இன்று…

இன்று உலகம் திறந்த வடிவங்களை (open formats) நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. உதாரணமாக, உரைகோப்புகளுக்கான அடிப்படை வடிவமாக “திறந்த ஆவண வடிவம்” (Open Document Format)  உருவாகியுள்ளது. இந்த வடிவத்திலான கோப்பை நாம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் நிரலினை கொண்டு உருவாக்கலாம். பின்னர் அதை ஓபன் ஆஃபிஸ் நிரலினை கொண்டு திருத்தி, ஆப்பிள் பேஜஸ் (Pages) நிரலினை கொண்டு அச்சிடலாம். நிரல்கள் வெவ்வேறாக இருந்தாலும் வடிவம் ஒன்றே. எல்லா நிரல்களும் ஒரே வகையான கோப்பு வடிவங்களை கொண்டிருந்தால் நிரல்களின் விற்பனை பாதிக்காதா என்றால், இதற்கு இரண்டு பதில்களை கூறலாம். ஒன்று, ஒவ்வொரு நிரலுக்கும் பிரதான வடிவமாக அந்நிறுவனம் உருவாக்கிய வடிவம் இருக்கும். மைக்ரோசாஃப்டிற்கும் word வடிவம், ஆப்பிளுக்கு .pages வடிவம் என… ஆனால் இக்கோப்புகளை திறந்த ஆவண வடிவிற்கு மாற்றும் வசதியும் அந்நிரலிலேயே இருக்கும். அதனால் அந்நிரலிலிருந்து நம் கோப்புகளை விடுவிப்பது மிக எளிதான காரியமாக இருக்கும். இரண்டாவது… நிரலின் தரமும் நேர்த்தியுமே அதன் விற்பனையை உறுதி செய்யும் காரணிகளாக இருக்க வேண்டுமே தவிர, அது பயன்படுத்தும் வடிவமல்ல.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் நீங்கள் மின் நூல் ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எந்த வடிவத்திலான (format) மின் நூல் என்று முதலில் முடிவு செய்ய வேண்டி இருந்திருக்கும். ereader.com, ebook.com என அன்று மின் நூல் விற்றுக்கொண்டிருந்த ஒவ்வொரு தளமும் தனக்கென ஒரு வடிவத்தினையும் அவ்வடிவத்தை வாசிக்கக்கூடிய நிரலினையும் கொண்டிருந்தது. அந்த தளத்தின் நிரலினை கொண்டே இந்த மின் நூல்களை வாசிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஒருங்குறி வருவதற்கு முன்பு தமிழில் திஸ்கி, தாப், தாம், பாமினி, முரசு துவங்கி ஓராயிரம் எழுத்துரு வடிவங்களை பயன்படுத்தினோமே, அது போல… பின்பு epub என்ற ஒரு திறந்த வடிவம் (open format) உருவாக்கப்பட்டது. எல்லா தளமும் இந்த வடிவத்தில் நூல்களை வெளியிட்டதனால் எந்த தளத்தில் விலை குறைவு என்பதை பார்த்து வாங்கிக்கொள்ள முடியும், எங்கு வாங்கினாலும் epub reader கோப்பினை கொண்டு வாசிக்க முடியும் என்ற நிலை உருவானது. மெல்ல, எழுத்துருக்களுக்கு ஒருங்குறியினை போல மின் நூல்களுக்கு epub அடிப்படை வடிவம் என்றானது.

இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் தன் மின்நூல் வாசிப்பானான iBooks நிரலில் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது (iBooks 2). iBooks, epub வடிவினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு iPhone, iPod Touch மற்றும் iPadகளில் செயல்படும் நிரல். இதன் புதிய பதிப்பில் epubல் இருந்து சிறிது விலகி ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த வடிவினை சேர்த்திருக்கிறார்கள். இந்த புதிய வடிவத்தினை கொண்டு பள்ளிப்பாடநூல்களை வடிவமைக்கும் ஒரு இலவச மென்பொருளையும் உருவாக்கி இருக்கிறார்கள் (iBooks Author). இந்த மென்பொருள் கொண்டு உருவாக்கப்படும் நூல்களை வாசிக்க iPad கைக்கணினியை ஒவ்வொரு மாணவருக்கும் பள்ளிகள் வழங்க வேண்டியிருக்கும். இப்போதுள்ள iBooks Author பதிப்பில் இக்கோப்புகளை epub வடிவிற்கு மாற்றும் வசதியும் இல்லை. அதாவது, இந்நிரலினை கொண்டு உருவாக்கப்பட்ட நூல்களை வேறு எந்த மென்பொருள் கொண்டும் வாசிக்க இயலாது… மைக்ரோசாஃப்டின் வீழ்ச்சி இது போன்ற செயல்பாடுகளாலேயே நிகழ்ந்தது. மைக்ரோசாஃப்ட் தனது உலாவியான Internet Explorerல் பத்தாண்டுகளுக்கு முன் செய்த இது போன்ற செயல்பாடுகளுக்கு இணையத்தள நிரலாளர்களான நாங்கள் இன்னும் விலை தந்துகொண்டிருக்கிறோம். எல்லா உலாவிகளுக்குமான நிரலினை எழுதிவிட்டு, பிறகு internet explorerல் சரியாக தெரியவேண்டும் என சில மாறுதல்களை செய்ய வேண்டி இருக்கும்.

உலகம் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒற்றை நிறுவனத்தின் பிடிக்குள் சிக்கும் அளவிற்கு உலகம் சிறியதாகவோ எந்த ஒரு நிறுவனமும் பெரியதாகவோ இல்லை.

இன்று காலை, ஆப்பிளின் புதிய iBooks வடிவத்தின் பிரச்சனைகளை குறித்து இந்த கட்டுரையில் படிக்க நேர்ந்தது. மிக முக்கியமான கட்டுரை இது….

http://www.zdnet.com/blog/bott/how-apple-is-sabotaging-an-open-standard-for-digital-books/4378?tag=nl.e539

 

குறிச்சொல்லிடப்பட்டது , ,

மீனவர்களுக்காக…

Dear Friends,

I have just read and signed the online petition:

“Save Tamilnadu Fishermen”

hosted on the web by PetitionOnline.com, the free online petition
service, at:

http://www.PetitionOnline.com/TNfisher/

I personally agree with what this petition says, and I think you might
agree, too. If you can spare a moment, please take a look, and consider
signing yourself.

Best wishes,

Siddharth

ஈரோடுக்கு போன சென்னைவாசி. :)

சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது எழுதி வைத்தது….

******

கடந்த 20 நாட்களாக ஈரோட்டில் இருக்கின்றேன். பெரும்பாலும் வீட்டில் காயத்ரி, அமுதினியுடன். அவ்வப்போது நகர்வலம் செல்வதும் உண்டு. ஈரோட்டில் தனியாக சுற்றும் அனுபவம் இம்முறை தான் வாய்த்திருக்கிறது. சாலைகள் தங்களின் பூடகத்தன்மையை மெல்ல இழக்கத்துவங்கி விட்டன. 3 நாட்களுக்கு முன்னால் “இப்படியே நேரா போனீங்கன்னா எம்.ஜி.ஆர் சிலை நால்ரோடு வரும்… அங்க இருந்து சிக்னல் தாண்டி நேரா போனா பஸ் ஸ்டாண்ட்” என்று ஒருவருக்கு வழி கூட சொன்னேன்.  :)

இரயில் நிலையம் தாண்டி கொல்லம்பாளையம் வரும் வழியில் ஒரு இரயில் பாலம் இருக்கிறது. பாலத்தின் அடியில் அழுக்கேறிய உடலுடன் ஒருவர் எப்பொழுதும் அமர்ந்திருக்கிறார். அவரின் தலைக்கு மேலே சுவற்றில் ஒரு இடம் பலான படங்களுக்கான சுவரொட்டிக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஊர்களில் இப்படி ஒரு சுவர் இருப்பது தான். என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த 20 நாட்களில் அங்கே கிட்டத்தட்ட 7 – 8 சுவரொட்டிகளை மாற்றிவிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு படம் – டர்ன் ஓவர் ரேட் மலைக்க வைக்கிறது :)

