தமிழ் சினிமா – சில கேள்விகள்.

கொஞ்சம் நாள் தொடர் ஓட்டத்தில் எல்லாம் கலந்து கொள்ளாமல் இருந்தேன். இழுத்து விட்ட ஐகராஸ் பிரகாஷுக்கு நன்றி . இந்த கேள்விகளின் நதிமூலம் ஆராய விரும்புபவர்கள் பிரகாஷின் பதிவை சுட்டவும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயதில், பார்த்த முதல் படம் எது என்பதெல்லாம் துள்ளியமாக நினைவிலில்லை. மிகச் சிறிய வயதிலேயே என்பது மட்டும் தெரியும். சிறுவயதும் சினிமாவும் என யோசித்தால் சில புகைமூட்டமான நினைவுகள் வருகின்றன. அப்போது நாங்கள் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை என அருகருகே வீடு மாற்றிக்கொண்டிருந்ததால் தேவி திரையரங்கு வளாகமும் அங்கு பார்த்த (முப்பரிமான கண்ணாடியோடு) மை டியர் குட்டிச்சாத்தான், கிங் சாலமன்ஸ் மைன்ஸ், ஜாக்கி ஷராஃபின் ஹீரோ நினைவுக்கு வருகின்றன. வீட்டருகே இருந்த பாரகன் தியேட்டரில் பார்த்த பட்டனத்தில் பூதம், அல்லி ராஜ்ஜியம், மாயா பஜார் மற்றும் விட்டலாச்சாரியார் படங்களும். இன்றை போலவே அன்றும் கொண்டாட்டமான படங்களே பிடித்திருந்தன. பூவே பூச்சூடவா நானும் என் தங்கையும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்த படம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

நேற்று முன் தினம் பார்த்த ராமன் தேடிய சீதை. படம் எனக்கு பிடித்திருந்தது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சென்ற வாரம் வீட்டில் டிவிடியில் பார்த்த சரோஜா. பார்த்ததும் தோன்றியது… மிக மிக சிறிய படம். கால அளவை மட்டும் சொல்ல வில்லை. களமும் மிகச்சிறியது. நகைச்சுவையை எடுத்துவிட்டால் ஒன்றுமே எஞ்சியிருக்காது படத்தில். படத்தை மிகவும் ரசித்தேன் என்றாலும் எல்லா படங்களும் இப்படியே இருந்தால் Claustrophobicஆக உணர ஆரம்பித்து விடுவோம் என்று படுகிறது. தவமாய் தவமிருந்தேன் போன்ற ஒரு வாழ்கையை முழுவதுமாய் பார்க்கும் படங்களும் நமக்கு தேவை.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மகாநதி. வறுமையின் நிறம் சிவப்பு. வீடு. தண்ணீர் தண்ணீர்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

குஷ்பு விவகாரம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அப்பு கமல். தசாவதாரத்தில் கடைசி சண்டை காட்சி. மை டியர் குட்டிச்சாத்தானில் ஐஸ் கிரீம் நீட்டப்படும் இடத்தில் என் கைகள் முன் இருக்கைகாரரின் தலையை தாக்கின. இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தான் படுகிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வரலாற்றில் ஆர்வமுண்டு என்பதால் திரைப்படம் குறித்த வரலாற்று தகவல்களை (தியோடர் பாஸ்கரன், ஷாஜியின் கட்டுரைகள் போல) ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. நிழல், கனவுப்பட்டறை போன்ற திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்களும். தவிரவும் வாரஇதழ்களை (குமுதம், விகடன் இத்தியாதிகள்) வாங்கும் யாரும் திரைப்படம் குறித்த செய்திகளை தேடிச்செல்ல வேண்டியதில்லை. வீடு தேடி வரும். என்ன… அது திரைப்படத்தை பற்றி இருக்காது. திரைப்படத்துறையையும் அதை சார்ந்தவர்களையும் குறித்த மீதகவல்களாக (metadata) மட்டுமே இருக்கும்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை எனக்கு அறிமுகமானதே சினிமா மூலமாக தான். ஆங்கில இசை புரிவதில்லை. கொஞ்சம் தள்ளி கிஷோர் குமார், ரஃபி, மகாராஜபுரம் என்று சென்றது கூட வெகு சமீபத்தில் தான். அதற்கு முன்பெல்லாம் இசை என்றால் எம்.எஸ்.வி, இளையராஜா தான். சமீபத்தில் வாசித்த நல்ல கட்டுரை ஏ. எம். ராஜா பற்றி ஷாஜி எழுதியது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்திய மொழிப்படங்கள் எனில் மலையாளம் மிக அதிகமாக பார்ப்பதுண்டு (கடைசியாக பார்த்தது ஶ்ரீநிவாஸனின் அரபிகதா). சில வங்க மொழிப்படங்களை பார்த்ததுண்டு. இந்திய அளவில் அவ்வளவு தான். உலக மொழி படங்கள் மீது ஆர்வம் உண்டு. பருவத்திற்கு ஏற்ப பார்க்கும் மொழிகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக கொரிய மற்றும் ஜப்பானிய படங்கள்.

அதிகம் தாக்கிய படங்கள் :

வாழ்வு அழிவை நோக்கி செல்லும் பயணம் என்ற பிம்பத்தை மிக அழுத்தமாக விதைத்ததற்காக –  ஷேம் (ஸ்வீடன் – இங்க்மார் பெர்க்மன்).  டர்டில்ஸ் கேன் ஃப்ளை (குர்த் – இரான் பஃமான் கோபாதி). ரான் (ஜப்பான் – அகிரா)

வாழ்வின் உன்னதம் என்று ஒன்றை காட்டியதற்காக – ரெட் பியர்ட், இகிரு (ஜப்பான் – அகிரா). சில்றன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ் (ஈரான் – மஜித் மஜீதீ), அபுர் சன்சார் (வங்கம் – சத்யஜித் ரே).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மதுரைக்கு விமானத்தில் சென்ற போது எனக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி கஞ்சா கருப்பு பயணம் செய்தார். இது தான் சினிமாவுடனான எனது நேரடி தொடர்பு. ஒன்றும் செய்யவில்லை. அதுவாக நிகழ்தால் தடுக்க மாட்டேன். பட்டாம்பூச்சி சிறகசைத்தால் புயல் வருமாம். எனில் இதனாலும் ஏதேனும் நிகழாமல் போகுமா என்ன?

