பிரிவுகள்
திரைப்படம்

ஃ முதல் அ வரை

ஃ முதல் அ வரை

முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சியில் முடியும் படங்களை பார்த்து பழகிய எனக்கு கடைசி காட்சியில் தொடங்கி முதல் காட்சிக்கு செல்லும் படங்களை பார்த்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சமூபத்தில் அது போன்ற இரு படங்களை பார்த்தேன். ஒன்று ஹாலிவுட் படமான மெமெண்டோ. மற்றது பிரென்ச் மொழி படமான திருப்ப முடியாதது ( Irreversible ).

யுக்திக்காகவே யுக்தியை பயன்படுத்துவது கதைக்கு வலுவேதும் சேர்க்காது. அது வெறும் “வித்தியாசமான” படமாக மட்டுமே நின்று விடும். ஆனால் இவ்விரு படங்களும் இந்த யுக்தியை தாங்கள் சொல்ல வந்ததை மேலும் அழுத்தமாக சொல்லவே பயன்படுத்துகின்றன.

மெமெண்டோ (Memento)

மொழி: ஆங்கிலம்
எழுத்தும் இயக்கமும் : கிரிஸ்டோபர் நோலன்
நடிப்பு: கை பியர்ஸ், காரி-ஆனே மாஸ், ஜோ பாண்டோலியானோ
வருடம்: 2000

சுருக்கமாக படத்தை கூற வேண்டும் என்றால் நம்ம கஜினியின் மூலம். 🙂 ஆனால், “புதிய நினைவுகளை தக்க வைத்துக்கொள்ள முடியாத ஒருவன் அவனது மனைவியை கொலை செய்தவனை பழிவாங்க செல்லும்” என்ற அந்த கருத்தாக்கம் மட்டுமே இரண்டிற்கும் பொது. கஜினி ஒரு பொழுதுப்போக்கு படமாக மட்டுமே நின்றுவிடுகிறது. ஆனால் மெமெண்டோ அதையும் தாண்டி பழி வாங்கும் உணர்வின் நியாயங்களை கேள்விக்குட்படுத்துகிறது. இந்த கேள்வியை மேலும் ஆழமாக்கும் பணியையே இந்த “தலை கீழ் கதை சொல்லும் யுக்தி” செய்கிறது.

நான் பார்த்த படங்களிலேயே மிக அருமையான திரைக்கதை இப்படத்தினதாக தான் இருக்க வேண்டும். முதல் காட்சியிலேயே கதாநாயகன் ஓர் கொலையை செய்கிறான். அங்கிருந்து பின்நோக்கி செல்லத் துவங்குகிறது கதை. இடை இடையே வேறு ஒரு flashback கருப்பு வெள்ளையில் காலம் சொல்லப்படாமல் காட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் பிரதான இழையோடு வந்து இணைகிறது இந்த flashback. இந்த கருப்பு வெள்ளை பகுதியில் சொல்லப்படும் நிகழ்வு கதாநாயகனை, அவனது செயல்களை புரிந்து கொள்ள மேலும் உதவுகிறது. இப்படியான ஓர் சிக்கலான அமைப்பை கொண்ட படம். ஆனால் நேர்த்தியான திரைக்கதையினால்,படம் முடியும் போது அதிகமாக குழம்பாமல் மீள முடிகிறது (லேசான தலைவலியுடன் 😉 ). இத்திரைக்கதையை எழுதிய கிரிஸ்தோஃபர் நோலனுக்கு hats off. படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

இதன் கடைசி காட்சி முடிந்தவுடன் எனக்கு ஏதோ சாட்டையால் அடிபட்டதை போன்ற ஓர் உணர்வு. படத்தின் தொடக்கம் முதலே என்னையும் அறியாமல் நான் பழிவாங்குதலை ஆதரித்து வந்ததை உணர்த்தும் காட்சி. கதையை சொல்லக்கூடாது என்ற முடிவோடே எழுதத்துவங்கினேன் இதை. ஏனெனில் திரைக்கதையின் முடிச்சுகள் மிக அழகாக அவிழ்க்கப்படுகின்றன. அதை நான் இங்கு போட்டு உடைத்தால் உங்களது சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால், உடு ஜூட்.

திருப்பமுடியாதவை (irreversible)

மொழி: பிரென்ச்
இயக்கம்: கஸ்பர் நோ
நடிப்பு: மோனிக்கா பெலூச்சி, வின்செண்ட் காஸெல், ஆல்பெர்ட் டுபாண்டெல், ஜோ பிரெஸ்தினா
வருடம்: 2002

மெமெண்டோ பழி வாங்குவதை பற்றிய படம். நேர்த்தியான திரைக்கதை. வெளியே வரும்போது கிரிஸ்டோபர் நோலனின் இயக்கத்தை திரைக்கதையை பாராட்டிய படியே வருவோம். ஆனால் irreversible உங்களை ஊமையாக்கி விடும். இது எளிதாக பார்க்கக்கூடிய படம் அல்ல. படம் கற்பழிப்பின் கொடூரத்தை பற்றியது. இதை அழுத்தமாக சொல்லவே தலைகீழ் முறை பயன் படுத்தப்பட்டுள்ளது. இம்முறை நான் முழு கதையையும் சொல்லி விடப்போகிறேன். ஏனெனில் கதையை தெரிந்து கொண்டு பார்த்தாலும் இப்படம் உங்களை உலுக்கவே செய்யும்.

