அதிநாயகமாக்கத்தின் வேர்

சில மாதங்களுக்கு முன்பு “அதிநாயகமாக்கம்” என்ற பதிவினை எழுதி இருந்தேன்.  அந்த பதிவை ஒரு நடை படித்துவிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை. அந்த பதிவின் சாரம் இது தான். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை நம் சமூகம் “அதிநாயகர்களை” உருவாக்கியபடியே உள்ளது. ஔவை, வள்ளுவன், கம்பன் துவங்கி நம் கவிதைகள் முழுக்க இந்த அதிநாயகமாக்கத்தை காண்கிறோம். இராமன், காந்தி, ஒபாமா என அதிநாயகர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் ஏதோ ஒரு தேவையை இந்த அதிநாயகர்கள் பூர்த்தி செய்கிறார்கள்.

அந்த பதிவினை ஒரு கேள்வியுடனேயே முடித்திருந்தேன்.

இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?

இது பல வருடங்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் கேள்வி. அந்த கேள்வியை நினைக்கும் தோறும் ஒரு காட்சி தோன்றி மறையும். அருணாசலம் படம் வெளியாகி இருந்த நாள். முகப்பேர் பேருந்து நிலையம் அருகே ஒரு இளைஞர் கூட்டம் ரஜினியின் பெரிய படம் ஒன்றினை தங்களது தோளில் தூக்கி சென்றனர். யார் இந்த இளைஞர்கள். இவர்களுக்கு அந்த நடிகருக்குமான பந்தம் என்ன?

இரு வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தக சந்தை சென்றிருந்த போது ஒரு புத்தகம் வாங்கினேன். புத்தகத்தின் பெயர் : ஔவையில் உளவியல் & ப்ராய்டு – லெக்கானின் மனஅலசல். – ஐ.க. பாண்டியன் என்பவர் எழுதிய நூல் (கார்முகில் பதிப்பகம்). அப்பொழுது குறுந்தொகையில் லயித்திருந்ததாலும், நான் கவித்துவ நோக்கில் வாசித்த ஔவையை இவர் மனஅலசலின் (psychoanalysis) துணை கொண்டு ஆராய்கிறார் என்பதாலும் இந்த புத்தகம் ஈர்த்தது.
இந்நூலினை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பகுதியில் ப்ராய்டு மற்றும் லக்கானின் மனஅலசல் கோட்பாடுகளை மிக சுருக்கமாக விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் எத்தனை படித்தும் புரிபடாது இருந்த ப்ராய்ட் மெல்ல எனக்கு புரியத்துவங்கினார். நூலின் இரண்டாம் பகுதி ஆத்திச்சூடி மற்றும் கொன்றை வேந்தன் பாடல்களை அலசுகிறது. மூன்றாம் பகுதி ஔவையின் தனிப்பாடல்களை. நான்காவது பகுதியில் சங்கஇலக்கியத்தில் (குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு) ஔவை எழுதிய பாடல்களை அலசுகிறது.
ஏதோ காரணத்தால் இந்த நூலை முன்னுரையை தாண்டி படிக்கவில்லை.  இரு வருடங்களாக அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்த நூலினை உறக்கம் கொள்ளாத நேற்றிரவு சும்மா புரட்டலாம் என்று எடுத்தேன். “அதிநாயகமாக்கம்” கட்டுரையில் மேற்கோள்காட்டப்பட்டிருந்த ஔவையின் “களம் புகல் ஓம்புமின்…” என்ற பாடல் இந்நூலில் ஆராயப்பட்ட பகுதி கண்ணில் பட்டது. அந்த பாடலும் அதன் விளக்கமும் :

களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

– ஔவையார் (புறநானூறு 87)

போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனுக்கு எதிராக எதிரிகளின் படை திரள்கிறது. அப்போது எதிரிகளை எச்சரித்து ஔவை பாடுவதாக அமைந்த பாடல் இது. கட்டுரையாளர் இந்த கவிதை உருவாக காரணமாக என்ன இருந்திருக்கும் என்பதை ஆராய முற்படுகிறார். இந்த கவிதையின் துணைகொண்டு ஔவையின் மனஓட்டத்தை கணிக்க முயல்கிறார். இவர் வந்து சேரும் இடம் சட்டென ஒரு திறப்பை உருவாக்கியது. அதியமானுக்கு எதிராக போர் புரிய படை ஒன்று வரும் பொழுது ஔவைக்கு ஏன் இத்தனை கோவம் வர வேண்டும்?
ஔவையின் மனதினில் ஒரு வீரனின் பிம்பமாக அதியமான் இருக்கிறான். ஔவையின் மனதினில் உள்ள அந்த அதியமானும் ஔவையின் ஒரு பகுதியே. உண்மையான அதியமான் பகைவர்களால் சீண்டப்படும் போது ஔவையினுள் இருக்கும் அதியமானும் சீண்டப்படுவதாக, அதன் மூலம் தானே சீண்டப்படுவதாக உணர்கிறாள் ஔவை. அந்த உணர்வில் இருந்தே எழுகிறது “எம்முளும் உளன் ஒரு பொருனன்” என்ற வரி. இந்நிலையை உளவியலில் பிணைப்புத் தற்காதல் (Anaclytic Attachment) என்பார்கள் என்கிறார் பாண்டியன். பாண்டியனின் சொற்களில் :

