அறவினை யாதெனின்…

இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் Game of Thronesநாவலில் வரும் ஒரு மன்னர் எட்டார்ட் ஸ்டார்க் (Eddard Stark). நாவலின் துவக்கத்தில் ராணுவத்தை விட்டு ஓடிய ஒருவனுக்கு அந்நாட்டு சட்டப்படி மரணதண்டனை அளிக்கிறார். அவனது தலையை துண்டிக்கும் செயலை மன்னரே செய்கிறார். முடித்துவிட்டு மாளிகைக்கு திரும்பும் பொழுது அவரது பத்து வயது மகனுக்கு தன் செயலுக்கான காரணத்தை அவர் விளக்கும் வரி ஏதோ செய்தது வாசிக்கும் பொழுது :

”நீ ஒரு மனிதனின் உயிரை பறிக்க முடிவெடுக்கிறாயெனில் அவனை கண்ணோடு கண் நோக்கி அவனது கடைசி சொற்களை கேட்கும் கடமை உனக்கிருக்கிறது. உன்னால் அதை செய்யவியலாதெனில், அவன் ஒருவேளை இறக்க வேண்டியவனாக இல்லாமல் இருக்கலாம். 

கூலிக்கு கொல்பவர்கள் பின்னால் ஒளியும் மன்னன் ஒரு கட்டத்தில் மரணம் என்றால் என்ன என்பதை மறந்துவிடுவான்….”

***********

கசாபின் தூக்கு தண்டனை தீர்ப்பு இந்த வரியை நினைவுப்படுத்தியது. மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பது அனைத்து சமூகப்பிரச்சனைகளை போலவே மிக சிக்கலான ஒரு பிரச்சனை.

மரண தண்டனை என்பது அடிப்படையில் சமூக கட்டமைப்பை சார்ந்த ஒரு விஷயம். இன்று சமூகம் என்ற பதத்தை பயன்படுத்துகிறோம். ஒரு காலத்தில் குழுநலன்/குழு ஒற்றுமை என்பதாக இருந்தது. மரண தண்டனை இரண்டு நிலைகளில் வேலை செய்வதாக படுகிறது. ஒரு நிலையில் அது குற்றம் நிகழாமல் தடுப்பதற்கான காரணியாக இருக்கிறது. மரணம் குறித்த அச்சம் குற்றத்தை தடுக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் அதை விடவும் முக்கியமாக சமூக கோவத்தின் வடிகாலாக மரண தண்டனை பயன்படுகிறது. கசாபின் மரணம் என்பது மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கோவத்திற்கான வடிகால். அதிகாரம் பரவலாக சிறுசிறு மக்கள் குழுக்களின் கைகளில் இருந்த பொழுது, தண்டித்தலுக்கும் மக்களுக்குமான நெருக்கம் மிக அதிகமாக இருந்த பொழுது ஊர்கூடி கல்லெரிந்து கொன்றோம். ஆனால் இந்த நூற்றாண்டில் நமக்கு நிகழ்ந்த இருபெரும் மாற்றங்கள் அதிகாரம் மையத்தை நோக்கி நகர்ந்ததும் தனிமனிதன் குறித்த பிரக்ஞை அதிகரித்ததும். ஒரு தனிமனிதனை தண்டனை என்ற பெயரில் கொல்வதற்கான அதிகாரம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தோ / பல்வேறு சிறுசிறு குழுக்களிடமிருந்தோ பறிக்கப்பட்டு ஒரு மைய அமைப்பிற்கு செல்கிறது.

