கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்
கறவை மாடுகள் பல கறக்கும், பகைவரின் வீரம் அழியும் வண்ணம் அவர்களை வெல்லும், குற்றமேதும் இல்லாத கோவலர் இனத்தின் பொற்கொடியே! பாம்பின் படம் போன்ற இடையைக் கொண்டவளே! காட்டு மயிலைப்போன்றவளே! எழுந்து வா. உனது தோழிகளாகிய நாங்கள் அனைவரும் உன் வீட்டின் முற்றத்துள் புகுந்து முகில் வண்ணம் கொண்ட கண்ணனை பாடுகின்றோம். நீ சிறிதளவும் பேசாது இருக்கின்றாய். உன் உறக்கத்தின் பொருள் தான் என்ன?