மரணம் – சில சந்திப்புகள் (போட்டிப் பதிவு)

பழுத்த இலைகளின்
பதைப்பை அறியாமல்
இலையுதிர்ப் பருவத்தை
முன்வைத்துக் கழிகிறது காலம்

– பாம்பாட்டி சித்தன்

அதிகாலை 3:00 மணி. யாரோ அழைப்பு மணியை அடிக்க, அப்பா போய் கதவை திறந்தார். அப்பாவின் அலுவலகத்தில் (தமிழ்நாடு மின்வாரியத்துறை) இருந்து லைன்மேன் கணேசன்.

குட் மார்னிங் கணேசன். சொல்லுங்க… என்றார் அப்பா.

பேட் மார்னிங் சார்.

என்ன ஆச்சு?

இப்ப தான் சார் ஊர்ல இருந்து ஃபோன் வந்துது. உங்க அம்மா….

நான் உணர்ந்த முதல் மரணம் எனது பாட்டியினுடையது. 89ல் நிகழ்ந்தது. அந்த மரணத்தைப் பற்றி இப்போது என் நினைவில் எஞ்சி நிற்பவை, கோர்வையாய் கோர்க்க முடியாத சில சம்பவங்கள் மட்டுமே. ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் தங்கையின் கை கதவிடுக்கில் மாட்டிக்கொள்ள, அம்மா, இப்போது ஆச்சரியப்படவைக்கும் நிதானத்துடன், அவளுக்கு மருந்து போட்டது – கணேசனின் வெள்ளை நிறச் சட்டை(மனுஷ்யப்புத்திரனின் வார்த்தைகளில் சொன்னால், இவரின் நினைவு “சற்றைக்கு முன் அறுத்தெடுக்கப்பட்ட மாமிசத்தின் சூட்டுடன்” மனதில் நிற்கிறது (கவிதை: அழிவின் தூது)) – பாட்டியை கண்டவுடன் அப்பா மயங்கி விழுந்தது – பாட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது மகேஷ் சொன்ன “இனிமே பாட்டிய பாக்க முடியாது இல்ல?” – என் மாமா, பகீரதன் முதன் முறை அழுது நான் பார்த்தது – இறந்த மறுவாரம், பாத்திரங்களைப் பகிர்வதில் நடந்த சண்டை….

எனது எட்டாவது வயதில் நிகழ்ந்தது இந்த மரணம். மனிதர்களை நல்லவர்களாக மட்டுமே பார்க்கும் பருவம். அதனால் தானோ என்னவோ, என் மனதில் நல்லதை மட்டுமே கொண்டவராக, நன்மையின் பருவடிவமாக தங்கி விட்டார் பாட்டி.

*

சார்லஸ் மாஸ்டரின் மரணம் நிகழும் போது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன். அந்த வருட ஆரம்பத்தில் தான் ட்யூஷனுக்கு சேர்ந்தேன் அவரிடம். 3 – 4 மாதங்களில் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். கணிதத்தை மொழி போல பாவிப்பவர். எத்தியோப்பிய அரசின் அழைப்பை ஏற்று அங்கு பல வருடம் பணி புரிந்தவர். அவர் மகன் பிரேம்குமார் என் வகுப்புத்தோழன். சேர்ந்த சில நாட்களில் அவருக்கு நாக்கில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. ஓயாமல் புகைப்பிடிப்பார். மருத்துவர்கள் கூடாது என சொன்ன போதும் கேட்கவில்லை. ஒன்பதாவது முடித்து விடுப்பில் இருந்த போது தான் அவரது மரணம் நிகழ்ந்தது. இறந்த மறுநாளே எனக்கு விஷயம் எட்டி விட்டது. ஆனால் செல்ல முடியவில்லை. என்ன சொல்வேன், எப்படி எதிர்கொள்வேன் என பெரும் தயக்கம். காரணமே இல்லாமல் எனக்குள் குற்ற உணர்வு. நாட்கள் செல்ல செல்ல பார்க்கப்போகவில்லையே என்ற குற்ற உணர்வு வேறு சேர்ந்துக்கொள்ள நரக வேதனை. 10 நாட்கள் கழித்து, இனி முடியாது என துணிந்து சென்றேன். செல்லும் வழியெல்லாம் பிரேம் அழுதால் எப்படித் தேற்றுவது, நான் அழாமல் இருக்க என்ன செய்வது என்றெல்லாம் யோசித்துக்கொண்டே சைக்கிளை ஓட்டினேன். தயக்கத்துடனே அழைப்பு மணியை அடிக்க…

“உள்ள வாடா.” என்றான் பிரேம்.
“என்ன சாப்பிடற? அம்மா கடைக்கு போயிருக்காங்க. டீ போடட்டா? இல்ல ரஸ்னா குடிக்கரியா?”.