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிக மிக நன்றாக இருப்பதாக. இந்த தலைமுறை தமிழகத்திற்கும் சென்ற தலைமுறை தமிழகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது என்பது கண்கூடு. கண்ணாடிக்குவளையின் மீது விஷம் என ஸ்கெட்ச் பேனாவினால் எழுதி ஒட்டி அதில் காமிராவை சூம் செய்யும் சேட்டையெல்லாம் நடந்திருக்கிறது நம் தமிழ் சினிமாவில் என்று யோசித்தால் இப்போது எவ்வளவு முன் நகர்திருக்கிறோம் என்று தெரிகிறது. கடந்த 2 – 3 ஆண்டுகளுக்குள் வந்துள்ள நல்ல படங்களின் விகிதம் தமிழ் சினிமாவிற்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை சுட்டுகிறது. (அதாவது ஏ.வி.எம் மீண்டும் ஒரு பெரிய பட்ஜட் மசாலா படம் ஒன்றை தயாரிக்காதிருந்தால்…)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வேளை நிகழ்ந்துவிட்டால்… என்று வைத்துக்கொள்வோம். தோனிக்கு கட் அவுட் வைத்து பால்/பீர்/காசு/துண்டு காகித அபிஷேகம், இளைய சிங்கம் பத்ரிநாத் நற்பணி மன்றம்….. நிகழலாம். சினிமா வேறு ஏதோ ஒன்றிற்கான வடிகால் என்று தான் தோன்றுகிறது. இது இல்லையென்றால் வேறு ஒன்று. தமிழர்களுக்கு எந்த அளவிற்கு மாறுதல் வரும் என்று தெரியவில்லை. மீண்டும் 7 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியே நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு ஊர்கதை பேசும் குடும்பத்தலைவர்கள், ஓடிப்பிடிச்சி, கண்ணாம்மூச்சி ஆடும் பொடிசுகள் உருவாகலாம். (பெண்களை நெடுந்தொடர்களிலிருந்து பெயர்த்தெடுத்தல் நிகழும் என படவில்லை).

நான் அழைக்கும் நால்வர் :

முபாரக்
மஞ்சூர் ராசா
அய்யனார்
ஆசிப்
லக்ஷ்மன் ராஜா

செங்களம் படக் கொன்று….

தேவர்மகன் படம் பார்த்த ஒரு வாரத்திற்கு அந்த நடுக்கம் இருந்தது. எனது வழமையான ”குருதி காண் அச்சம்” மட்டுமல்ல அது. சக்தியும் மாயனும் தத்தம் கைகளில் வாளுடன் நிற்கின்றனர். மாயனின் வாளை தடுக்க மட்டுமே எத்தனித்த சக்தியின் கை நழுவ… கீழே உருண்டோடுகிறது மாயனின் தலை. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் இக்காட்சி. “தலை உருளுதலுக்கு” எத்தனை அருகில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமே மயிர்கூச்செரிய செய்தது. எத்தனை முறை கையில் சிறு கத்தியுடன் விளையாடி இருப்பேன் தங்கையிடம்? எத்தனை முறை கோலுடன் “கத்திச்சண்டை” போட்டிருப்பேன் தோழர்களிடம். கை நரம்பு கிழிபட்டு உதிரம் வழிவதும் கோல் கை தவறி கண் பறிப்பதும் எதேச்சையாய் நிகழாது போன சாத்தியங்கள் மட்டுமே. கை தொடும் தூரத்தில் அமர்ந்திருக்கும் கொலை சாத்தியத்தை குறித்த அச்சத்தை தேவர் மகன் என்னுள் விளைவித்தது. கமல் பின்பொருமுறை ஒரு பேட்டியில் இவ்வாறு கூறி இருந்தார் – ”வன்முறைப் படங்களில் இரு வகை உண்டு. தேவர் மகன் பார்த்தபின் வன்முறையை குறித்த அச்சம் மட்டுமே மிஞ்சும். ஜாக்கி ஜான் படம் பார்த்துவிட்டு வருகையில் யாரையாவது அடிக்கவென தினவெடுத்து நிற்கும் கைகளும் கால்களும்.”

பொதுவாகவே உதிரம் வழிந்தோடும் வன்முறை சார்ந்த படங்களை தவிர்த்துவிடுவேன். எது சாலை விபத்தை கண்டால் என்னை தலையை வேறுபுறம் திருப்ப உந்துகிறதோ அது தான் இப்படங்களையும் காணவிடாது செய்கிறது. ஆனால் ”கில் பில்”(Kill Bill) வேறு ஒரு அனுபவம். படம் முழுக்க குருதி வழிந்தோடுகிறது. கதை என்று என்ன இருக்கிறது அதில்? பில் என்ற ஒரு கொலைக்கூட்ட தலைவன் தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்று ”சராசரி” வாழ்வை வாழ எத்தனித்த அவளை, தன் கூட்டத்துடன் சென்று அவளது திருமணத்தன்று சுட்டு வீழ்த்துகிறான். கணவனும் 4 உறவினர்களும் அங்கேயே இறக்க, இவள் 7 வருட கோமா நிலையில்… விழித்தெழுந்ததும் பில்லை கொல்ல விழைகிறாள். எப்படி என்பதை இரண்டு படங்களாக தந்தார் டரண்டினோ. படம் முழுக்க தலைகள் உருள்கின்றன, கைகள் துண்டாகின்றன, சிரமிழந்த கழுத்திலிருந்தும் கரமிழந்த தோளிலிருந்தும் உதிரம் ஊற்றெனப்பெருகுகிறது. ஆனால் தலை திருப்பவில்லை. மாறாக ரசித்தேன் (குற்றவுணர்வுடன்). இப்போது யோசிக்கையில் தோன்றுகிறது. இங்கு வன்முறை அதீதமாக்கப்பட்டு, அதன் அதீத நிலையில் தனது பயங்கரங்களை எல்லாம் இழந்து நிகழ்கலையாய் காட்சியளிக்கிறது. இன்னொன்றும் உள்ளது. நான் ரசித்த அதீத வன்முறை படங்கள் அனைத்துமே, தங்களுக்கும் நான் வாழும் நிகழ்தளத்திற்குமான உறவை வலிந்து துண்டித்துக்கொண்ட படைப்புகளே. கில் பில், 300, சின் சிட்டி (Sin City) போன்ற படங்களை சொல்லலாம். இவை அவற்றின் தொடக்கம் முதலே ஒரு வித அலாதி உலகில் புகுந்துகொள்வதால் அதன் வன்முறையை, குருதிப்பெருக்கை “விலகி நின்று” பார்க்க முடிகிறது.