இந்த நகர்வு மெல்ல வன்முறைக்கான தேவையை/பயன்மதிப்பை குறைத்துக்கொண்டே வருகிறது. நம் வரலாற்றில் இன்றை போல வன்முறை குறைவாக நிகழும், வன்முறை பரவலாக வெறுக்கப்படும் வேறோர் காலகட்டம் இருந்ததில்லை என்றே படுகிறது. வன்முறையின் உன்னதப்படுத்தப்பட்ட வடிவமாக ”வீரம்/மறம்” சென்ற தலைமுறையைவிட இந்த தலைமுறையில் குறைவாகவே மதிக்கப்படுகிறது. கழுவிலேற்றுவதை ஊரே சென்று பார்ப்பதும், ஊர் கூடி கல்லெரிந்து கொல்வதும் பொதுவழக்கமாக இருந்த காலகட்டத்தை தாண்டி வந்துவிட்டோம். ஒரு இனமாக நாம் மென்மேலும் உன்னதமாகிக்கொண்டிருக்கிறோம் என்றே நம்புகிறேன். ஒரு சிறுகுழுவின் அங்கமாக மட்டுமே என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்பதே சென்றகாலத்தில் ஒரு தனிமனிதனின் பொது மனநிலையாக இருந்தது. அங்கிருந்து மெல்ல நகர்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையே மனித உரிமைக்கு இன்று உருவாகியுள்ள முக்கியத்துவம் காட்டுகிறது. இந்த பின்னணியில் மரண தண்டனைக்கான எதிர்ப்பு என்பது மிக இயல்பான ஒன்றே.

ஆனால் மரண தண்டனையே கூடாதா? என்ற கேள்விக்கு இன்னும் என்னிடம் தெளிவான விடை இல்லை. தனிமனிதனுக்கான ஒழுக்கவிதிகளே அரசுக்கும் என்பது ஒரு உன்னத நிலை தான் என்றாலும் யதார்த்தம் என்பது மிக சிக்கலானதல்லவா?

மரணதண்டனை எதிர்ப்பு என்பது மனித உயிரின் முக்கியத்துவத்தை அரசிற்கு முன் பறைசாற்றும் செயல். சமூக நலன் என்ற போர்வையில் தனிமனிதன் நசுக்கப்படுவதற்கு எதிரான கூக்குரல். இந்த எதிர்ப்பு தண்டிக்கப்பட்டவனின் மீதான இரக்கத்தில் இருந்து எழுவதில்லை. தண்டிப்பவனின் மீதான கண்காணிப்பு உணர்வில் இருந்து எழுவது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் நிலையாகிவிடக்கூடாதென்பதற்காக எழுவது.

மன்னன் எடார்ட் ஸ்டார்கின் வரி : கூலிக்கு கொல்பவர்கள் பின்னால் ஒளியும் மன்னன் ஒரு கட்டத்தில் மரணம் என்றால் என்ன என்பதை மறந்துவிடுவான்…

இந்த மறதி நிகழாதிருக்கவே, ஒவ்வொரு மரண தண்டனையில் பொழுதும் தண்டிக்கப்படுபவன் யாராக இருந்தாலும் அவன் குற்றம் என்னவாக இருந்தாலும் எதிர்ப்பு எழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஈரோடுக்கு போன சென்னைவாசி. :)

சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது எழுதி வைத்தது….

******

கடந்த 20 நாட்களாக ஈரோட்டில் இருக்கின்றேன். பெரும்பாலும் வீட்டில் காயத்ரி, அமுதினியுடன். அவ்வப்போது நகர்வலம் செல்வதும் உண்டு. ஈரோட்டில் தனியாக சுற்றும் அனுபவம் இம்முறை தான் வாய்த்திருக்கிறது. சாலைகள் தங்களின் பூடகத்தன்மையை மெல்ல இழக்கத்துவங்கி விட்டன. 3 நாட்களுக்கு முன்னால் “இப்படியே நேரா போனீங்கன்னா எம்.ஜி.ஆர் சிலை நால்ரோடு வரும்… அங்க இருந்து சிக்னல் தாண்டி நேரா போனா பஸ் ஸ்டாண்ட்” என்று ஒருவருக்கு வழி கூட சொன்னேன்.  🙂