இதை நான் எதிர்பார்க்கவில்லை. “இல்ல பிரேம்… அப்பா…” என இழுக்க, “அத விடு. முதல்லயே தெரிஞ்ச விஷயம் தான” என்றான்.

*

சில மரணங்கள் அதன் பயங்கரத்தையும் தாண்டி சுவாரஸ்யமான செய்தியாக மட்டும் தங்கி விடுகின்றன. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்ந்தது இது. முகப்பேரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, வாகனங்கள் செல்லும் சாலைக்கு மிக அருகே இருந்தது. 3வது மாடி பால்கணியில் உட்கார்ந்துச் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார் அவர். சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் டயர் வெடிக்க, அந்த சத்தத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அந்த கணமே இறந்துவிட்டார். அவருக்கு அதற்கு முன் மாரடைப்பு வந்ததில்லை…. இங்கு இன்று என்னை யோசிக்க வைக்கும் விஷயம், ஒரு மரணம் மிகச் சாதாரணமாக ஒரு வரி செய்தியாய் மாறுகிறது. அதன் பயங்கரத்தை நாம் உணர்வதேயில்லை.

*

மண்

இறந்த குழந்தையை தானே புதைக்கும்
தாய் ஒருத்தியை நேற்றுப் பார்த்தேன்.
பிடிப்பிடியாக மண்ணை அள்ளி
மெதுவாக சொரிந்துகொண்டிருந்தாள்.
பிஞ்சுக் கால்கள் மறைந்தன.
குட்டிக் கைகள் பிறகு.
உருண்ட சிறு முகத்தை மெல்ல வருடினாள்.
மென்மையான மண்ணை அள்ளி
மெதுவாகப் பரப்பினாள்.
ஒவ்வொரு பிடி மண்ணாக
மெல்ல மெல்ல…
அம்மா
இந்த பூமியையே அள்ளி எடுத்துவிடுவாயா?

– ஜெயமோகன் (பின் தொடரும் நிழலின் குரல்).

(என்னை மிகவும் பாதித்த மரணம் பற்றிய கவிதை)

*

கேரளத்தில் ஒரு தினப்பத்திரிகையில் ஈஎம்எஸ் நம்பூதிரிப்பாடு மரணம் என்கிற செய்தி, நம்பூதிரிப்பாடின் வாழ்க்கைக் குறிப்பு, அவரது சாதனைகள் குறித்த கட்டுரைகள் எல்லாம் அவரது மரணத்தின்போது தயார் நிலையில் இருந்ததைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்தாக ஜெயன் (ஜெயமோகன்) தன் பேச்சின் நடுவில் குறிப்பிட்டார். தான் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தபோது அவர்கள் சொன்ன வி்ஷயத்தை அவர் தெரிவித்தார்.

”ஒருவர் இறந்தபிறகு அவரைப்பற்றி கட்டுரை எழுதிக்கொண்டிருந்தால் அடுத்தநாள் வந்துவிடும். செய்தித்தாள் அன்றைய செய்தியை அன்றே தரவேண்டாமா?”

”அப்படியானால் எல்லோரைப்பற்றியும் இந்தமாதிரி தயாரித்து வைத்திருக்கிறீர்களா?”

”சந்தேகமா? அப்படியானால் இந்த செய்தியைப் பாருங்கள்!” என்று அவர்கள் கணிப்பொறியில் திறந்து காட்டிய செய்தியைக் கண்டு தான் வியப்பிலாழ்ந்ததாக ஜெயன் நயத்தோடு சொன்னார்.

அந்தச் செய்தி: ‘பிரசித்தமாய தமிழ் எழுத்துகாரன் ஜெயமோகன் மரிச்சு. அயாழ்க்கு பாரியயும் ரண்டு மக்களும் உண்டு…….’