ஔவை அதியமானின் பகைவரைக் கண்டதும், அவர்களை எச்சரிப்பதற்கான பிரக்ஞைபூர்வமான சொல்லாடல் அல்ல இது. மாறாக ஔவையின் சுயமோகத்தில் (Anaclytic Type) ஒரு பகுதியாக பங்கேற்றிருக்கும் அதியமானுக்கு ஏற்பட்ட காயமே, கிளர்ந்து ஒரு வானளாவிய வீரத்தைப் பகைவர் முன் தற்காப்பாக அவர்களை அச்சுறுத்த வைக்கிறது.

சாதி அரசியலை அல்லது மத அரசியலைத் தம் பகுதியாக கொண்ட தன்னிலைகள் எங்கோ நடப்பதை ஆய்வுக்குறிய எதுவும் இல்லாத போதும் தன் attachmentற்கு ஏற்ப நியாயப்படுத்தி பேசுவதைக் காணமுடியும். ரசிகர்களின் அரசியலும் இந்த வகை தான். தன்னையும், தான் ரசிக்கும் அபிமான நடிகரின் தொப்புள் கொடியில் கட்டுண்டு கிடப்பது பிரிக்கப்படவேண்டியது அவசியம் என்ற பிரக்ஞை இல்லாமல் இருப்பர்.

சுயமோக வெளியின் வானளாவியம் அத்தகையது. அறிஞனையும் ஞானியையும் ஏமாற்றக்கூடியது.

ஆக, ரஜினியின் உருவத்தை பல்லக்கில் எடுத்துச்செல்லும் ரசிகன் உண்மையில் தூக்கிச்செல்வது தன்னுள் நிறைந்த ரஜினியை தான். அதாவது தன்னையே பல்லக்கில் தூக்கிச்செல்கிறான் அவன். அதிநாயகமாக்கம் என்பது உண்மையில் நம்மை அதீதமாக்கும் முயற்சி தானா?  யோசித்தால் இது அத்தனை எதிர்மறையானது அல்ல என்று தோன்றுகிறது. காந்தியின் தியாகம் நம் கண்களை நனைப்பது எதனால்? காந்தியை வாசிக்கும் தோறும் அவரை நாமாக மாற்றுவதினால் தானா?
Advertisements

அதிநாயகமாக்கம்

கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.

வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்

யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.

இராமன் முடிசூட்டிக்கொள்ள செல்லும்போது அவனை காணும் அயோத்தியா மக்களின் மனநிலையை விளக்கும் பகுதியில் உள்ள பாடல் இது. இதன் கடைசி வரி என்னவோ செய்துவிட்டது. காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார். ஏன் காரணமின்றி அழவேண்டும்? சாதாரண அயோத்தியாவாசிக்கும் இராமனுக்கும் என்ன சம்மந்தம்? இவ்வரியை படித்த போது ஜெயமோகன் சுந்தர ராமசாமியை குறித்து எழுதிய ”நினைவின் நதியில்” நூலினில் ஒரு பகுதி நினைவிற்கு வந்தது. காந்தியை பற்றி சுரா கூறியதாக ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.

“காந்தியை பத்தின நினைவுகள்ல ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வர்ரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரை பாத்ததும் அப்படியே மனசு பொங்குது அவங்களுக்கு…”

காத்லீன் ஃபல்சானி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரின் வலைப்பதிவில் கீழ்கண்ட வரி இருந்தது.

“கிராண்ட் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு பத்து மணிக்கு வுல்ஃப் ப்லிட்சரின் குரல் “ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்” என்று ஒலித்தபோது அங்கு குழுமியிருந்த அனைவரும் (பல பத்திரிக்கையாளர்கள் உட்பட) ஆராவாரம் செய்தனர்.