இரயில் நிலையம் தாண்டி கொல்லம்பாளையம் வரும் வழியில் ஒரு இரயில் பாலம் இருக்கிறது. பாலத்தின் அடியில் அழுக்கேறிய உடலுடன் ஒருவர் எப்பொழுதும் அமர்ந்திருக்கிறார். அவரின் தலைக்கு மேலே சுவற்றில் ஒரு இடம் பலான படங்களுக்கான சுவரொட்டிக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஊர்களில் இப்படி ஒரு சுவர் இருப்பது தான். என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த 20 நாட்களில் அங்கே கிட்டத்தட்ட 7 – 8 சுவரொட்டிகளை மாற்றிவிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு படம் – டர்ன் ஓவர் ரேட் மலைக்க வைக்கிறது 🙂

“நல்ல மரியாதையான மக்கள்” என்ற சொற்றொடரை போட்டால் பெருநகரவாசி ஒருவன் குக்கிராமத்தை குறித்து கருத்து சொல்லும் தொணி வந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் நிஜமாகவே மிகவும் மரியாதையாக பேசுகிறார்கள். அண்ணா என்ற suffix மிக சரளமாக வந்து விழுகிறது வாக்கியங்களில். மூன்று நாட்களுக்கு முன்னால் காயத்ரிக்கு ஒரு தள்ளுவண்டி கடையில் நாவல்பழம் வாங்கும் போது புதிதாக பிள்ளை பெற்றவர்கள் சாப்பிடலாமா என்று விசாரித்தேன். இன்று மீண்டும் அந்த கடைக்கு பழம் வாங்க சென்றேன். அந்த பையன் “அக்கா நல்லா இருக்காங்களாண்ணா?” என்றான். 🙂

ஃப்ளெக்ஸ் போர்ட் இல்லாத சாலைகள் ஈரோட்டில் காணக்கிடைக்கவில்லை. நான் ஈரோடு வந்த முதல் வாரத்தில் ஈரோடு முழுக்க சே குவாரா வேடத்தில், முறுக்கு மீசையுடன் கை கட்டி நின்றபடி, கையில் ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய படி, இராணுவ உடையுடன், மேடையில் கழுத்து நரம்புகள் புடைக்க ஆவேசமாக பேசிய படி என்று எங்கு நோக்கினும் திருமாவளவனின் திரு உருவம். “வாழும் அம்பேத்கரே, சீறும் சிறுத்தையே” போன்ற வாசகங்களும். சிறுபான்மை கிருத்துவர் கழகம் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை மாநாட்டினில் பேச வருகிறார் என்பதனால் இந்த வரவேற்பு பலகைகள். இது ஓய்ந்ததும் ஊரெல்லாம் செம்மொழி மாநாட்டிற்கான வாழ்த்தும் வரவேற்பும் (கோவையில் நிகழும் மாநாட்டிற்கு இங்கு ஏன் வரவேற்பு பலகைகள்?) ஊரை நிறைத்தன. எம்.ஜி.ஆர். சிலை அருகே  “வாழ்த வயதில்லை வனங்குகிறோம்….. அலைகடலேன திரண்டுவாரீர்” என்று எழுத்துப்பிழைகளுடன் அத்தனைப்பெரிய பலகை.  இரயில் நிலையத்தை ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் 3 மிகப்பெரிய விளம்பர பலகைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. முதல் பலகையில் பெரியாரும் அண்ணாவும் சிரித்தபடி அமர்ந்திருக்கின்றனர். இரண்டாம் பலகையில் இளம் வயது கருணாநிதி சிரித்த முகத்துடன் கை நீட்டிய படி அமர்ந்திருக்கிறார். மூன்றாம் பலகையில் அழகிரியும் ஸ்டாலினும் சிரிக்கிறார்கள். எல்லா பலகைகளிலும் மேலே என்.கே.கே. பெரியசாமி சிரிக்கிறார். கீழே என். சிவக்குமார் உம்மென்று இருக்கிறார் (பலகைக்கான செலவு இவருடையது போல). மருந்துக்கு கூட அ.தி.மு.கவை எங்கும் காணவில்லை. ஒரு காலத்தில் அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்த ஊராம் இது.

