ஆகப்பெரிய விழைவு

இன்று எதேச்சையாக The Codeless Code  என்ற நல்ல தளத்தில் சென்று முட்டினேன். Koanகள் என்றால் ஜென் மதத்தில் சொல்லப்படும் தத்துவார்த்தமான சிறு கதைகள். இந்த தளத்தில் ஓர் கணினி நிறுவனத்தில் நிகழ்வது போல சொல்லப்படும் அழகான சிறு கதைகள் உள்ளன. வெறும் கணினி வல்லுனர்களுக்கான கதைகள் அல்ல இவை… அனைவருக்குமானது.

மிகவும் பிடித்த கதை ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன் :

ஆகப்பெரிய விழைவு 

திங்கட்கிழமையன்று ஓர் இளம் துறவி குரு பான்சனிடன் கேட்டான் : குருவே, ஆகப்பெரிய விழைவாக எது இருக்க முடியும்?

பான்சன் சொன்னார் : அறியக்கூடியதனைத்தையும் அறிந்து, ஒருவன் எழுதிய நிரலை இதற்கு மேலும் நேர்த்தியாக்க முடியாது என்ற நிலையை அடைவது.

செவ்வாய்க்கிழமையன்று வேறொரு இளம் துறவி பான்சனிடன் கேட்டான் : குருவே, ஆகப்பெரிய விழைவாக எது இருக்க முடியும்?

பான்சன் சொன்னார் : எப்போதும் தன்னினும் அறிவார்ந்த நிரலாளர்கள் சூழ இருப்பது… அதன் மூலமாக தொடந்து கற்றுக்கொண்டே இருந்து நிலையினை அடைவது.

புதன்கிழமையன்று மூன்றாவது இளம் துறவி, மேற்சொன்ன இரு பதில்களும் ஒன்றிற்கு ஒன்று எதிரானவை என்பதை உணர்ந்தான்.

ஆம், என்றார் பான்சன்.

குருவினும் உயர்ந்த இடத்தில் தான் இருப்பதாக எண்ணிக்கொண்ட இளம் துறவி கேட்டான் : ஆகப்பெரிய விழைவை ஒருவன் அடைவது எப்படி?

எரிச்சலுற்ற பான்சன் சொன்னார் : திங்களன்று ஆகப்பெரிய எண் எது என்று கேட்கப்பட்டேன். செவ்வாயன்று அதன் பாதியளவு எண் எது என்று கேட்கப்பட்டேன். இரு கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஆனால் உனக்கு, அந்த இரு எண்களில் ஏதேனும் ஒன்று வரை எண்ணவும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், நாம் தொடங்குவதற்கும் நிலவே மண்ணாகிவிடக்கூடும்.

இளம் துறவி வெட்கி தலைகுனிந்து சென்றான்.

பான்சனின் மேஜை மேலிருந்த போன்சாய் மரத்தில் களையெடுத்துக்கொண்டிருந்த தோட்டக்காரர் கேட்டார் : அந்த இளம் துறவியிடம் தவறிருப்பதாக எனக்கு படவில்லை. உங்களிடம் கேட்கப்பட்ட இரு கேள்விகளும் ஒன்றே அல்லவா?

பான்சன் சொன்னார் : போன்சாய்க்கு நீர் தேவை. என் சன்னலுக்கு வெளியே இருக்கும் தேக்கு மரத்திற்கும் நீர் தேவை.

ஆங்கில மூலம் : http://thecodelesscode.com/case/46

முன்றிலில் ஒரு புதிய கட்டுரை

அணிலாடு முன்றில் குறித்து முன்னமே எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். என் மனைவி காயத்ரியும் நானும் இணைந்து எழுதும் வலைப்பதிவு. பழந்தமிழ் பாடல்களை மட்டுமே மையமாக கொண்ட கட்டுரைகள் என்பது இலக்கு. இது வரை 14 கட்டுரைகள் எழுதியுள்ளோம். 