திடீர் என கில் பில் பற்றி யோசிக்க வைத்தது சுந்தர காண்டம். வரம் பதிப்பகம் வெளியிட்ட “சுந்தர காண்டம்” ஒலிநூலினை கேட்டுக்கொண்டிருந்தேன். கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் பகுதியினை மூலத்தின் அடியொற்றி உரைநடையில் எழுதப்பட்ட பழ. பழனியப்பனின் நூலின் ஒலி வடிவம் இது. சுந்தரராமன் என்பவரின் அருமையான குரலுடன் வெளிவந்துள்ளது. சுந்தரகாண்டம் அனுமன் மகேந்திர மலையில் இருந்து புறப்படுவதில்(கடல் தாவு படலம்) தொடங்கி, கடல் அரக்கர்களை தாண்டி இலங்கை சென்று சீதையை கண்டு, அரக்கர்களுடன் போரிட்டு, இலங்கையை எறியூட்டி இராமனிடம் திரும்ப வந்து ”கண்டனென் கற்பினுக்கு அணியை” என்று சொல்வதில் (திருவடி தொழுத படலம்) முடிகிறது. சுந்தரராமனின் குரலில் கேட்டு முடித்தவுடன் மூலத்தை புரட்டிப்பார்த்தேன் (அ.ச.ஞானசம்மந்தன் தொகுத்தது. கங்கை புத்தக நிலைய வெளியீடு). ஓரளவிற்கு சரளமாய் வாசிக்க முடிந்தது. முடித்ததும் எனை அதிகம் ஈர்த்தது இப்பகுதியின் வன்முறை தான். வாசித்துக்கொண்டிருந்த பொழுதே ”கில் பில்”லையும் 300ஐயும் நினைவூட்டியது. முடிசூட்டு கோலத்தில் அமர்ந்திருக்கும் இராமனின் காலடியை வணங்கும் அமைதியின் உருவாய் திகழும் அனுமன் அல்ல இதில். போரின் அத்தனை பயங்கரங்களையும் “மறம்” என காணும் போர் வீரன் இந்த அனுமன்.

அனுமன் அசோகவனம் புகுந்து சீதையிடம் கணையாழி பெற்று திரும்புகையில் இராவணனின் கவனத்தை கவர வேண்டி அசோகவனத்தை சிதைக்கிறான். அதை கண்ட அரக்கர்கள் தாக்க வர, அவர்களை கொல்கிறான். செய்தி இராவணன் செவி சென்று சேர்கிறது.  அரக்கர் படை, படைத்தளபதி சம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகள், இராவணனின் மகன் அக்ககுமாரன் என ஒவ்வொருவராக வந்து அனுமனுடன் போரிட்டு மடிகின்றனர். இறுதியில் போரிட வரும் இந்திரசித்தனின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இராவணனைப் போய் காண்கிறான். இப்படி போகிறது சுந்தரகாண்டம். இதன் தொடக்கத்திலே மகேந்திர மலையில் இருந்து இலங்கை நோக்கி பறக்க கால் ஊன்றிய பொழுது, கனம் தாளாது மலையின் வயிறு கிழிந்து குடல் வெளிவந்தது என்ற இடத்திலேயே இது ஒரு மாய தளத்துள் நுழைந்துவிடுகிறது (குரங்கு பறப்பதே அது தானே என்கிறீர்களா? 🙂 ) . அதன் பின் தொடரும் வன்முறைகளில் எல்லாம் விரவிக்கிடக்கும் இவ்வித அதீதங்கள் ரசிக்கவே வைக்கின்றன. செங்களம் படக்கொன்று… என தொடங்கும் குறுந்தொகை பாடல் ஒன்று. பாடல் முழுவதும் போரில் வழியும் குருதியால் சிவந்து நிற்கும். கிங்கரர் வதை படலம் தொடங்கி  சுந்தர காண்டம் முழுவதும் உதிரச்சிவப்பே கண்களை நிறைக்கிறது. எழுத்துருக்களெல்லாமும் சிவந்தது போல…..

சில பாடல்கள்…

பரு வரை புரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால்
சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்;
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்-
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்.

மலை அளவிற்கு உயர்ந்து நிற்கிறது அனுமன் தோள். அம்மலையிலிருந்து பாயும் அருவியைப் போல அவனை தாக்க வந்த அரக்கர்களின் குருதி வழிகிறது. ஒருவர் ஒருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது தலைகள் தரையினில் உருள்கின்றன. மின்னலும் அஞ்சி அசையும் படி இருந்தது அனுமனின் அடி ஒவ்வொன்றும்.

ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால்
சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
தேடிக் கொன்றனன் சிலவரை – கறங்கு எனத் திரிவான்.

ஓடி கொன்றான் சிலரை; உடலோடு உடல் இடித்துக்கொன்றான் சிலரை; நெடிய மரத்தினை கொண்டு அடித்துக்கொன்றான் சிலரை; அங்கு விழுந்து கிடந்த பிணங்களினூடே யாரேனும் உயிரோடிருக்கின்றனரா என தேடிக்கொன்றான் சிலரை – சுழற்காற்று போல திரிந்த அனுமன்.

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,
நீறு சேர் நெடுந் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப
ஆறு போல் வரும் குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு
ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை.