முன்னால் அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவிற்கு மாறி இருக்கிறார். கட்சி மாறியபின் முந்தாநாள் தான் ஈரோடுக்கு வருகிறார். அதற்கு முந்தைய நாளில் இருந்தே ஊரெல்லாம் கருணாநிதி மற்றும் முத்துசாமி ஆகியவர்களின் புகைப்படங்களும் “ஈரோட்டின் சரித்திரமே.. எங்கள் விடிவெள்ளியே… நாங்கள் என்றும் உன் பின்னால் நிற்கின்றோம்” போன்ற வாசகங்களுமாய் பலகைகள். கீழே ஜெ. ஶ்ரீராம் என்பவரின் படத்துடன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எல்லா பலகைகள் மற்றும் சுவரொட்டிகளிலும் மேல் மூலையில் ஈரோடு தி.மு.க முக்கியஸ்தர் என்.கே.கே. பெரியசாமியின் மிகச்சிறிய புகைப்படம். சுவரொட்டி தயாரான பின் ஒட்டப்பட்ட  படம் என்று நன்றாக தெரிகிறது. ஆட்டம் ஆரம்பம். 🙂

இதெல்லாம் கிடக்கட்டும். முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். ஈரோட்டில் எனக்கு மிக மிக பிடித்த விஷயங்களில் ஒன்று – மாமன் பிரியாணி ஸ்டாலில் கிடைக்கும் பரோட்டாவும் சால்னாவும்.

காந்தி கோட்சே கூட்டறிக்கை

காந்தி கொலை செய்யப்பட்ட போது நேரு கூறியதை போல அவர் வாழ்ந்த வாழ்வின் தருக்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (climax) அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணமும் கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது. கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள். கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும். தனது முடிவை பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்படப் பலமுறை அவர் இதை சொல்லியிருந்தார். யாரோ சொன்னது போல காந்தியின் கொலை என்பது காந்தியும் கோட்ஸேவும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை.

– அ. மார்க்ஸ் (காந்தியும் தமிழ் சனாதனிகளும் [எதிர் வெளியீடு] நூல் முன்னுரையில் இருந்து)

வியட்நாம்

அகதி

 

வியட்நாம்

”பொண்ணே, உன் பேர் என்ன?” ”தெரியாது.”
”உன் வயசென்ன? எங்கிருந்து வர்ர?” “தெரியாது.”
”ஏன் இந்த குழிய தோண்டின? ” “தெரியாது.”
“எவ்வளவு நாளா ஒளிஞ்சிருக்க?” ”தெரியாது.”
”என் விரல ஏன் கடிச்ச?” ”தெரியாது.”
”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு? ” ”தெரியாது.”
“யார் பக்கம் இருக்க நீ? ” ”தெரியாது.”
“இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.”
”உன்னோட கிராமம் இன்னும் இருக்கா?” ”தெரியாது.”
”அவங்க உன்னோட குழந்தைங்களா? ”ஆமாம்.”

– விஸ்லாவா சிம்போர்ஸ்கா

கவிஞர் குறித்து : http://en.wikipedia.org/wiki/Wisława_Szymborska

ஆங்கில மூலம் : http://theyeschurch.blogspot.com/2009/10/szymborska-vietnam.html

சிம்போர்ஸ்காவின் சில கவிதைகள் : http://info-poland.buffalo.edu/web/arts_culture/literature/poetry/szymborska/poems/link.shtml

தமிழில் : சித்தார்த்.

அதிநாயகமாக்கத்தின் வேர்

சில மாதங்களுக்கு முன்பு “அதிநாயகமாக்கம்” என்ற பதிவினை எழுதி இருந்தேன்.  அந்த பதிவை ஒரு நடை படித்துவிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை. அந்த பதிவின் சாரம் இது தான். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை நம் சமூகம் “அதிநாயகர்களை” உருவாக்கியபடியே உள்ளது. ஔவை, வள்ளுவன், கம்பன் துவங்கி நம் கவிதைகள் முழுக்க இந்த அதிநாயகமாக்கத்தை காண்கிறோம். இராமன், காந்தி, ஒபாமா என அதிநாயகர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் ஏதோ ஒரு தேவையை இந்த அதிநாயகர்கள் பூர்த்தி செய்கிறார்கள்.

