பிரிவுகள்
இலக்கியம் குறுந்தொகை பழந்தமிழ் இலக்கியம்

மிளைப் பெருங்கந்தனாரும் கலாப்ரியாவும்

கலாப்ரியாவின் “வனம் புகுதல்” என்ற கவிதைத் தொகுப்பில் இரு கவிதைகள். “தெரு விளக்கு”, “வீதி விளக்குகள்” என்ற அந்த இரு கவிதைகளிலும்,

“திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீஸோ
கல்லா மண்ணாவோ”

என தொடங்கி தொடரும் 10 வரிகள் பொதுவாய் வரும். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட மற்ற வரிகளின் மூலம் அவ்விரு கவிதைகளும் தத்தம் தனித்தன்மையினை அடையும்.

தெரு விளக்கு
————–

திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென நிறுத்திவிட்டு
தன்னிலும் சிறுசுகளை
பயமுறுத்தி…
தடைப்பட்ட மின்சாரம்
மீண்டும் பளீரென வரும் போது
தன்னிச்சையாய்க்
கைதட்டி பிள்ளைகள்
கும்மாளமாய் கூக்குரலிடும்
ஜாடைகளற்ற
சந்தோச மொழி வழியே
எந்த மாநிலத்தை
பிரிக்கப்போகிறார்.

வீதி விளக்குகள்
——————

அருகே வரும் வரை
பின்னாலிருந்தது

தாண்டும் வரை
காலடியில்

தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்

திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளீரென மீளும் போது
தன்னிச்சையாய்க் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோச வெளிச்சம்
காணமலாக்கும்
கவலையின் நிழல்களை

இந்த கவிதைகளை முதல் முறை வாசித்த போது என்னை ஈர்த்தது இந்த “பொதுவாய் சில வரிகள்” அம்சம் தான். படித்த போது கவிதை மட்டுமே தரக்கூடிய குறுகுறுப்பை தந்த கவிதைகள் இவை. ஆனால் வடிவத்தையும் தாண்டி தனித்தனியாகவும் மிகச்சிறந்த கவிதைகள்.

குறுந்தொகையில் மிளைப்பெருங் கந்தனார் எழுதிய இரு கவிதைகளில் இது போன்ற ஓர் வடிவத்தை காண முடிந்தது.

“காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே”

என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.

– மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)

காமம் காமம் என்கிறாயே, காமம் வருத்தமோ நோயோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. தழை தின்ற யானையின் மதத்தைப் போல, பார்ப்பவர் பார்த்தால் அது வெளிப்படும்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

– மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)

காமம் காமம் என்கிறாயே, காமம் வருத்தமோ நோயோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புறுவது போல, நினைக்க நினைக்க இன்பம் தருவது நண்பா அது.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

5 replies on “மிளைப் பெருங்கந்தனாரும் கலாப்ரியாவும்”

இந்தப் பாடலை அண்மைக்காலமாக அடிக்கடி கேட்க நேர்கிறது சித்தார்த். பழந்தமிழிலக்கியங்களைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் உங்களைப் போன்றவர்களின் பதிவுகளைப் படித்த பிற்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் உங்களுக்குத்தான் தெரியுமே… எங்களது பொறுமை குறித்து:)

வணக்கம்
நானும் கலாப்ரியாவை வாசித்து இருக்கிறேன்
அவரின் படிமங்களும் கவிதை அமைவும் மிக அழகாக இருக்கும்

உங்கள் பதிவு முழுக்க தேடினேன் உங்கள் பெயரை கிடைக்கவில்லை

பிளாக்கரை போல் ”என்னைப்பற்றி” என்று உங்கள் அறிமுகம் இணைக்கலாமே

நன்றி

இலக்கியத்தோடு இணைத்துப் பார்த்தலில், இன்றையவர்களின் தரம் உயர்கிறதா அல்லது இலக்கியத்தின் தரம் உயர்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது, மீண்டும் – இந்த ஒப்பு நோக்கலைப் படித்த போது!

நன்றி தமிழ்நதி. நீங்கள் எல்லாம் படைப்பாளிகள்… படையுங்கள்… படிக்கிறோம். 🙂

இராஜராஜன், எனது பெயர் சித்தார்த். இப்போது “அறிமுகம்” என்ற பக்கத்தை இணைத்துள்ளேன். அதில் என்னைக்குறித்த அறிமுகம் உள்ளது.

ஜீவா. தரம் ஒரு பொருட்டே அல்ல என தோன்றுகிறது. தரம் என்ற ஒற்றை கோட்பாட்டுக்குள் எல்லோருக்குமான வரையரை எதையும் வகுக்க இயலாதென்றே தோன்றுகிறது. எனக்கு புறநாற்றுப் பாடல்கள் பல பிடிக்கவேயில்லை. அகத்துறையின் மென்அழகியல் அதில் இல்லை என தோன்றுகிறது. ஆனால் இது எனது மனம் சார்ந்த அளவுகோள் தான். நாளையே இதை நான் மாற்றிக்கொள்ளலாம். குறுந்தொகையோ, கலாப்ரியாவோ நம் மனதில் ஏற்படுத்தும் சலனம் தானே முக்கியம்…

மிகவும் அருமை சித்தார்த். கடந்த சில நாட்களாக பதிவுகளுக்கு வர முடியவில்லை. படிக்கவும்,சுவைக்கவும் நிறைய எழுதியிருப்பது கண்டு மகிழ்ந்தேன். மிளைப்பெருங்கந்தனாரை உங்கள் மூலமாக அறிந்து கொண்டதிலும் மகிழ்ச்சி. தொடர்ந்து சங்கப்பாடல்கள் குறித்து எழுதுங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s