பயமறியா ஜான் – இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ இத்தாலிய இலக்கியவாதி. Invisible Cities, If on a winter’s night a traveller போன்ற நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர். Invisible Cities, தொலைந்த புலப்படாத நகரங்கள் என்ற பெயரில் (ச. தேவதாஸ் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்) தமிழில் வந்துள்ளது. இவர் எழுத்தாளராக மட்டுமல்லாது இத்தாலிய நாடோடிக்கதைகளை சேகரித்து தொகுத்து வெளியிட்டவரும் ஆவார். 1956ல் இவர் வெளியிட்ட Italian Folktales என்ற நூல் வாசிக்க கிடைத்தது. ஆங்கில நாடோடிக் கதைகளை க்ரிம் சகோதரர்கள் தொகுத்தது போல இத்தாலியில் செய்யப்படவில்லை. இக்கதைகள் தொலைந்துபோய் விடக்கூடாது என்ற முனைப்புடன் தான் இக்கதைகளை தொகுத்ததாக இதன் முன்னுரையில் கூறுகிறார். எனக்கு மாயக்கதைகள் என்றால் கொள்ளை இஷ்டம். நார்நியா, ஹாரி பாட்டர் தொடங்கி ஆர்டிமஸ் ஃபௌல் வரை எதையும் விடுவதில்லை.  பாடும் காக்காய்கள் பேசும் நரிகள் பேராசை பிடித்த ஆமைகள் வஞ்சக பாம்புகள் அன்பான சற்றே சற்று கர்வமுடைய முயல்கள் வாழும் மாய உலகிலிருந்தே கதை சொல்லுதல் நமக்கு அறிமுகமாகின்றன என்பதனாலேயே மாயக்கதைகளிலிருந்து நம்மை நம்மால் பிரித்துக்கொள்ள முடியவில்லை என்றெல்லாம் பேச ஆரம்பித்தால் அது மாயக்கதைகள் வாசித்தலுக்கு எதிரான செயலாக இருக்கும் என்பதனால், பேச்சை நிறுத்திவிட்டு, இத்தொகுப்பிலிருந்து ஒரு கதையை மொழிபெயர்த்து இங்கு இடுகிறேன்.

இத்தாலிய நாடோடிக்கதைகள்

இத்தாலிய நாடோடிக்கதைகள்


பயமறியா ஜான்.  – இடாலோ கால்வினோ

(தமிழில் : சித்தார்த்)
முன்னொரு காலத்தில் பயமறியா ஜான் என்றொருவன் இருந்தான். எதை கண்டும் அஞ்சாதவன் என்பதால் அவனுக்கு இந்த பெயர். உலகமெல்லாம் சுற்றித்திரிந்த ஜான் ஒரு விடுதிக்கு வந்து சேர்ந்தான். ”அறை எதுவும் காலியாக இல்லை” என்று கூறிய விடுதி உரிமையாளர், “உங்களுக்கு பயம் இல்லையென்றால் வேறொரு இடம் சொல்கிறேன், அங்கே போய் தங்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

“நான் எதற்கு அஞ்ச வேண்டும்?”

“மக்கள் அந்த மாளிகையை பற்றி நினைக்க கூட அஞ்சுவர். அங்கு போன எவருமே உயிருடன் திரும்பியதில்லை. காலையில் தேவாலைய ஊழியர்கள் சென்று இரவு அங்கே தங்கச்சென்றவர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்”

என்ன செய்தான் ஜான்? வேறென்ன, கையில் ஒரு விளக்கு, வைன் புட்டி, கொஞ்சம் கோழி இறைச்சி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நேராக மாளிகை நோக்கி நடந்தான்.

நள்ளிரவில், மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து அந்த குரல் கேட்டது.

“அதை கீழே போடட்டுமா?”

“ம்ம். போடு” என்றான் ஜான்.

உடனே, புகைகூண்டு வழியாக ஒரு மனிதனின் கால் மட்டும் வந்து விழுந்தது.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு”

இன்னொரு காலும் விழுந்தது. கோழி இறைச்சியை கொஞ்சம் கடித்துக்கொண்டான் ஜான்.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு” ஒரு கை வந்து விழுந்தது. ஜான் ஒரு ராகத்தை சீட்டி அடிக்கத்தொடங்கினான்.

“அதை கீழே போடட்டுமா?”

