மோரியோடான செவ்வாய் கிழமைகள் – 4

ஒளியும் ஒலியும்

1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள். ஏ.பி.சி தொலைக்காட்சியின் “நைட்லைன்” நிகழ்ச்சியை நடத்தும் டெட் கோப்பலின் கார்  மேற்கு நியூட்டன், மாஸஷூடஸ்சில் உள்ள  பனிபடர்ந்த மோரியின் வீட்டை அடைந்தது… 

இப்போதெல்லாம் மோரி எந்நேரமும் சக்கர நாற்காலியிலேயே இருந்தார். தன்னை தனது உதவியாளர்கள் சாக்கு மூட்டையைப் போல படுக்கைக்கும் நாற்காலிக்கும் மாற்றுவதற்கு பழக்கப்பட்டுக்கொண்டிருந்தார். சாப்பிடும்போது இருமல் வரத்தொடங்கியது. மெல்லுவது பெரும் பணியென்றானது. அவரது கால்கள் இறந்துவிட்டிருந்தன. இனி ஒருபோதும் அவரால் நடக்கவியலாது. 

இருந்தும், மோரி சோர்வடைய மறுத்தார். பதிலாக, புதுப்புது எண்ணங்களின் ஊற்றக்கண்ணாக மாறினார். தனக்கு தோன்றிய எண்ணங்களையெல்லாம் குறிப்பேடுகள், அஞ்சலுறைகள், துண்டு காகிதங்கள் என கிடைத்த இடமெல்லாம் எழுதினார். மரணத்தின் நிழலில் வாழ்வதைக் குறித்த சின்னச்சின்ன தத்துவங்கள் எழுதினார் : “உன்னால் எதை செய்யமுடியும் எதை செய்ய முடியாது என்று ஆராய்ந்து ஏற்றுக்கொள்.” , “கடந்தகாலத்தை கடந்தகாலமாகவே ஏற்றுக்கொள், மறுக்கவோ மாற்றவோ முயற்சிக்காதே”, “உன்னையும் மற்றவர்களையும் மன்னிக்கக் கற்றுக்கொள்”, “காலம் கடந்துவிட்டது, இனி எப்படி அப்பிரச்சனையுள் தலையிட என நீயாக எண்ணிக்கொள்ளாதே”.

விரைவிலேயே இது போன்ற 50 “தனிமொழிகள்” சேர, இவற்றை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். இச்சொற்றொடர்களால் மிகவும் கவரப்பட்ட மௌரி ஸ்டேய்ன் என்ற மோரியுடன் பணிபுரிந்த நண்பர், இவற்றை தொகுத்து பாஸ்டன் க்ளோப் இதழின் நிருபருக்கு அனுப்ப, அவர் இதை கொண்டு ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டார். கட்டுரையின் தலைப்பு : 

ஒரு பேராசிரியரின் கடைசி பாடம் : தன் மரணம்

இந்த கட்டுரை “நைட்லைன்” நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஒருவரின் கண்ணில் பட, அவர் இதை வாஷிங்டன்னில் இருந்த டெட் கோப்பலின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

“இத படிச்சு பாரேன்” என்றார் தயாரிப்பாளர். 

விளைவு… இதோ, மோரியின் வீட்டினை ஒளிப்பதிவாளர்கள் சூழ்ந்திருக்க, டெட் கோப்பலின் கார் வாயிலை அடைகிறது.

கோப்பலைக் காண மோரியின் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வீட்டில் குழுமியிருந்தனர்.  கோப்பல் உள்ளே நுழைந்ததும் அங்கு படர்ந்த பரவசம் அனைவரையும் தொற்றிக்கொண்டது, மோரியைத் தவிர. சக்கர நாற்காலியில் மெல்ல முன்னே வந்து புருவம் உயர்த்தி, உரத்த, பாடுவதைப் போன்ற குரலில், 

“டெட், பேட்டிக்கு ஒத்துக்கறத்துக்கு முன்ன உங்கள கொஞ்சம் சோதிச்சுப் பாக்கனுமே நானு” என்றார் மோரி.  

அங்கு பரவிய சங்கடமான மௌனத்தினூடே அவ்விருவரும் அறைக்குள் சென்றனர். கதவு சாத்தப்பட்டது. “டெட் மோரிய ரொம்ப படுத்தாம விட்டுடுவாரா?” என்றார் ஒருவர். “அட போப்பா… மோரி டெட்ட ரொம்ப கஷ்டப்படுத்தாம விடனுமேன்னு நான் கவலைப்படறேன்” என்றார் மற்றொருவர். 

உள்ளே, டெட்டை அமர்ந்துகொள்ளுமாறு சைகைகாட்டினார் மோரி. கைகளை மடியில் கட்டிக்கொண்டு புன்னகையுடன்,

“உங்க மனசுக்கு பக்கத்துல இருக்கற எதையாவது பத்தி பேசுங்க”, என்றார். 

“மனசுக்கு?” 

கோப்பல் அந்த முதியவரை கூர்ந்து நோக்கினார். “ம்ம். சரி” என்று தனது குழந்தைகளைக் குறித்து பேசத்துவங்கினார். குழந்தைகள் மனதிற்கு அருகிலிருப்பவர்கள் தான் அல்லவா?

“ம்ம். நல்லது,. உங்க நம்பிக்கைகள பத்தி ஏதாவது சொல்லுங்க” என்றார் மோரி. 

டெட் நெளிந்தார். “சந்திச்சு கொஞ்ச நேரமே ஆனவர் கிட்ட இதப்பத்தி எல்லாம் எப்படி பேச?”

“டெட், நான் செத்துக்கிட்டு இருக்கேன். என் கிட்ட நேரம் அதிகம் கிடையாது”

டெட் சிரித்துவிட்டார். சரி, நம்பிக்கை…. தனக்கு மிகவும் பிடித்த மார்க்கஸ் ஔரிலியஸின் வாக்கியம் ஒன்றை கூறிவிட்டு,

“நான் ஒன்னு கேக்கறேன். என் நிகழ்ச்சிய பாத்திருக்கீங்களா நீங்க?” என்றார் டெட்.

“ம்ம். பாத்திருக்கேன். ரெண்டுமுறைன்னு நினைக்கறேன்.”

“ரெண்டுமுறையா? அவ்வளவு தானா?”

“ரொம்ப கவலைப்படாதீங்க. ஓஃப்ரா வ ஒரு முறை தான் பாத்திருக்கேன்.” 

“ரெண்டுமுறை பாத்திருக்கீங்களே… என்ன நினைக்கறீங்க நிகழ்ச்சிய பத்தி?”

மோரி இடைவெளி விட்டு, “உண்மைய சொல்லவா?” என்றார்.