சேறும் வண்டலும் போல மூளையும் சதையும் மிதக்க அந்த நெடிய தெருவெல்லாம் வெள்ளம் வந்த ஆறு போல பாய்ந்தோடிய குருதி அனுமனின் கால்களால் அலைக்கப்பட்டு, இலங்கை முடிவின்றி வாயிலிருந்து உதிரம் உமிழ்வதை போல பாய்ந்தோடியது.

தரு எலாம் உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து
உரு எலாம் உடல்; உவரி எலாம் உடல்; உள்ளூர்க்
கரு எலாம் உடல்; காயம் எலாம் உடல்; அரக்கர்
தெரு எலாம் உடல்; தேயம் எலாம் உடல் – சிதறி

மரம் எல்லாம் உடல்; திண்ணை எல்லாம் உடல்; தெரு முனைகளில் எல்லாம் உடல்; கடல் எல்லாம் உடல்; ஊர் நடு எல்லாம் உடல்; ஆகாயம் எல்லாம் உடல்; தெரு எல்லாம் உடல்; தேசமெல்லாம் உடல் – சிதறிக்கிடந்தன.

ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்; –
தான் எலாரையும், மாருதி சாடுகை தவிரான்,
மீன் எலாம் உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல்
வான் எலாம் உயிர்; மற்றும் எலாம் உயிர் – சுற்றி

உடல்களில் இருந்து உயிரை பிரித்து எடுத்துச்செல்லும் காலன் ஓய்ந்தே விட்டான். எல்லாரையும் அடித்துக்கொல்வதை அனுமன் நிறுத்தவேயில்லை. அவனால் கொல்லப்பட்டவர்களின் உயிர்கள் விண்மீன்களில் எல்லாம், மேகமெல்லாம், அதுக்கும் மேலே மேலே வானமெல்லாம்… அதையும் தாண்டி அலைந்துகொண்டிருந்தன.

இறந்த பின் பெயர் அறிவித்தவன் (பிலிப் நொய்ரெட் குறித்து)

பிலிப் நொய்ரெட்

பிலிப் நோய்ரட் (Phileppe Noiret) இறந்துவிட்டார் என்ற செய்தி, எதேச்சையாக நேற்று இரவு செய்தித்தாளை புரட்டியபோது கண்களில் பட்டது. செய்திகள் உயிருள்ள பண்டங்கள் என்பது என் நம்பிக்கை. நான் ஒரு விஷயத்தை பற்றி அறியத் தொடங்கும் போது, அது குறித்த மேலதிக விவரங்கள்/செய்திகள் என்னை தானாக வந்து அடைகின்றன.

சரி… விஷயத்திற்கு. பிலிப் நோய்ரட் பிரஞ்ச் நடிகர். 1956ல் நடிக்கத்தொடங்கினார் என்கிறது விக்கிப்பீடியா.இப்பதிவு பிலிப்பின் வாழ்க்கையை பற்றி அல்ல. அதை கூகுள் கடவுள் யார் கேட்டாலும் அருள்வார். மாறாக, என் மனதில் பதிந்துள்ள நோய்ரெட்டை பற்றி நான் மட்டுமே கூற முடியும் என்பதனால் நீண்ட நாட்கள் கழித்து இப்பதிவு. இவர் நடித்த இரண்டே படங்களை தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இரண்டுமே என்னை அழவைத்து, சிரிக்க வைத்து, கூடவே வாழவைத்து, முடிந்த பின்பும் மனதின் மூலையில் தங்கிவிட்ட படங்கள். எல் போஸ்தினோ மற்றும் சினிமா பாரடிஸோ (El Postino and Cinema Paradiso). உண்மையை சொன்னால் நான் ரசித்த இந்த நடிகர் தான் பிலிப் நொய்ராட் என்பதே எனக்கு நேற்று செய்தித்தாளின் இவரது புகைப்படத்தை பார்த்தபோது தான் தெரியும். என்னளவில் அவர் ஆல்ஃப்ரெடோவாகவும் (சினிமா பாரடிஸோ) பாப்லோ நெரூடா (எல் போஸ்தினோ) ஆகவுமே இருந்தார்.

பிலிப் ஆல்ஃப்ரெடோவாக (சினிமா பாரடிஸோ)

ஆல்ஃப்ரெடோ மற்றும் டோடோ (சினிமா பாரடிஸோ)

சினிமா பாரடிசோவில் பிலிப், ஆல்ஃப்ரெடோ என்ற Projectionist பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கும் toto என்ற சிறுவனுக்குமான உறவே படத்தின் கரு. ஒரு தலை காதலின் கணலில் தகித்துக்கொண்டிருக்கும் இளைஞனான டோடோவிற்கு சோகமான காதல் கதை ஒன்றை சொல்லும் இடம், டோடோவை கிராமத்தை விட்டு வெளியேற சொல்லும் இடம், ஒரு தெருச்சுவரில் திரைப்படத்தை காண்பிக்கும் இடம் என படம் நெடுகிலும் என்னை கவர்ந்தபடி இருந்தார். பிலிப் நோய்ரட் உலகம் முழுவதும் அறியப்பட்டது 1988ல் சினிமா பாரடிஸோவில் நடித்த பின்பு தான்.

பிலிப், பாப்லோ நெரூடாவாக (எல் போஸ்தினோ)

இவரை உலக அளவில் அறியச்செய்த மற்றொரு படம் எல் போஸ்தினோ. ஒரு இத்தாலிய கிராமத்தில் தபால்காரனாக பணிபுரியும் ஒருவனுக்கும், அவ்வூருக்கு வரும் கவிஞர் பாப்லோ நெரூடாவிற்குமான உறவை பற்றிய படம். பாப்லோ நெரூடாவாக பிலிப் நடித்திருந்தார். பார்க்க வேண்டிய படம்.

மறையும் போது தனது பெயரை எனக்கு அறிவித்த பிலிப்பின் நினைவாக…

வே.வி சில குறிப்புகள்

வேட்டையாடு விளையாடு இன்று இரண்டாம் முறையாக பார்க்க வேண்டி வந்தது. அம்மாவை கூட்டிச்சென்றிருந்தேன் திரையரங்கத்திற்கு. நான், அம்மா மற்றும் அப்பா மட்டும் திரைப்படத்திற்கு சென்றது இது தான் முதல் முறை என நினைக்கிறேன்.

