அதிநாயகமாக்கம்

கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.

வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்

யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.

இராமன் முடிசூட்டிக்கொள்ள செல்லும்போது அவனை காணும் அயோத்தியா மக்களின் மனநிலையை விளக்கும் பகுதியில் உள்ள பாடல் இது. இதன் கடைசி வரி என்னவோ செய்துவிட்டது. காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார். ஏன் காரணமின்றி அழவேண்டும்? சாதாரண அயோத்தியாவாசிக்கும் இராமனுக்கும் என்ன சம்மந்தம்? இவ்வரியை படித்த போது ஜெயமோகன் சுந்தர ராமசாமியை குறித்து எழுதிய ”நினைவின் நதியில்” நூலினில் ஒரு பகுதி நினைவிற்கு வந்தது. காந்தியை பற்றி சுரா கூறியதாக ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.

“காந்தியை பத்தின நினைவுகள்ல ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வர்ரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரை பாத்ததும் அப்படியே மனசு பொங்குது அவங்களுக்கு…”

காத்லீன் ஃபல்சானி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரின் வலைப்பதிவில் கீழ்கண்ட வரி இருந்தது.

“கிராண்ட் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு பத்து மணிக்கு வுல்ஃப் ப்லிட்சரின் குரல் “ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்” என்று ஒலித்தபோது அங்கு குழுமியிருந்த அனைவரும் (பல பத்திரிக்கையாளர்கள் உட்பட) ஆராவாரம் செய்தனர்.

பின்பு பலர் அழுதனர்.”

ஒபாமாவும் கிட்டத்தட்ட இராமன் போல தான். இன்னும் எதுவுமே செய்யத்தொடங்கவில்லை. இனி தான் தெரியும் அவர் யார்… என்ன செய்யக்கூடியவர் என்று. காந்தியின் முன் அமர்ந்து அழுத இப்பெண்களுக்கு காந்தியின் தென்னாப்பிரிக்க வெற்றிகள், காங்கிரஸ் தலைமை செயல்பாடுகள், அவர் எழுதிக்குவித்த பல நூறு பக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனில் ஏன் அழ வேண்டும்?

கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திலேயே இன்னொரு பாடலில் ஒரு வரி வருகிறது. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதற…. உள்ளே பொங்கிப்பெருகும் மகிழ்ச்சி கண்களில் நீராய் வழிகிறது…

யோசிக்கையில் தோன்றுகிறது. தண்ணென்ற ஓர் ஆளுமைக்காக, வெயில்காய் நிலம் போல மக்கள் ஏங்கியபடி உள்ளனர். சாதாரண தண்மை இங்கு நொடிப்பொழுதில் உரிஞ்சப்பட்டு இல்லாதாகின்றது. ஆழம் வரை செல்லக்கூடிய, மனதையும் ஈரமாக்கவல்ல ஒரு நீர்சுனையை அவர்கள் தேடியபடியே, ஒரு அதிநாயகனுக்காய் ஏங்கிய படி உள்ளனர். அறம் பேணுவான் இவன் என அவர்களுக்கு தோன்றினாலே போதும், எம்முளும் உளன் ஒரு பொருனன் என்று உரக்கக் கூவி விடுவார்கள். கம்ப ராமாயணத்தில் பாடலுக்கு பாடல் இராமனின் பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அவர் அறத்தான் என்பதே அப்பிம்பத்தின் ஆதாரம். வீரன் என்பதோ, சாந்தமானவன் என்பதோ அல்ல. அறத்தான் என நம்பத்தகுந்தவனை அதிநாயகனாய் பாவித்து பாவித்து எத்தனைப்பாடல்கள்…….

புறநானூற்றில் ஔவையின் பிரபலமான பாடல் ஒன்று உள்ளது.

களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ
முன்நின்று கல்நின் றவர்.

என்கிறார் வள்ளுவர்.

என் அரசனின் முன் நிற்காதீர்கள் பகைவர்களே. பலர் என் அரசனின் முன் நின்று இப்போது நடுகற்களாக நிற்கிறார்கள்.

அதிநாயகமாக்கம் இதை விட சிறப்பாய் தமிழில் வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?