“நல்ல மரியாதையான மக்கள்” என்ற சொற்றொடரை போட்டால் பெருநகரவாசி ஒருவன் குக்கிராமத்தை குறித்து கருத்து சொல்லும் தொணி வந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் நிஜமாகவே மிகவும் மரியாதையாக பேசுகிறார்கள். அண்ணா என்ற suffix மிக சரளமாக வந்து விழுகிறது வாக்கியங்களில். மூன்று நாட்களுக்கு முன்னால் காயத்ரிக்கு ஒரு தள்ளுவண்டி கடையில் நாவல்பழம் வாங்கும் போது புதிதாக பிள்ளை பெற்றவர்கள் சாப்பிடலாமா என்று விசாரித்தேன். இன்று மீண்டும் அந்த கடைக்கு பழம் வாங்க சென்றேன். அந்த பையன் “அக்கா நல்லா இருக்காங்களாண்ணா?” என்றான். :)

ஃப்ளெக்ஸ் போர்ட் இல்லாத சாலைகள் ஈரோட்டில் காணக்கிடைக்கவில்லை. நான் ஈரோடு வந்த முதல் வாரத்தில் ஈரோடு முழுக்க சே குவாரா வேடத்தில், முறுக்கு மீசையுடன் கை கட்டி நின்றபடி, கையில் ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய படி, இராணுவ உடையுடன், மேடையில் கழுத்து நரம்புகள் புடைக்க ஆவேசமாக பேசிய படி என்று எங்கு நோக்கினும் திருமாவளவனின் திரு உருவம். “வாழும் அம்பேத்கரே, சீறும் சிறுத்தையே” போன்ற வாசகங்களும். சிறுபான்மை கிருத்துவர் கழகம் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை மாநாட்டினில் பேச வருகிறார் என்பதனால் இந்த வரவேற்பு பலகைகள். இது ஓய்ந்ததும் ஊரெல்லாம் செம்மொழி மாநாட்டிற்கான வாழ்த்தும் வரவேற்பும் (கோவையில் நிகழும் மாநாட்டிற்கு இங்கு ஏன் வரவேற்பு பலகைகள்?) ஊரை நிறைத்தன. எம்.ஜி.ஆர். சிலை அருகே  “வாழ்த வயதில்லை வனங்குகிறோம்….. அலைகடலேன திரண்டுவாரீர்” என்று எழுத்துப்பிழைகளுடன் அத்தனைப்பெரிய பலகை.  இரயில் நிலையத்தை ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் 3 மிகப்பெரிய விளம்பர பலகைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. முதல் பலகையில் பெரியாரும் அண்ணாவும் சிரித்தபடி அமர்ந்திருக்கின்றனர். இரண்டாம் பலகையில் இளம் வயது கருணாநிதி சிரித்த முகத்துடன் கை நீட்டிய படி அமர்ந்திருக்கிறார். மூன்றாம் பலகையில் அழகிரியும் ஸ்டாலினும் சிரிக்கிறார்கள். எல்லா பலகைகளிலும் மேலே என்.கே.கே. பெரியசாமி சிரிக்கிறார். கீழே என். சிவக்குமார் உம்மென்று இருக்கிறார் (பலகைக்கான செலவு இவருடையது போல). மருந்துக்கு கூட அ.தி.மு.கவை எங்கும் காணவில்லை. ஒரு காலத்தில் அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்த ஊராம் இது.

முன்னால் அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவிற்கு மாறி இருக்கிறார். கட்சி மாறியபின் முந்தாநாள் தான் ஈரோடுக்கு வருகிறார். அதற்கு முந்தைய நாளில் இருந்தே ஊரெல்லாம் கருணாநிதி மற்றும் முத்துசாமி ஆகியவர்களின் புகைப்படங்களும் “ஈரோட்டின் சரித்திரமே.. எங்கள் விடிவெள்ளியே… நாங்கள் என்றும் உன் பின்னால் நிற்கின்றோம்” போன்ற வாசகங்களுமாய் பலகைகள். கீழே ஜெ. ஶ்ரீராம் என்பவரின் படத்துடன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எல்லா பலகைகள் மற்றும் சுவரொட்டிகளிலும் மேல் மூலையில் ஈரோடு தி.மு.க முக்கியஸ்தர் என்.கே.கே. பெரியசாமியின் மிகச்சிறிய புகைப்படம். சுவரொட்டி தயாரான பின் ஒட்டப்பட்ட  படம் என்று நன்றாக தெரிகிறது. ஆட்டம் ஆரம்பம். :)

இதெல்லாம் கிடக்கட்டும். முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். ஈரோட்டில் எனக்கு மிக மிக பிடித்த விஷயங்களில் ஒன்று – மாமன் பிரியாணி ஸ்டாலில் கிடைக்கும் பரோட்டாவும் சால்னாவும்.