இரண்டாம் முறை பார்க்கும் போது கதை தெரிந்துவிட்டதால் வேறு விஷயங்களை கவனிக்க முடிந்தது. அப்போது தோன்றிய சில எண்ணங்கள்…

 • நச்சென்ற வசனங்கள். “ஏன்?” “என்ன மணிரத்னம் பட வசனம் மாதிரி கேக்கறீங்க?” , “Back home, its called ragavan instinct”, “ராகவன், உங்களுக்கு எல்லாம் தெரியுது. ஆனா சில விஷயங்கள சொல்லாம விடறதே நல்லதுன்னு தெரியல இல்ல?” இப்படி
 • படத்தொகுப்பு மிக அருமையாக வந்திருந்தது. குறிப்பாய் சொல்ல வேண்டிய இடம், flashback காட்சிகள் முடிவடையும் இடத்தில் எல்லா நிகழ்வுகளும் சீரில்லாத விதத்தில் கலந்து வரும் இடம்.
 • முதல் பாடல் தேவையற்றது. அதை கூட மன்னித்துவிடலாம். ஆனால் உயிரிலே பாடல் படத்தின் வேகத்தை திடீரென நிறுத்துகிறது.
 • கமலினி முகர்ஜி. ஆனந்த (தெலுங்கு) படத்தில் பார்த்தபோதே மனதை அள்ளிவிட்டார். இதில் சிறு பாத்திரத்திலேயே வந்தாலும் ஹும் ஹும் ஹும்…..
 • இங்கு குவைத்தில், படத்தில் சகட்டு மேணிக்கு கத்தி வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். எங்கள் முகப்பேர் ரோடு போல எகிரி எகிரி குதிக்கிறது படம். பிரகாஷ் ராஜ் தன் மகளின் பிணத்தை பார்த்து அழும் காட்சியை விகடனில் சிலாகித்திருந்தார்கள். ஆனால் இங்க அது வெட்டப்பட்டு விட்டது. ஏன் என புரியவில்லை. tears of the sun படத்தில் மார்பகங்கள் வெட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஆப்பிரிக்க பெண்ணை காட்ட எந்த தயக்கமும் இல்லாத கத்திக்கு பிரகாஷ்ராஜின் அழுகை உறுத்தியது ஏனோ யான் அறியேன்.
 • நுணுக்கமான இயக்கம். பல காட்சிகள் வசனம் இன்றி உணர்த்தப்படுகின்றன. ஜோதிகா தமிழ் பெண் என கமல் அறிந்து கொள்ள, அவரது மேஜையில் இருக்கும் சல்மாவின் “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” போதுமாக இருக்கிறது. கவிதையைப் பற்றி பேசுகையில்… ஜோதிகா விமானத்தில் “படிக்கும்” புத்தகம் நமது சக வலைப்பதிவாளர் மதுமிதா எழுதிய சுபாஷிதம் என்ற புத்தகம் தான். அப்புத்தகத்தை சென்ற முறை இந்தியா சென்ற போது வாங்கிப்படித்த உடனேயே பதிவேற்ற வேண்டும் என்று இருந்தேன். ஏனோ தவறிவிட்டது.
 • படத்தில் மிக அழகாக எடுக்கப்பட்ட காட்சியாக எனக்கு பட்டது, கமல் கொலைகாரர்களை முதன்முறையாக சந்திக்கும் காட்சி. எதைத் தேடுகிறோம் என கமல் அறிந்துகொள்ளும் காட்சி. ரோலர் கோஸ்டரில் சென்றோமெனில் உச்சிக்கு சென்றபிறகு ஒரு 4 – 5 வினாடிகள் நிற்கும். அசுர வேகத்தில் கீழே இறங்கப்போவது நமக்கு தெரிந்தே காத்திருப்பதில் ஒரு குறுகுறுப்பு. அதை போன்றதொரு காத்திருப்பு இது. நல்ல கற்பனைவளம் மிக்க காட்சி இது.
 • நேரம், இடம் என எல்லாமும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி துணைத்தலைப்பாக வந்து கொண்டிருந்தது. பாதி படத்தில் தமிழ் காணாமல் போய்விட்டது. வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே
 • உயிரிலே பாடலில் ஜோதிகா ஆர்.எம்.கே.வி விளம்பர படப்படிப்பிலிருந்து எழுந்து வந்துவிட்டவர் போல இருக்கிறார். என்னேரமும் “எல்லா வகைப் பட்டும், ஆரெம்கேவில மட்டும்” என சொல்லுவார் என எதிர்ப்பாத்தேன்.
 • காக்க காக்கவில் பயன்படுத்தப்பட்ட பல பெயர்கள் இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இளமாரன், மாயா இப்படி.

இதன் பிறகு கடைசிக்கட்ட காட்சிகளில் மூழ்கிவிட்டதால் குறிப்பெடுப்பதை நிறுத்திவிட்டேன். நல்ல படம். திரையரங்கம் போய் பாருங்க மக்கா….

சொர்கத்தின் குழந்தைகள்

"இப்பிரபஞ்சத்தின் முடிவிலா விரிவின் முன், இழந்த தேசத்திற்கான மன்னனின் கவலைக்கும் உடைந்த பொம்மைக்கான குழந்தையின் கண்ணீருக்கும் அதிக வித்தியாசம் இல்லை"

– மார்க் ட்வைன்.