“ம்ம்”

“நீங்க ஒரு தன்மோகியா தான்  (narcissist)  பட்டீங்க எனக்கு”

“தன்மோகியா இருக்க முடியாத அளவுக்கு அசிங்கமானவன் மோரி நானு” என்றார் டெட் சிரித்துக்கொண்டே. 

 

கோப்பல் கச்சிதமான நீல நிற சூட்டும், மோரி தொள தொளவென்றிருந்த சாம்பல் நிற ஸ்வெட்டரும் அணிந்திருக்க, வரவேற்பறையில் ஒளிப்பதிவு துவங்கியது. ஆடம்பர உடைகளோ ஒப்பனையோ வேண்டாமென மறுத்துவிட்டார் மோரி. மரணம் வெட்கப்படவேண்டிய விடயம் அல்ல என்பது அவர் சித்தாந்தம். இப்போது போய் அவர் மூக்கிற்கு பௌடர் அடித்துக்கொள்ளப்போவதில்லை. 

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததனால் அவரது தளர்ந்த கால்கள் ஒளிப்பதிவின் போது மறைந்தே இருந்தன. வாழ்வின் அந்தியை எதிர்கொள்வதைப் பற்றி பேசுகையில் – கைகள் இன்னும் வலுவிழக்காததால் – இரு கரங்களையும் ஆட்டி ஆட்டி பேசினார் மோரி, பெரும் உற்சாகத்துடன். 

“டெட், இதெல்லாம் தொடங்கினப்ப என்னையே நான் கேட்டுக்கிட்டேன். எல்லாரையும் போல நானும் உலகியல்ல இருந்து விலகி இருக்க போறனா, இல்ல வாழனும்னு முடிவெடுக்கப்போறனான்னு. வாழனும். கன்னியமா, தைரியமா, புன்னகையோட, நிதானமா வாழனும். அல்லது அதற்கான முயற்சியாவது எடுக்கனும்னு முடிவு செஞ்சேன்.”

“சில விடியல்கள் கழிவிரக்கம் பொங்க, அழுகையோட தான் விடுயுது. சில விடியல்கள் கோபமும் கசப்புமா. ஆனா ரொம்ப நேரம் நீடிக்காது இதெல்லாம். எழுந்து எனக்கு நானே சொல்லிப்பேன். நான் வாழனும்… வாழனும்…..”

“இது வரைக்கும் என்னால முடிஞ்சிருக்கு இத செய்ய. இனிமேலும் தொடர்ந்து இருக்க முடியுமா இப்படி? நிச்சயமா சொல்லத் தெரியல. என் மேலையே நான் பந்தயம் கட்டறேன்,  என்னால முடியும்னு”.

கோப்பல் மோரியின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார். மரணம் தரும் பணிவு குறித்து கேட்டார்.

“அதாவது, ஃப்ரெட்” என்ற மோரி, தன் தவறை உணர்ந்து “இல்ல, இல்ல, டெட்…” என கூற,

“இது உண்மையாவே பணிவ தர்ர விஷயம் தான்” என்றார் டெட், சிரித்துக்கொண்டே.

நோய்க்குப்பின்னான வாழ்வினைக்குறித்து இருவரும் பேசினர். மோரி மற்றவர்களை அதிகம்  சார்ந்திருப்பதைப் பற்றி பேசினார். உண்ண, அமர, அங்கும் இங்கும் செல்ல என  இப்பொழுதே எல்லாவற்றிற்கும் அவர் மற்றவர்களை தான் நம்பியிருந்தார். இந்த மெல்ல நிகழும் உதிர்தலில் எதை நினைத்து மிகவும் அஞ்சுகிறீர்கள் என மோரியை கேட்டார் டெட்.

மோரி சற்று அமைதியாகி… அந்த விடயத்தை தொலைக்காட்சியில் கூறலாமா என வினவினார்.

ம்ம் என்றார் டெட்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பேட்டியாளரை கண்ணோடு கண் நோக்கி மோரி கூறினார், “டெட். இன்னும் சில நாட்கள்ல எனக்கு கால் கழுவிவிட யாராவது வேணும்.”

நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. டெட் கோப்பல் அதிகாரம் தெறிக்கும் குரலில் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். 

“மோரி ஷ்வார்ட்ஸ் யார்? இவ்விரவின் முடிவிற்குள் உங்களில் பலரும் அவர் மேல் ஏன் அக்கரை கொள்ளப்போகிறீர்கள்?”

ஆயிரம் மைல்களுக்கு அப்பால், குன்றில் மேல் அமைந்த என் வீட்டில் சாவகாசமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது தான் அந்த வாக்கியம் எனை தாக்கியது. “மோரி ஷ்வார்ட்ஸ் யார்?”. உரைந்து போனேன். 

நாங்கள் இருவரும் இணைந்த முதல் வகுப்பு அது. 1976ஆம் ஆண்டின் வசந்த காலம். மோரியின் பெரிய அலுவலக அறையுள் நுழைந்ததும் சுவற்றை நிறைத்து நின்ற எண்ணற்ற புத்தகங்கள் கண்ணைக் கவர்ந்தன. சமூகவியல், தத்துவம், ஆன்மீகம், உளவியல் என வகைவகையாய் புத்தகங்கள். மரத்தாலான தரையின் மீது பெரிய கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. வளாகத்தின் நடைபாதையை பார்த்தபடி ஒரு ஜன்னல். கைகளில் புத்தகமும் அட்டவணையுமாய் பத்து பன்னிரண்டு மாணவர்கள் தான் நின்றிருந்தனர் அங்கு. பெரும்பாலானோர் ஜீன்ஸும், சாதாரண ஷூக்களும், அரைக்கைச்சட்டையும் அனிந்திருந்தனர். இத்தனை சிறிய வகுப்பில் இருந்து தப்பித்து வெளியேறுவது கடினம் என கருதி, திரும்பிவிடலாமா என யோசிக்கையில்,

“மிட்சேல்?” என பதிவேட்டில் இருந்த பெயரைப் படித்தார் மோரி. நான் கை தூக்கினேன். 

“மிட்ச் ன்னு  கூப்பிடவா, இல்ல மிட்சேல்னு தான் கூப்பிடனுமா?”

இதுவரை எந்த ஆசிரியரும் இப்படி வினவியதில்லை. ஒருமுறை அவரை மேலும் கீழும் பார்த்தேன். மஞ்சள் சட்டை, பச்சை கால்ச்சட்டை. நெற்றியை மறைத்த வெள்ளி நிற முடி. அவர் புன்னகைத்துக்கொண்டிருந்தார். 