பின்பு பலர் அழுதனர்.”

ஒபாமாவும் கிட்டத்தட்ட இராமன் போல தான். இன்னும் எதுவுமே செய்யத்தொடங்கவில்லை. இனி தான் தெரியும் அவர் யார்… என்ன செய்யக்கூடியவர் என்று. காந்தியின் முன் அமர்ந்து அழுத இப்பெண்களுக்கு காந்தியின் தென்னாப்பிரிக்க வெற்றிகள், காங்கிரஸ் தலைமை செயல்பாடுகள், அவர் எழுதிக்குவித்த பல நூறு பக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனில் ஏன் அழ வேண்டும்?

கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திலேயே இன்னொரு பாடலில் ஒரு வரி வருகிறது. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதற…. உள்ளே பொங்கிப்பெருகும் மகிழ்ச்சி கண்களில் நீராய் வழிகிறது…

யோசிக்கையில் தோன்றுகிறது. தண்ணென்ற ஓர் ஆளுமைக்காக, வெயில்காய் நிலம் போல மக்கள் ஏங்கியபடி உள்ளனர். சாதாரண தண்மை இங்கு நொடிப்பொழுதில் உரிஞ்சப்பட்டு இல்லாதாகின்றது. ஆழம் வரை செல்லக்கூடிய, மனதையும் ஈரமாக்கவல்ல ஒரு நீர்சுனையை அவர்கள் தேடியபடியே, ஒரு அதிநாயகனுக்காய் ஏங்கிய படி உள்ளனர். அறம் பேணுவான் இவன் என அவர்களுக்கு தோன்றினாலே போதும், எம்முளும் உளன் ஒரு பொருனன் என்று உரக்கக் கூவி விடுவார்கள். கம்ப ராமாயணத்தில் பாடலுக்கு பாடல் இராமனின் பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அவர் அறத்தான் என்பதே அப்பிம்பத்தின் ஆதாரம். வீரன் என்பதோ, சாந்தமானவன் என்பதோ அல்ல. அறத்தான் என நம்பத்தகுந்தவனை அதிநாயகனாய் பாவித்து பாவித்து எத்தனைப்பாடல்கள்…….

புறநானூற்றில் ஔவையின் பிரபலமான பாடல் ஒன்று உள்ளது.

களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ
முன்நின்று கல்நின் றவர்.

என்கிறார் வள்ளுவர்.

என் அரசனின் முன் நிற்காதீர்கள் பகைவர்களே. பலர் என் அரசனின் முன் நின்று இப்போது நடுகற்களாக நிற்கிறார்கள்.

அதிநாயகமாக்கம் இதை விட சிறப்பாய் தமிழில் வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?

உயரத்திருந்து யாசித்தல்

பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 – 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு “அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,” என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு வள்ளல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வரலாற்று ரீதியில் முக்கியமான பாடலாக இருக்கலாம். மற்றபடி வேறெந்த சிறப்பும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை. ஆனால் அடுத்த பாடல் சட்டென வேறோர் தளத்திற்கு தாவி விடுகிறது. இதுவும் ஒரு யாசகப்பாடல் தான். ஆனால் தட்டையான, “எனக்கு ஏதாவது தா” என்ற தொனி இல்லை இப்பாடலில்.

புறம் 159 :

`வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;

பசந்த மேனியொடு படர்அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்ப்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;

என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என்,
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-

உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

“என் வாழ்நாளைக் கடந்தும் பல ஆண்டுகள் உயிரோடிருக்கிறேன். இன்னும் என் உயிர் பிரியவில்லையே” என புலம்புகிறாள் என் தாய். ஊன்றுகோலை காலாக கொண்டு சிறு சிறு அடிகளாக நடக்கிறாள். நூலை விரித்தாற்போன்ற கூந்தல் அவளுடையது. கண் பார்வை மங்கியதால் முற்றத்திற்கு கூட செல்ல முடியாமல் கிடக்கிறாள்.

பிள்ளைப்பேற்றால் சோர்ந்த உடம்புடன் துயரத்தால் வருந்துபவள் என் மனைவி. இடுப்பில் இருக்கும் குழந்தைகள் பிசைந்து பிசைந்து வாடிய முலைகளுடையவள். குப்பைக்கீரையின் இளந்தளிரினை பறித்து உப்பு இடவும் வழியின்றி நீரையே உலையாக ஏற்றி காய்ச்சி  சமைத்து மோரில்லாமல் உண்கிறாள்.  அழுக்கேறி கிழிந்திருக்கின்றன அவளது உடைகள். இருந்தும் இல்லற வாழ்வை பழிக்காதவள்.