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு முன்றிலில் ஒரு புதிய கட்டுரையை எழுதினேன்… “நல்கார் நயவாராயினும்…”

பனிப்பொழிவிலிருந்து பறவையின்மையை…

நேற்று பி.பி.சியில் நீர்வளம் குறித்த கலந்துரையாடல். நீர்வள நிபுணர்கள், சூழலியல் அறிஞர்களிடையே ஒரு ஓவியரும் இடம்பெற்றிருந்தார். பெண். பெயர் மறந்துவிட்டது. சமூக, அரசியல் நோக்கில் மற்ற அனைவரும் பேசிய பொழுது இவர் இலக்கியத்தையும் கலையையும் முன் நிறுத்தி பேசினார். அவர் முன்வைத்த நீர் குறித்த இரு மேற்கோள்கள் இன்னும் ear wormஎன நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

When you look at your reflection in the water, do you see the water in you?

இந்த வரி நேற்றிரவில் இருந்து படுத்தி எடுக்கிறது…. நீ நீரில் உன் பிம்பத்தை காணும் பொழுது உன்னுள் இருக்கும் நீர் தெரிகிறதா?….

இன்னொரு வரி, எமிலி டிக்கின்சனின் கவிதையில் வரும் வரி…

Water is taught by thirst.

ப்பா… என்றிருந்தது…என்ன ஒரு வரி… இந்த வரி இடம்பெற்ற முழு கவிதை :

Water, is taught by thirst.
Land—by the Oceans passed.
Transport—by throe—
Peace—by its battles told—
Love, by Memorial Mold—
Birds, by the Snow.

அருமையான கவிதை…. இன்மையில் நின்றபடி இருப்பை நோக்குதல்… தாகத்திலிருந்தபடி நீரை, போரிலிருந்தபடி அமைதியை, பனிப்பொழிவில் நின்றபடி பறவையை…

ஒரு வகையில் மிகப்பழமையான கவிதைக்கருவி இது… எனக்கு மிகப்பிடித்த குறுந்தொகை பாடல்களில் ஒன்றான காலே பரிதப்பினவே நினைவுக்கு வருகிறது…

காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும் பலரே
மன்ற இவ்வுலகத்து பிறரே

கால்கள் வழிவிழந்தன… கண்கள் பார்த்துப்பார்த்து பூத்துப்போயின… வானத்தின் விண்மீன்களை விடவும் அதிகமாக இருக்கிறார்கள் இவ்வுலகில் மற்றவர்கள்…

தேடலையும் அத்தேடலில் கண்ட மற்றவர்களையும் மட்டுமே குறிப்பிட்டு, இந்த இருப்பில் நின்றபடி தேடப்படும் நபரின் இன்மையை சுட்டும் கவிதை…

Birds, by the Snow… பனிப்பொழிவு பறவைகளை நினைவுப்படுத்துகிறது… நமக்கு துணையில்லா தனிமையை கார்காலம் ஊதிப்பெருக்குவது போல அமெரிக்கர்களுக்கு பனிக்காலம் போலும்…

இன்னொன்றும் தோன்றுகிறது. விண்மீன்களை தெளிவாகக்காண நகரத்து வெளிச்சங்கள் ஏதும் இல்லாத இரவு தேவைப்படுவது போல பறவைகளற்ற தூயவெள்ளை வானம் தேவைப்படுகிறதா பறவைகளை நினைவுகூற?

கதையின் கதை (அ) கொசுவத்திச்சுழற்சி :)

ஒரு விஷயத்தை பற்றி யோசித்தால் சிந்தனை அப்படியே கிளைத்து கிளைத்து வேறு எங்கோ போய் முடியும் எனக்கு. கட்டுரை எழுதுவதே கூட தோன்றியதை எல்லாம் எழுதி வைத்துவிட்டு பிறகு கோர்த்தெடுத்து தான்… ஆக என்னால் கதையெல்லாம் எழுத முடியாது என்று தெளிவாகவே தெரியும். ஆனாலும் ஒரு சின்ன உந்துதல் இருந்துகொண்டே இருந்தது, சிதறிய வடிவத்திலேயே ஒரு கதை எழுதிப்பார்த்தால் என்ன என்று…