மிட்ச், என்றேன் நான். “நண்பர்கள் என்ன அப்படி தான் கூப்பிடுவாங்க”

“ம்ம். அப்ப மிட்ச் தான்”, என்றார் மோரி. “அப்பறம், மிட்ச்?”

ம்ம்?

“ஒரு நாள் என்னையும் உன்னோட நண்பனா நினைப்பன்னு எதிர்பாக்கறேன்”

மோரியோடான செவ்வாக்கிழமைகள் – 3

மாணவன்

அந்த கோடை நாளில் எனது பேராசிரியரை கட்டிப்பிடித்து, தொடர்பில் இருப்பேன் என கூறிய பிறகு எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த கட்டத்தில் சொல்ல வேண்டும்.

நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.

உண்மையில், என்னுடன் பியர் குடித்த தோழர்கள், நான் முதன்முதலில் படுத்துறங்கி விழித்தப்பெண் என நண்பர்கள் பலருடனும் எனக்கு தொடர்பற்றுபோயிருந்தது. பட்டமளிப்பிற்கு பின் வந்த வருடங்கள், கல்லூரியை விட்டு நியூ யார்க் சென்று, திறமைகளை உலகிற்கு அர்ப்பணிக்க துடிக்கும், திக்கிப்பேசும் பட்டதாரியிலிருந்து என்னை வெகுவாய் மாற்றி இருந்தன.

உலகம், அவ்வளவு ஒன்றும் சுவாரஸ்யமானது அல்ல என்பதனை கண்டறிந்தேன். எனது இருபதுகளின் முற்பகுதியை வாடகை கொடுத்தபடியும், விளம்பரங்களை படித்தபடியும், இந்த விளக்கு எனக்கு மட்டும் ஏன் பச்சையாக மாற மறுக்கிறது என எண்ணியபடியும் கழித்தேன். புகழ்பெற்ற இசைக்கலைஞனாவதே என் கனவாக இருந்தது (நான் பியானோ வாசித்தேன்).
இருண்ட, காலியான இரவுவிடுதிகள், முறிந்த வாக்குறுதிகள், உடைந்த இசைக்குழுக்கள், என்னைத்தவிர மற்ற அனைவரிடமும் ஆர்வம் காட்டிய தயாரிப்பாளர்கள் என கழிந்த வருடங்கள் என் கனவுகளை புளிப்பேறச்செய்தன. முதன் முறையாய் என் வாழ்வில் நான் தோற்கிறேன்.

இதே காலகட்டத்தில் தான் மரணத்துடனான என் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது.

எனக்கு இசையை கற்றுத்தந்த, வாகனமோட்டக் கற்றுத்தந்த, என் தோழிகள் குறித்து பகடி செய்த, என்னுடன் கால்பந்து விளையாடிய, ‘நான் வளர்ந்ததும் இவரைப்போல ஆகவேண்டும்’ என் எண்ண வைத்த என் மாமா (அம்மாவின் தம்பி) கணைய புற்றுநோயால் தனது நாற்பத்து நான்காம் வயதில் இறந்தார். சற்றே குள்ளமானவர். தடித்த மீசை வைத்த அழகன். அவரது வாழ்வின் கடைசி ஆண்டினை அவருடன் தான் கழித்தேன், அவரது வீட்டிற்கு ஓர் அடுக்கு கீழே.  அவரது உறுதியான உடல் இளகி, பின் ஊதியது. ஒவ்வொரு இரவும் உணவு மேஜையில் வயிற்றை பிடித்துக்கொண்டு குனிந்து கண்களை இறுக மூடி வலியில் உதடுகள் துடிக்க “ஆஆ… கடவுளே”, “ஐயோ… ஏசுவே” என முனகியதை நாங்கள் – அத்தை, இரு மகன்கள், நான் – தட்டுகளை துடைத்துக்கொண்டு, ஒருவர் கண்களை ஒருவர் தவிர்த்தபடி மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.

இயலாமையை மிக உக்கிரமாக உணர்ந்த காலம் அது. காற்று இளம்சூடுடன் வீசிய மே மாத இரவொன்றில், மாமாவும் நானும் வீட்டின் முகப்பில் அமர்ந்திருந்தோம். தொலைவானத்தை பார்த்துக்கொண்டிருந்த மாமா,அடுத்த வருடம் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை காண தான் இருக்கப்போவதில்லை என்றார் பற்களை கடித்தபடி. “நீ அவங்கள பாத்துப்பியா?” என்றபோது, இப்படி எல்லாம் பேசவேண்டாம் என்றேன். சோகமாக என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.

அடுத்த சில வாரங்களில் அவர் இறந்தார்.

அந்த மரணத்திற்கு பிறகு என் வாழ்வே மாறியது. காலம் சிந்திக்கொண்டிருக்கும் நீரினைப் போல தெரிந்தது. இன்னும் வேகமாக ஓட வேண்டும். பாதி காலியான இரவு விடுதிகளில் இசைப்பது இனி இல்லை. என் அறையில் அமர்ந்து யாருமே கேட்கப்போகாத பாடல்களை எழுதுவது இனி இல்லை. மீண்டும் கல்லூரிக்கு சென்றேன். இதழியலில் முதுகலை பட்டம் பெற்று, விளையாட்டுப்பகுதி எழுத்தாளராக கிடைத்த முதல் வேலையில் சேர்ந்தேன். எனது புகழை நானே தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய புகழைத் தேடி ஓடுவதை குறித்து செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் எழுதினேன். காலம் நேரம் தெரியாமல் உழைத்தேன். விழித்ததும் பல் துலக்கிவிட்டு தட்டச்சத்தொடங்குவேன், இரவு அணிந்திருந்த அதே உடைகளுடன். என் மாமா ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தார். அவர் அவ்வேலையின் வழமையை வெறுத்தார் – அதே வேலை, ஒவ்வொரு நாளும். அவரைப் போல ஆகிவிடக்கூடாதென்ற உறுதியுடன் உழைத்தேன்.

நியூ யார்க்குக்கும் ஃப்லோரிடாவுக்குமாய் அலைந்து, இறுதியில் டெட்ராட்டில் இருந்து வெளி வரும் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் (Detroit Free Press) என்ற பத்திரிக்கையில் விளையாட்டுப்பகுதி எழுத்தாளராக பணிக்கு அமர்ந்தேன். டெட்ராய்ட் நகருக்கு விளையாட்டின் மீது யானைப்பசி. கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால், ஹாக்கி என எல்லா விளையாட்டுக்களுக்கும் அணிகள் இருந்தன அங்கு. என் லட்சியத்திற்கு சரியான களமாக அமைந்தது அந்நகரம். சில வருடங்களிலேயே, பத்திகள் எழுதுவதோடு, விளையாட்டு புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி என என் களம் விரிவடைந்தது. இப்போது நமது நாட்டினை தொப்பலாக நனைத்திருக்கும் ஊடகப் புயலில் நானும் ஓர் அங்கமாக இருந்தேன். நான் தேவைப்பட்டேன்.