(சுதேசமித்திரனின் வலைப்பதிவில் படித்தது)

*
எனக்கும் (தாய்வழி) தாத்தா ஓ.நா. துரைபாபுவிற்குமான நெருக்கம், அவர் வித்தியாசமானவர் என்ற புள்ளியில் இருந்து உதித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஹிட்லர் மீசைக்காரர். சுதந்திரப்போராட்ட தியாகி. சோஷியலிஸ்ட். ராம் மனோகர் லோகியா, காங்கிரஸில் இருந்து வெளியேறி சோஷியலிஸ்ட் கட்சியை ஆரம்பித்த போது உடன் வந்தவர். சுத்தமான, நேர்மையான (இப்போதைய மொழியில் கூறினால் பைத்தியக்காரத்தனமான) அரசியல் செய்தவர். அளவுக்கு மீறிய பிடிவாதக்காரர் (இது பற்றி பல கதைகள் உண்டு எங்கள் குடும்பத்தில்). மிசா அமலில் இருந்த போது கடைசி வரை காவல்துறையிடம் சிக்காமல் இருந்த வெகு சிலரில் ஒருவர் (தாத்தாவை ஜாக்கிரதையாய் இருக்கச்சொன்ன ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் கூட பிடிபட்டு விட, இவர் மட்டும் தப்பித்துக்கொண்டே இருந்தார்) .  தன் 82 வயது வரை தனியாக கிளம்பி தில்லி போய் வருவார்.

அவருக்கு உடம்பிற்கு வந்ததும் நாங்கள் அனைவருமே நிலைகுலைந்து போனோம். ஞாபக மறதி மெல்ல அதிகமானது. ஒரு கட்டத்தில், என்னைக் கூட அவருக்கு சமயங்களில் அடையாளம் தெரியாமல் போய்விடும் (தெலுங்கில் பேசிக்கொண்டிருக்கும் போதே “நீங்க இந்த ஊருங்களா?” என்பார் தமிழில்). மருத்துவமனையில் சேர்த்து இனி ஏதும் பிரச்சனை இல்லை என தெரிந்த பிறகே குவைத் கிளம்பினேன். வந்த சில நாட்களில் தாத்தாவின் மரண செய்தி என்னை எட்டியது. அன்றிரவே குவைத்தில் இருந்து கிளம்பி அதிகாலை 5 மணிக்கு மீனம்பாக்கத்தை அடைந்து, அங்கிருந்து ஒரு பேருந்தை பிடித்து 6:30க்கெல்லாம் மதுராந்தகம் அடைந்துவிட்டேன். அதுவரை எந்த ஒரு சலனமும் இல்லை. இயல்பாகவே இருந்தேன். ஆனால் தாத்தாவின் உடலை பார்த்த போது திடீரென உடலையே உள்ளிழுத்துக்கொள்வதை போல ஒரு கேவல். சுற்றி நிற்கும் எவரைப்பற்றியும் கவலைப்படாமல் அழமுடிந்த மிக சில தருணங்களில் அதுவும் ஒன்று.

*

ஏரிக்கரையில் (பொட்டங்காடு ஏரி) நானும் என் மாமாவின் மகன் நிர்மலும் நடந்துக்கொண்டிருக்கிறோம். மண்ணரிப்பை தடுக்க நடப்பட்ட முள்மரங்கள் நிறைந்த ஏரி அது. பால்வெள்ளை நாரை, தண்ணீருக்குள் கூடு கட்டும் சிலந்தி, பாம்பின் உரிந்த தோல் என நகரின் வாசனைப் படாதப் பொருட்கள் கண்களைத் தீண்டிய படியே இருக்கும் இடம். நானும் நிர்மலும் எதையோ விவாதித்துக்கொண்டிருக்கிறோம். விவாதம் சண்டையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. திடீரென ஒரு சத்தம். விமானம் ஒன்று மிகத்தாழப் பறக்கிறது. நடு ஏரியை அடைந்த உடன் ஹாலிவுட் படங்களில் வருவது போல மிக வசீகரமான நிறத்தில் நெருப்பை உமிழ்ந்து வெடித்துச்சிதறுகிறது. வெடித்துக்கொண்டிருந்த விமானத்தில் இருந்து ஒருவன் குதிக்கிறான்.   வெடிந்த விமானத்தின் துண்டு ஒன்று மிக அருகில் வர…..