”தாராளமாக.” இன்னொரு கை விழுந்தது.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம்.”. ஒரு மனிதனின் உடல் மட்டும் கீழே விழுந்தது. கைகளும் கால்களும் அதனுடன் ஒட்டிக்கொள்ள தலையற்ற மனிதன் அங்கே நின்றுகொண்டிருந்தான்.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு”

கீழே விழுந்த தலை நேராக உடலில் போய் ஒட்டிக்கொண்டது. அந்த உருவம் ஒரு பூதமே தான். ஜான் தன் கோப்பையை அதன் திசையில் உயர்த்தி, “உனது ஆரோக்கியத்திகாக” என்றான்.

“விளக்கை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றது பூதம்.

ஜான் விளக்கை எடுத்துக்கொண்டான். ஆனால் நகரவில்லை.

”நீ முதலில் நட” என்றது பூதம்.

“ம்ஹும். உன் பின்னால் வருகிறேன்” என்றான் ஜான்.

“முதலில் நீ” என்று உறுமியது பூதம்.

”நீ முன்னால் போ” என்று கத்தினான் ஜான்.

பூதம் முன்னால் நடக்க விளக்கை எந்தியபடியே ஜான் பின் தொடர, அவர்கள் ஒவ்வொரு அறையாக கடந்து கடந்து இறுதியில் ஒரு படிக்கட்டுக்கு கீழே இருந்த சிறிய கதவை அடைந்தனர்.

“அதை திற” உத்தரவிட்டது பூதம்.

“நீ திற” என்றான் ஜான்.

பூதம் தன் தோளால் முட்டி அக்கதவை திறந்தது. உள்ளே சுழற்படிக்கட்டுகள் தெரிந்தன.

“கீழே போ” என்றது பூதம்.

“உன் பின்னால்” என்றான் ஜான்.

அவர்கள் கீழே செல்ல அங்கே ஒரு சிறிய அறை இருந்தது. தரையில் கிடந்த ஒரு கல் பலகையை சுட்டி “அதை தூக்கு” என்றது பூதம்.

”நீ தூக்கு” என்றாரன் ஜான். பூதம் அதை ஒரு கூழாங்கல்லை தூக்குவதை போல எளிதாய் தூக்கி போட்டது.

கல்லின் கீழே தங்கக்காசுகள் நிறைந்த மூன்று குடங்கள் இருந்தன.

“அவற்றை மேலே தூக்கிச்செல்” என்று உத்தரவிட்டது பூதம்.

“நீ தூக்கிச்செல்” என்றான் ஜான். பூதம் ஒவ்வொன்றாக மேலே தூக்கிச்சென்றது.

அவர்கள் மீண்டும் மாளிகையின் கூடத்தை அடைந்த போது பூதம் கூறியது, “ஜான், சாபம் நீங்கிவிட்டது!”, இதை கூறியதும் அதன் ஒரு கால் மட்டும் தனியாய் பிரிந்து புகை கூண்டின் வழியே மேலேறியது.

”இதில் ஒரு பானை தங்கம் உனக்கானது. ” ஒரு கை பிரிந்து மேலேறியது. ”இரண்டாவது பானை, நீ இறந்துவிட்டாய் என்று நினைத்து உன் உடலை தூக்கிச்செல்ல காலையில் வருவார்களே, அந்த தேவாலைய ஊழியர்களுக்கு.” இன்னொரு கையும் பிரிந்து முதல் கையை தொடர்ந்து சென்றது. “மூன்றாவது பானை, உனை காண வரும் முதல் ஏழைக்கானது.” இன்னொரு காலும் பிரிய, பூதம் தரையில் கிடந்தது. ”இந்த மாளிகையை நீயே வைத்துக்கொள்”. தலையை பிரிந்த உடல் மேலேறிச்சென்றது. “இம்மாளிகையின் உரிமையாளர்களும் அவர்களது குழந்தைகளும் இனி திரும்பப்போவதில்லை”. இதை கூறியதும் தலையும் புகைக்கூண்டின் வழியே மறைந்துவிட்டது.

விடிந்த போது அந்த ஒலி எழுந்தது, “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்.”. இறந்த உடலை தூக்கிச்செல்ல தேவாலைய ஊழியர்கள் வந்திருந்தனர். அவனோ சன்னலருகே நின்றபடி புகைபிடித்துக்கொண்டிருந்தான்!