எல்லாமும் விரைகின்றன – ரோபர்ட்டோ யூரோஸ்

மணி காற்றால் நிரம்பியிருக்கிறது
ஒலிக்காத போதும்
பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது
அசையாதபோதும்
வானம் முழுதும் மேகங்கள்
தனித்திருக்கையிலும்
சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது
யாரும் உச்சரிக்காதபோதும்
எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன
சாலைகளே இல்லாத போதும்

எல்லாமும் விரைகின்றன
அவற்றின் இருத்தலை நோக்கி

- ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry)

ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin
http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html

தமிழில் : சித்தார்த்

புகைப்பட மூலம் : http://www.flickr.com/photos/chemilo/3669746390/in/photostream/

மணி காற்றால் நிரம்பியிருக்கிறது
ஒலிக்காத போதும்
பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது
அசையாதபோதும்
வானம் முழுதும் மேகங்கள்
தனித்திருக்கையிலும்
சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது
யாரும் உச்சரிக்காதபோதும்
எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன
சாலைகளே இல்லாத போதும்

எல்லாமும் விரைகின்றன
அவற்றின் இருத்தலை நோக்கி

- ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry)

ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin
http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html

காந்தி கோட்சே கூட்டறிக்கை

காந்தி கொலை செய்யப்பட்ட போது நேரு கூறியதை போல அவர் வாழ்ந்த வாழ்வின் தருக்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (climax) அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணமும் கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது. கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள். கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும். தனது முடிவை பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்படப் பலமுறை அவர் இதை சொல்லியிருந்தார். யாரோ சொன்னது போல காந்தியின் கொலை என்பது காந்தியும் கோட்ஸேவும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை.

- அ. மார்க்ஸ் (காந்தியும் தமிழ் சனாதனிகளும் [எதிர் வெளியீடு] நூல் முன்னுரையில் இருந்து)

வியட்நாம்

அகதி

 

வியட்நாம்

”பொண்ணே, உன் பேர் என்ன?” ”தெரியாது.”
”உன் வயசென்ன? எங்கிருந்து வர்ர?” “தெரியாது.”
”ஏன் இந்த குழிய தோண்டின? ” “தெரியாது.”
“எவ்வளவு நாளா ஒளிஞ்சிருக்க?” ”தெரியாது.”
”என் விரல ஏன் கடிச்ச?” ”தெரியாது.”
”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு? ” ”தெரியாது.”
“யார் பக்கம் இருக்க நீ? ” ”தெரியாது.”
“இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.”
”உன்னோட கிராமம் இன்னும் இருக்கா?” ”தெரியாது.”
”அவங்க உன்னோட குழந்தைங்களா? ”ஆமாம்.”

- விஸ்லாவா சிம்போர்ஸ்கா

கவிஞர் குறித்து : http://en.wikipedia.org/wiki/Wisława_Szymborska

ஆங்கில மூலம் : http://theyeschurch.blogspot.com/2009/10/szymborska-vietnam.html

சிம்போர்ஸ்காவின் சில கவிதைகள் : http://info-poland.buffalo.edu/web/arts_culture/literature/poetry/szymborska/poems/link.shtml

தமிழில் : சித்தார்த்.

ஆட்டம் – மலையாள கவிதை மொழிபெயர்ப்பு.

மரத்தில்
எஞ்சியிருக்கும்
கடைசி இலைக்கு
பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?

வாய்க்கும்.

உச்சிவெயிலில்
தரையில் ஒரு சிற்றெறும்பு
நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.

காற்றில் ஆடியபடி
தொடர்ச்சியாக
எறும்பின் பாதையில்
நிழலிட
அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.

ஆட்டத்தின் உச்சத்தில்
இலை
மரத்தை விட்டு அகலலாம்.

அப்போதும்,

ஓர் குடையாய்
எறும்பின் மேலேயே
விழ வாய்த்தால்,

தாய் வந்து
குட்டியை ஒளித்ததற்காக
கண்சிவக்க கோபிக்கும் வரை
அந்த இருப்பு தொடருமானால்,

அதுவே
பெருமகிழ்ச்சி.