உயரத்திருந்து யாசித்தல்

பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 – 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு “அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,” என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு வள்ளல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வரலாற்று ரீதியில் முக்கியமான பாடலாக இருக்கலாம். மற்றபடி வேறெந்த சிறப்பும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை. ஆனால் அடுத்த பாடல் சட்டென வேறோர் தளத்திற்கு தாவி விடுகிறது. இதுவும் ஒரு யாசகப்பாடல் தான். ஆனால் தட்டையான, “எனக்கு ஏதாவது தா” என்ற தொனி இல்லை இப்பாடலில்.

புறம் 159 :

`வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;

பசந்த மேனியொடு படர்அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்ப்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;

என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என்,
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-

உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

“என் வாழ்நாளைக் கடந்தும் பல ஆண்டுகள் உயிரோடிருக்கிறேன். இன்னும் என் உயிர் பிரியவில்லையே” என புலம்புகிறாள் என் தாய். ஊன்றுகோலை காலாக கொண்டு சிறு சிறு அடிகளாக நடக்கிறாள். நூலை விரித்தாற்போன்ற கூந்தல் அவளுடையது. கண் பார்வை மங்கியதால் முற்றத்திற்கு கூட செல்ல முடியாமல் கிடக்கிறாள்.

பிள்ளைப்பேற்றால் சோர்ந்த உடம்புடன் துயரத்தால் வருந்துபவள் என் மனைவி. இடுப்பில் இருக்கும் குழந்தைகள் பிசைந்து பிசைந்து வாடிய முலைகளுடையவள். குப்பைக்கீரையின் இளந்தளிரினை பறித்து உப்பு இடவும் வழியின்றி நீரையே உலையாக ஏற்றி காய்ச்சி  சமைத்து மோரில்லாமல் உண்கிறாள்.  அழுக்கேறி கிழிந்திருக்கின்றன அவளது உடைகள். இருந்தும் இல்லற வாழ்வை பழிக்காதவள்.

இவர்கள் இருவரும் மகிழ வேண்டும்.

காட்டை எரித்த நிலத்தில் நடப்படும் பயிர் பசுமையாக வளர்ந்து, கோடையில் வாடுகையில், இழும் என்ற முழக்கத்துடன் மழை பொழியும் வானத்தை போல நீ தரும் பொருளால், பசியால் வாடிய என் சுற்றத்தார் உனை பாராட்ட வேண்டும்.

ஆனால் ஒன்று. அழகிய தந்தங்களை உடைய யானையையே எனக்கு பரிசாக தருவதானாலும் அதை அன்போடு தரவில்லையெனில் எனக்கு அது வேண்டாம். உள்ளத்தில் அன்புடன் நீ எனக்கு தரும் பரிசு மிகச்சிறியதானாலும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்.

கூரிய வேலினைக்கொண்ட குமணனே, உன்னை பாராட்டி பாடிக்கொண்டிருக்கும் நான் பெருமைமிக்க ஓர் குடும்பத்தில் பிறந்தவன்.
பாடலின் முதல் பகுதி முழுவதும் வறுமையின் கொடுஞ்சித்திரம் சிறு சிறு குறிப்புகளின் மூலம் தீட்டப்படுகிறது. மரணத்திற்கான காத்திருப்பு , ஊன்று கோலுடன் சிறுசிறு அடிகளாலான நடை, நிறைய குழந்தைகள்,  பிசைந்து பிசைந்து வாடிய முலைகள், குப்பை கீரையின் சிறிய தளிர்களை உப்பும் மோரும் இன்றி சமைத்தல்…. பின் மழையுடன் குமணனை ஒப்பிடும் நான்கு வரிகள். இப்பகுதியை எழுதியது பெருஞ்சித்திரனார் என்ற தன் குடும்பத்து வறுமையை ஆற்றாமையுடன் நோக்கிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனாகத்தான் இருக்க வேண்டும். ஈ என இரத்தலின் இழிநிலையில் வாடும் ஒரு பெருங்கவிஞன் இப்பாடலில் கடைசி பகுதியை எழுதுகிறான். ஆம். என் வீட்டில் சோறு கூட இல்லை. கீரையை நீரில் கொதிக்க வைத்து உண்கிறோம். அதனால் என்ன?  இசைமேந்தோன்றல் உனை பாடிய யான். கவிஞன். எனக்குறிய கௌரவத்துடன் தா, தரும் பொருளை. அப்படி தருவதானால் சிறு பொருளை தந்தாலும் ஏற்றுக்கொள்வேன். இல்லையா? பெரிய யானையையே கொடுத்தாலும் வேண்டாம்.