பயமறியா ஜான் அந்த தங்கங்களினால் செல்வந்தனாகி அந்த மாளிகையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான். பின்னொரு நாள் பின்னால் திரும்பி தனது நிழலை பார்த்தான். பயத்தில் அந்த இடத்திலேயே அவனது உயிர் பிரிந்தது.

பேசுதல் அதற்கின்பம் – நூல் வரலாறு

தமிழேறு பதிப்பகம் மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நூல், மு. முத்தையன் எழுதிய “பேசுதல் அதற்கின்பம்”. இந்நூல், தமிழிலக்கிய வரலாற்று நோக்கில் மிக முக்கியமான நூலாகும். அரை நூற்றாண்டு காலம் உலக இலக்கிய சூழலில் மிக முக்கியமான வடிவமாக இருந்த கலவை இலக்கியம்(1) என்ற இலக்கிய வடிவத்தின் விதையாக திகழ்ந்த நூல் இது.

இந்நூலின் இலக்கிய மதிப்பீடுகள் குறித்து நிறையவே எழுதப்பட்டுவிட்டன. இந்த நூல் தமிழக இலக்கிய பரப்பில் செலுத்திய தாக்கத்தினை குறித்து இந்த சிறு கட்டுரையில் ஆராய விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக இந்நூலினை குறித்து பேசுவோம். 2035ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் வெளியானது. சங்க இலக்கிய பாடல்களில் இருந்து துணுக்குகளை அடுக்கி அடுக்கி செய்யப்பட்ட ஆக்கம் இந்த நூல். குறுந்தொகை தலைவி ஒருத்தியின் கேள்விக்கு நெடுநல்வாடையின் தலைவன் பதிலளிப்பான். அவனது பதிலை புறநானூற்று ஔவை மறுப்பாள். இந்த வடிவத்தில் 40 அத்தியாயங்களில் (ஒவ்வொரு அத்தியாயமும் ஓர் உணர்வை முன்வைக்கிறது) எழுதப்பட்ட நூல் இது. நூலின் முன்னுரையில் முத்தையன் கூறுகிறார் –

“என் இளமை பிராயம் முதல், சங்க இலக்கிய பாடல்கள் என்னுடன் உரையாடுவதாகவே எனக்கு தோன்றும். ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் பாணனும் பாணினியும் தோழனும் தோழியும் செவிலித்தாயும் தலைவனும் தலைவியும் என்னை நோக்கி ஏதோ சொல்வதாய்ப் படும். மனதினுள் நானும் அவர்களுடன் உரையாடுவேன். திடீரென ஒரு நாள் தோன்றியது, இந்த பாடல்கள், அதன் மாந்தர்கள், அதன் பருவநிலைகள், விலங்குகள், விழாக்கள் என யாவும் தத்தமக்குள் உரையாடினால் என்ன ஆகும்? இந்த எண்ணம் உதித்ததும், பாடலின் வரிக்கட்டுக்களை மீறி வெளியேற துடிக்கும் சிறைகைதிகளாக மாறிவிட்டனர் பாடலில் குடிகொண்ட அனைவரும். அவர்களை விடுவிக்கும் முயற்சியே இது.”

இன்று, வடிவ ரீதியிலும் வாசகப்பங்கேற்பு விகிதத்திலும் (2) (reader participation ratio) பின் தங்கிய படைப்பாக இந்நூல் பார்க்கப்படுகிறது. எனினும், இரண்டு விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று, கலவை இலக்கியம் அதன் வடிவ நேர்த்தியை கண்டடையும் முன்பே வெளிவந்த படைப்பு இது. உதாரணமாக பிற்கால கலவைக்கட்டுரைகளின் உரைகல்லாய் திகழ்ந்த வாசக பங்கேற்பு விகிதம் போன்ற கருத்தாக்கங்கள் இந்நூல் உருவான காலத்தில் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இரண்டாவதாக, இன்று மரபணு வரலாற்றியல் (3) என்னும் அறிவியல் துறையின் வளர்ச்சியினால், நாம் ஆயிரக்கணக்கான சங்ககால பாடல்களை மீட்டெடுத்துள்ளோம். ஆனால், இந்த நூல் எழுதப்பட்ட பொழுது சங்க இலக்கிய பாடல்கள் என்று வெறும் 2700 பாடல்களையே கூறிவந்தார்கள். இந்த 2700 பாடல்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு இன்றைய எந்த கலவை இலக்கிய படைப்பினோடும் ஒப்பிடக்கூடியதே என்பது எனது துணிபு.