- வீரன்குட்டி.

மலையாள மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=9993

தமிழில் : சித்தார்த்.

எளிமை – மலையாள கவிதை

எளிமை

எனது இருப்பை அறிவிக்க
ஒரு சிறு கூவல்.

நான் இங்கு இருந்ததை கூற
ஒற்றைச்
சிறகுதிர்ப்பு

இனியும் இருப்பேன்
என்பதன் சாட்சியாய்
அடைகாத்தலின்
வெம்மை

எப்படி இயல்கிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினை கூற?

- பி. பி. இராமசந்திரன்

தமிழில் : சித்தார்த்.

மலையாள மூலம் : http://international.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14010

மிலோராட் பாவிச்சின் தன்வரலாறு

மிலோராட் பாவிச் செர்பிய நாவலாசிரியர். இரண்டு மாதங்களுக்கு முன் இவர் இறந்தார். அவரது வலைதளத்தில் அவரே எழுதிய “என் தன்வரலாறு” என்ற சிறிய கட்டுரையை இங்கே மொழிபெயர்த்துள்ளேன். பாவிச்சின் மொழி ஒரு வித கனவினை போன்றது. எந்த தர்கத்துக்குள்ளும் அடைபடாது மிதப்பது. இந்த தன்வரலாறும் அதே மொழியினால் ஆனதே. இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்திருக்கலாம். பாவிச்சின் ஆங்கில கட்டுரையையும் வாசித்துவிடுங்கள்.

மிலொராட் பாவிச்




சுயசரிதை – மிலொராட் பாவிச்

நான் கடந்த இருநூறு ஆண்டுகளாக எழுத்தாளனாக இருக்கிறேன். வெகு காலத்திற்கு முன்பு, 1766ல் புடிம் நகரில் வாழ்ந்த ஒரு பாவிச் தனது கவிதை தொகுப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து எங்களை எழுத்தாளக் குடும்பமானவே நினைத்துவந்திருக்கிறோம்.

நான் 1929ல் சொர்கத்தின் நான்கு நதிகளுள் ஒன்றின் கரையினில் பிறந்தேன். நான் பிறந்தது துலாம் ராசியில் (அல்லது ஆஸ்டெக் ஜாதகப்படி பாம்பு ராசியில்).

முதன்முறை என் மேல் குண்டுகள் பொழிந்த போது எனக்கு வயது பன்னிரெண்டு. இரண்டாம் முறை நிகழும் போது எனக்கு பதினைந்து வயது. இவ்விரண்டு பொழிவுகளுக்கு இடையே முதல் முறையாக காதலில் விழுந்ததும், ஜெர்மானிய ஆட்சியில் கட்டாயத்தினால் ஜெர்மன் மொழி பயின்றதும் நிகழ்ந்தது. வாசமான புகையிலையை புகைத்த ஒருவரிடம் ரகசியமாக ஆங்கிலமும் கற்றேன். இதற்கிடையில் முதல் முறையாக ப்ரென்ச் மொழியை மறந்தேன் (பின்னாட்களில் மேலும் இரு முறை மறந்தேன்).

இறுதியாக, அமெரிக்க-பிரித்தானிய படைகளின் குண்டுபொழிவிலிருந்து தப்பிக்க ஒரு முகாமில் தங்கிய போது, ருஷ்ய அதிகாரி ஒருவர், அவரிடம் இருந்த ருஷ்ய நூல்களை (ஃபெட் மற்றும் ட்யுட்ஷெவ்வின் கவிதை தொகுப்புகள்) கொண்டு எனக்கு ருஷ்ய மொழியை கற்பித்தார். மொழிகளை கற்பது என்பது வசீகரிக்கும் மிருகங்களாக உருமாறும் அனுபவம் என்று இன்றெனக்கு தோன்றுகிறது.

இரண்டு ஜான்களின் மீது அன்பு கொண்டிருக்கிறேன் – தமாஸ்கஸின் ஜான் (2)  மற்றும் ஜான் க்ரைசோஸ்டம் (3) (தங்க நாவினன்).