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்கிறான் பாரதி. இசை மேந்தோன்றல் நினை பாடிய யானே என்கிறார் பெருஞ்சித்திரனார். கவிமனத்தின் உயரத்திற்கும் வாழ்வியல் அல்லல்களின் பள்ளத்திற்குமான இடைவெளியே இக்கவிதையின் கூரிய முரணாய் தெரிக்கிறது.

பெருஞ்சித்திரனாரின் கவிதைகளை வாசித்தபோது மு. சுயம்புலிங்கம் நினைவிற்கு வந்தார். இவர் எழுதிய மிக சில கவிதைகளையே படித்திருக்கிறேன். இருப்பினும் வறுமையை குறித்து எழுதும் கவிஞர் என்ற பிம்பம் என்னளவில் இவருக்கு விழுந்துவிட்டது. எப்போதோ படித்த ஒரு கவிதையில் வறுமையில் வாடும் மனைவியை பார்த்தபடியே நின்றிருப்பார். நைந்த புடவை, வாடிய உடல், ஒளியிழந்த கண்கள், நகை அணியாத கழுத்து கை காதுகள். தாலிக்கொடியில் இருக்கும் சிறு தங்க ஊக்கு கண்ணை பறிக்கிறது. கேட்கலாம் தான். கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்தும் விடுவாள் தான். ஆனாலும்…. அறுந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்தபடியே கவிதையை விட்டு வெளியேறுவார் சுயம்புலிங்கம். வறுமையை பார்க்க நேரும் போதும் அது குறித்து படிக்கும் போதும் இந்த காட்சி வந்து மறையும்.

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாய் கிடைக்கிறது
இச்சையை தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால் நீட்டி தலைசாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்கு கிடைக்கும்
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.

– மு. சுயம்புலிங்கம்.

செங்களம் படக் கொன்று….

தேவர்மகன் படம் பார்த்த ஒரு வாரத்திற்கு அந்த நடுக்கம் இருந்தது. எனது வழமையான ”குருதி காண் அச்சம்” மட்டுமல்ல அது. சக்தியும் மாயனும் தத்தம் கைகளில் வாளுடன் நிற்கின்றனர். மாயனின் வாளை தடுக்க மட்டுமே எத்தனித்த சக்தியின் கை நழுவ… கீழே உருண்டோடுகிறது மாயனின் தலை. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் இக்காட்சி. “தலை உருளுதலுக்கு” எத்தனை அருகில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமே மயிர்கூச்செரிய செய்தது. எத்தனை முறை கையில் சிறு கத்தியுடன் விளையாடி இருப்பேன் தங்கையிடம்? எத்தனை முறை கோலுடன் “கத்திச்சண்டை” போட்டிருப்பேன் தோழர்களிடம். கை நரம்பு கிழிபட்டு உதிரம் வழிவதும் கோல் கை தவறி கண் பறிப்பதும் எதேச்சையாய் நிகழாது போன சாத்தியங்கள் மட்டுமே. கை தொடும் தூரத்தில் அமர்ந்திருக்கும் கொலை சாத்தியத்தை குறித்த அச்சத்தை தேவர் மகன் என்னுள் விளைவித்தது. கமல் பின்பொருமுறை ஒரு பேட்டியில் இவ்வாறு கூறி இருந்தார் – ”வன்முறைப் படங்களில் இரு வகை உண்டு. தேவர் மகன் பார்த்தபின் வன்முறையை குறித்த அச்சம் மட்டுமே மிஞ்சும். ஜாக்கி ஜான் படம் பார்த்துவிட்டு வருகையில் யாரையாவது அடிக்கவென தினவெடுத்து நிற்கும் கைகளும் கால்களும்.”