9/11 நடந்த பிறகு வந்த கனவு இது. பல நாட்கள் துரத்திய கனவு. விமானத்தில் இருந்து குதித்த அவன், நான் பி.பி.சியில் பார்த்த இரட்டை கோபுரத்தின் 50வது மாடியில் இருந்து குதித்த அதே மனிதனாகத்தான் இருக்க வேண்டும். என் கனவிலும் அவன் குதித்துக்கொண்டு தான் இருக்கிறான்.

இதே போல சுனாமிக்குப் பின், சுனாமியின் அலை துரத்த, பாண்டிச்சேரித் தெருக்களில் பிரெஞ்ச்காரர்கள் புடைசூழ ஓடிக்கொண்டிருப்பதை போன்ற கனவு. அதற்கு முந்தைய இந்திய பயணத்தின் போது பாண்டிச்சேரி போய் அதன்மேல் காதல்வயப்பட்டு திரும்பி இருந்தேன். இக்கனவுகளின் கச்சிதமும், விவரங்களும் (details) என்னை இன்றும் ஆச்சரியப்படுத்துகின்றன.

பேரிழப்புகளை எப்படி எதிர்கொள்ள? இயற்கையானவற்றிற்காவது நம்மை மீறிய செயல் என சமாதானம் உண்டு. மனிதன் செய்யும் அழிவிற்கு? இதோ மீண்டும் ஒன்று நிகழ்ந்திருக்கிறது, மும்பையில். இதை வலையேற்றுவதற்குள் மரண எண்ணிக்கை 200 தொட்டுவிடும். 200…   200 அம்மாக்கள், மகன்கள், அப்பாக்கள், மாமாக்கள், அத்தைகள், தோழமைகள், காதலர்கள், திருடர்கள், கவிஞர்கள், கடனாளிகள், நாத்திகர்கள், ஆத்திகர்கள், குழந்தைகள்… குழந்தைகள்….

இக்கணம் பொங்கியெழும் என் வன்மமெல்லாம் இயலாமையின் புள்ளியை சென்று முட்டி, இரயில் கம்பத்தில் உறைந்திருந்த குருதியை கொண்டு, இனி வரப்போகும் என் கனவுகளுக்கு நிறம் கொடுக்கக் காத்திருக்கிறது.

நான் நிழல் நட்பு

உறவின் ஆதாரம் எது? ரத்த உறவுகளின் ஊற்று தாயின் கருவறை. அங்கிருந்தே கிளர்த்தெழுகின்றன நமது உறவுகள் எல்லாம். ஆயினும் எனக்கும் என்தங்கைக்குமான உறவில் தாயின் கருவல்லாது வேறு சில காரணிகளும் உண்டு. தாயைதந்தையை தவிர மற்றனைத்தும் மனதின் உற்பத்திகளே…. நட்பு உட்பட.

நட்பு, உறவு என்பதெல்லாம் வெறும் சோற்கள். உண்மையில், மனதிற்கு தேவை ஓர் ஆசுவாசம். பாறையின் மீது விழும் என் நிழலை பார்த்து, நான் இருக்கிறேன் என உறுதி செய்துக்கொள்வது போல. நிழலுக்கு நான் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை நட்பெனும் வெளிச்சமும், நீயெனும் நிலமும். இதன் நீட்சியாய் பலதையும் பற்றி் பேசலாம். நம் பரஸ்பர நிழலின் தண்மையில் நாம் சுகிப்பதைப்பற்றி, வேறோர் உயிர்க்கு நிழல் தரும்போதும், நாம் வெயிலில் வாட நேரும் தருணங்களைப் பற்றி, கற்பனை வெளிச்சத்தை உண்டாக்கி அதில் செயற்கை நிழல் உற்பத்தி செய்யும் மடமையை பற்றி, விழும் தன் நிழலை அங்கீகரிக்க மறுக்கும்/வெட்கும் , மனதின் ஆழத்திலிருந்து கிளர்ந்தெழும், மென்அகங்காரத்தை பற்றி