என் வாழ்வினை காட்டிலும் எனது புத்தகங்களில் வரும் காதல்களில் அதிக வெற்றி கண்டிருக்கிறேன். இதில் ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு, இன்றும் தொடர்கிறது அது.  நான் உறங்குகையில் இரவு இனிமையாக என் கன்னத்தை பிடித்துக்கொண்டிருக்கிறது.

1984 வரை, நான் தான் நாட்டிலேயே மிக குறைவாக படிக்கப்பட்ட எழுத்தாளன். அதன் பிறகு மிக அதிகமாக படிக்கப்பட்ட எழுத்தாளனானேன். (4)

நான் ஒரு நாவலை அகராதியின் வடிவில் எழுதினேன். இரண்டாம் நாவல் குறுக்கெழுத்து வடிவிலானது. மூன்றாம் நாவல் நீர்கடிகார வடிவம் (5). நான்காம் நாவல் டாரட் சீட்டுகளின் வடிவில். எனது நாவல்களுக்கு நான் அதிக தொந்தரவு தரக்கூடாதென நினைக்கின்றேன். நாவல் ஒரு வகை வைரஸ் கிருமி போன்றது என்பது என் நம்பிக்கை – அது தானாகவே பரவிப் பரவி வளர்கிறது.

ஆச்சரியகரமாக, எனது நூல்கள் 73 முறை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், என்னிடம் சுயசரிதை எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் நூற்பட்டியல் தான்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டு விமர்சகர்கள் என்னை 21ஆம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளன் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் “குற்றமல்ல, குற்றமின்மையே நிரூபிக்கப்படவேண்டியதாக” கருதப்பட்ட 20ஆம் நூற்றாண்டில் தான் நான் வாழ்ந்தேன்.

என் கனவுகளில் இறந்தவர்களை தீண்டிய அதே கரம் கொண்டு உயிரோடிருப்பவர்களை தீண்டக்கூடாது என்பதை அறிந்திருந்தேன்.

என் வாழ்வின் ஆகப்பெரிய ஏமாற்றங்கள் எனது வெற்றிகளிலிருந்தே முளைத்தன. வெற்றி எதையும் தருவதில்லை.

நான் யாரையும் கொன்றதில்லை. ஆனால் அவர்கள் என்னை கொன்றுவிட்டனர், நாம் இறப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே. எனது புத்தகங்களின் ஆசிரியன் ஒரு துருக்கியனாகவோ ஜெர்மானியனாகவோ இருந்திருந்தால் அவற்றிற்கு நல்லதாக இருந்திருக்கும். மோசமாக வெறுக்கப்பட்ட ஒரு தேசத்தின் – செர்பிய தேசத்தின் –  ஆகப்புகழ்பெற்ற எழுத்தாளனாக அறியப்பெற்றேன்.

21ஆம் நூற்றாண்டு எனக்கு 1999ல் ஆரம்பித்தது. நாட்டோ (NATO) படைகள் பெல்கிரேடின் மீதும் செர்பியாவின் மீதும் குண்டு வீசத்துவங்கிய போது. அன்றிலிருந்து எதன் கரையில் பிறந்தேனோ, அந்த டான்யூப் நதி பயணம் செய்ய ஏதுவற்றதாகப் போய்விட்டது.

எழுத்தின் அலாதியான இன்பத்தை அளித்ததன் மூலம் கடவுள் எனக்கு அளக்கவியலா நன்மையினை செய்தார் என்றெண்ணுகிறேன். அந்த இன்பத்தை கொண்டே என்னை தண்டித்தும் விட்டார் என்றும் தோன்றுகிறது.

குறிப்புகள் :

(1) பாவிச் என்பது மிலொராட் பாவிச்சின் குடும்பப்பெயர்.
(2) தமாஸ்கஸின் ஜான் (John of Damascus) ஒரு தமாஸ்கஸ் நகரில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபு கிருத்துவர். நீதி, இறையியல், தத்துவம், இசை என பல துறைகளில் ஆர்வமாக ஈடுபட்ட அறிஞர். தமாஸ்கஸின் இஸ்லாமிய காலிஃபின் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். இவர் எழுதிய கிருத்துவ பாடல்கள் பல இன்றும் கிழக்கத்திய தேவாலயங்களில் பாடப்படுகின்றன.
(3) ஜான் க்ரைசோஸ்டம் (John Chrysostom) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிருத்துவ பாதிரியார். அவரது பேச்சுத்திறமைக்காக அவரை தங்க நாவுடையவர் (Golden Tongued) என்று அழைத்தனர்.
(4) 1984ல் தான் பாவிச்சின் முதல் நாவலான கசார்களின் அகராதி வெளிவந்தது.
(5) இதன் மூலச்சொல் clepsydra. அதாவது ஒரண்டு முனைகளும் திறந்திருக்கும் ஒரு குழாய். பாவிச்சின் மூன்றாம் நாவலான Inner Side of the Wind இவ்வடிவதிலான நாவல். அந்நாவலை இரண்டு பக்கங்களில் இருந்து படிக்கலாம்.

