இன்று எனக்கு அடித்தது பம்பர். :D. எனது நண்பர் சௌரிராஜன் இந்தியா சென்று வந்தார். ஒரு வண்டி புத்தகங்களுடன். ஜெயமோகனின் புதியகாப்பியமான கொற்றவை இப்போது என் கையில். கூடவே நிறைய கவிதைத் தொகுப்புகளும்.
அதில் கண்களில் பட்ட சில நல்ல கவிதைகளை, இங்கு…
சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து
முத்தம் தரும்போதெல்லாம்
துடிக்கத் துடிக்க ஒரு மீனைப்பிடித்து
அப்பறவைக்குத் தருகிறது
இக்கடல்
– ஃபிரான்ஸிஸ் கிருபா (மெஸியாவின் காயங்கள் தொகுப்பிலிருந்து)
**********
வறட்சி
————–
வானுக்கு இல்லை இரக்கம், பூமிக்கு
வெயில் என்று வருகிறது நெருப்பு
காற்றுக்கு விடைசொல்லித்
துக்கித்து இருக்கிறது வீதி.
அடிஉறைகளும், கிணற்றுக்குள்
வாய்வறண்டு
சுருண்டுவிட்டன.
தாகித்து அணுகுகிற வாளிக்கு
என்ன சொல்வது பதில்?
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகிய
பறம்பும் இன்று வெறும் பாறை
– ராஜ சுந்தரராஜன் (முகவீதி தொகுப்பிலிருந்து)
(‘கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும் பறம்பின்’ என்ற புறநானூற்று சித்திரத்தை இதில் இணைத்த விதம் அருமை)
**********
சண்டையிட்டுக் கொண்ட
இரவொன்றில்
உன் மேல் பட்ட விரல்கள்
அன்னியன் மேல்பட்ட
உணர்வோடு
உள்ளிழுத்துக் கொண்ட நினைவு
உன்னோடு
சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும்
இந்தக் கணத்தில்
பின்னிருந்து கண் பொத்தி
விளையாடுகிறது
– அ. வெண்ணிலா (ஆதியில் சொற்கள் இருந்தன தொகுப்பிலிருந்து)
**********
இடைத்தூரம்
————————
என்
தோட்டத்தில்
உட்கார்ந்திருந்த
பெயரறியாப் பறவையை
உனக்காக
காகிதத்தில் பிடித்து வைக்க
முயன்றேன்
சொல்ல வந்ததற்கும்
சொல்லில் வந்ததற்கும்
நடுவில்
பறந்து போயிருந்தது
பறவை
– க.மோகனரங்கன் (நெடுவழித் தனிமை தொகுப்பிலிருந்து)
One reply on “இன்று வாசித்த கவிதைகள் சில”
veru nice. this is touch my heart.