அந்த பதிவினை ஒரு கேள்வியுடனேயே முடித்திருந்தேன்.

இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?

இது பல வருடங்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் கேள்வி. அந்த கேள்வியை நினைக்கும் தோறும் ஒரு காட்சி தோன்றி மறையும். அருணாசலம் படம் வெளியாகி இருந்த நாள். முகப்பேர் பேருந்து நிலையம் அருகே ஒரு இளைஞர் கூட்டம் ரஜினியின் பெரிய படம் ஒன்றினை தங்களது தோளில் தூக்கி சென்றனர். யார் இந்த இளைஞர்கள். இவர்களுக்கு அந்த நடிகருக்குமான பந்தம் என்ன?

இரு வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தக சந்தை சென்றிருந்த போது ஒரு புத்தகம் வாங்கினேன். புத்தகத்தின் பெயர் : ஔவையில் உளவியல் & ப்ராய்டு – லெக்கானின் மனஅலசல். – ஐ.க. பாண்டியன் என்பவர் எழுதிய நூல் (கார்முகில் பதிப்பகம்). அப்பொழுது குறுந்தொகையில் லயித்திருந்ததாலும், நான் கவித்துவ நோக்கில் வாசித்த ஔவையை இவர் மனஅலசலின் (psychoanalysis) துணை கொண்டு ஆராய்கிறார் என்பதாலும் இந்த புத்தகம் ஈர்த்தது.
இந்நூலினை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பகுதியில் ப்ராய்டு மற்றும் லக்கானின் மனஅலசல் கோட்பாடுகளை மிக சுருக்கமாக விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் எத்தனை படித்தும் புரிபடாது இருந்த ப்ராய்ட் மெல்ல எனக்கு புரியத்துவங்கினார். நூலின் இரண்டாம் பகுதி ஆத்திச்சூடி மற்றும் கொன்றை வேந்தன் பாடல்களை அலசுகிறது. மூன்றாம் பகுதி ஔவையின் தனிப்பாடல்களை. நான்காவது பகுதியில் சங்கஇலக்கியத்தில் (குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு) ஔவை எழுதிய பாடல்களை அலசுகிறது.
ஏதோ காரணத்தால் இந்த நூலை முன்னுரையை தாண்டி படிக்கவில்லை.  இரு வருடங்களாக அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்த நூலினை உறக்கம் கொள்ளாத நேற்றிரவு சும்மா புரட்டலாம் என்று எடுத்தேன். “அதிநாயகமாக்கம்” கட்டுரையில் மேற்கோள்காட்டப்பட்டிருந்த ஔவையின் “களம் புகல் ஓம்புமின்…” என்ற பாடல் இந்நூலில் ஆராயப்பட்ட பகுதி கண்ணில் பட்டது. அந்த பாடலும் அதன் விளக்கமும் :

களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

– ஔவையார் (புறநானூறு 87)

போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனுக்கு எதிராக எதிரிகளின் படை திரள்கிறது. அப்போது எதிரிகளை எச்சரித்து ஔவை பாடுவதாக அமைந்த பாடல் இது. கட்டுரையாளர் இந்த கவிதை உருவாக காரணமாக என்ன இருந்திருக்கும் என்பதை ஆராய முற்படுகிறார். இந்த கவிதையின் துணைகொண்டு ஔவையின் மனஓட்டத்தை கணிக்க முயல்கிறார். இவர் வந்து சேரும் இடம் சட்டென ஒரு திறப்பை உருவாக்கியது. அதியமானுக்கு எதிராக போர் புரிய படை ஒன்று வரும் பொழுது ஔவைக்கு ஏன் இத்தனை கோவம் வர வேண்டும்?
ஔவையின் மனதினில் ஒரு வீரனின் பிம்பமாக அதியமான் இருக்கிறான். ஔவையின் மனதினில் உள்ள அந்த அதியமானும் ஔவையின் ஒரு பகுதியே. உண்மையான அதியமான் பகைவர்களால் சீண்டப்படும் போது ஔவையினுள் இருக்கும் அதியமானும் சீண்டப்படுவதாக, அதன் மூலம் தானே சீண்டப்படுவதாக உணர்கிறாள் ஔவை. அந்த உணர்வில் இருந்தே எழுகிறது “எம்முளும் உளன் ஒரு பொருனன்” என்ற வரி. இந்நிலையை உளவியலில் பிணைப்புத் தற்காதல் (Anaclytic Attachment) என்பார்கள் என்கிறார் பாண்டியன். பாண்டியனின் சொற்களில் :

ஔவை அதியமானின் பகைவரைக் கண்டதும், அவர்களை எச்சரிப்பதற்கான பிரக்ஞைபூர்வமான சொல்லாடல் அல்ல இது. மாறாக ஔவையின் சுயமோகத்தில் (Anaclytic Type) ஒரு பகுதியாக பங்கேற்றிருக்கும் அதியமானுக்கு ஏற்பட்ட காயமே, கிளர்ந்து ஒரு வானளாவிய வீரத்தைப் பகைவர் முன் தற்காப்பாக அவர்களை அச்சுறுத்த வைக்கிறது.

சாதி அரசியலை அல்லது மத அரசியலைத் தம் பகுதியாக கொண்ட தன்னிலைகள் எங்கோ நடப்பதை ஆய்வுக்குறிய எதுவும் இல்லாத போதும் தன் attachmentற்கு ஏற்ப நியாயப்படுத்தி பேசுவதைக் காணமுடியும். ரசிகர்களின் அரசியலும் இந்த வகை தான். தன்னையும், தான் ரசிக்கும் அபிமான நடிகரின் தொப்புள் கொடியில் கட்டுண்டு கிடப்பது பிரிக்கப்படவேண்டியது அவசியம் என்ற பிரக்ஞை இல்லாமல் இருப்பர்.

சுயமோக வெளியின் வானளாவியம் அத்தகையது. அறிஞனையும் ஞானியையும் ஏமாற்றக்கூடியது.

ஆக, ரஜினியின் உருவத்தை பல்லக்கில் எடுத்துச்செல்லும் ரசிகன் உண்மையில் தூக்கிச்செல்வது தன்னுள் நிறைந்த ரஜினியை தான். அதாவது தன்னையே பல்லக்கில் தூக்கிச்செல்கிறான் அவன். அதிநாயகமாக்கம் என்பது உண்மையில் நம்மை அதீதமாக்கும் முயற்சி தானா?  யோசித்தால் இது அத்தனை எதிர்மறையானது அல்ல என்று தோன்றுகிறது. காந்தியின் தியாகம் நம் கண்களை நனைப்பது எதனால்? காந்தியை வாசிக்கும் தோறும் அவரை நாமாக மாற்றுவதினால் தானா?

அதிநாயகமாக்கம்

கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.

வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்

யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.

இராமன் முடிசூட்டிக்கொள்ள செல்லும்போது அவனை காணும் அயோத்தியா மக்களின் மனநிலையை விளக்கும் பகுதியில் உள்ள பாடல் இது. இதன் கடைசி வரி என்னவோ செய்துவிட்டது. காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார். ஏன் காரணமின்றி அழவேண்டும்? சாதாரண அயோத்தியாவாசிக்கும் இராமனுக்கும் என்ன சம்மந்தம்? இவ்வரியை படித்த போது ஜெயமோகன் சுந்தர ராமசாமியை குறித்து எழுதிய ”நினைவின் நதியில்” நூலினில் ஒரு பகுதி நினைவிற்கு வந்தது. காந்தியை பற்றி சுரா கூறியதாக ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.