எழுத நினைத்த கதையின் கரு இது தான் :

எதிர்கால தமிழ்நாடு (தனி நாடு). அதன் பிரதான மதம் குமரம். இம்மதத்தின் வளர்ச்சியும் தமிழக இனம் சார்ந்த அரசியலும் பின்னிப்பிணைந்தவை. ஒன்று மற்றதன் சாய்மானம் என்பது போல… அம்மதத்தின் அச்சாணியாக விளங்கும் நம்பிக்கைகளில் ஒன்று நவீன குமரமதத்தை தோற்றுவித்தவராக கருதப்படும் முதலாம் வேழன் குமரனடியின் மரணமும் அதை சூழ்ந்துள்ள அதிசயத்தன்மையும். இவர் வழிவந்தவரான இன்றைய வேழன் குமரனடியின் மரபணுக்களை, மரபணு வரலாற்றியல் என்ற புதிய அறிவியல் துறையின் உதவியுடன் ஆராயும் ஆராய்ச்சியாளர் ஒருவர் முதலாம் குமரனடியின் உடல்நலம் குறித்த, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையையே ஆட்டிவைக்கக்கூடிய, உண்மையினை கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்பை அரசியல் தலைமையும் எதிர்ப்பு போராட்டக்குழுவும் எப்படி கைப்பற்ற நினைக்கின்றன என்பதை குறித்த சிதறிய வடிவ கதையாக எழுத நினைத்தேன்….. அதாவது தமிழக அரசியல் நிலை குறித்த கட்டுரையின் ஒரு பகுதி… குமரமதத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவலின் ஒரு பக்கம், மரபணு வரலாற்றியல் குறித்த பேட்டியின் ஒரு சிறு பகுதி என்று போன்றவற்றின் தொகுப்பாக நியூ யார்க்கர் இதழில் வெளிவந்த ஒரு ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு என்ற வடிவில்…. கொஞ்சமாக எழுதவும் துவங்கினேன்.

கதைக்கருவை படிக்கும்பொழுதே உங்களுக்கு தோன்றியிருக்கும். அப்படியே அப்பட்டமாக கிருத்துவ மத அரசியலை பேசும் படைப்பாக வந்திருக்கும். Dan Brown பாதிப்போ என்னவோ… இப்படி தோன்றியவுடன் எழுதுவதை அப்படியே நிறுத்திவிட்டேன். ஆனால், மேற்கோள்கள் மூலமாக மட்டுமே கதை சொல்லும் உத்தி, மரபணு வரலாற்றியல் ஆகிய அம்சங்கள் பிடித்திருந்ததால் ஜெயமோகனின் “தமிழிலக்கியம் : நேற்று இன்று நாளை” கதையின் வடிவில் எழுதிப்பார்க்கலாம் என்று நினைத்து எழுதியது ”பேசுதல் அதற்கின்பம் – நூல் வரலாறு” கதை. அப்போது அறிவிக்கப்பட்ட உரையாடல் சிறுகதை போட்டிக்கு அனுப்பி, முதல் பட்டியலில் கூட இடம் பெறாததால் அப்படியே விட்டுவிட்டேன்.

இன்று என் ஆதர்சமான ஜெயமோகன் இதை பகிர்ந்திருந்தது மிகுந்த நிறைவினை அளிக்கிறது…. it made my day. 🙂 நன்றி ஜெ.

 

கீழே உள்ளது எழுதி நிறுத்திய அந்த கதை 🙂

 

***************

 

[கதையின் பெயர்]
[helper timeline : கட்டுரை காலம் : 2299;மொழிபெயர்ப்பு காலம் : 2380;தமிழகம் – உருவாக்கம் : 2080]

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் :