முதன்முதலில் வெளியிடப்பட்ட போது இதை எந்த வகைமைக்குள் அடைப்பது என்பது தான் பெரிய பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கிய சமூகம் இந்நூலினை மிக மௌனமாகவே முதலில் எதிர்கொண்டது என கணிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. 2035ல் வெளிவந்த நூலினை பற்றிய குறிப்பிடும்படியாக எழுதப்பட்ட முதல் கட்டுரை, மரவன்புலவு எழுதிய “பேசுதல் அதற்கின்பம் – வெட்டி ஒட்டுதல் கலை ஆகுமா?”. இது 2040ல் வெளியானது. ஐந்தாண்டு கால மௌனம். கட்டுரையில் நூலினை, அதன் அடிப்படையை மிக உக்கிரமாக நிராகரிக்கிறார் மரவன்புலவு. ஆனால் இந்நூலின் கலைமதிப்பு, அழகியல் ஆகியவை பெருவாரியான வாசகர்களை ஈர்த்தன என்பதை இக்கட்டுரைக்கு வந்த மறுப்புரைகள் காட்டுகின்றன. நோபல் பரிசு பெற்ற புனைவாளரான மிலோராட் பாவிச்சின் நாவல்களில் இருந்து உருவாக்கப்பட்ட “Tea with the Khazars” என்ற ஆங்கில கலவை நாவலை அமெரிக்க தமிழர் செந்தூரன் 2041ல் வெளியிட்டார். கலவை இலக்கியம் (Collage Literature) என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது இவரே. இந்நூல் ஐரோப்பாவில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் கிட்டத்தட்ட 20 குறிப்பிடத்தக்க கலவை இலக்கிய நூல்கள் வெளியாயின. 2042ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை Conversations across bariers (பெரும்பாலும், ஏ.கே. ராமானுஜனின் சங்கபாடல்களின் ஆங்கில மொழிப்பெயர்புகள் பயன்படுத்தப்பட்டன) என்ற பெயரில் வெளியிட்டார். இன்று உலக இலக்கிய சூழலில் தமிழ் மிக முக்கியமான இடத்தினை பெற்றிருப்பதற்கு இந்த மொழிபெயர்ப்பு ஒரு பெரும் காரணமாகும். இம்மொழிபெயர்ப்பை தொடர்ந்து பல தமிழ் நாவல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 2060ல் செந்தூரனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது நிகழ்த்திய உரையில் முத்தையனை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழ் சமூக வரலாற்றில் இந்நூலின் தாக்கத்தை குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழகம் தனி நாடாக உருவானது தமிழர் வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வு. கடந்த நூறு ஆண்டுகளில் இந்நிகழ்வின் சமூக தாக்கங்கள் குறித்த பல்வேறு முக்கியமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்நோக்கில், தனி நாடு பிரகடனத்திற்கும், பேசுதல் அதற்கின்பம் நூல் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்பும் ஆய்வுக்குரியதே.

இத்தனை வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நூல் கடந்த 40 ஆண்டு காலமாக புழக்கத்தில் இல்லை. நாம் எந்த அளவிற்கு வரலாற்றுப்பிரக்ஞையற்று இருக்கின்றோம் என்பதற்கான சான்று இது. இதை வெளியிட்டதன் மூலம் தமிழேறு பதிப்பகம் தமிழ் சமூகத்திற்கு ஓர் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

– வெ. சித்தார்த் (அங்கிங்கெனாதபடி, ஜூன் 30, 2182).

பின்னிணைப்புகள் :

(1) கலவை இலக்கியம் என்பது பல்வேறு மூலங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களை கலப்பதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு இலக்கிய படைப்பு ஆகும். கலவை இலக்கியத்தின் மிக முக்கிய அம்சம், அதன் ஆசிரியர் தனது சொற்களை படைப்புக்குள் புகுத்தாதிருப்பதே. சொல்ல வந்த அனைத்தையும் பல்வேறு ஆக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களின் மூலம் மட்டுமே சொல்ல வேண்டும்.

கலவை இலக்கியம் என்ற பொதுப்பகுப்பினுள் கலவை கட்டுரை, கலவை சிறுகதை, கலவை புதினம், கலவை கவிதை என பல்வேறு விதமான இலக்கியப் படைப்புகள் உருவாகியுள்ளன. ஒரு கலவை காப்பியம் கூட எழுதப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “A Brief introduction to Collage Literature” கலவை இலக்கியம் பற்றிய சிறந்த அறிமுக நூல்.