உறவு. அலாதியான கருத்தாக்கம் இது. யோசித்துப்பார்க்கையில் என்னையும் என் தங்கையயும் இணைப்பது எது? எதன் விசையால் உருவானது எங்களின் பாசம்? என் தாயின் கருவறை என்னை பெற்றபோது, இன்னும் பிறக்காத என் தங்கைக்கு ஓர் அண்ணனை,தாத்தாக்களுக்கு பாட்டிகளுக்கு ஒரு பேரனை, ஒரு மாமனை, பெரிய கூட்டமொன்றிற்கு நண்பனை என ஒரு மிகப்பெரிய உறவுக்கூட்டமே அல்லாவா பெற்றது. நமது உறவுகள் வெறும் கருவறையின் அடிப்படையில் மட்டுமே அமைபவை. வேறு கேள்விகளே இல்லை. அயன் ராண்ட் (Ayn Rand), 'ஃபௌண்டைன் ஹெட்(Fountain Head)' நாவலில் ஒரு கேள்வி கேட்டிருப்பார். 'அவள் என் தாய் என்ற ஒரே காரணத்தால் நான் ஏன் அவளை மதிக்க, பாசம் வைக்க வேண்டும்' என. இந்த கேள்வி நமக்கு மிக அன்னியமான ஒன்று அல்லவா…?

அண்ணனுக்கு தங்கைக்குமான உறவை பற்றி காலம் காலமாய் நாம்மிடம் கதைகள் இருந்தபடியே உள்ளன. அவை எவ்வளவு sentimentalizedஆக இருந்தாலும் சரி (எனக்கு பொதுவாய் over sentimentalization பிடிப்பதில்லை), என்னை கொஞ்சமாவது உலுக்கிவிட்டே போகின்றன. பாசமலரில் இருந்து சமுத்திரம் வரை.

இந்த வரிசையில் இப்போது மஜித் மஜிதி இயக்கிய சொர்கத்தின் குழந்தைகள் (children of heaven) படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். முற்றிலும் குழந்தைகளின் உலகிலேயே நிகழும் புனைவுகள் மிக அபூர்வமாகவே காணக்கிடைக்கின்றன. இப்படம் குழந்தைகளின் உலகில் நின்று குழந்தைகளின் பிரச்சனைகளை பேசுகின்றது. அண்ணனுக்கு தங்கைக்குமான உறவு தான் படத்தின் ஆதார அச்சு.

பாசம், அன்பு, தியாகம், பற்று, காதல் போன்ற உணர்வுகள் அரூபமானவை. மனம் சார்ந்தவை. அவை வெளிப்பட ஏதேதும் ஓர் பருப்பொருள் தேவைப்படுகிறது. இந்த படத்தில் அப்பருப்பொருளாய் ஒரு ஜோடி காலணிகள். பிய்ந்து போன காலணிகளை 9 வயது அண்ணனிடம் தைக்க கொடுக்கிறாள் 6 வயது தங்கை. செருப்பு தொலைந்துவிடுகிறது. அங்கிருந்தே ஆரம்பிக்கிறது படம். "சங்க இலக்கியம் எதை பற்றி பேசும்போதும் மனதை பற்றியே பேசுகிறது" என சங்க சித்திரங்களில் ஜெமோ கூறி இருந்தார். அது போல இந்த படம் செருப்பை பற்றியது அல்ல. செருப்பு என்ற பொருளை கொண்டு, உறவுகளின் மகத்துவத்தையும் அதன் முன் வெற்றிகளும் சுயநலன்களும் பொருளிழந்து போவதையும் பற்றி பேசுகிறது படம். தொலைந்து போன செருப்பை தேடியும் கிடைக்காமல் அண்ணனும் தங்கையும் ஒரு முடிவு செய்கின்றனர். தங்கைக்கு காலையில் பள்ளி. அண்ணனுக்கு மதியம். காலையின் அண்ணனின் காலணியை தங்கையும் மாலையில் அண்ணனும் போட்டுக்கொண்டு போவதாய் திட்டம். இதில் வரும் சிக்கல்களும் அவை எழுப்பும் மன அதிர்வுகளும் என படம் வளர்கிறது.

படத்தில் வரும் அந்த சிறுவனும் சிறுமியும் அவலது தோழியும் கொள்ளை அழகு. பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்த சிறுவனின் நடிப்பும் மிக நன்றாக வந்துள்ளது. ஷூ தொலைந்த பதட்டம், "பள்ளிக்கூடத்துக்கு செருப்பு போட்டுகிட்டு போகறது தான" எனும்போது ஒரு நக்கல், தாமதமாய் போனதற்காக ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் தவிப்பு என சகலத்தையும் அவனது கண்களே பேசுகின்றன. கடைசி ஓட்டப்பந்தைய காட்சியில் நிஜமாக நமக்கே மூச்சி வாங்குகிறது. 🙂

மஜித் மஜிதியின் அடுத்த படமான சொர்கத்தின் நிறம் (Color of Paradise), Children of Heavenஐ விட தொழிற்நுட்பத்திலும் திரைக்கதை அமைப்பிலும் மேலான ஒரு படமாகவே தோன்றுகிறது. ஆனால் இப்படத்தின் கரு, களம் மற்றும் அதன் எளிமை இதை ஒரு அனுபவமாக மாற்றுகிறது.

3 நாட்களுக்கு முன் தங்கைக்கு திருமணம் நடந்தது. மண்டபத்தில், இதன் கதையை சில சிறுவர்/சிறுமியர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன். மிகவும் ரசித்தார்கள். அதுவும் அந்த கடைசி ஓட்டப்பந்தைய காட்சியை சொல்லும்போது இருக்கையின் நுனியில் வந்து கதை கேட்டார்கள். முடிவை மட்டும் கொஞ்சம் மாற்றி சொன்னேன். பக்கத்தில் இருந்த ரெண்டு மூன்று 'பெருசு'கள் நான் ஏதோ சொந்தமாய் சொல்லியதாய் நினைத்துக்கொண்டு பாராட்டு வேறு. எல்லா புகழும் மஜிதுக்கே 😉 . மாயாஜாலக் கதைகளை மட்டுமே குழந்தைகள் ரசிப்பார்கள் என நினைத்திருந்த எனக்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. தமிழில் இது போன்ற குழந்தை படங்கள் வரலாம். குறைந்த பட்சம், தொலைக்காட்சி தொடர்களாவது.