* நியூ யார்க்கர் எனும் ஆங்கில மின்னிதழின் 2199ஆம் ஆண்டு நவர்பர் மாத (திருவள்ளுவர் ஆண்டு 2230, ஐப்பசி) பதிப்பில் வெளி வந்த “DNA and the God of Tamil land” என்ற தொகுப்புக்கட்டுரையின் மொழியாக்கம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த கட்டுரையை உள்வாங்கிக்கொள்ள தொகுப்புக்கட்டுரை என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். தொகுப்புக்கட்டுரை என்பது 21ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பின்நவீனத்துவ எழுச்சியின் நீட்சியாய் உருவான இலக்கிய வடிவம் ஆகும். இலக்கியத்தில் புதிதாய் கூறுவதற்கு எதுவும் இல்லை என்ற கோட்பாட்டிற்கு உட்பட்டு, கட்டுரை எதை கூற முயல்கிறதோ அதை குறித்த பல்வேற மூலங்களில் இருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்களை மட்டுமே அடுக்கி அதன் மூலம் கருத்தை நிறுவுவதே தொகுப்புக்கட்டுரையின் பாணி. தொகுப்புக்கட்டுரையாளனின் திறமை என்பது மேற்கோள் தேர்ந்தெடுப்பிலும் அவற்றை கலைத்து அடுக்கும் விதத்திலுமே உள்ளது. ஒரு வகையில் இது Collage வகை ஓவியம் போன்றது. பத்திகளாலான கொலாஜ். இவ்வடிவம் தமிழகத்தில் இருந்து தோன்றியது எனும் கூற்றும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அப்போதெல்லாம் மேற்கோள்களின் மூலங்களை குறிப்பிடும் பழக்கம் இல்லை என்பதால் இக்கருத்து இன்னும் சர்ச்சைக்குறியதாகவே உள்ளது.

* இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள திருவள்ளுவர் ஆண்டுகள், வாசகர்களின் புரிதலுக்காக மொழிபெயர்ப்பாளரால் சேர்க்கப்பட்டது.

* ஆங்கில கட்டுரையில் பல பகுதிகள் தமிழில் வெளிவந்த கட்டுரைகள், பேட்டிகள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆகும். அவை மூல வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 

*************

சிங்கம் துரத்துவது பசிக்காக, மான் ஓடுவது உயிருக்காக. எத்தனை அழகான சொற்றொடர். யார் கூறியது இதை? சினுவா ஆச்சிபி*? ஜீவாதாரப்போராட்டம் ஒன்றினை அழகியல் மிளிரும் சொற்றொடராக சுருக்கி விட்டோம். அல்லவா? எதை சாதித்தோம் இது கொண்டு? மானும் சிங்கமும் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஆட்டத்தை சாவித்துவாரம் வழியாக பார்ப்பதில் ஏன் இத்தனை கோவம் என்கிறீர்களா? ஏனெனில் அந்த மான் இந்த வரியை வாசித்தால் என்ன நினைக்கும் என உங்களுக்கு தெரியாது. நான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதால் எனக்கு தெரியும். அந்த வரியில் இல்லாதவற்றில் இருந்து துவங்கலாம் இந்த கதையை. என் நுரையீரல் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. கணுக்காலுல் நரம்புகள் முறுக்கிக்கொண்டிருக்கின்றன. வின் வின் என அங்கிருந்து ஊற்றெடுக்கும் வலி மூளையை மோதிச்சரிகிறது. உதடுகள் மீன் போல திறந்திருக்க, அதனூடாக நான் மூச்சு வாங்கும் ஒலி எனக்கே கேட்க சகிக்கவில்லை. வழியும் வியற்வை வாய் நுழைந்து கரிக்கிறது. அதோ புள்ளியாய் தெரிகிறார்கள் என்னை துரத்துபவர்கள். எனது சிங்கங்கள்…..

– வேழன் குமரனடி , உயிருக்காய் ஓடும் மான், பக் : 3. [Stag’s run for life – Vezhan Muruganadi, oxford univ. press, 2091]

* சினுவா ஆச்சிபி – இருபதாம் நூற்றாண்டு நைஜீரிய* எழுத்தாளர்.

(* – நைஜீரியா – இன்றைய ஐக்கிய ஆப்பிரிக்க கூட்டமைப்பின் ஒரு பகுதி)

 

**********************

 

பேராசிரியர். பெருவழுதியுடன் ஓர் உரையாடல் : தமிழேறு நாளிதழிலிருந்து.