இதன் ஆங்கில வடிவம் : http://www.khazars.com/en/autobiography/
பாவிச் குறித்த எனது பழைய பதிவுகள் : http://angumingum.wordpress.com/?s=பாவிச்

அதிநாயகமாக்கத்தின் வேர்

சில மாதங்களுக்கு முன்பு “அதிநாயகமாக்கம்” என்ற பதிவினை எழுதி இருந்தேன்.  அந்த பதிவை ஒரு நடை படித்துவிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை. அந்த பதிவின் சாரம் இது தான். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை நம் சமூகம் “அதிநாயகர்களை” உருவாக்கியபடியே உள்ளது. ஔவை, வள்ளுவன், கம்பன் துவங்கி நம் கவிதைகள் முழுக்க இந்த அதிநாயகமாக்கத்தை காண்கிறோம். இராமன், காந்தி, ஒபாமா என அதிநாயகர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் ஏதோ ஒரு தேவையை இந்த அதிநாயகர்கள் பூர்த்தி செய்கிறார்கள்.

அந்த பதிவினை ஒரு கேள்வியுடனேயே முடித்திருந்தேன்.

இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?

இது பல வருடங்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் கேள்வி. அந்த கேள்வியை நினைக்கும் தோறும் ஒரு காட்சி தோன்றி மறையும். அருணாசலம் படம் வெளியாகி இருந்த நாள். முகப்பேர் பேருந்து நிலையம் அருகே ஒரு இளைஞர் கூட்டம் ரஜினியின் பெரிய படம் ஒன்றினை தங்களது தோளில் தூக்கி சென்றனர். யார் இந்த இளைஞர்கள். இவர்களுக்கு அந்த நடிகருக்குமான பந்தம் என்ன?

இரு வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தக சந்தை சென்றிருந்த போது ஒரு புத்தகம் வாங்கினேன். புத்தகத்தின் பெயர் : ஔவையில் உளவியல் & ப்ராய்டு – லெக்கானின் மனஅலசல். – ஐ.க. பாண்டியன் என்பவர் எழுதிய நூல் (கார்முகில் பதிப்பகம்). அப்பொழுது குறுந்தொகையில் லயித்திருந்ததாலும், நான் கவித்துவ நோக்கில் வாசித்த ஔவையை இவர் மனஅலசலின் (psychoanalysis) துணை கொண்டு ஆராய்கிறார் என்பதாலும் இந்த புத்தகம் ஈர்த்தது.
இந்நூலினை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பகுதியில் ப்ராய்டு மற்றும் லக்கானின் மனஅலசல் கோட்பாடுகளை மிக சுருக்கமாக விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் எத்தனை படித்தும் புரிபடாது இருந்த ப்ராய்ட் மெல்ல எனக்கு புரியத்துவங்கினார். நூலின் இரண்டாம் பகுதி ஆத்திச்சூடி மற்றும் கொன்றை வேந்தன் பாடல்களை அலசுகிறது. மூன்றாம் பகுதி ஔவையின் தனிப்பாடல்களை. நான்காவது பகுதியில் சங்கஇலக்கியத்தில் (குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு) ஔவை எழுதிய பாடல்களை அலசுகிறது.
ஏதோ காரணத்தால் இந்த நூலை முன்னுரையை தாண்டி படிக்கவில்லை.  இரு வருடங்களாக அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்த நூலினை உறக்கம் கொள்ளாத நேற்றிரவு சும்மா புரட்டலாம் என்று எடுத்தேன். “அதிநாயகமாக்கம்” கட்டுரையில் மேற்கோள்காட்டப்பட்டிருந்த ஔவையின் “களம் புகல் ஓம்புமின்…” என்ற பாடல் இந்நூலில் ஆராயப்பட்ட பகுதி கண்ணில் பட்டது. அந்த பாடலும் அதன் விளக்கமும் :

களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

- ஔவையார் (புறநானூறு 87)

போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனுக்கு எதிராக எதிரிகளின் படை திரள்கிறது. அப்போது எதிரிகளை எச்சரித்து ஔவை பாடுவதாக அமைந்த பாடல் இது. கட்டுரையாளர் இந்த கவிதை உருவாக காரணமாக என்ன இருந்திருக்கும் என்பதை ஆராய முற்படுகிறார். இந்த கவிதையின் துணைகொண்டு ஔவையின் மனஓட்டத்தை கணிக்க முயல்கிறார். இவர் வந்து சேரும் இடம் சட்டென ஒரு திறப்பை உருவாக்கியது. அதியமானுக்கு எதிராக போர் புரிய படை ஒன்று வரும் பொழுது ஔவைக்கு ஏன் இத்தனை கோவம் வர வேண்டும்?
ஔவையின் மனதினில் ஒரு வீரனின் பிம்பமாக அதியமான் இருக்கிறான். ஔவையின் மனதினில் உள்ள அந்த அதியமானும் ஔவையின் ஒரு பகுதியே. உண்மையான அதியமான் பகைவர்களால் சீண்டப்படும் போது ஔவையினுள் இருக்கும் அதியமானும் சீண்டப்படுவதாக, அதன் மூலம் தானே சீண்டப்படுவதாக உணர்கிறாள் ஔவை. அந்த உணர்வில் இருந்தே எழுகிறது “எம்முளும் உளன் ஒரு பொருனன்” என்ற வரி. இந்நிலையை உளவியலில் பிணைப்புத் தற்காதல் (Anaclytic Attachment) என்பார்கள் என்கிறார் பாண்டியன். பாண்டியனின் சொற்களில் :

ஔவை அதியமானின் பகைவரைக் கண்டதும், அவர்களை எச்சரிப்பதற்கான பிரக்ஞைபூர்வமான சொல்லாடல் அல்ல இது. மாறாக ஔவையின் சுயமோகத்தில் (Anaclytic Type) ஒரு பகுதியாக பங்கேற்றிருக்கும் அதியமானுக்கு ஏற்பட்ட காயமே, கிளர்ந்து ஒரு வானளாவிய வீரத்தைப் பகைவர் முன் தற்காப்பாக அவர்களை அச்சுறுத்த வைக்கிறது.

சாதி அரசியலை அல்லது மத அரசியலைத் தம் பகுதியாக கொண்ட தன்னிலைகள் எங்கோ நடப்பதை ஆய்வுக்குறிய எதுவும் இல்லாத போதும் தன் attachmentற்கு ஏற்ப நியாயப்படுத்தி பேசுவதைக் காணமுடியும். ரசிகர்களின் அரசியலும் இந்த வகை தான். தன்னையும், தான் ரசிக்கும் அபிமான நடிகரின் தொப்புள் கொடியில் கட்டுண்டு கிடப்பது பிரிக்கப்படவேண்டியது அவசியம் என்ற பிரக்ஞை இல்லாமல் இருப்பர்.

சுயமோக வெளியின் வானளாவியம் அத்தகையது. அறிஞனையும் ஞானியையும் ஏமாற்றக்கூடியது.

ஆக, ரஜினியின் உருவத்தை பல்லக்கில் எடுத்துச்செல்லும் ரசிகன் உண்மையில் தூக்கிச்செல்வது தன்னுள் நிறைந்த ரஜினியை தான். அதாவது தன்னையே பல்லக்கில் தூக்கிச்செல்கிறான் அவன். அதிநாயகமாக்கம் என்பது உண்மையில் நம்மை அதீதமாக்கும் முயற்சி தானா?  யோசித்தால் இது அத்தனை எதிர்மறையானது அல்ல என்று தோன்றுகிறது. காந்தியின் தியாகம் நம் கண்களை நனைப்பது எதனால்? காந்தியை வாசிக்கும் தோறும் அவரை நாமாக மாற்றுவதினால் தானா?
Follow

Get every new post delivered to your Inbox.