(2) – வாசகப்பங்கேற்பு விகிதம் [வா.ப.வி] (Reader Participation Ratio [RPR]) : படைப்பு என்பது படைப்பாளியும் வாசகனும் இணையும் போதே உருவாகிறது என்ற வாதத்தின் நீட்சியாக உருவான அளவீடு, வாசக பங்கேர்ப்பு விகிதம். ஒரு படைப்பின் புரிதலுக்கு வாசக ஈடுபாடு எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்பதை குறிக்கும் அளவீடு இது. இந்த விகிதத்தின் துணைகொண்டே புத்தகங்களின் வாசகபரப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில், வா.ப.வி யை அளவிட சொற்பரிச்சயம், கருத்துப்பரிச்சயம், சராசரி வாக்கிய நீளம் போன்ற பல்வேறு அளப்பான்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றைய வா.ப.வி அதன் ஆதி வடிவில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டது.

(3) – மரபணு வரலாற்றியல் : 21ஆம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக கொண்டாடப்படுவது மரபணு வரலாற்றியல். 2083யில் மு. குழந்தைவேலு மற்றும் இவானிச் இளியோர் கூட்டாக வெளியிட்ட நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சிக்கட்டுரை  இத்துறையின் தொடக்கப்புள்ளி எனலாம். ஒவ்வொரு மனிதனின் மரபணுக்குள்ளும் அம்மனிதனின் மூதாதையர்கள் குறித்த தகவல்கள் பொதிந்துள்ளன என்று நிறுவி அதை பிரித்தெடுக்கும் வழிகளை கோட்பாட்டளவில் அளித்தது இக்கட்டுரை. இதன் துணை கொண்டு மனித வரலாறு குறித்த தகவல்களை மனித மரபணுக்களில் இருந்து விஞ்ஞானிகள் தேடத்துவங்கினார்கள். மொழியியல் , குறியீட்டியல் , நரம்பியல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சியின் விளைவாக இந்த மரபணு தகவல்கள் மொழிவடிவமாக மாற்றப்பட்டன. இத்துறையின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழ் இலக்கிய ஆர்வலருமான மு. குழந்தைவேலு பழந்தமிழ் இலக்கியத்தினை மீட்டெடுக்கும் பணியினில் ஈடுபடலானார். மதுரையை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மரபணுவில் இருந்து கபிலரின் பாடல் ஒன்றினை குழந்தைவேலு 2098ல் மீட்டெடுத்ததே இதன் தொடக்கம்.  இவர் உருவாக்கிய “தமிழிலக்கிய மீட்புக்கழகம்” கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 50,000 பாடல்களை மீட்டெடுத்துள்ளது. இவற்றுள் 8539 பாடல்கள் சங்க இலக்கிய காலகட்டத்தை சேர்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளன.

(உரையாடல் சிறுகதை போட்டிக்கான கதை).

குறுங்கதை மொழிபெயர்ப்பு

Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது. (http://www.wnyc.org/shows/shorts/). எனது “கட்டாயம் கேட்கப்படவேண்டியவை” பட்டியலில் உள்ள பாட்காஸ்ட் இது.