பொதுவாகவே உதிரம் வழிந்தோடும் வன்முறை சார்ந்த படங்களை தவிர்த்துவிடுவேன். எது சாலை விபத்தை கண்டால் என்னை தலையை வேறுபுறம் திருப்ப உந்துகிறதோ அது தான் இப்படங்களையும் காணவிடாது செய்கிறது. ஆனால் ”கில் பில்”(Kill Bill) வேறு ஒரு அனுபவம். படம் முழுக்க குருதி வழிந்தோடுகிறது. கதை என்று என்ன இருக்கிறது அதில்? பில் என்ற ஒரு கொலைக்கூட்ட தலைவன் தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்று ”சராசரி” வாழ்வை வாழ எத்தனித்த அவளை, தன் கூட்டத்துடன் சென்று அவளது திருமணத்தன்று சுட்டு வீழ்த்துகிறான். கணவனும் 4 உறவினர்களும் அங்கேயே இறக்க, இவள் 7 வருட கோமா நிலையில்… விழித்தெழுந்ததும் பில்லை கொல்ல விழைகிறாள். எப்படி என்பதை இரண்டு படங்களாக தந்தார் டரண்டினோ. படம் முழுக்க தலைகள் உருள்கின்றன, கைகள் துண்டாகின்றன, சிரமிழந்த கழுத்திலிருந்தும் கரமிழந்த தோளிலிருந்தும் உதிரம் ஊற்றெனப்பெருகுகிறது. ஆனால் தலை திருப்பவில்லை. மாறாக ரசித்தேன் (குற்றவுணர்வுடன்). இப்போது யோசிக்கையில் தோன்றுகிறது. இங்கு வன்முறை அதீதமாக்கப்பட்டு, அதன் அதீத நிலையில் தனது பயங்கரங்களை எல்லாம் இழந்து நிகழ்கலையாய் காட்சியளிக்கிறது. இன்னொன்றும் உள்ளது. நான் ரசித்த அதீத வன்முறை படங்கள் அனைத்துமே, தங்களுக்கும் நான் வாழும் நிகழ்தளத்திற்குமான உறவை வலிந்து துண்டித்துக்கொண்ட படைப்புகளே. கில் பில், 300, சின் சிட்டி (Sin City) போன்ற படங்களை சொல்லலாம். இவை அவற்றின் தொடக்கம் முதலே ஒரு வித அலாதி உலகில் புகுந்துகொள்வதால் அதன் வன்முறையை, குருதிப்பெருக்கை “விலகி நின்று” பார்க்க முடிகிறது.

திடீர் என கில் பில் பற்றி யோசிக்க வைத்தது சுந்தர காண்டம். வரம் பதிப்பகம் வெளியிட்ட “சுந்தர காண்டம்” ஒலிநூலினை கேட்டுக்கொண்டிருந்தேன். கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் பகுதியினை மூலத்தின் அடியொற்றி உரைநடையில் எழுதப்பட்ட பழ. பழனியப்பனின் நூலின் ஒலி வடிவம் இது. சுந்தரராமன் என்பவரின் அருமையான குரலுடன் வெளிவந்துள்ளது. சுந்தரகாண்டம் அனுமன் மகேந்திர மலையில் இருந்து புறப்படுவதில்(கடல் தாவு படலம்) தொடங்கி, கடல் அரக்கர்களை தாண்டி இலங்கை சென்று சீதையை கண்டு, அரக்கர்களுடன் போரிட்டு, இலங்கையை எறியூட்டி இராமனிடம் திரும்ப வந்து ”கண்டனென் கற்பினுக்கு அணியை” என்று சொல்வதில் (திருவடி தொழுத படலம்) முடிகிறது. சுந்தரராமனின் குரலில் கேட்டு முடித்தவுடன் மூலத்தை புரட்டிப்பார்த்தேன் (அ.ச.ஞானசம்மந்தன் தொகுத்தது. கங்கை புத்தக நிலைய வெளியீடு). ஓரளவிற்கு சரளமாய் வாசிக்க முடிந்தது. முடித்ததும் எனை அதிகம் ஈர்த்தது இப்பகுதியின் வன்முறை தான். வாசித்துக்கொண்டிருந்த பொழுதே ”கில் பில்”லையும் 300ஐயும் நினைவூட்டியது. முடிசூட்டு கோலத்தில் அமர்ந்திருக்கும் இராமனின் காலடியை வணங்கும் அமைதியின் உருவாய் திகழும் அனுமன் அல்ல இதில். போரின் அத்தனை பயங்கரங்களையும் “மறம்” என காணும் போர் வீரன் இந்த அனுமன்.