சினிமாவுக்கு போன சித்தார்து…

சில மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்தேன். இரு நண்பர்களுடன். ஒருவன் முஸ்தஃபா. இரான் நாட்டை சேர்ந்தவன். மற்றவன் ஹாஷிம். குவைத்தி. நல்ல பயணமாக அமைந்தது. அரேபியர்களின் கண்களை கொண்டு துபாயை பார்த்தது வித்தியாசமான அனுபவம். அந்த பயணத்தின் போது ஒரு நாள் இரவு நானும் முஸ்தஃபாவும் வேறு வேலையே இல்லாததால் கிளம்பி திரையரங்கிற்கு சென்றோம். முஸ்தஃபாவிற்கு அதிரடி படம் பார்க்க வேண்டும். எனக்கோ நல்ல Dramaவாக இருக்கவேண்டும். கடைசியில் நான் தான் வென்றேன். (அவனே வென்றிருக்களாம். விதி யாரை விட்டது).

woodsman என்ற படத்தை தேர்ந்தெடுத்தோம். படத்தின் விளம்பரப்பலகையில் இருந்த அழகியல் இழையோடிய புகைப்படங்களை மட்டுமே நம்பி திரையரங்கிற்குள் நுழைந்தோம். வித்தியாசமான கதாநாயகன் பாத்திரத்துடம் மிக மிக darkஆன ஒரு படமாய் அது வளர்ந்தது. படத்தின் நாயகன் ஒரு pedophile. அதற்காய் 10 ஆண்டு கால சிறைதண்டனை அனுபவித்துவிட்டு மீண்டும் சமூகத்தினுள் நுழையும் இடத்தில் தான் படம் தொடங்குகிறது. அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படம். அவன் ஒரே நேரத்தில் இரு வகையான தாக்குதல்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒன்று அவனுள் நோயென கிளர்த்தெழும் அந்த தீய இச்சையை. மற்றது சமூகம் அவனை பார்க்கும் சந்தேகப்பார்வையை.

எந்த ஒரு படைப்பும் முழுமை கொள்வதில் அதன் வாசகனுக்கு/பார்வையாளனுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஜெயமோகனின் நாவல்களில் வரும் உச்சக்கட்ட உணர்வுப்பூர்வமான பகுதிகளை என்னுள்ளும் அந்த பைத்திய நிலையை தொட்ட கணங்களிலேயே என்னால் ரசிக்க முடிந்துள்ளது (உம்: பின் தொடரும் நிழலின் குரலில் முதல் முறையாக பிச்சையெடுக்கும் கணம், கொற்றவையில் பாலை நிலத்தில் கன்னிதெய்வத்தின் முன் பலி கொடுக்கும் இடமும் அதை தொடரும் அந்த கன்னியின் வாழ்க்கை சித்திரமும்). யோசித்துப்பார்க்கிறேன். பொருளாதார அடிப்படையில் நடக்கும் நிகழ்வுகளே நமக்கு யதார்த்தமாய் தோன்றுகிறது. இந்த நோக்கை மட்டுமே வைத்துக்கொண்டு, உச்சக்கட்ட மன எழிற்சியின் விளைவான தனிமனித மதமாற்றத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? "காசு வாங்கிட்டு மாறிட்டான்" என்ற வரியில் தான் இந்த அவதானிப்பு முடியும் என தோன்றுகிறது. உளருகிறேன். சொல்ல வந்தது இதை தான். எந்த ஒரு நிகழ்வையும் அந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்ட அந்த மனநிலையை ஓரளவேனும் அடைந்தாளன்றி அறிதல் சாத்தியமில்லையென தோன்றுகிறது. இம்மனநிலையை உருவாக்குவது தான் படைப்பாளியின் சவால்.

woodsman படம் பார்க்க சென்ற அந்த நாள் காலை முதலே ஏதோ ஒரு depression என்னுள். ஏன் என தெரியாமலேயே ஒரு மனச்சோர்வு நிலை. இந்த மனநிலையில் நான் அதிரடி அடிதடி படத்திற்கே போய் இருக்கவேண்டும் அதுவே இம்மனநிலைக்கு மருந்தாக இருந்திருக்கும். இந்த இருண்மையான படத்தை தேர்ந்தெடுத்தது மிக மிக தவறான முடிவு. இது படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களில் தெரிந்து விட்டது. என்னால் அந்த கதாநாயகனின் மனநிலையை முழுவதுமாய் உணர முடிந்தது. அவன் படும் இன்னல்களை எனது மனம் பட்டது. அவனது pedophile குற்றத்தை ஒரு நோயாகவே என்னால் பார்க்க முடிந்தது. அவனை மனநல மருத்துவமணைக்கே அனுப்பி இருக்கவேண்டும். சிறைக்கு அல்ல. அவனுள் நிகழும் அந்த இரு போர்கள் – ஒன்று அவனுடனும், மற்றது சமூகத்துடனும் – என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியவில்லை. pedophileஐ நியாயப்படுத்தி இருந்தால் படத்தை வெறுக்க ஒரு சாக்கு கிடைத்திருக்கும். ஆனால் படம் அதை ஒரு நோயாகவே பார்க்கிறது. அங்கு அமர முடியவில்லை. எழுந்து வெளியே வந்துவிட்டேன். முஸ்தஃபாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஏன்? என திரும்ப திரும்ப கேட்டான். என்ன பதில் கூற அவனுக்கு? மிகவும் பாதித்தது என்றேன். வெறும் படம் தானே என்றான் அவன். வேறோர் மனநிலையில் எனக்கும் அப்படியே தோன்றி இருக்கும். இருந்தாலும் அன்று உறக்கமின்றி போனது.

ஹோட்டலுக்குள் நுழையும்போது முஸ்தஃபா சொன்னான். நீங்கள் இந்தியர்கள் எல்லாம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று. இதை ஒரு இராணி சொல்லி நான் கேட்கவேண்டி இருக்கிறது. நிலைமை. 🙂

தன் வாலை உண்ணும் பாம்பெனக் காலம் – திரைப்படப் பதிவு

தன் வாலை உண்ணும் பாம்பெனக் காலம்

உலகம் பருப்பொருட்களால் ஆனது. பருப்பொருட்கள் எல்லையுடையவை. பருப்பொருட்கள் காலத்தின் மீதேறி பயணிக்கின்றன. காலம் எல்லையற்றப் பெருவெளி. எல்லையற்றக் காலத்தின் மீது பயணிக்கும் எண்ணிலடங்கும் பருப்பொருட்களின் கூட்டின் விளைவான நிகழ்வுகள், மீண்டும் மீண்டும் நிகழ்ந்தாகவேண்டும். இன்று இதோ இவ்வரிகளை நான் எழுதும் இந்நிகழ்வு, இன்னோர் காலத்தில் இதே கைகளால் எழுதப்படும்.

