊதியது. ஒவ்வொரு இரவும் உணவு மேஜையில் வயிற்றை பிடித்துக்கொண்டு குனிந்து கண்களை இறுக மூடி வலியில் உதடுகள் துடிக்க “ஆஆ… கடவுளே”, “ஐயோ… ஏசுவே” என முனகியதை நாங்கள் – அத்தை, இரு மகன்கள், நான் – தட்டுகளை துடைத்துக்கொண்டு, ஒருவர் கண்களை ஒருவர் தவிர்த்தபடி மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.
இயலாமையை மிக உக்கிரமாக உணர்ந்த காலம் அது. காற்று இளம்சூடுடன் வீசிய மே மாத இரவொன்றில், மாமாவும் நானும் வீட்டின் முகப்பில் அமர்ந்திருந்தோம். தொலைவானத்தை பார்த்துக்கொண்டிருந்த மாமா,அடுத்த வருடம் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை காண தான் இருக்கப்போவதில்லை என்றார் பற்களை கடித்தபடி. “நீ அவங்கள பாத்துப்பியா?” என்றபோது, இப்படி எல்லாம் பேசவேண்டாம் என்றேன். சோகமாக என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.
அடுத்த சில வாரங்களில் அவர் இறந்தார்.
அந்த மரணத்திற்கு பிறகு என் வாழ்வே மாறியது. காலம் சிந்திக்கொண்டிருக்கும் நீரினைப் போல தெரிந்தது. இன்னும் வேகமாக ஓட வேண்டும். பாதி காலியான இரவு விடுதிகளில் இசைப்பது இனி இல்லை. என் அறையில் அமர்ந்து யாருமே கேட்கப்போகாத பாடல்களை எழுதுவது இனி இல்லை. மீண்டும் கல்லூரிக்கு சென்றேன். இதழியலில் முதுகலை பட்டம் பெற்று, விளையாட்டுப்பகுதி எழுத்தாளராக கிடைத்த முதல் வேலையில் சேர்ந்தேன். எனது புகழை நானே தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய புகழைத் தேடி ஓடுவதை குறித்து செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் எழுதினேன். காலம் நேரம் தெரியாமல் உழைத்தேன். விழித்ததும் பல் துலக்கிவிட்டு தட்டச்சத்தொடங்குவேன், இரவு அணிந்திருந்த அதே உடைகளுடன். என் மாமா ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தார். அவர் அவ்வேலையின் வழமையை வெறுத்தார் – அதே வேலை, ஒவ்வொரு நாளும். அவரைப் போல ஆகிவிடக்கூடாதென்ற உறுதியுடன் உழைத்தேன்.
நியூ யார்க்குக்கும் ஃப்லோரிடாவுக்குமாய் அலைந்து, இறுதியில் டெட்ராட்டில் இருந்து வெளி வரும் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் (Detroit Free Press) என்ற பத்திரிக்கையில் விளையாட்டுப்பகுதி எழுத்தாளராக பணிக்கு அமர்ந்தேன். டெட்ராய்ட் நகருக்கு விளையாட்டின் மீது யானைப்பசி. கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால், ஹாக்கி என எல்லா விளையாட்டுக்களுக்கும் அணிகள் இருந்தன அங்கு. என் லட்சியத்திற்கு சரியான களமாக அமைந்தது அந்நகரம். சில வருடங்களிலேயே, பத்திகள் எழுதுவதோடு, விளையாட்டு புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி என என் களம் விரிவடைந்தது. இப்போது நமது நாட்டினை தொப்பலாக நனைத்திருக்கும் ஊடகப் புயலில் நானும் ஓர் அங்கமாக இருந்தேன். நான் தேவைப்பட்டேன்.
வாடகைகளை நிறுத்தினேன். வாங்கத்தொடங்கினேன். குன்றின் மேல் ஒரு வீடு வாங்கினேன். கார்கள் வாங்கினேன். பங்கு சந்தையின் வணிகம் செய்தேன். எப்போதுமே ஐந்தாவது கியரிலேயே ஓட்டினேன் வாழ்க்கையை. பேய் போல உடற்பயிற்சி. அபாய வேகத்தில் கார் ஓட்டம். நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவு பணம் சம்பாதித்தேன். எனது இடைவிடாத பணியினையும் பயணங்களையும் மீறி என்னை காதலித்த ஜேனைன் என்ற ஓர் கருங்கூந்தல் பெண்ணை சந்தித்தேன். ஏழு வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்த அடுத்த வாரம் பணி செய்ய ஆரம்பித்து விட்டேன். அவளுக்கு கூறினேன் – எனக்கும் தான் – நாம் ஒரு நாள் பிள்ளைகள் பெற்று குடும்பம் அமைக்கலாம் என்று. அந்த நாள் வரவே இல்லை.
அதற்கு பதிலாய், குறிக்கோள்களை அடைவதில் என்னை மூழ்கடித்துக்கொண்டிருந்தேன். குறிக்கோள்களை அடைவதன் மூலம் வாழ்வின் மீதான என் பிடியை இறுக்கமாக்கவியலும் என நம்பினேன். என் மாமாவைப்போல நோய்வாய்ப்பட்டு இறப்பதற்குள் (இது நிச்சயம் நடக்கும் என நம்பினேன்) மகிழ்ச்சியின் கடைசி துளி வரை உறிஞ்சி எடுத்துவிடவேண்டும் என தோன்றியது.
மோரி? ம்ம்.. எப்போதாவது நினைத்துக்கொள்வேன் அவரை, அவர் புகட்டிய “மனிதனாய் இரு”, “மற்றவரோடு உறவாடு” என்பதையெல்லாம். ஆனால் அவை வேறோர் வாழ்விலிருந்து வருவதைப்போல, எப்போதும் வெகு தொலைவிலேயே இருந்தன. இந்த வருடங்களிலெல்லாம், பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மடல்கள் அனைத்தையும், நன்கொடை கேட்டே எழுதி இருப்பார்கள் என்றெண்ணி படிக்காமல் எறிந்துவிடுவேன். அதனால் மோரியின் நோயினைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனக்கு சொல்லி இருக்கக்கூடிய நண்பர்களும் தொடர்பில் இல்லை.
இது இப்படியே இருந்திருக்கும், அன்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை துழாவிக்கொண்டிந்த போது, ஏதோ ஒன்று என் காதுகளை அடையாதிருந்திருந்தால்….
2 replies on “மோரியோடான செவ்வாக்கிழமைகள் – 3”
THANKS
நன்றி திரு. RM_SLV. முந்தைய பின்னூட்டத்திற்கும்…