அனுமன் அசோகவனம் புகுந்து சீதையிடம் கணையாழி பெற்று திரும்புகையில் இராவணனின் கவனத்தை கவர வேண்டி அசோகவனத்தை சிதைக்கிறான். அதை கண்ட அரக்கர்கள் தாக்க வர, அவர்களை கொல்கிறான். செய்தி இராவணன் செவி சென்று சேர்கிறது.  அரக்கர் படை, படைத்தளபதி சம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகள், இராவணனின் மகன் அக்ககுமாரன் என ஒவ்வொருவராக வந்து அனுமனுடன் போரிட்டு மடிகின்றனர். இறுதியில் போரிட வரும் இந்திரசித்தனின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இராவணனைப் போய் காண்கிறான். இப்படி போகிறது சுந்தரகாண்டம். இதன் தொடக்கத்திலே மகேந்திர மலையில் இருந்து இலங்கை நோக்கி பறக்க கால் ஊன்றிய பொழுது, கனம் தாளாது மலையின் வயிறு கிழிந்து குடல் வெளிவந்தது என்ற இடத்திலேயே இது ஒரு மாய தளத்துள் நுழைந்துவிடுகிறது (குரங்கு பறப்பதே அது தானே என்கிறீர்களா? 🙂 ) . அதன் பின் தொடரும் வன்முறைகளில் எல்லாம் விரவிக்கிடக்கும் இவ்வித அதீதங்கள் ரசிக்கவே வைக்கின்றன. செங்களம் படக்கொன்று… என தொடங்கும் குறுந்தொகை பாடல் ஒன்று. பாடல் முழுவதும் போரில் வழியும் குருதியால் சிவந்து நிற்கும். கிங்கரர் வதை படலம் தொடங்கி  சுந்தர காண்டம் முழுவதும் உதிரச்சிவப்பே கண்களை நிறைக்கிறது. எழுத்துருக்களெல்லாமும் சிவந்தது போல…..

சில பாடல்கள்…

பரு வரை புரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால்
சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்;
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்-
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்.

மலை அளவிற்கு உயர்ந்து நிற்கிறது அனுமன் தோள். அம்மலையிலிருந்து பாயும் அருவியைப் போல அவனை தாக்க வந்த அரக்கர்களின் குருதி வழிகிறது. ஒருவர் ஒருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது தலைகள் தரையினில் உருள்கின்றன. மின்னலும் அஞ்சி அசையும் படி இருந்தது அனுமனின் அடி ஒவ்வொன்றும்.

ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால்
சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
தேடிக் கொன்றனன் சிலவரை – கறங்கு எனத் திரிவான்.

ஓடி கொன்றான் சிலரை; உடலோடு உடல் இடித்துக்கொன்றான் சிலரை; நெடிய மரத்தினை கொண்டு அடித்துக்கொன்றான் சிலரை; அங்கு விழுந்து கிடந்த பிணங்களினூடே யாரேனும் உயிரோடிருக்கின்றனரா என தேடிக்கொன்றான் சிலரை – சுழற்காற்று போல திரிந்த அனுமன்.

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,
நீறு சேர் நெடுந் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப
ஆறு போல் வரும் குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு
ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை.

சேறும் வண்டலும் போல மூளையும் சதையும் மிதக்க அந்த நெடிய தெருவெல்லாம் வெள்ளம் வந்த ஆறு போல பாய்ந்தோடிய குருதி அனுமனின் கால்களால் அலைக்கப்பட்டு, இலங்கை முடிவின்றி வாயிலிருந்து உதிரம் உமிழ்வதை போல பாய்ந்தோடியது.

தரு எலாம் உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து
உரு எலாம் உடல்; உவரி எலாம் உடல்; உள்ளூர்க்
கரு எலாம் உடல்; காயம் எலாம் உடல்; அரக்கர்
தெரு எலாம் உடல்; தேயம் எலாம் உடல் – சிதறி

மரம் எல்லாம் உடல்; திண்ணை எல்லாம் உடல்; தெரு முனைகளில் எல்லாம் உடல்; கடல் எல்லாம் உடல்; ஊர் நடு எல்லாம் உடல்; ஆகாயம் எல்லாம் உடல்; தெரு எல்லாம் உடல்; தேசமெல்லாம் உடல் – சிதறிக்கிடந்தன.

ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்; –
தான் எலாரையும், மாருதி சாடுகை தவிரான்,
மீன் எலாம் உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல்
வான் எலாம் உயிர்; மற்றும் எலாம் உயிர் – சுற்றி

உடல்களில் இருந்து உயிரை பிரித்து எடுத்துச்செல்லும் காலன் ஓய்ந்தே விட்டான். எல்லாரையும் அடித்துக்கொல்வதை அனுமன் நிறுத்தவேயில்லை. அவனால் கொல்லப்பட்டவர்களின் உயிர்கள் விண்மீன்களில் எல்லாம், மேகமெல்லாம், அதுக்கும் மேலே மேலே வானமெல்லாம்… அதையும் தாண்டி அலைந்துகொண்டிருந்தன.

சொல் விரிவு – இரு புறநானூற்றுப் பாடல்கள்

விதிர்²-த்தல் [ vitir²-ttal ] 11 v vitir. [T. Tu. vedaru, K. bidiru.] intr.–1. To tremble, quiver; நடுங்கு தல். 2. To be afraid; அஞ்சுதல். (W.)–tr. 1. To scatter, throw about; சிதறுதல்.
சொல் என்பதோர் ஒலி வடிவம். சொற்களால் ஆனதல்ல மொழி. சொல் எவற்றின் ஒலியாகிறதோ அவற்றால் ஆனது மொழி. இரு சற்றே மாறுபட்ட பொருட்கள் ஒரே சொல்லை குறிப்பானாய் கொண்டிருப்பதும், இடம் பொறுத்து அர்த்தம் கொள்ளப்படுவதும் வழக்கம் தான்.
புறநானூற்று கவிதைகள் இரண்டு. இரண்டிலும் விதிர்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அச்சொல்லினைக்கொண்டு உருவாக்கப்படும் களங்களுக்கிடையே எத்தனை தொலைவு…
விதிர்த்தல் – To scatter, throw about; சிதறுதல்.
188. மக்களை இல்லோர்!
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் – தாம் வாழும் நாளே.
– பாண்டியன் அறிவுடை நம்பி
பல உணவுகளை படைத்து பலரோடு உண்ணும்
எல்லாம் பெற்ற செல்வர் ஆயினும், இடை பட
குறுகுறுவென நடந்து, சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் குழப்பியும்
நெய் சேர்ந்த சாதத்தை உடலெல்லாம் உதிர்த்தும்
மயக்கும் மக்களை இல்லாதவர்க்கு
பயனேதும் இல்லை தாம் வாழும் நாளே
——-
விதிர்ப்பு – Trembling, shivering, shaking from fear; நடுக்கம்.
255. முன்கை பற்றி நடத்தி!
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் அப்பெண். செல்லும் வழியில் ஓர் கானகத்தில் காதலன் உயிர் துறக்கிறான். வெயிலில் கிடக்கும் அவனது உடலை பார்த்தபடி பாடுகிறாள்…
ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
திரைவளை முன்கை பற்றி-
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!
– வன்பரணர்
ஐயோ எனில் புலி வருமோ என அஞ்சுகிறேன்
அனைத்தெடுக்க முயன்றேன், விரிந்த மார்பை எடுக்க முடியவில்லை
என் போல் பெரும் நடுக்கமுறுக உன்னை
கொன்ற அறமில்லாத விதி!
வளையிட்ட என் கைபற்றி
நிழலுக்கு போகலாம்
நடந்துவாயேன் சிறிது
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்ப்பது தரும் உணர்விற்கும் என் போல் பெருவிதிர்ப்புறுக என்று கூற்றுவனுக்கு இடப்படும் சாபத்திற்கும் உணர்வு ரீதியில் சில ஒளியாண்டுகள் தூரம் இருக்கும். ஆனால் அவ்விரிவை விதிர்ப்பு எனும் சொல் கடக்கிறது இங்கு அனாயாசமாய்.

அலகிலா சாத்தியங்களினூடே….

ஒரு படைப்பிற்கு, படைப்பாளியை தருவது என்பது அப்படைப்பிற்கு ஓரு முற்றுப்புள்ளியை, முடிவான அடையாளத்தை தந்து, “எழுதுதலை” முடித்துவைக்கும் செயலாகும்.