🙂 சுவாரஸ்யமான கற்பனை. ஜெயமோகனின் "ஜகன்மித்யை" என்ற சிறுகதை இதை பற்றியது. காலத்தின் மீது நிகழ்வு கொள்ளும் சுழற்சியின் சூத்திரத்தை அறிய விரும்பும் ஓர் மேதையை பற்றியது. தன் வாழ்வை, கானல் நெருப்பிற்கு அவிஸாய் தந்ததை எண்ணி அவன் மரணப்படுக்கையில் வருந்துவதுடன் முடிகிறது கதை.

History repeats itself என்ற இக்கொள்கையை தனிமனித நிலையில் வைத்து ஆராய்ந்த இரு படங்களை பற்றி பேசலாமென….

முதல் படம் 1950களில் வெளிவந்த All about Eve. பெட்டி டேவிஸ், ஆன்னே பாக்ஸ்டர் நடித்தது. ஹாலிவுட் என்னும் மாய விளக்கில் தினந்தோரும் விழும் விட்டில் பூச்சிகளில் ஒருத்தி ஆன்னே பாக்ஸ்டர். பெட்டி டேவிஸின் தீவிர ரசிகை. மெல்ல மெல்ல அந்நடிகையை நெருங்கி, அவளின் நம்பிக்கைக்குறியவளாய் மாறி, பிறகு சமயம் கூடும்போது அவளின் இடத்தை பிடிக்கிறாள். வஞ்சிப்பது பெண் என்பதாலேயே இத்துரோகத்தின் தீவிரம் கூடிவிட்டதாய் தோன்றியது. இப்போது ஆன்னே பாக்ஸ்டர் முன்னனி நடிகையாய் திகழ, அவளை காண வருகிறாள் ஓர் இளம் ரசிகை. அந்த ரசிகையின் முதல் துரோக கணத்துடன் முடிகிறது படம்.

படத்தின் முக்கிய அம்சங்களாய் எனக்குத் தோன்றியவை.

 • கதையின் இடையில் தொடங்கி காலத்தில் பின்னோக்கிச் சென்று, பிறகு முன்னோக்கிச்செல்லும் யுக்தி.
 • கருப்பு வெள்ளையில் மிளிரும் ஆன்னே பாக்ஸ்டரின் கண்கள். இது காஸபிளாங்காவில் இங்க்ரிட் பெர்க்மெனின் மிளிர்விற்கு இணையானது. (காலத்தை கடந்தது எனது வழிதல் :D)
 • துரோகம், சூழ்ச்சி, ஏமாற்றம், ரசிகையின் பேறுவகை, நிராகரித்தலின் வலி என அனைத்தும் மெல்லிய அங்கதத்துடனும் யதார்த்தின் கரை மீறாமலும் வெளிப்பட்ட வசனங்கள்.

சென்ற மாதம் காணக்கிடைத்த கொரிய திரைப்படமொன்று. Spring, Summer, Fall, Winter, and Spring. இது காலத்தின் சுழற்சியை மிக மிக நேரடியாய், ஜென் தத்துவப்பிண்ணனியில் பதிவு செய்தப்படம்.

படம் தொடங்குவது ஓர் வசந்தகால காலையில். சுற்றிலும் மலைகள் சூழ அவற்றினிடையில் அமைந்துள்ள அமைதியான ஏரியின் மீதமைந்துள்ளது அந்த புத்தபிக்குவின் ஆசிரமம். புத்த பிக்கு, அவரது 10 வயதே நிரம்பிய சீடன், இருவர் மட்டுமே அக்குடிலில். அந்த காலையில் பிக்குவும் சீடனும் ஏரியை தாண்டி மூலிகை பறிப்பதற்காய் மலைநிலம் செல்கின்றனர். சிறுவன் ஓர் மீனையும், தவளையையும் பாம்பையும் கல்லில் கட்டி விடுகிறான். இதை கண்ட பிக்கு, மறுநாள் காலை அச்சிறுவனின் முதுகில் ஓர் கல்லை கட்டுகிறார். அழும் சிறுவனிடம், "இதை தானே நீ அச்சீவன்களுக்கு செய்தாயென கூறி, அவற்றின் மீது கட்டிய கல்லை நீக்கிவிட்டு வா, உன் மீதிருக்கும் கல்லை நான் நீக்குகிறேன்", என்கிறார். பாம்பும் தவளையும் இறந்துவிட, மீனை மட்டுமே காப்பாற்ற முடிகிறது சிறுவனால்.

பிறகு வருகின்றன கோடைகளும், இலையுதிர்காலங்களும், கடும் குளிர்காலங்களும். அலைதல்களினூடாக பெற்ற அனுபவங்கள் அச்சிறுவனை முதிரவைக்க, வேறோர் வசந்த காலத்தில் ஓர் புத்த பிக்குவாய் திரும்புகிறான். அவனிடம் சீடனாய் வரும் சிறுவன் ஒருவன் ஓர் மீனையும் தவளையையும் பாம்பையும் கல்லில் கட்டி துன்புறுத்துவதை புத்த பிக்கு பார்ப்பதோடு முடிகிறது படம்.

இப்படத்தில் என்னை மிகக்கவர்ந்தது அதன் அமைதி. எதையுமே அதிரச்சொல்லவில்லை. சொல்லும் அனைத்தையும் மிக மெல்லிய ஒலியுடனும் அழகியல் பார்வையுடனும் முன்வைக்கிறது. படத்தின் மிக முக்கிய அம்சம் அந்த மலையும் ஏரியும். பருவங்கள் தோறும் அது கொள்ளும் மாற்றங்கள் கவிதையாய் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.