தமிழேறு : தமிழகம் தனி நாடாக உருவாகி 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இது உண்மையாகவே ஒரு வரலாற்று தேவையா? இதை தடுத்திருக்க முடியுமா? வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் உங்களின் கருத்து என்ன?

பேரா. பெருவழுதி: எனது “தமிழக உருவாக்கம் : வேரும் விழுதும்” என்ற நூலினில் இதை குறித்து விரிவாக பேசியுள்ளேன். இக்கேள்வியை இரண்டு விதங்களில் எதிர்கொள்ளலாம். முதலாவதாக தமிழகத்தின் உருவாக்கம் குறித்து பார்க்க வேண்டும். தமிழகம் அதிகாரப்பூர்வமான நாடாக உருவானது 2080 (தி. ஆ : 2111) ல் தான் என்றாலும் இதற்கான விதைகள் இதற்கு வெகு முன்னமே விழுந்து விட்டதற்கான சான்றுகள் பல, வரலாற்றில் காணக்கிடைக்கின்றன. 2075ஆம் ஆண்டின் நீர்வறட்சியும், அதன் நீட்சியாய் உருவான நிகழ்வுகளும் நேரடியாய் தமிழகம் உருவாக காரணமாக அமைந்தன. ஆனால் இதற்கு வெகு முன்னமே பிளவுகள் உருவாக ஆரம்பித்து விட்டிருந்தன. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கருநாடகம் என்ற மாநிலத்திற்கு (இன்றைய கீழை இந்தியாவின் 501 தொடங்கி 543 வரையிலான மாகாணங்கள்) எதிராக வெளியான பல மின்கட்டுரைகள் அன்றைய பொது மனநிலைக்கு காட்டாக அமைகின்றன. இந்தி மொழிக்கு எதிராக பல போராட்டங்கள் நிகழ்ந்ததற்கான குறிப்புகளும் கிடைத்துள்ளன. சுருக்கமாய் கூறினால், 2075ஆம் ஆண்டின் நீர்வறட்சி, மிகப்பெரிய நிகழ்வுச்சங்கிலி ஒன்றின் கடைசி கண்ணி மட்டுமே.

இரண்டாவதாக இதை தமிழக மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று ஆழ்ந்து நோக்க வேண்டும் நாம். அவர்கள் இதை வரவேற்றார்கள் என்றே கூற வேண்டும்.தமிழர்களின் தனிப்பெரும் சமயமான குமர சமயத்தின் வளர்ச்சியே இதற்கு தக்க சான்று. முதலாம் வேழன் குமரனடியின் தலைமையில் குமரம் தனி சமயமாக உருவாவதற்கு வெகு முன்னமே அதற்கான வேர்கள் தமிழகத்தில் இருந்தன. குமரம் தமிழர்களின் ஆதி சமயம் எனும் உணர்வு என்றுமே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு நமக்கு காட்டுவது. தமிழகம் தனி நாடாக ஆனது தமிழர் தமக்கான அடையாளத்தை மீட்டெடுத்ததன் விளைவே ஆகும்.