ஜெ. ராபர்ட் லென்னன் (J. Robert Lennon) ஒரு அமெரிக்க எழுத்தாளர். இவர் எழுதிய  Pieces for the Left Hand என்ற புத்தகம் 100 குறுங்கதைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் 1 – 2 பக்கங்களே உள்ள கதைகள். 100 கதைகளுமே ஒரே கதைசொல்லியின் பார்வையிலிருந்து விரிகின்றன என்பதனால் இதனை ஒரு வகையில் சிதறிய நாவல் என்றும் கொள்ளலாம். இந்த புத்தகம் இன்னும் கைக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதிலிருந்து 8 கதைகளை சமீபத்தில் Selected Shorts நிகழ்ச்சியின் மூலம் கேட்க நேர்ந்தது. கேட்ட எட்டு கதைகளுமே கதை எனும் வடிவத்தின் அலாதித்தன்மையை கொண்டிருந்தன. இக்கதைகளின் கதைசொல்லி, நம் காதுகளின் வந்து அவர் கண்ட – கேட்ட ரகசியங்களை பகிர்ந்துகொள்கிறார் என பட்டது எனக்கு. இக்கதைகளை கேட்கையில் நமக்கு ஏற்படுவது – 1. குறுகுறுப்பு 2. உடனடியான யாருக்கேனும் சொல்ல வேண்டும் என்ற விழைவு. இரண்டுமே இவற்றின் “புறம் சொல்லல்” அம்சத்தில் இருந்தே கிளைத்தெழுகின்றன என நினைக்கிறேன். இந்த எட்டு கதைகளின் இருந்து எனக்கு பிடித்த ஒரு கதையை மட்டும் மொழிபெயர்த்து இங்கு தந்துள்ளேன். ஒலிக்கோப்பை கேட்டு அதை மொழிபெயர்ப்பதை விட கொடுமையான விஷயம் வேறில்லை. இந்த குறுங்கதையை முடிப்பதற்குள் ஐயோ என்றாகிவிட்டது. புத்தகம் கைக்கு வந்ததும் இன்னமும் சில கதைகளை மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன். இனி கதை…
*****
தேசிய அளவில் அறியப்பட்ட அந்த உள்ளூர் கவிஞர் தனது புதிய தொகுப்பிற்கான கவிதைகளை எழுதிமுடித்திருந்தார். சில வலிமிகுந்த துக்ககரமான நிகழ்வுத்தொடர்ச்சிகளினால் தொகுப்பு வெளிவருவது சில வருடங்களாக தாமதமாகிக்கொண்டே இருந்தது. இறுதியாக எல்லா திருத்தங்களும் செய்து முடிக்கப்பட்டதும் கவிஞர் இதனை ஒரு இறுதி படி எடுத்தார். அதை நகல் எடுக்க நகலகம் செல்வதற்காக காரில் ஏறினார்.
செல்லும் வழியில் சிகப்பு விளக்கில் நிற்காமல் சென்றதால் காவலதிகாரியால் நிறுத்தப்பட்டபோது,  கவிஞர் குடித்துவிட்டு வாகனமோட்டினார் என்று தெரியவந்தது. எங்கள் மாநிலத்தில் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இறுகிய வாகன விதிகளின் காரணமாக அவரது வாகனம் பரிமுதல் செய்யப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தன்னிலை அடைந்ததும் கவிஞருக்கு தனது கவிதை தொகுப்பின் ஒரே படி வாகனத்திற்கு உள்ளே இருப்பது நினைவிற்கு வர, அதை தருமாறு காவல் அதிகாரிகளிடம் கோரினார். ஆனால், வாகனத்தின் உள்ளிருக்கும் எதுவுமே இனி அவருக்கு சொந்தமானதல்ல என கூறி திரும்பத்தர மறுத்துவிட, இந்த மறுப்பு நீண்டதொரு நீதிச்சமராக உருவெடுத்தது.  இதனிடையில் நமது பிரியப்பட்ட கவிஞர் இறந்துவிட்டார்.
கவிஞரின் வெளியீட்டாளர்களுக்கு இந்த சமயத்தில் கவிஞரின் தொகுப்பு வெளிவந்தால் நல்லது என தோன்ற, அவர்கள் காவல்துறையுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தனர். அதாகப்பட்டது, காவல் நிலையத்தில் உள்ள யாரேனும் படியில் உள்ளதை தொலைபேசியின் மூலம் படித்தால் அதை பதிப்பகத்தில் ஒருவர் எழுதிக்கொண்டுவிடுவார். படி கைமாறாமல், உள்ளடக்கம் மட்டும் இதன் மூலம் கைமாறி விடும். சொல்லப்போனால், படி காவல்துறைக்கு சொந்தமானதென்றாலும் அதன் உள்ளடக்கம் வாகனத்திற்கு வெளியே தான் உருவானது என்பதால், அது அவர்களுக்கு சொந்தம் அல்ல, அல்லவா? காவல்துறை இதற்கு சம்மதித்ததும், தொலைபேசியில் வாசிப்பு நிகழ, விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களுடன் புத்தகம் வெளிவந்து, கவிஞர் தன் வாழ்நாளில் அனுபவிக்காத இலக்கிய அந்தஸ்தை அவருக்கு பெற்றுத்தந்தது.
காவல்துறைக்கும் கவிஞரின் குடும்பத்தினருக்கும் இடையே நிகழ்ந்த வழக்கில் கவிஞருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதும், கவிதைகளின் அசலான படி திரும்பத்தரப்பட்டது. இதற்கும் நூல் வடிவிற்கும் சம்மந்தமே இல்லாதிருந்தது அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உண்மை வெளிவர வெகுநாட்கள் பிடிக்கவில்லை. கவிதை வாசிப்பின் போது சில திருத்தங்களை செய்ததாக ஒரு காவல் அதிகாரி ஒத்துக்கொண்டார். இதற்கான காரணமாக அவர் கூறியது : கவிதைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் நிறைய இருந்தன; அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருத்தங்கள் செய்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த காவலதிகாரி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். மிகுந்த பாராட்டினை பெற்ற அந்த புத்தகமும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது. உண்மையான தொகுப்பு வெளியாகி, மோசமான விமர்சனத்திற்கு ஆளானது.
அந்த காவலதிகாரி தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். கவிதைகள் மிக அருமையாக உள்ளதாக பலரும் ஒத்துக்கொண்டாலும், நேர்மையற்றவராய் அறியப்பட்ட ஒருவரது படைப்புக்களை வெளியிட பதிப்பகங்கள் தயங்குகின்றன.