வாடகைகளை நிறுத்தினேன். வாங்கத்தொடங்கினேன். குன்றின் மேல் ஒரு வீடு வாங்கினேன். கார்கள் வாங்கினேன். பங்கு சந்தையின் வணிகம் செய்தேன். எப்போதுமே ஐந்தாவது கியரிலேயே ஓட்டினேன் வாழ்க்கையை. பேய் போல உடற்பயிற்சி. அபாய வேகத்தில் கார் ஓட்டம். நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவு பணம் சம்பாதித்தேன். எனது இடைவிடாத பணியினையும் பயணங்களையும் மீறி என்னை காதலித்த ஜேனைன் என்ற ஓர் கருங்கூந்தல் பெண்ணை சந்தித்தேன். ஏழு வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்த அடுத்த வாரம் பணி செய்ய ஆரம்பித்து விட்டேன். அவளுக்கு கூறினேன் – எனக்கும் தான் – நாம் ஒரு நாள் பிள்ளைகள் பெற்று குடும்பம் அமைக்கலாம் என்று. அந்த நாள் வரவே இல்லை.

அதற்கு பதிலாய், குறிக்கோள்களை அடைவதில் என்னை மூழ்கடித்துக்கொண்டிருந்தேன். குறிக்கோள்களை அடைவதன் மூலம் வாழ்வின் மீதான என் பிடியை இறுக்கமாக்கவியலும் என நம்பினேன். என் மாமாவைப்போல நோய்வாய்ப்பட்டு இறப்பதற்குள் (இது நிச்சயம் நடக்கும் என நம்பினேன்) மகிழ்ச்சியின் கடைசி துளி வரை உறிஞ்சி எடுத்துவிடவேண்டும் என தோன்றியது.

மோரி? ம்ம்.. எப்போதாவது நினைத்துக்கொள்வேன் அவரை, அவர் புகட்டிய “மனிதனாய் இரு”, “மற்றவரோடு உறவாடு” என்பதையெல்லாம். ஆனால் அவை வேறோர் வாழ்விலிருந்து வருவதைப்போல, எப்போதும் வெகு தொலைவிலேயே இருந்தன. இந்த வருடங்களிலெல்லாம், பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மடல்கள் அனைத்தையும், நன்கொடை கேட்டே எழுதி இருப்பார்கள் என்றெண்ணி படிக்காமல் எறிந்துவிடுவேன். அதனால் மோரியின் நோயினைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனக்கு சொல்லி இருக்கக்கூடிய நண்பர்களும் தொடர்பில் இல்லை.

இது இப்படியே இருந்திருக்கும், அன்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை துழாவிக்கொண்டிந்த போது, ஏதோ ஒன்று என் காதுகளை அடையாதிருந்திருந்தால்….

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – 2

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள்
அத்தியாயம் இரண்டு
பாடத்திட்டம்

அவரது மரணம் 1994ன் கோடையில் வந்தது. யோசித்துப்பார்க்கையில், அதற்கு வெகு முன்பே ஏதோ கெட்டது வரப்போகிறதென அவருக்கு தெரிந்துவிட்டதென்றே தோன்றுகிறது. நடனமாடுவதை நிறுத்திய நாளே அவருக்கு தெரிந்துவிட்டது.

எனது முதிய பேராசிரியர், எப்போதுமே நடனக்காரராகவே இருந்தார். இசை பற்றிக் கவலையில்லை. அதிரடி இசை, மெல்லிசை, அனைத்தையும் விரும்பினார். கண்களை மூடிக்கொண்டு, மந்தாசப்புன்னகையுடன் அவரது தனி தாளத்திற்கு ஆட ஆரம்பித்துவிடுவார். எப்போதுமே நன்றாக இருக்கும் என கூற முடியாது. ஆனால் அவருக்கு ஆட துணையேதும் தேவையில்லை. மோரி தனியாகவே ஆடினார்.

ஹார்வர்ட் சதுக்க தேவாலயத்தில் புதன் இரவுகளில் நடக்கும் “விருப்பப்படி நடனம்” (“Dance Free” correct trans?) என்ற நிகழ்விற்கு தவறாமல் செல்வார். மிண்ணும் விளக்குகளும் அதிரும் ஒலிப்பெருக்கியும் கொண்ட, பெரும்பாலும் மாணவர்களே நிறைந்த அறையில், வெள்ளை சட்டை கருப்பு பைஜாமா கழுத்தில் துண்டு சகிதமாக, எந்த இசை ஒலிக்கிறதோ, அதற்கு நடமாடிக்கொண்டிருப்பார் மோரி. சுழல்வார், திரும்புவார், கைகளை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டிருப்பார் – முதிகில் வேர்வை வழியும் வரை. பல புத்தகங்களை எழுதிய, பல வருடங்கள் கல்லூரிப் பேராசிரியராக அனுபவம் கொண்ட மிக முக்கியமான சமூகவியல் ஆய்வாளர் அவர் என்பது அங்கு யாருக்கும் தெரியாது. இவர் யாரோ வயதான பைத்தியம் என்றே அங்கு நினைத்திருந்தனர்.

ஒரு முறை டாங்கோ இசை ஒலிநாடாவை கொண்டு வந்து, ஒலிப்பெருக்கிகளில் போடச்செய்தார். பொங்கியெழுந்த டாங்கோ இசைக்கு தேர்ந்த லத்தீன் காதலரைப்போல மேலும் கீழும் முன்னும் பின்னும் என தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தார். ஆடி முடித்ததும் அரங்கில் எழுந்த கரகோஷம் அவரை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. அக்கண உணர்வை கொண்டு வாழ்க்கை முழுவது வாழ்ந்துவிட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு நாள் நடனம் நின்றது.

அறுபதுகளில் அவருக்கு ஆஸ்துமா உருவாகத்தொடங்கியது. முச்சுவிடுதல் ஓர் பணியாக மாறியது. ஒரு முறை சார்லஸ் நதிக்கரையில் நடந்துக்கொண்டிருந்த போது வீசிய குளிர்க்காற்று இவரை மூச்சுத்திணரச்செய்தது. அவசரமாய் மருத்துவமணை கொண்டுச்சொல்லப்பட்டு அட்ரலின் ஏற்றப்பட்டது.

சில வருடங்கள் கழித்து, நடப்பதில் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் தடுமாறி விழுந்துவிட்டார். இன்னோர் இரவு, திரையரங்கின் படிகளில், சுற்றி நின்றவர்கள் அதிர்ச்சியுற, கீழே விழுந்தார்.