இன்று…

இன்று உலகம் திறந்த வடிவங்களை (open formats) நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. உதாரணமாக, உரைகோப்புகளுக்கான அடிப்படை வடிவமாக “திறந்த ஆவண வடிவம்” (Open Document Format)  உருவாகியுள்ளது. இந்த வடிவத்திலான கோப்பை நாம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் நிரலினை கொண்டு உருவாக்கலாம். பின்னர் அதை ஓபன் ஆஃபிஸ் நிரலினை கொண்டு திருத்தி, ஆப்பிள் பேஜஸ் (Pages) நிரலினை கொண்டு அச்சிடலாம். நிரல்கள் வெவ்வேறாக இருந்தாலும் வடிவம் ஒன்றே. எல்லா நிரல்களும் ஒரே வகையான கோப்பு வடிவங்களை கொண்டிருந்தால் நிரல்களின் விற்பனை பாதிக்காதா என்றால், இதற்கு இரண்டு பதில்களை கூறலாம். ஒன்று, ஒவ்வொரு நிரலுக்கும் பிரதான வடிவமாக அந்நிறுவனம் உருவாக்கிய வடிவம் இருக்கும். மைக்ரோசாஃப்டிற்கும் word வடிவம், ஆப்பிளுக்கு .pages வடிவம் என… ஆனால் இக்கோப்புகளை திறந்த ஆவண வடிவிற்கு மாற்றும் வசதியும் அந்நிரலிலேயே இருக்கும். அதனால் அந்நிரலிலிருந்து நம் கோப்புகளை விடுவிப்பது மிக எளிதான காரியமாக இருக்கும். இரண்டாவது… நிரலின் தரமும் நேர்த்தியுமே அதன் விற்பனையை உறுதி செய்யும் காரணிகளாக இருக்க வேண்டுமே தவிர, அது பயன்படுத்தும் வடிவமல்ல.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் நீங்கள் மின் நூல் ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எந்த வடிவத்திலான (format) மின் நூல் என்று முதலில் முடிவு செய்ய வேண்டி இருந்திருக்கும். ereader.com, ebook.com என அன்று மின் நூல் விற்றுக்கொண்டிருந்த ஒவ்வொரு தளமும் தனக்கென ஒரு வடிவத்தினையும் அவ்வடிவத்தை வாசிக்கக்கூடிய நிரலினையும் கொண்டிருந்தது. அந்த தளத்தின் நிரலினை கொண்டே இந்த மின் நூல்களை வாசிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஒருங்குறி வருவதற்கு முன்பு தமிழில் திஸ்கி, தாப், தாம், பாமினி, முரசு துவங்கி ஓராயிரம் எழுத்துரு வடிவங்களை பயன்படுத்தினோமே, அது போல… பின்பு epub என்ற ஒரு திறந்த வடிவம் (open format) உருவாக்கப்பட்டது. எல்லா தளமும் இந்த வடிவத்தில் நூல்களை வெளியிட்டதனால் எந்த தளத்தில் விலை குறைவு என்பதை பார்த்து வாங்கிக்கொள்ள முடியும், எங்கு வாங்கினாலும் epub reader கோப்பினை கொண்டு வாசிக்க முடியும் என்ற நிலை உருவானது. மெல்ல, எழுத்துருக்களுக்கு ஒருங்குறியினை போல மின் நூல்களுக்கு epub அடிப்படை வடிவம் என்றானது.

இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் தன் மின்நூல் வாசிப்பானான iBooks நிரலில் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது (iBooks 2). iBooks, epub வடிவினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு iPhone, iPod Touch மற்றும் iPadகளில் செயல்படும் நிரல். இதன் புதிய பதிப்பில் epubல் இருந்து சிறிது விலகி ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த வடிவினை சேர்த்திருக்கிறார்கள். இந்த புதிய வடிவத்தினை கொண்டு பள்ளிப்பாடநூல்களை வடிவமைக்கும் ஒரு இலவச மென்பொருளையும் உருவாக்கி இருக்கிறார்கள் (iBooks Author). இந்த மென்பொருள் கொண்டு உருவாக்கப்படும் நூல்களை வாசிக்க iPad கைக்கணினியை ஒவ்வொரு மாணவருக்கும் பள்ளிகள் வழங்க வேண்டியிருக்கும். இப்போதுள்ள iBooks Author பதிப்பில் இக்கோப்புகளை epub வடிவிற்கு மாற்றும் வசதியும் இல்லை. அதாவது, இந்நிரலினை கொண்டு உருவாக்கப்பட்ட நூல்களை வேறு எந்த மென்பொருள் கொண்டும் வாசிக்க இயலாது… மைக்ரோசாஃப்டின் வீழ்ச்சி இது போன்ற செயல்பாடுகளாலேயே நிகழ்ந்தது. மைக்ரோசாஃப்ட் தனது உலாவியான Internet Explorerல் பத்தாண்டுகளுக்கு முன் செய்த இது போன்ற செயல்பாடுகளுக்கு இணையத்தள நிரலாளர்களான நாங்கள் இன்னும் விலை தந்துகொண்டிருக்கிறோம். எல்லா உலாவிகளுக்குமான நிரலினை எழுதிவிட்டு, பிறகு internet explorerல் சரியாக தெரியவேண்டும் என சில மாறுதல்களை செய்ய வேண்டி இருக்கும்.