இதயதேவி – வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். 1937 முதல் 1941 வரை இவர் எழுதிய கதைகள் அடங்கிய “விஷப்பு” (பசி) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது.

நினைவின் ஆழத்தில் புதைந்து போயிருந்த அது, நிலவொளியில் மூழ்கும் தாஜ்மஹாலென தெளிவடைகிறது இப்போது. இந்தக் காதல் கதை துக்கம் நிறைந்ததாய் இருக்கலாம். இல்லையெனில் வேறேதோ, அதன் சூட்சமத்தை பற்றி நான் ஒன்றும் விளக்கப்போவதில்லை.

பிரம்மாண்டமான கட்டிடங்கள் நிறைந்த தெருக்களின் வழியே தாய் தந்தையற்ற அனாதையாய் திரிந்துகொண்டிருந்தேன், அதன் விரிவைக் கண்டு ஆச்சரியப்படும் லட்சோபலட்சம் மனிதர்களை இடித்து உரசியபடி. சத்தங்கள் நிறைந்த, விசாலமான இந்நகரம் என்னை மிகவும் துன்புறுத்தியது. எவ்வளவு முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் ஓர் அடைக்கலமில்லை. உடலும் மனதும் ரணப்பட்டிருந்தன. உச்சிவெயிலில் இருந்து தப்பிக்க அருங்காட்சியகத்தினுள் நுழைந்தேன். அங்கிருந்த எதையும் நின்று பார்க்கவில்லை. மரநிழலிலிருந்த இருக்கையில் சென்றமர்ந்தேன். என்னருகில் ஓர் பெண் சிற்பம். வெண்பளிங்கில் செய்யப்பட்டது. உறைந்த நிலா பெண் உரு கொண்டதைப் போன்ற தோற்றம். அங்கங்கலெல்லாம் பூரண வளர்ச்சியடைந்திருந்தன. முந்திரி இலைகளைக் கொண்டு மானம் காத்துக்கொண்டிருந்தது அது.

என் கண்கள் கலையெழுச்சிமிக்க அந்த மௌன அழகில் பதிந்திருந்தன – ஆனால் சிந்தனை துக்கம் நிரம்பியதாய், மேகங்களினிடையே ஓடும் நதியினைப்போல் எங்கெங்கோ பாய்ந்துக்கொண்டிருந்தது. நான் இருப்பது நகரத்தின் இதயத்தில் எனும் நினைவே மறந்துபோனது. அப்போது தான் இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன் ஹிந்தியில் அந்த கேள்வி:

‘நீ யார்?’

சிவப்பேறிய இரு கண்கள் என்னை உற்றுநோக்கின. செம்மண் அப்பிய உடைகள் அணிந்த பார்ஸி இளைஞன். தூக்கலான வியர்வை நெடி – கூடவே ஏதோ வன மிருகத்தின் மேலிருந்தெழுவதைப் போன்ற கெட்ட வாடையும். அச்சமுற்றவனாய் திகைத்து நின்றுவிட்டேன் நான். இலக்கில்லாத அந்த கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. கோபம் கணன்ற அந்த முகத்தில் ஓர் புன்சிரிப்பு நிழலெனப் படர்ந்தது.

‘ஓ. நீ தானா?’ சிரித்துக்கொண்டே அவன் எனக்கு கைகொடுத்தான். அந்த முகமாற்றத்திற்கான காரணம் என்னவென்று ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதனை அப்போது தான் முதல்முறையாகக் காண்கிறேன்.