“அவருக்கு காத்து வேணும். தள்ளி நில்லுங்கப்பா” என்றார் ஒருவர்.

அப்போது அவர் தனது எழுபதுகளில் இருந்தார். சுற்றி இருந்தவர்கள், “வயசாயிடுச்சு பா” என்று முனுமுனுத்தபடி அவரை தூக்கிவிட்டனர். ஆனால் தனது உடலினைப் பற்றிய அறிதல் நம்மை விட அதிகமான அவருக்கு பிரச்சனை வேறேதோ என தோன்றியது. இது வெறும் வயது சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல. என்னேரமும் அயற்வாகவே இருந்தது. தூங்குவதிலும் பிரச்சனைகள் இருந்தன. தான் இறந்துக்கொண்டிருப்பதை போன்று கனவுகள் வந்தன.

அவர் மருத்துவர்களை பார்க்க ஆரம்பித்தார். ரத்தத்தை பரிசோதித்தனர். சிறுநீரை பரிசோதித்தனர். பின் பக்கமாக குழாய் விட்டு குடலை பரிசோதித்தனர். இவையெதுவும் விடையளிக்காததால், ஒரு மருத்துவர் அவரது தொடை தசையை கொஞ்சம் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார். நரம்பியல் பிரச்சனை ஏதோ இருப்பதை போல பட்டதால் அவரை மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தினர். அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, நரம்புகளின் உணர்ச்சிகளை கூர்ந்து கவனித்தனர்.

“இத இன்னும் கொஞ்சம் ஆழமா பாக்கனும்” என்றார்கள் மருத்துவர்கள், அவரது சோதனை முடிவுகளை நோக்கியபடி.

“ஏன், என்ன ஆச்சு?” என்றார் மோரி

“சரியா சொல்ல முடியல. ஆனா உங்க காலம் மெதுவா இருக்கு.” காலம் மெதுவாக உள்ளதா? என்ன அர்த்தம் இதற்கு?

இறுதியாக, ஆகஸ்ட் 1994ன் வெயிலும் ஈரப்பதமுமான ஓர் நாளில் மோரியும் அவரது மனைவி சார்லட்டும் நரம்பியல் நிபுணரின் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களை அமரச்செய்து, மெல்ல அந்த செய்தியை உடைத்தார். மோரிக்கு வந்துள்ளது அம்யோடைப்பிக் லேட்டரல் ஸ்க்லெரோஸிஸ் (amyotrophic lateral sclerosis (ALS)), மிகக்கொடிய நரம்பு நோய்.

இதற்கு தீர்வு (cure) ஏதும் இல்லை.

“எனக்கு எப்படி வந்துது இது?” என்றார் மோரி. யாருக்கும் தெரியவில்லை.

“உயிர் கொல்லி நோயா இது?”

“ஆமாம்”

“அப்ப, நான் சாகப்போறனா?”

ஆமாம் என்றார் மருத்துவர். மன்னிக்கனும்.

மோரியுடனும் சார்லட்டுடனும் இரண்டு மணி நேரம் அமர்ந்து அவர்களது அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். அவர்கள் புறப்படுகையில், ஏ.எல்.எஸ் குறித்த சிறு சுற்றறிக்கைகளை கொடுத்தார் மருத்துவர். அவர்கள் ஏதோ வங்கி கணக்கு திறக்கப்போவதை போல. வெளியே வெயில் அடித்துக்கொண்டிருந்தது. மக்கள் அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர். ஒரு பெண் வாகன நிறுத்தத்தில் காசை போட ஓடினார். இன்னொருவர் மளிகை சாமான்களை சுமந்தபடி சென்றார். சார்லெட்டின் மனதில் ஒரு கோடி எண்ணங்கள் அலை மோதின : இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு நமக்கு? எப்படி சமாளிக்கப்போறோம் ? செலவுக்கு என்ன செய்யப்போறோம் ?

எனது பேராசிரியரை, தன்னைச்சுற்றிலும் இருந்த நிகழ்வுகளின் வழமை, தாக்கியது. உலகம் நின்றிருக்க வேண்டாமா? எனக்கு என்ன ஆனது என இவர்களுக்கு தெரியவில்லையா?

ஆனால் உலகம் நிற்கவில்லை, இவர்களை கவனிக்கக்கூட இல்லை. காரின் கதவை மெல்ல திறந்த போது, பள்ளத்திற்குள் விழுவதைப்போல உணர்ந்தார் மோரி.

இனி என்ன?

எனது பேராசிரியர் விடையை தேடிக்கொண்டிருக்கையில் நோய் அவரை வெல்லத்தொடங்கியது. நாளுக்கு நாள். வாரத்திற்கு வாரம். ஒரு நாள் தனது காரை வெளியே எடுக்கையில் பிரேக்கை அழுத்த முடியாமல் போனது. அன்றுடன் வாகனம் ஓட்டுவது நின்றது.

நடக்கையில் தடுக்கியபடியே இருந்ததினால் ஒரு ஊன்றுகோல் வாங்கினார். அன்றிலிருந்து இயல்பாக நடப்பது நின்றது.

வை.எம்.சி.ஏ வில் நீச்சலுக்கு சென்றுகொண்டிருந்தார். ஆனால் தானாக உடைகளை களைய முடியாது போனது. ஆகவே, குளத்தில் இறக்கி, ஏற்ற, உடைகளை களைத்து மாட்ட தனது முதல் உதவியாளரை – டோனி என்ற சமயவியல் மாணவனை – வேலைக்கு சேர்த்தார். அதோடு அவரது தனிமை முடிவுக்கு வந்தது.

1994ன் இலையுதிர் காலத்தில் தனது கடைசி விரிவுரைக்காக பிராண்டைஸ் வளாகத்திற்கு வந்தார். அவர் இதை தவிர்திருக்கலாம். பல்கலைக்கழகம் ஒன்றும் சொல்லி இருக்காது. அவர்களுக்கு புரிந்திருக்கும். ஏன் இத்தனை மக்களின் முன் கஷ்டப்படவேண்டும்? வீட்டிலேயே இருந்திருக்கலாம். ஆனால் மோரிக்கு, வேலையை விடும் எண்ணம் தோன்றவேயில்லை.

மாறாக 20 வருடங்களாக தனது வீடு போல இருந்த அந்த வகுப்பறைக்குள் மிக மெல்ல விந்தி விந்தி நுழைந்தார் மோரி. ஊன்றுகோல் உதவியுடன் நடந்தபடியால் மெல்லமாகவே தனது இருக்கைக்கு செல்ல முடிந்தது. அமர்ந்து, கண்ணாடியை மேஜையின் மீது போட்டு விட்டு, நிசப்தத்துடன் தன்னை நோக்கிய மாணவர்களை பார்த்தார்.