காட்சி 1: மார்க்கஸும் பியேரியும் போலீஸால் ஒரு இரவு விடுதியிலிருந்து கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றனர்.

காட்சி 2: மார்க்கஸும் பியேரியும் இரவு விடுதியில் டெனியா என்ற ஒருவனை கொடூரமாக கொல்கின்றனர்.

காட்சி 3: அலெக்ஸ் என்ற பெண் டெனியாவால் ஒரு சுரங்கப்பாதையில் வைத்து கற்பழிக்கப்படுகிறாள்.

காட்சி 4: மார்க்கஸும், அவனது காதலியான அலெக்ஸும் இவளது நண்பனான பியரியும் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அலெக்ஸ் மட்டும் தனியாக சுரங்கப்பாதை வழியாக செல்கிறாள்.

காட்சி 5: காலை. விடிந்ததும் மாலை பார்ட்டிக்கு தேவையான எதையோ வாங்கி வர மார்க்கஸை வெளியே அனுப்புகிறாள் அலெக்ஸ். அவன் சென்றவுடன் சோதனை செய்து பார்க்கிறாள்.தான் கர்பமாக இருப்பது தெரியவர, பகல் கனவில் மிதக்கிறாள். பச்சைப்புல்வெளி. ஆங்காங்கே தண்ணீர்ரை பீச்சி அடிக்கும் குழாய். விளையாடும் குழந்தைகள் என ரம்மியமான ஓர் பூங்காவில் நிறைமாத கர்பிணியான அலெக்ஸ் கண்களை மூடியபடி ஏகாந்தமாய் படுத்திருக்கிறாள்.

கடைசி காட்சியின் இனிமை நமது நெஞ்சின் பாரத்தை வெகுவாக ஏற்றி விடுகிறது. கற்பழிப்பின் முழு பயங்கரத்தை உணரத்துவங்குகிறோம் அக்கணம்.

படத்தில் கற்பழிப்பு காட்சி மிக மிக அப்பட்டமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 5 நிமிடம், அசையாத கேமரா முன் நிகழும் இது பார்ப்பவர்களை உலுக்கி விடும்.(திரப்பட விழாவில் திரையிடப்பட்ட போது பலர் எழுந்து சென்றுவிட்டார்களாம் இக்காட்சியின் போது). ஆனால் கடைசி காட்சியில் அந்த ரம்மியமான சூழலில் இந்த பயங்கரத்தின் நினைவுகள் வந்தபடியே இருக்கும். என்னையும் அறியாமல் கண்கலங்க வைத்தது இந்த இரு காட்சிகளின் இடையிலான முரண்.

படம் முடிந்த போது எனக்கு தோன்றியது. அலெக்ஸின் எதிர்காலத்தை பற்றி நமக்கு தெரிந்ததை போல அலெக்ஸுக்கும் தெரிந்திருந்தால் அவளால் அந்த “கர்பம் என தெரிந்ததன்” அக்கண இன்பத்தை அனுபவித்திருக்க முடியுமா? எதிர்காலத்தை பற்றிய அறியாமையிலிருந்தே நமது இன்பங்கள் முளைக்கின்றன.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

5 replies on “ஃ முதல் அ வரை”

வணக்கம் சித்தார்த்,

உங்க வலைப்பூ அருமையாக இருக்குது. தெரியாத விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆமாம் உங்க இமெயில் என்ன, நானும் மடல் அனுப்புகிறேன், போக மாட்டேங்குது. நானும் குவைத்தில் தான் இருக்கிறேன்.

வணக்கம் பரஞ்சோதி.

சுந்தர் சொன்னார் உங்கள பத்தி. உங்களோட சிறுவர் கதைகள் வலைப்ப்பதிவு எனக்கு ரொம்ப உபயோஒகமா இருக்கு 🙂

என்னோட மின்னஞ்சல் முகவரி neotamizhan@gmail.com

\\படம் முடிந்த போது எனக்கு தோன்றியது. அலெக்ஸின் எதிர்காலத்தை பற்றி நமக்கு தெரிந்ததை போல அலெக்ஸுக்கும் தெரிந்திருந்தால் அவளால் அந்த “கர்பம் என தெரிந்ததன்” அக்கண இன்பத்தை அனுபவித்திருக்க முடியுமா? எதிர்காலத்தை பற்றிய அறியாமையிலிருந்தே நமது இன்பங்கள் முளைக்கின்றன.

\\

திருப்பமுடியாதவையின் உள் நோக்கத்தை அழகிய வரிகளில் ஆழமாய் பதியும் படி எடுத்துக்கூறி பதிவை முடித்துள்ளீர்கள் சூப்பர்

அட.. சித்தார்த விமர்சனம் எல்லாம் கலக்கலா இருக்கு.. இணையத்தில் பார்க்க சுட்டி தர மாட்டிங்களா? டிசம்பர் 4ல் இதை டிவிடியாக தந்தாலும் வாங்கிகொள்வேன்.. :))

ஹ்ம்ம்ம்.. IMDBயே கதி.. பார்க்கிறேன்.. 🙂

.. “ஈரோடு” பதிவர் வால்பையன் இந்த பதிவுக்கு இணைப்பு குடுத்திருக்கார். அதை பார்த்து தான் வந்தேன்.. 🙂

பின்னூட்டமொன்றை இடுக