இவர்கள் இருவரும் மகிழ வேண்டும்.

காட்டை எரித்த நிலத்தில் நடப்படும் பயிர் பசுமையாக வளர்ந்து, கோடையில் வாடுகையில், இழும் என்ற முழக்கத்துடன் மழை பொழியும் வானத்தை போல நீ தரும் பொருளால், பசியால் வாடிய என் சுற்றத்தார் உனை பாராட்ட வேண்டும்.

ஆனால் ஒன்று. அழகிய தந்தங்களை உடைய யானையையே எனக்கு பரிசாக தருவதானாலும் அதை அன்போடு தரவில்லையெனில் எனக்கு அது வேண்டாம். உள்ளத்தில் அன்புடன் நீ எனக்கு தரும் பரிசு மிகச்சிறியதானாலும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்.

கூரிய வேலினைக்கொண்ட குமணனே, உன்னை பாராட்டி பாடிக்கொண்டிருக்கும் நான் பெருமைமிக்க ஓர் குடும்பத்தில் பிறந்தவன்.
பாடலின் முதல் பகுதி முழுவதும் வறுமையின் கொடுஞ்சித்திரம் சிறு சிறு குறிப்புகளின் மூலம் தீட்டப்படுகிறது. மரணத்திற்கான காத்திருப்பு , ஊன்று கோலுடன் சிறுசிறு அடிகளாலான நடை, நிறைய குழந்தைகள்,  பிசைந்து பிசைந்து வாடிய முலைகள், குப்பை கீரையின் சிறிய தளிர்களை உப்பும் மோரும் இன்றி சமைத்தல்…. பின் மழையுடன் குமணனை ஒப்பிடும் நான்கு வரிகள். இப்பகுதியை எழுதியது பெருஞ்சித்திரனார் என்ற தன் குடும்பத்து வறுமையை ஆற்றாமையுடன் நோக்கிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனாகத்தான் இருக்க வேண்டும். ஈ என இரத்தலின் இழிநிலையில் வாடும் ஒரு பெருங்கவிஞன் இப்பாடலில் கடைசி பகுதியை எழுதுகிறான். ஆம். என் வீட்டில் சோறு கூட இல்லை. கீரையை நீரில் கொதிக்க வைத்து உண்கிறோம். அதனால் என்ன?  இசைமேந்தோன்றல் உனை பாடிய யான். கவிஞன். எனக்குறிய கௌரவத்துடன் தா, தரும் பொருளை. அப்படி தருவதானால் சிறு பொருளை தந்தாலும் ஏற்றுக்கொள்வேன். இல்லையா? பெரிய யானையையே கொடுத்தாலும் வேண்டாம்.

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்கிறான் பாரதி. இசை மேந்தோன்றல் நினை பாடிய யானே என்கிறார் பெருஞ்சித்திரனார். கவிமனத்தின் உயரத்திற்கும் வாழ்வியல் அல்லல்களின் பள்ளத்திற்குமான இடைவெளியே இக்கவிதையின் கூரிய முரணாய் தெரிக்கிறது.

பெருஞ்சித்திரனாரின் கவிதைகளை வாசித்தபோது மு. சுயம்புலிங்கம் நினைவிற்கு வந்தார். இவர் எழுதிய மிக சில கவிதைகளையே படித்திருக்கிறேன். இருப்பினும் வறுமையை குறித்து எழுதும் கவிஞர் என்ற பிம்பம் என்னளவில் இவருக்கு விழுந்துவிட்டது. எப்போதோ படித்த ஒரு கவிதையில் வறுமையில் வாடும் மனைவியை பார்த்தபடியே நின்றிருப்பார். நைந்த புடவை, வாடிய உடல், ஒளியிழந்த கண்கள், நகை அணியாத கழுத்து கை காதுகள். தாலிக்கொடியில் இருக்கும் சிறு தங்க ஊக்கு கண்ணை பறிக்கிறது. கேட்கலாம் தான். கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்தும் விடுவாள் தான். ஆனாலும்…. அறுந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்தபடியே கவிதையை விட்டு வெளியேறுவார் சுயம்புலிங்கம். வறுமையை பார்க்க நேரும் போதும் அது குறித்து படிக்கும் போதும் இந்த காட்சி வந்து மறையும்.

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாய் கிடைக்கிறது
இச்சையை தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால் நீட்டி தலைசாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்கு கிடைக்கும்
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.

– மு. சுயம்புலிங்கம்.