“நண்பர்களே, நீங்க எல்லாம் சமூக உளவியல் படிக்க வந்திருக்கீங்கன்னு நினைக்கறேன். 20 வருஷமா இத நடத்தறேன். ஆனா முதன்முறையா சொல்றேன், இந்த பாடத்த எடுக்கறது உங்களுக்கு ஆபத்தானது. ஏன்னா எனக்கு ஒரு உயிர்கொல்லி நோய் வந்திருக்கு. ஆண்டு இறுதி வரைக்கும் உயிரோட இருப்பனான்னு சொல்ல முடியாது”

“இது உங்களுக்கு ஒரு பிரச்சனையா பட்டுதுன்னா நீங்க இந்த பாடத்துல இருந்து விலகலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது”

புன்னகைத்தார்.

அவரது ரகசியம் அதோடு முடிவிற்கு வந்தது.

ஏ.எல்.எஸ், ஏற்றிவைத்த மெழுகுவத்தியை போன்றது. நரம்புகளை உருக்கி, உடலை மெழுகுக்குவியலென ஆக்கிவிடும். பெரும்பாலும், கால்களில் தொடங்கி, மெல்ல மேலே ஏறும். உங்களின் தொடை தசைகளின் மீதான ஆளுமையை மறைந்து, நிற்பதே இயலாததாகிவிடும். இடுப்புத் தசைகள் செயலிழக்க, நேராக அமர்வது கடினமாகும். இறுதியில் இன்னும் உயிருடன் இருந்தால், நீங்கள் தொண்டையினுள் செலுத்தப்பட்ட குழாயின் மூலம் மூச்சிவிட்டுக்கொண்டிருக்க, தெளிந்த விழிப்புடன் உள்ள உங்களின் உள்ளமோ, ஒன்றிற்கும் உதவாத -கூடிப்போனால், கண்களை மட்டும் இமைக்கக்வும், நாக்கினை சொடுக்கவும் மட்டும் கூடிய – கூட்டினுள் அடைபட்டிருக்கும், அறிவியல் புனைக்கதைகளில் உடலுடன் உறைந்து போன மனிதனைப்போல. எப்படி போனாலும் நோய் வந்து 5 வருடங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது.

மோரியின் மருத்துவர்களின் அனுமானத்தின் படி, அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தன. ஆனால் அதை விடவும் குறைவே என அவருக்கு தெரிந்திருந்திருந்தது.

தலைக்கு மேல் கத்தி தொங்க, மருத்துவமணையில் இருந்து வெளியேறிய நிமிடம், மோரி ஓர் மிகப்பெரிய முடிவெடுத்தார். நான் இனி உதிர்ந்து மறைவதா அல்லது மீதமிருக்கும் நேரத்தை பயனுள்ளதாக்குவதா? என தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.

அவர் உதிரப்போவதில்லை. மரணத்தின் முன் அவமானப்படப்போவதில்லை.

மாறாக, மரணத்தை தனது கடைசி திட்டப்பணியாய், இனிவரும் நாட்களின் மையமாய் ஆக்கபோகிறார். அனைவரும் இறக்கப்போகிறோம் என்பதால், அவர் முக்கியமான VALUE, அல்லவா? அவர் ஒரு ஆய்வாகலாம். ஒரு மனித பாடப்புத்தகம். எனது மெதுவான, நிதானமான மரணத்தில் என்னை படியுங்கள். எனக்கு என்ன நேர்கிறதென காணுங்கள். மெல்ல, என்னுடன் கற்றுக்கொள்ளுங்கள்.

மோரி வாழ்விற்கும் இறப்பிற்குமான அந்த இறுதி பாலத்தை கடப்பார், தனது பயணத்தை விவரித்தபடி.

இலையுதிர்கால பாடகாலம் விரைவில் முடிந்தது. மாத்திரைகள் அதிகரித்தன. சிகிச்சை, அன்றாட நிகழ்வானது.

மோரியின் தளரும் கால்களுக்கு செயலூட்ட அவரது இல்லத்திற்கு வந்த செவிலிகள், அவரது கால்களை முன்னும் பின்னுமாக, கிணற்றிலிருந்து நீர் இரைப்பதை போல, நகர்த்தி தசைகளை உயிர்ப்பிக்க முயற்சித்தனர். மசாஜ் வல்லுனர் வாரமொருமுறை வந்து கால்களில் படரும் இறுக்கத்தை போக்க முயற்சித்தார். தியான ஆசிரியருடனான சந்திப்புகளில், கண்களை மூடி, அலைபாயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தனது முழு உலகத்தையும், ஒரு சுவாசத்திற்கும் அடக்க முயற்சித்தார். உள்ளே, வெளியே, உள்ளே, வெளியே…

ஒரு நாள் ஊன்றுகோலுடன் நடந்த போது, படிகளில் காலிடறி விழ நேர்ந்தது. ஊன்றுகோல் போய், நடப்பான் (Walker) வந்தது. அவரது உடல் வலுவிழந்துகொண்டிருந்ததனால், கழிப்பறைக்கு சென்று வருவது பாரமாய் மாறியது. பெரிய குடுவையில் சிறுநீர் கழிக்கத்தொடங்கினார். இதை செய்யும்போது அவர் தன்னைத்தானே தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் குடுவையை வேறொருவர் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

நம்மில் பலருக்கு இவையெல்லாம் அவமானமாக இருந்திருக்கும், குறிப்பாக மோரியின் வயதில். ஆனால் மோரி நம்மில் பலரைப்போல அல்ல. தன்னைக்காண வரும் நெருங்கிய நண்பர்களிடம் “இதோ பார். நான் மூத்திரம் போகனும். கொஞ்சம் உதவ முடியுமா? உனக்கொன்னும் பிரச்சனை இல்லையே?” என்பார்.

பெரும்பாலும், இதில் பிரச்சனையேதும் இல்லாதது, அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

உண்மையில் அவர் இப்போது தன அதிகமாக விருந்தினர்களை சந்திக்க ஆரம்பித்தார். மரணத்தை குறித்து, அதன் அர்த்தத்தை குறித்து, அதை புரிந்துகொள்ளாமலேயே, அதை கண்டு பயப்படும் நமது சமூகத்தை குறித்தெல்லாம் கருத்தரங்குகள் நிகழ்த்தினார். மோரி தனது நண்பர்களிடம் கேட்டுக்கொண்டதெல்லாம் இது தான். தனக்கு உதவவேண்டும் என தோன்றினால், அவர்கள் செய்யவேண்டியதெல்லாம், தன்னை பரிதாபதுடன் பார்க்காமல், எப்பொழுதும் போல தன்னை சந்தித்தும், உரையாடியும், தங்களது பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டும் இருக்க வேண்டும். மோரி பொறுமையாக நாம் கூறுவதை கேட்கக்கூடியவர் என்பதனால், அவரிடம் தங்களது பிரச்சனைகளை பகிர்ந்துகொள்வது நண்பர்களுக்கு வாடிக்கை.