‘நீ அவனோ என்று நினைத்துவிட்டேன்’

‘எவன்?’

‘தெரியாதா?’ ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தான். உலகப்புகழ் பெற்ற அவனைப் பற்றிய எனது அறியாமையை எண்ணி சிரித்தான்.

‘என்னுடைய ஜட்காகாரன்!’

‘ஜட்காகாரன்?’

‘அவன் தான். என்னுடைய இதயதேவியை….’

‘இதயதேவியை?’

அந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான் என்றெனக்குத் தோன்றியது. துக்கம் நிறைந்த அசைவுகளுடன் காதலின் உணர்வெழுச்சியுடன் அச்சிலையருகே சென்றான். ஒரு நாற்பது ஐம்பது கண்கள் அவனை பின் தொடர்ந்தன. சிலது ஏளனப்புன்னைகை தூவியபடி. சிலது உணர்ச்சிகளற்று.

வெண்பளிங்குச் சிற்பம் புன்னகைக்கும் பாவனையுடன் நின்றது.

‘தில்பஹார்!’ உணர்ச்சிப்பொங்க அழைத்தான். வேதனையுடன் அக்கண்கள் உயர்ந்தன.

‘நான் தாமதித்து விட்டேனா?’ தீனமாய் எழுந்தது அந்த குரல்!

நிறைந்தொழுகிய கண்களுடன் அந்த முகத்தை பார்த்துக்கொண்டு அதன் பாதங்களில் விழுந்தான். பதிலேதும் கிடைக்காததால் மீண்டும் எழுந்து சிற்பத்தை கட்டிப்பிடித்தான். அதன் மார்பில் முகம் புதைத்து உடைந்தழுதான்:

‘தேவீ! இன்றாவது என்னோடு பேசு….’

(இக்கதை ஏப்ரில் மாத வலம்புரி இதழில் வெளிவந்தது)
தமிழில் : சித்தார்த்

அழைப்பு – சிறுகதை

மூலம் : ஓ. வி. விஜயன்

*******

அவனது நினைவுகள் அந்த அழைப்பில் இருந்தே தொடங்கின, “போதவிரதா!”
அவன் பதில் கூறினான், “இதோ நான் வந்துவிட்டேன்!”

“போதவிரதா!”

தாய் அழைத்தார், தந்தை அழைத்தார், ஆசிரியர் அழைத்தார், தோழர்கள் அழைத்தனர். அப்போதெல்லாம் அவன் பதில் கூறினான், “இதோ வந்துவிட்டேன்!”

மனைவி அழைத்தாள், மகன் அழைத்தான், மகள் அழைத்தாள், அவருடைய மக்கள் அழைத்தனர். அந்த அழைப்புக்களனைத்தும் போதவிரதனின் அறிவை மேலும் பலப்படுத்தின – நான்!

ஒவ்வோர் இரவும் உறக்கத்திற்கு முன்பான கடைசி சிந்தையாக இது இருந்தது. இதுவே நான்.

இரவினைப் பகலும் பகலினை இரவும் பின்தொடர்ந்தன. நாட்கள் செல்லச்செல்ல இந்த சிந்தை போதவிரதனுக்கு பழக்கமான ஒன்றாக மாறியது.

இறுதியில் ஓர் இரவு மற்ற இரவுகளினின்று வேறுபட்டதென போதவிரதன் அறிந்தான். வெளியே புதரில் இருந்து அசாதாரணமான ஓர் குரல் அழைத்தது.

“போதவிரதா!”

போதவிரதன் பதிலேதும் கொடுக்கவில்லை.

இவ்விரவு விடியாதா என காத்திருந்தான். இரவு விடியவில்லை. புதரிடையே இருந்து அந்தக் குரல் மீண்டும் அழைத்தது.

சிலந்தி வலையினை போன்ற பட்டு நூல் போதவிரதனை சுற்றியது. அறுத்தெரிய முயன்று தோற்றான். புதரில் இருந்த அந்த அறிமுகமற்ற மனிதன் நூலினைப் பற்றி இழுக்க, தடுக்க வழியின்றி போதவிரதனும் புதரினுள் நுழைந்தான்.

நடுக்கத்துடம் போதவிரதன் அவனிடம் கூறினான் “இது நான் இல்லை”

அம்மனிதன் கனிவோடு சிரித்தான்.

“அதை புரியவைக்கவே உன்னை இங்கு அழைத்தேன்.”

**********

தமிழில் : சித்தார்த்