அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.-ஔவையார். (குறுந்தொகை – 23)
அகவனின் மகளே, அகவனின் மகளே
வெள்ளைச் சங்கினையொத்த நரைத்த நெடும் கூந்தலை உடைய
அகவன் மகளே, பாடுக பாட்டே
இன்னமும் பாடுக பாட்டே, அவர்
நல்ல நெடிய மலையினைப் பற்றி பாடிய பாட்டே
இதில் அகவன் மகள் என்றால் குறி கூறி பாட்டு பாடும் பாணர் இனத்துப் பெண் என்கிறது தமிழ் இணைய பல்கலைக் கழகம். தோழி அவளிடம் தலைவியின் காதலனது நாட்டைப் பற்றி பாட கூறுகிறாள் என்பது பாடலின் பொருள் என்கிறது அவ்வுரை.
ஆனால் நான் இதை முதன் முதலாக வாசித்த போது அர்த்தப்படுத்திக்கொண்டது வேறு விதத்தில். இப்போது அகவன் மகளுக்கு வயதாகி விட்டது. முடியெல்லாம் நரைத்து விட்டது. இன்னமும் அவள் அவனைப் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டே இருக்கிறாள்… அவன் கிடைக்காத ஏக்கத்திலா, அல்லது கிடைத்த நிறைவிலா? அது படிக்கும் வாசகரின் அச்சமய மனநிலையைப் பொருத்தது.
4 replies on “ஔவையின் அகவன் மகள்”
மலையிலிருந்து இறங்கி வந்து குறி சொல்லும் பெண்ணொருத்தி பாடுவதாகவே அந்தப் பாடலைப் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது. விடை கிடைத்தால் சொல்லுகிறேன்.
வணக்கம் சுந்தரவடிவேல்.
முதல் முறை உரை எதுவும் இல்லாமல் தான் இக்கவிதையை படித்தேன். அப்போது நான் அர்த்தப்படுத்திக்கொண்டது அகவன் மகள் தனது இணையை எண்ணி பாடுவதாக…
பிறகு சென்னை இணைய பல்கலைக்கழக உரையை படித்தபோது நீங்கள் கூறிய பொருள் வரும்படியாக இருந்தது. எனக்கு எனது முதல் வாசிப்பு அழகாக பட்டது. அதை தான் பதிவு செய்திருந்தேன்.
இல்லைங்க சித்தார்த்.. குறுந்தொகையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. நீங்கள் சொல்வது போல அகவன் மகள் தன் இணையை நினைத்து பாடுவதாய் இருந்தால் ‘பாடுக பாட்டே’ என்ற விளியும் கட்டளையும் வர வாய்ப்பில்லைதானே? நான் இதை முதன்முறை வாசித்தபோது, “குறத்தி எப்போதும் தங்கள் கடவுளான மலையையும் தெய்வத்தையும் வணங்கி குறி சொல்லத் தொடங்குவாள்.. அம்மலையில் தலைவன் வசிப்பது அல்லது தலைவனுக்குரியது என்பதால் தலைவி தன் எதிர்காலம் தெரிந்து கொள்ளும் விருப்பத்தை விடவும் அவன் வசிக்கும் மலையழகைத் தெரிந்து கொள்ள விரும்பி.. மேலும் பாடும்படி குறத்தியைத் தூண்டுகிறாள்” என்பதாக பொருள் தோன்றியது. மறுமுறை உரையோடு படிக்கையில், “காதலால் உடலும் செயலும் மாறுபட்ட தலைவிக்கு பேய் பிடித்ததாய் நினைத்து குறி கேட்க அவள் தாய் அழைத்துச் செல்வதாகவும், தன் காதலை குறிப்புணர்த்தும் பொருட்டு அவள் அம்மலை குறித்துப்பாட வற்புறுத்துவதாகவும் பொருள் இருந்தது” ஒளவை என்ன நினைத்து எழுதினாரோ… நமக்கு பொருள்படும் விதமே பிடித்தமாயிருப்பது தான் இயல்பு.. எப்படியிருந்தாலும் அழகான பாடல் இது!
வணக்கம் காயத்ரி. குறுந்தொகையில் கவிதைகள் நாடக வசனங்களைப்போல காட்சியளிக்கின்றன. வசனம் மட்டுமே நமக்கு தெரியும்… கூறியவர் யார் என்பது கூட உரையாசிரியர்கள் கொடுத்தது தானே… வெறும் வசனத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அதன் சூழலை நிர்னையும்க்கும் போது நமக்கு அலாதியான ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. இந்த ஒரு மிக எளிய பாடலுக்கே எத்தனை விளக்கங்கள்…
நீங்கள் கூறும் விளக்கங்கள் அழகாய் பொருந்துகின்றன காயத்ரி, இக்கவிதைக்கு. குறிப்பாக கடைசி விளக்கம். மனதைப்பற்றியே திரும்ப திரும்ப பேசுவதாலோ என்னவோ, அனேக குறுந்தொகை கவிதைகள் காலவித்தியாச சேதங்கள் ஏதும் இன்றி நமக்கு மிக அருகே வந்துவிடுகின்றன. நீங்கள் நெரூடா பற்றிய கவிதையில் குறிப்பிட்ட “உயிர்த் தவச்சிறிது காமமோ பெரிதே” வரியைப் போல…
ஏ.கே. ராமானுஜம் குறுந்தொகையை ஆங்கிலத்தில் ‘Interior Landscapes” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். அமேசானில் சில பக்கங்களை படித்தேன். நல்ல மொழிபெயர்ப்பு. படித்துப்பாருங்கள்.
சுட்டி :
http://www.amazon.com/gp/reader/0195635019/ref=sib_dp_pt/103-5102386-3022245#reader-link