பிரிவுகள்
இலக்கியம்

பின் தொடரும் நிழலின் குரல்

 

எந்த ஒரு அமைப்பிலும், சமூகம், மதம், அரசியல் என எங்கு எடுத்துக் கொண்டாலும், அது வளர்ந்தபிறகு, மனிதாபிமானம் விலக்கிய பார்வை ஒன்று அதில் குடிகொண்டு விடுகிறது. அப்போது, உலகை மாற்றி அமைக்கும் ஓர் கனவோடு அவ்வமைப்பில் சேர்ந்த உறுப்பினன் ஒருவனது நிலை என்ன? அவனுக்கும் அந்த அமைப்பிற்குமான உறவுகள் எத்தகையவை? அவனது மனசாட்சிக்கு எந்த அளவிற்கு மதிப்பிருக்கும் அவ்வமைப்பில்?

இவை குறித்தே பேசுகிறது ஜெயமோகனின் “பின் தொடரும் நிழலின் குரல்”. விஷ்னுபுரத்திற்கு பிறகு வந்த ஜெயமோகனது இரண்டாவது பெரிய நாவல் இது. கதை பொதுவுடைமை கட்சியை பற்றியது.நாகர்கோயில் தொழிற்சங்க உறுப்பினர் அருணாசலம். இவ்வாண்டு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படலாம். இவருக்கும் அதில் மகிழ்ச்சியே. அந்நேரத்தில் தான் அவருக்கு ஒரு சிறு ஆவணம் கிடைக்கிறது. 1950ல் எழுதப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு. எழுதியது யாரோ ஒரு வீரபத்ரன் பிள்ளை. அச்சிறு புத்தகத்தை அவனை ஈர்த்த விஷயம் அதற்கு முன்னுரை எழுதியது ஈ.எம்.எஸ் (கேரள கம்யூனிஸ்ட் தலைவர்) என்பது. இந்த வீரபத்ரன் பிள்ளையை பற்றி ஆராய முற்படும்போது ஏற்படும் அனுபவங்களே நாவலாய் விரிகின்றன.

கதையில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், இன்றைய தொழிற்சங்கவாதியான அருணாசலம், 1950களில் வாழ்ந்த பொதுவுடைமைவாதியான வீரபத்ரன் பிள்ளை மற்றும் ரஷ்ய புரட்சியின் முக்கிய அங்கமாய் செயல்பட்ட நிகோலாய் புகாரின். இடத்தாலும் காலத்தாலும் அகலப்பட்டு இருந்த இந்த மூவரையும் இணைக்கும் புள்ளி, அவர்களுக்கும் பொதுவுடைமை கட்சிக்குமான கருத்துவேறுபாடும், அதை அக்கட்சி எதிர்கொண்ட முறையும் தான்.

அரசியல், பொதுவுடைமை சித்தாந்தம், ரஷ்ய புரட்சி போன்ற “பெரிய” விஷயங்களை ஒதிக்கிவிட்டு பார்த்தாலும் கூட இது ஒரு மிக சுவாசஸ்யமான படைப்பு தான். இது ஒரே நேரத்தில் நாவலாகவும், பல சிறுகதைகளின், கடிதங்களின், கவிதைகளின், நாடகங்களின்  தொகுப்பாகவும்  இருக்கின்றது. இந்த புதுமையான கூறல் முறை நாவலை உலக தரத்திற்கு உயர்த்துகிறது. இது படிக்க எளிதான நாவல் அல்ல தான். ஆனால் சற்றே முயற்சி செய்து படிக்க ஆரம்பித்தீர்கள் எனில் இது தரும் உணர்வு அலாதியானது. நான் படித்த மிக சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று.

இந்நாவலிலிருந்து இரு கவிதைகள்

இரு பறவைகள்
——————

வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு

சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகளின்மீது எம்பித் தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிக்கடல்

இரு பறவைகள்
இரண்டிலிருந்தும் வானம்
சமதூரத்தில் இருக்கிறது

தேவன் மொழி
—————–

பொருளின்றிச் சிதறும் இச்சொற்களால்
எவருக்கான மொழியை உருவாக்குகிறோம் நாம்?
மீட்பரே நீர் இதைக்கேட்க வரப்போவதில்லை
இந்த மொழி உமக்குப் புரிவதில்லை
ஏனெனில் இதில் எம் பாவங்களை அறிக்கையிட முடியாது.
இது சாத்தானின் மொழியும் அல்ல
நமது துயரங்களின் ஒலி அவனுக்கு ஒரு பொருட்டேயல்ல
அறிவாளிகளின் தருக்கத்திற்கும்
கவிஞர்களின் கண்ணீருக்கும்
அப்பால் இருக்கிறது எங்கள் மொழி

ஆண்டவரே
பனிவெளியில் மட்கும் மரக்கிளைகள்போல
சிதைந்த கரங்களை விரித்துப் பரவி
உம்மை அழைக்கிறோம்
இங்கு வந்து உறைபனியின் மொழியை அறிக.
எமது பாவங்களை மன்னித்தருள்க.
பிறகு
உமது பாவங்களை நாங்கள் மன்னிக்கிறோம்.

 – சித்தார்த்

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

4 replies on “பின் தொடரும் நிழலின் குரல்”

தர்க்கம் – மொத்த நாவலும் அந்த மொழியிலேயே பேசும் , இளமையின் அரசியல் மனநிலையில் படித்த போது அதிர்ந்துபோனேன் , இப்போதும் என் முதல் விருப்ப தேர்வு இதுதான் ,

அங்கத நாடகம் , குட்டி கவுரின் பாதங்களை பற்றி அழும் காட்சி , பொன்னுலகம்னு சொன்னாங்களே , ஜோணி , கதிரின் விவாத திறன் , வீரபத்திரபிள்ளைக்கும் இசக்கியம்மைக்குமான உறவு (உடலுறவின் போது எருமைக்கு தண்ணி வைக்க சொல்லும் காட்சி)

ஜெமோ பெரிய எழுத்தாளர்தான் போல 🙂

பின்னூட்டமொன்றை இடுக