– ரோலண்ட் பார்த்தெஸ் (”ஆசிரியனின் மரணம்” கட்டுரையில்)

நான் வாசித்தவரை, குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என பொதுவாக வகைப்படுத்தலாம். தலைவியும் தோழியும் தலைவனும் தோழனும் தத்தமக்குள் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையும் ஏதோவோர் நாடகத்தின் உச்சக்காட்சியின் உறைகணமாக நிற்கிறது. அக்கணத்தின் உக்கிர உணர்வுகள் சொற்களாய் வழிந்தோடுவது தான் மீண்டும் மீண்டும் குறுந்தொகையில் நிகழ்கிறது. புறவயமான இச்சொற்களை சரடாகக் கொண்டு வாசக அகம் மேலேறி அதன் உச்சத்தை அடைகிறது. எனில் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாசல் மட்டுமே… அதனூடே நாம் செல்லும் தூரத்தை நமது அகமே தீர்மானிக்கிறது. இதை ரோலந்த் பார்தஸ் என்ற பிரென்ச் மொழியியலாளர் “வாசித்தல்-எழுதுதல்” (Reading-Writing) என்கிறார். வாசகன் வாசகன் மட்டுமல்ல. அவனளவில் அவனது வாசிப்பும் ஒருவகை “எழுதுதலே”. வாசிப்பின் அலகிலா சாத்தியங்களினூடே அவன் நிகழ்த்தும் பயணம் அது.

ஒரு குறுந்தொகை கவிதை. கவிதையை தனிப்பரப்பாய் கொண்டால், இது ஒரு விவரணை மட்டுமே…

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.

-தாமோதரனார்.

சூரியன் அகன்ற வானத்தில்
பாவம் இந்தப் பறவை
நெடிந்துயர்ந்த மரக்கிளைகளில் காத்திருக்கும்
பிள்ளைகளின் உள்வாய்க்கு புகட்ட
இரை கொண்டு விரைகிறது

தலைவி கூற்றாக வரும் இக்கவிதை பிரிவின் துயரை, தலைவனின் நிலையை குறித்த வருந்தத்தை, தந்தையை எதிர்நோக்கி நிற்கும் தன் பிள்ளைகளின் ஏக்கத்தை, இப்பறவையை கண்டாவது அவன் திரும்பக்கூடாதா என்ற ஆதங்கத்தை பேசுகிறது.

ஆனால் இதை தலைவியின் கூற்றாக மட்டும் ஏன் காண வேண்டும்? தலைவனின் ‘தனைப் போல் பறவை” என்ற கழிவிரக்க வெளிப்பாடாக, வெறும் கையுடன் திரும்பும் அவனது ஏக்கமாக, தூரம் வந்துவிட்டவனின் பிள்ளைகள் குறித்த நினைவாக….

இவை ஏதுமன்றி, கவிஞனின், அந்திவேளையில் இரைகொண்டு விரையும் பறவையைக் குறித்த மென்சோகமாகவும் காணலாம் அல்லவா?

ஒரு படைப்பு என்பது ஒவ்வொரு வாசிப்பிலும் நீட்சி கொள்ளும் பரப்பு. படைப்பாளி படைத்து முடித்தவுடன் அது தனி உரு கொள்கிறது. இனி அதன் பயணத்தை அது தொடரும். அந்த படைப்பாளியின் மூலம் பிறந்தது அதற்கு ஒரு எதேச்சை மட்டுமே. படைப்பாளியே முக்கியமில்லை எனும் போது, உரையாசிரியர்கள் வகுத்த திணை துறை கூற்று இத்தியாதிகள் குறுந்தொகையின் கவிதை அனுபவத்தை பெற அத்தனை முக்கியமா என தெரியவில்லை. எனக்கு இவற்றின் முழு ஆழம் தெரியாததால் வரும் கூற்றாக இருக்கலாம் இது. ஆனால் குறுந்தொகையிலிருந்து நான் எதை பெற்றேனோ, அதை பெற எனக்கு இவை தேவைப்படவில்லை. இப்படி சொல்வதன் நோக்கம் மேலும் ஓர் வாசிப்பிற்கான சாத்தியத்தை கண்டடைதலேயன்றி சங்கப்பாடல்களின் மீது நிகழ்த்தப்படும் மறபார்ந்த வாசிப்பை புறம்தள்ளுதல் அல்ல.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

– வெள்ளிவீதியார்

கால்கள் ஓய்ந்தன, கண்கள்
பார்த்துப் பார்த்து வலுவிழந்தன
அகண்டு இருண்ட வானத்து வின்மீன்களை விட
அதிகம், இந்த உலகத்தில் பிறர்.