உலகம் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒற்றை நிறுவனத்தின் பிடிக்குள் சிக்கும் அளவிற்கு உலகம் சிறியதாகவோ எந்த ஒரு நிறுவனமும் பெரியதாகவோ இல்லை.

இன்று காலை, ஆப்பிளின் புதிய iBooks வடிவத்தின் பிரச்சனைகளை குறித்து இந்த கட்டுரையில் படிக்க நேர்ந்தது. மிக முக்கியமான கட்டுரை இது….

http://www.zdnet.com/blog/bott/how-apple-is-sabotaging-an-open-standard-for-digital-books/4378?tag=nl.e539

 

மீனவர்களுக்காக…

Dear Friends,

I have just read and signed the online petition:

“Save Tamilnadu Fishermen”

hosted on the web by PetitionOnline.com, the free online petition
service, at:

http://www.PetitionOnline.com/TNfisher/

I personally agree with what this petition says, and I think you might
agree, too. If you can spare a moment, please take a look, and consider
signing yourself.

Best wishes,

Siddharth

ஈரோடுக்கு போன சென்னைவாசி. :)

சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது எழுதி வைத்தது….

******

கடந்த 20 நாட்களாக ஈரோட்டில் இருக்கின்றேன். பெரும்பாலும் வீட்டில் காயத்ரி, அமுதினியுடன். அவ்வப்போது நகர்வலம் செல்வதும் உண்டு. ஈரோட்டில் தனியாக சுற்றும் அனுபவம் இம்முறை தான் வாய்த்திருக்கிறது. சாலைகள் தங்களின் பூடகத்தன்மையை மெல்ல இழக்கத்துவங்கி விட்டன. 3 நாட்களுக்கு முன்னால் “இப்படியே நேரா போனீங்கன்னா எம்.ஜி.ஆர் சிலை நால்ரோடு வரும்… அங்க இருந்து சிக்னல் தாண்டி நேரா போனா பஸ் ஸ்டாண்ட்” என்று ஒருவருக்கு வழி கூட சொன்னேன்.  🙂

இரயில் நிலையம் தாண்டி கொல்லம்பாளையம் வரும் வழியில் ஒரு இரயில் பாலம் இருக்கிறது. பாலத்தின் அடியில் அழுக்கேறிய உடலுடன் ஒருவர் எப்பொழுதும் அமர்ந்திருக்கிறார். அவரின் தலைக்கு மேலே சுவற்றில் ஒரு இடம் பலான படங்களுக்கான சுவரொட்டிக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஊர்களில் இப்படி ஒரு சுவர் இருப்பது தான். என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த 20 நாட்களில் அங்கே கிட்டத்தட்ட 7 – 8 சுவரொட்டிகளை மாற்றிவிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு படம் – டர்ன் ஓவர் ரேட் மலைக்க வைக்கிறது 🙂

“நல்ல மரியாதையான மக்கள்” என்ற சொற்றொடரை போட்டால் பெருநகரவாசி ஒருவன் குக்கிராமத்தை குறித்து கருத்து சொல்லும் தொணி வந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் நிஜமாகவே மிகவும் மரியாதையாக பேசுகிறார்கள். அண்ணா என்ற suffix மிக சரளமாக வந்து விழுகிறது வாக்கியங்களில். மூன்று நாட்களுக்கு முன்னால் காயத்ரிக்கு ஒரு தள்ளுவண்டி கடையில் நாவல்பழம் வாங்கும் போது புதிதாக பிள்ளை பெற்றவர்கள் சாப்பிடலாமா என்று விசாரித்தேன். இன்று மீண்டும் அந்த கடைக்கு பழம் வாங்க சென்றேன். அந்த பையன் “அக்கா நல்லா இருக்காங்களாண்ணா?” என்றான். 🙂