இத்தனைக்கு பிறகும், மோரியின் குரல் பலமும், வரவேற்பும் நிறைந்ததாகவும், மனம் ஒரு கோடி எண்ணங்களுடனும் துடிப்புடனும் இருந்தது. “இறத்தல்” என்பதன் அர்த்தம் “உபயோகமற்று போதல்” எனும் எண்ணத்தை தகர்க்கவேண்டும் என்ற வேட்கையுடன் செயல்பட்டார்.

புத்தாண்டு வந்து போனது. யாரிடமும் கூறவில்லையெனினும், இதுவே தனது கடைசி ஆண்டு என மோரிக்கு தெரிந்திருந்தது. அவர் இப்போது சக்கர நாற்காலி உபயோகிக்கத்தொடங்கியிருந்தார். தனக்கு பிரியமானவர்களிடன் கூற நினைத்ததையெல்லாம் கூறிவிடவேண்டுமென காலத்துடம் போராடிக்கொண்டிருந்தார்.

பிரண்டேயில் தனது சகபணியாளர் மாரடைப்பு காரணமாக இறந்த போது அவரது இறுதிச்சடங்கிற்கு சென்று சோகமாய் வீடு திரும்பினார்.

“ச்ச, எல்லாம் வீண்” என்றார் அவர். “ அத்தன பேர் அருமையான விஷயங்கள சொன்னாங்க. ஆனா அதயெல்லாம் கேக்க இர்வ் இல்ல”.

மோரிக்கு ஒரு யோசனை தோன்றியது. சில தொலைபேசி அழைப்புகள். தேதி குறித்தல். ஓர் குளிர்ஞாயிறு மதியம், நண்பர்களும் உறவினரும் புடைசூழ, மோரியின் “வாழும் இறுதிச்சடங்கு” நடந்தது. சிலர் அழுதனர். சிலர் சிரித்தனர். ஒரு பெண் கவிதை வாசித்தார்.

“My dear and loving cousin …
Your ageless heart
as you move through time, layer on layer,
tender sequoia …”

அவர்களுடன் சேர்ந்து மோரியும் அழுதார், சிரித்தார். நமது பிரியமானவர்களிடம், மனதின் அடியாழத்திலிருந்து நாம் கூற விரும்புவதையெல்லாம், அன்று மோரி கூறினார். “வாழும் இறுதிச்சடங்கு” பெரும் வெற்றியானது.

மோரி இறக்கவில்லை.

கூறப்போனால், அவரது வாழ்வின் மிக விநோத பகுதி இனிதான் வரவிருந்தது.

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – 1

மோரியோடான செவ்வாக்கிழமைகள்
அத்தியாயம் ஒன்று

அட்டவணை (The Curriculum)

எனது முதிய பேராசிரியரின் கடைசி விரிவுரை , வாரமொரு முறை அவரது இல்லத்தில், அழகிய செம்பருத்திச் செடி இளஞ்சிவப்பு இலைகளை உதிர்ப்பதை அவர் காண ஏகுவாக, படிப்பறையின் ஜன்னலருகே நிகழ்ந்தது. வகுப்பு செவ்வாய்க்கிழமைகளில் காலை உணவிற்கு பிறகு கூடியது. பாடம் – வாழ்க்கையின் அர்த்தம். அனுபவத்திலிருந்து கற்றுத்தரப்பட்டது .

மதிப்பெண்கள் ஏதும் தரப்படவில்லையெனினும், வாய்மொழித் தேர்வுகள் வாரம்தோறும் நடந்தன. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது, நீங்களும் சொந்தமாக கேள்விகள் கேட்கவேண்டும் என்றும் எதிர்ப்பாக்கப்பட்டது. எப்போதாவது சில வேலைகளும் செய்ய வேண்டிவரும், பேராசிரியரின் தலையை தலையணையில் வசதியாக வைத்தல், அவரது கண்ணாடியை மூக்கில் சரியாக மாட்டுதல், இப்படி. விடைபெரும் போது முத்தம் தருவது அதிக மதிப்பெண்களை ஈட்டித்தரும் .

புத்தகங்கள் ஏதும் தேவையில்லை. ஆனால் பல்வேறு தலைப்புகள் அலசப்பட்டன. அன்பு, உழைப்பு, சமூகம், குடும்பம், மூப்படைதல், மன்னித்தல், கடைசியாக, மரணம். கடைசி உரை சிறியதாகவே இருந்தது. சில சொற்கள் மட்டுமே .

பட்டமளிப்பு விழாவாக இறுதிச்சடங்கு நிகழ்ந்தது.

இறுதித்தேர்வு ஏதும் கொடுக்கப்படவில்லையெனினும் ஓர் நீண்ட அறிக்கை தயார் செய்யப்படவேண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது . அந்த அறிக்கை இங்கே சமர்ப்பிக்கப்படுகிறது .

எனது பேராசிரியரின் வாழ்வின் கடைசி வகுப்பில் கலந்துகொண்டது ஒரு மாணவன் மட்டுமே.

நானே அந்த மாணவன்.

அது 1979ஆம் ஆண்டின் வசந்ததில் வெப்பமும் ஈரப்பதமும் கூடிய ஓர் சனிக்கிழமை மதிய வேளை. பிரதான கூடத்தில் மரத்தாலான மடிப்பு நாற்காலிகளின் நீண்ட வரிசைகளில் நூற்றக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறோம் . நீல நிற நைலான் அங்கிகளை அணிந்திருக்கிறோம். நீண்ட உரைகளை பொறுமையற்று கேட்டுக்கொண்டிருக்கிறோம் . விழா முடிந்ததும் தொப்பிகளை காற்றில் எறிகிறோம். மாஸஷுஸட்ஸ் மாகாணம் வெல்தாம் நகரத்தின் பிரெண்டேய் பல்கலைக்கழகத்தின் மேல்நிலை வகுப்பின் பட்டதாரிகள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. எங்களில் பலருக்கு , குழந்தைமையின் மீது திரை விழுந்துவிட்டது .