என்ற கவிதை செவிலித்தாயின் கூற்றாக வருகிறது. இக்கவிதையின் குவிமையம் “பிறர்” என்ற அந்த ஒரு சொல். கவிதையின் அத்தனை சொற்களும் சூரியகாந்தி மலர்களைப் போல, ஞாயிறெனச் சுடரும் அப்பிறரை நோக்கியே திரும்பியுள்ளன. இக்கவிதையின் எல்லை செவிலித்தாயின் “பிறருடன்” மட்டுமே முடிவடைகிறதா என்ன?

“கசார்களின் அகராதி” நாவலில் மிலோராட் பாவிச், அர்த்தங்கள் கொள்ளும் அலகிலா சாத்தியங்களை குறித்து இப்படி எழுதுகிறார்.

…yet, once I tell you what it is, it will no longer be all the things it is not.

– Milorad Pavic (Dictionary of Khazhars)

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் : ஆண்டாள் திருப்பாவை – 19

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

குத்து விளக்கு எரிய, யானைத்தந்தத்தினால் செய்த கால்களையுடைய கட்டிலின் மேல், மெத்தென இருக்கும் மெத்தையின் மேல் ஏறி, கொத்தாக பூவினை முடிந்த கூந்தலுடைய நப்பின்னையின் முலைகளின் மேல் கைகளை வைத்துப் படுத்திருக்கும் மலர் மார்பா, வாயை திறந்து பேசு. மையெழுதிய கண்களையுடையவளே, நீ உன் கணவனை எவ்வளவு நேரமாயினும் எழுப்ப மாட்டாய் பார். சிறிதளவும் கூட அவனைப் பிரிந்திருக்க முடியாது உன்னால். நான் கூறுவது தத்துவமொன்றும் அல்ல,
உண்மை.

(எனக்கு மிகவும் பிடித்துப்போன பாடல்களில் ஒன்று இது. இதன் ஓசைக்காகவே).

பின்னிரவும் கபிலரும் சந்தித்த போது…

இரு குறுந்தொகை கவிதைகள். கபிலர் எழுதியவை. இரண்டையுமே பெண்கள் பாடுகிறார்கள், இழப்பின் வலியின் வெளிப்பாடாய். இக்கவிதைகளின் அழகியல் அப்பெண்கள் தங்களது இன்னலுக்கு இயற்கையை சாட்சிக்கு அழைக்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.

முதல் கவிதை :

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

-கபிலர். (குறுந்தொகை 25)

யாரும் இல்லை. அந்த திருடன் மட்டும் தான் இருந்தான்.
அவன் பொய் உரைத்தால் நான் என்ன செய்வேன்?
தினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன்
ஓடும் நீரில் ஆரல் மீனுக்காக காத்திருந்த
கொக்கும் இருந்தது நாங்கள் கூடியபோது.

கள்வன் கொக்கு… இரையாகிவிட்ட ஆரல் இவள்…

இரண்டாவது கவிதை :

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.

-கபிலர். (குறுந்தொகை 42)

நமது காதல் தீர்ந்து போனாலும், இரவெல்லாம்
மழை பெய்ததென அருவி
சப்தமிட்டு அறிவிக்கும் நாட்டினைச் சேர்ந்தவனே, நமது
தொடர்பும் தேய்ந்துபோகுமோ?

இரவெல்லாம் பெய்த மழையின் எதிரொலியாய் எழுகிறது காலையில் அருவியின் பேரிரைச்சல். முறிந்து போன காதல் உள்ளமெங்கும் வலியென எதிரொலிப்பதைப் போல….

இவ்விரு கவிதைகளிலும் “போல” வரவில்லை. மிக சன்னமாக நிகழ்கிறது இந்த தொடர்புறுத்துதல். காதல் கவிதைகளைப் வாசிக்க தனிமையில் மட்டுமே வாய்க்கும் உள்ளம் நெகிழ்ந்த பின்னிரவுகள் தான் சரியான நேரம். குறுந்தொகைக்கும்…