ஃப்ளெக்ஸ் போர்ட் இல்லாத சாலைகள் ஈரோட்டில் காணக்கிடைக்கவில்லை. நான் ஈரோடு வந்த முதல் வாரத்தில் ஈரோடு முழுக்க சே குவாரா வேடத்தில், முறுக்கு மீசையுடன் கை கட்டி நின்றபடி, கையில் ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய படி, இராணுவ உடையுடன், மேடையில் கழுத்து நரம்புகள் புடைக்க ஆவேசமாக பேசிய படி என்று எங்கு நோக்கினும் திருமாவளவனின் திரு உருவம். “வாழும் அம்பேத்கரே, சீறும் சிறுத்தையே” போன்ற வாசகங்களும். சிறுபான்மை கிருத்துவர் கழகம் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை மாநாட்டினில் பேச வருகிறார் என்பதனால் இந்த வரவேற்பு பலகைகள். இது ஓய்ந்ததும் ஊரெல்லாம் செம்மொழி மாநாட்டிற்கான வாழ்த்தும் வரவேற்பும் (கோவையில் நிகழும் மாநாட்டிற்கு இங்கு ஏன் வரவேற்பு பலகைகள்?) ஊரை நிறைத்தன. எம்.ஜி.ஆர். சிலை அருகே  “வாழ்த வயதில்லை வனங்குகிறோம்….. அலைகடலேன திரண்டுவாரீர்” என்று எழுத்துப்பிழைகளுடன் அத்தனைப்பெரிய பலகை.  இரயில் நிலையத்தை ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் 3 மிகப்பெரிய விளம்பர பலகைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. முதல் பலகையில் பெரியாரும் அண்ணாவும் சிரித்தபடி அமர்ந்திருக்கின்றனர். இரண்டாம் பலகையில் இளம் வயது கருணாநிதி சிரித்த முகத்துடன் கை நீட்டிய படி அமர்ந்திருக்கிறார். மூன்றாம் பலகையில் அழகிரியும் ஸ்டாலினும் சிரிக்கிறார்கள். எல்லா பலகைகளிலும் மேலே என்.கே.கே. பெரியசாமி சிரிக்கிறார். கீழே என். சிவக்குமார் உம்மென்று இருக்கிறார் (பலகைக்கான செலவு இவருடையது போல). மருந்துக்கு கூட அ.தி.மு.கவை எங்கும் காணவில்லை. ஒரு காலத்தில் அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்த ஊராம் இது.

முன்னால் அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவிற்கு மாறி இருக்கிறார். கட்சி மாறியபின் முந்தாநாள் தான் ஈரோடுக்கு வருகிறார். அதற்கு முந்தைய நாளில் இருந்தே ஊரெல்லாம் கருணாநிதி மற்றும் முத்துசாமி ஆகியவர்களின் புகைப்படங்களும் “ஈரோட்டின் சரித்திரமே.. எங்கள் விடிவெள்ளியே… நாங்கள் என்றும் உன் பின்னால் நிற்கின்றோம்” போன்ற வாசகங்களுமாய் பலகைகள். கீழே ஜெ. ஶ்ரீராம் என்பவரின் படத்துடன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எல்லா பலகைகள் மற்றும் சுவரொட்டிகளிலும் மேல் மூலையில் ஈரோடு தி.மு.க முக்கியஸ்தர் என்.கே.கே. பெரியசாமியின் மிகச்சிறிய புகைப்படம். சுவரொட்டி தயாரான பின் ஒட்டப்பட்ட  படம் என்று நன்றாக தெரிகிறது. ஆட்டம் ஆரம்பம். 🙂

இதெல்லாம் கிடக்கட்டும். முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். ஈரோட்டில் எனக்கு மிக மிக பிடித்த விஷயங்களில் ஒன்று – மாமன் பிரியாணி ஸ்டாலில் கிடைக்கும் பரோட்டாவும் சால்னாவும்.