பிறகு, எனக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியரான மோரி ஷ்வார்ட்ஸை கண்டுப்பிடித்து எனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அடுத்த வரப்போகும் வலிமையான காற்று அவரைத் தூக்கி மேகங்களுக்கிடை போட்டுவிடும், என எண்ணும்படியான சிறிய உருவமும் நடையும் கொண்டிருக்கிறார். பட்டமளிப்பு விழா அங்கியில், விவிலிய இறைத்தூதரையும் கிருஸ்துமஸ் குள்ளனையும் சேர்த்தார்ப்போல காட்சியளிக்கிறார். பிரகாசிக்கும் நீல-பச்சை கண்கள், நெற்றியில் விழும் அடர்த்தியற்ற வெள்ளி நிற மயிர்கற்றைகள், பெரிய காதுகள், முக்கோண மூக்கு, நரைக்கத்தொடங்கியுள்ள புருவம். பற்கள் கோணலாகவும், கீழ் வரிசை உள்வாங்கியப்படி இருந்தும் – யாரோ எப்போதோ குத்தி உள்ளே தள்ளியதைப் போல – அவர் சிரிக்கையில் அவரிடம் நீங்கள் ஏதோ உலகின் முதல் நகைச்சுவை துணுக்கை சொன்னதைப்போல இருக்கிறது .

என் பெற்றோர்களிடம் நான் எப்படி அவர் எடுத்த ஒவ்வொரு வகுப்பிற்கும் வந்தேன் என கூறிக்கொண்டிருக்கிறார். “உங்க மகன் விசேஷமானவன் ” என்கிறார். வெட்கி, நிலம் நோக்குகிறேன். பிரியும் முன்பு, அவருக்கென வாங்கியிருந்த பரிசை – அவர் பெயரின் தொடக்க எழுத்தக்கள் பொறிக்கப்பட்ட தோல் பை – தருகிறேன். அதற்கு முன்தினம் அங்காடியில் வாங்கியது. அவரை நான் மறக்கக் கூடாது என நினைத்தேன். ஒரு வேளை அவர் என்னை மறக்கக்கூடாது எனவும் நான் நினைத்திருக்கலாம்.

“மிட்ச், நீ நல்ல பசங்கள்ல ஒருத்தன் பா ” என்கிறார், தோல்பையை பார்த்தப்படி. பிறகு என்னைக் கட்டிப்பிடிக்கிறார். அவரது ஒல்லியான கரங்களை எனது முதுகில் உணர்கிறேன். அவரை விட நான் உயரமானவன். என்னை அவர் கட்டிக்கொள்ளும் போது சங்கடமாக, வயதானதைப்போல தோன்றுகிறது ஏதோ நான் பெற்றவன் போலவும் அவர் மகன் போலவும் .

தொடர்பில் இருக்க முடியுமா என கேட்கிறார். தயக்கமேதுமின்றி, “நிச்சயமா” என்கிறேன் .

விலகும் போது அவர் அழுவதை காண்கிறேன்.

மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள் – புத்தக மொழிபெயர்ப்பு – அறிமுகம்

மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்<p><p>

 

Tuesday’s with Morrie (மோரியுடன் செவ்வாய்க்கிழமைகள்) என்ற புத்தகத்தை பற்றி கமல்ஹாசனின் ஒரு பேட்டியில் தான் முதன்முதலில் கேள்விப்பட்டேன். யாருக்கோ Tuesday’s with Morrie ஐ பரிசளித்ததாக கூறினார். புத்தகத்தைப் பற்றி ஏதேனும் கூறினாரா என நினைவில்லை. ஆனால் பெயர் மட்டும் மனதில் தங்கிவிட்டது. பின்னொரு நாள் குவைத்தில் இருந்து சென்னைக்கு ஶ்ரீலங்கன் ஏர்வேஸ் மூலமாக செல்லும் போது (குறைந்தபட்சம் எட்டு மணி நேரம்) துபாய் விமான நிலையத்தில் புத்தகம் கைக்கு கிடைத்தது. வீடு போய் சேர்வதற்குள் முடித்துவிட்டிருந்தேன் புத்தகத்தை. கடைசி சில பக்கங்கள் தொண்டைக்குள் பந்தை உருளவிட்டன. கண்களை பனிக்க செய்தன. மிட்ச் ஆல்பம் என்ற புகழ்ப்பெற்ற விளையாட்டு வர்ணனையாளர் எழுதிய புத்தகம் இது. மரணத்தை நேருக்கு நேர் நோக்கியபடி பயணித்துக்கொண்டிருக்கும் மோரி என்ற நோய்வாய்ப்பட்ட பேராசிரியருக்கும் அவரது மாணவரான மிட்ச் ஆல்பமுக்கும் சில செவ்வாய்க்கிழமைகள் நிகழும் சந்திப்புகளே புத்தகமாக உருவாகியிருந்தது.

இது ஒரு கதையாக எழுதப்பட்டிருந்தால், படித்த கணமே இதை தூக்கிப்போட்டிருப்பேன். ஆனால் ஒரு மனிதன் இப்படி வாழ்ந்து முடித்திருக்கிறான் என்ற எண்ணம் மனதின் மீது தனது ஒளிக்கீற்றுக்களை வீசியபடியே இருந்தது. சொற்கள் என்பவை வெறும் சொற்கள் அல்ல. இதை அனேகமாய் வாசிக்கும் பழக்கமுள்ள அனைவருமே ஒருமுறையேனும் உணர்ந்திருப்பீர்கள். ஒரு கட்டத்தில் மை, காகிதக்கறை, ஒலி, ஒளி என எல்லாவற்றையும் தாண்டி உயிர்கொண்டெழும் அவை. சக உயிரென பாவித்து அவற்றிற்க்கு ஏதேனும் கைமாறு செய்தே ஆகவேண்டும் என தோன்றும் கணங்கள் உண்டு. அப்படி தோன்றிய ஒரு கணத்தில் தான் என்னாலானது இச்சொற்களை மொழிப்பெயர்த்தல் மட்டுமே என முடிவெடுத்து இரண்டு அத்தியாயங்களை மொழிப்பெயர்த்தேன். மேலும் மொழிப்பெயர்க்க ஏதேனும் உந்துதல் தேவை என்பதனாலும் நிகழும் தவறுகளை உடனுக்குடன் களையலாம் என்பதாலும் இவற்றை இங்கு பதிப்பிக்கிறேன். வாரம் ஒரு அத்தியாயம் என்பது இப்போதைய கணக்கு. பார்க்கலாம் என்ன ஆகிறதென.

குறிப்பு : “அங்கிங்கெனாதபடி” ஐ தொடங்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைகின்றன. மூன்றாம் ஆண்டினுள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில் மோரியாவது என் சோம்பலை போக்கி தொடர்ந்து பதிவுகளை வெளிவரச்செய்வார் என்ற நம்பிக்கையுடன்….