எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் : ஆண்டாள் திருப்பாவை – 19

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்

குத்து விளக்கு எரிய, யானைத்தந்தத்தினால் செய்த கால்களையுடைய கட்டிலின் மேல், மெத்தென இருக்கும் மெத்தையின் மேல் ஏறி, கொத்தாக பூவினை முடிந்த கூந்தலுடைய நப்பின்னையின் முலைகளின் மேல் கைகளை வைத்துப் படுத்திருக்கும் மலர் மார்பா, வாயை திறந்து பேசு. மையெழுதிய கண்களையுடையவளே, நீ உன் கணவனை எவ்வளவு நேரமாயினும் எழுப்ப மாட்டாய் பார். சிறிதளவும் கூட அவனைப் பிரிந்திருக்க முடியாது உன்னால். நான் கூறுவது தத்துவமொன்றும் அல்ல,
உண்மை.

(எனக்கு மிகவும் பிடித்துப்போன பாடல்களில் ஒன்று இது. இதன் ஓசைக்காகவே).

Advertisements

உந்து மத களிற்றன் : ஆண்டாள் திருப்பாவை – 18

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

நிற்காது ஓடும் மதம் பிடித்த யானையை உடையவனும் எதிரிகளைக் கண்டு அஞ்சி ஓடாத தோள் வலிமைக் கொண்டவனுமாகிய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னாய் ! நறுமனம் கமழும் கூந்தலை உடையவளே, கண் திறவாய். கோழிகள் கூவத்தொடங்கிவிட்டன பார். பந்தலின் மேல் குயில்களும் விடாது பலமுறை கூவுகின்றன.

பந்தாடுகிற விரல்களையுடையவளே! உன் கணவனின் பேர் சொல்லிப்
பாடுகின்றோம். செந்தாமரைப் போன்ற கைகளில் சீரான வளையல் ஒலிக்க வந்து கதவை திற. நாங்கள் மகிழ்வோம்.

அம்பரமே தண்ணீரே : ஆண்டாள் திருப்பாவை – 17

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

உடையும் நீரும் உணவும் அளிக்கும் எங்கள் கடவுளே! நந்தகோபாலா! எழுந்திரு.

இளந்தளிர் போன்ற பெண்களுக்கெல்லாம் கொழுந்தானவளே! குலவிளக்கே! யசோதா! நீயாவது எழுப்பேன்.

வாமன அவதாரமெடுத்து ஓங்கி வளர்ந்து வானை அறுத்து உலகினை அளந்த கடவுளே! உறங்காதே, எழுந்திரு.

செம்பொன் கழலினை அனிந்த கால்களையுடைய செல்வா! பலதேவா (பலராமன்)! நீயும் உன் தம்பியும் உறங்காதீர். விழித்திடுங்கள்.

கடந்து சென்ற கவிதைகள் சில

மனதிற்கு மிக அருகில் வந்த கவிதைகளை, எக்காலத்தைச் சேர்ந்தவையாயினும், அவற்றை “கடந்து சென்ற கவிதைகள் சில” என வகைப்படுத்தி இங்கு பதித்து வைக்கலாம் என பார்க்கிறேன். தேவதைக்கதைகளில் இலக்கறியாது பயணிக்கும் சிறுமி போகும் வழியெல்லாம் அடையாளத்திற்கு ரொட்டித்துண்டுகளை வீசியபடி போவதில்லையா…

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

– ஆண்டாள் (திருப்பாவை #23)

மழை. மலைக் குகையில் உறங்கும் சிங்கம் விழித்து சோம்பல் முறித்து பிடறி மயிர் பொங்க சோம்பல் முறித்து கர்ஜித்து புறப்படுவதைப் போல நீ விழி (பூவை ) பூ வண்ணனே. உன் கோயிலுக்கு வந்து அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரியம் ஆராய்ந்து அருள் புரிக.

போன மாதத்தில் ஒரு நாள்.கவிஞர் பாம்பாட்டி சித்தன், நான், சுந்தர்(மஞ்சூர் ராசா) மூவரும் குவைத்தின் பிரதான கடைவீதியில் இலக்கற்று சுற்றிக்கொண்டிருந்தோம். பேச்சு எங்கெங்கோ சென்று கடைசியில் பக்தி இலக்கியம் பக்கம் திரும்பியது. சௌரி கண்களை மூடிக்கொண்டு விரலினை காற்றில் அசைத்த படி அவருக்கே உரிய ஒரு வித ராக பாவத்துடன் இந்த கவிதையை கூறினார். முடித்ததும் வரிக்கு வரி சிறு விளக்கம். பாடல் அப்படியே ஒட்டிக்கொண்டது மனதில். மாரி மலை முழைஞ்சில்…. மாரி மலை முழைஞ்சில்… மந்திரம் போல ஒலித்துக்கொண்டே இருந்தது இவ்வரி. கருத்து அல்ல. அந்த மொழியே முதலில் கவர்ந்தது. பிரவாகமாய் பொழியும் மொழி. பாரதியின் திருப்பள்ளியெழுச்சியில் பொழியுமே… அது போன்றதொரு பிரவாகம். திருப்பாவை படிக்க இந்த பாடலே காரணமாக அமைந்தது….

மணிக் கதவம் தாள் திறவாய் : ஆண்டாள் திருப்பாவை – 16

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

குலத் தலைவனாக நந்தகோபனின் கோயிலைக் காப்பவனே! கொடியுடன் கூடிய தோரணமுடைய வாயிலைக் காப்பவனே ! மணிக் கதவை திற. ஆயர் குலச் சிறுமியருக்கு அருள் தருவதாக நேற்றே அந்த மாயன் மணிவண்ணன் கூறினான். அவனை பாடி எழுப்ப தூயவர்களாய் வந்துள்ளோம். காலையில் முதன் முதலில் முடியாது என கூறாதே. நீ இந்த கதவைத் திறப்பாயாக.

கவிதையில் ஓர் உரையாடல் : ஆண்டாள் திருப்பாவை – 15

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோசில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை

மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

இவர்கள்: ஏய் இளம் கிளியைப் போன்றவளே! இன்னுமா உறங்குகின்றாய்?

அவள் : சில்லன்று கத்தாதீர்கள் பெண்களே. இதோ வருகின்றேன்.

இவர்கள் : வாய்ப்பேச்சில் வல்லவளே ! உன் பேச்சை நாங்கள் அறிவோம்.

அவள் : நீங்கள் தான் வல்லவர்கள். நானென்றால் அப்படியே இருந்துவிட்டு போகின்றேன்.

அவள் : எல்லோரும் வந்துவிட்டார்களா?

இவர்கள் : வந்துவிட்டனர். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிப்பார்த்துக்கொள். வலிய யானையை கொன்றவனை, பகைவரை அழிக்கும் வல்லமைக் கொண்டவனை, அந்த மாயனை பாடலாம் வா.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் : ஆண்டாள் திருப்பாவை – 14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

உன் வீட்டு தோட்டத்துக் கிணற்றில் செங்கழுனீர் மலர் மலர்ந்து, ஆம்பல் (அல்லி) மலர் கூம்பிவிட்டது பார். காவியுடையனிந்த வெள்ளைப் பற்களையுடைய முனிவர்கள், சங்கினை முழக்க கோயிலுக்கு செல்கின்றனர். நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறிய நீ இன்னமும் உறங்குகிறாய்.  வெட்கமில்லா நாவினையுடையவளே ! எழுந்திரு.  சங்கையும் சக்கரத்தையும் ஏந்தும் கைகளையுடைய தாமரைக்கண்ணனை பாடுவோம்.