“காந்தியை பத்தின நினைவுகள்ல ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வர்ரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரை பாத்ததும் அப்படியே மனசு பொங்குது அவங்களுக்கு…”

காத்லீன் ஃபல்சானி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரின் வலைப்பதிவில் கீழ்கண்ட வரி இருந்தது.

“கிராண்ட் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு பத்து மணிக்கு வுல்ஃப் ப்லிட்சரின் குரல் “ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்” என்று ஒலித்தபோது அங்கு குழுமியிருந்த அனைவரும் (பல பத்திரிக்கையாளர்கள் உட்பட) ஆராவாரம் செய்தனர்.

பின்பு பலர் அழுதனர்.”

ஒபாமாவும் கிட்டத்தட்ட இராமன் போல தான். இன்னும் எதுவுமே செய்யத்தொடங்கவில்லை. இனி தான் தெரியும் அவர் யார்… என்ன செய்யக்கூடியவர் என்று. காந்தியின் முன் அமர்ந்து அழுத இப்பெண்களுக்கு காந்தியின் தென்னாப்பிரிக்க வெற்றிகள், காங்கிரஸ் தலைமை செயல்பாடுகள், அவர் எழுதிக்குவித்த பல நூறு பக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனில் ஏன் அழ வேண்டும்?

கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திலேயே இன்னொரு பாடலில் ஒரு வரி வருகிறது. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதற…. உள்ளே பொங்கிப்பெருகும் மகிழ்ச்சி கண்களில் நீராய் வழிகிறது…

யோசிக்கையில் தோன்றுகிறது. தண்ணென்ற ஓர் ஆளுமைக்காக, வெயில்காய் நிலம் போல மக்கள் ஏங்கியபடி உள்ளனர். சாதாரண தண்மை இங்கு நொடிப்பொழுதில் உரிஞ்சப்பட்டு இல்லாதாகின்றது. ஆழம் வரை செல்லக்கூடிய, மனதையும் ஈரமாக்கவல்ல ஒரு நீர்சுனையை அவர்கள் தேடியபடியே, ஒரு அதிநாயகனுக்காய் ஏங்கிய படி உள்ளனர். அறம் பேணுவான் இவன் என அவர்களுக்கு தோன்றினாலே போதும், எம்முளும் உளன் ஒரு பொருனன் என்று உரக்கக் கூவி விடுவார்கள். கம்ப ராமாயணத்தில் பாடலுக்கு பாடல் இராமனின் பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அவர் அறத்தான் என்பதே அப்பிம்பத்தின் ஆதாரம். வீரன் என்பதோ, சாந்தமானவன் என்பதோ அல்ல. அறத்தான் என நம்பத்தகுந்தவனை அதிநாயகனாய் பாவித்து பாவித்து எத்தனைப்பாடல்கள்…….

புறநானூற்றில் ஔவையின் பிரபலமான பாடல் ஒன்று உள்ளது.

களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ
முன்நின்று கல்நின் றவர்.

என்கிறார் வள்ளுவர்.

என் அரசனின் முன் நிற்காதீர்கள் பகைவர்களே. பலர் என் அரசனின் முன் நின்று இப்போது நடுகற்களாக நிற்கிறார்கள்.

அதிநாயகமாக்கம் இதை விட சிறப்பாய் தமிழில் வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?

கவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு…

”சங்க காலக்கவிதைகள் எதை குறித்து பேசும் போதும் மனதை பற்றியே பேசுகின்றன” என்று ஜெயமோகன் சங்கச்சித்திரங்களில் எழுதி இருந்தார். சங்க கவிதைகளுக்கு மட்டுமல்ல, இதுவே கவிதைக்கான பொதுப்பண்பு. கவிதை எதை பற்றி பேசினாலும் எத்தனை போலியாக/உண்மையாக இருந்தாலும் அது கவிஞனின் மனப்பதிவு தான். கவிதையின் பாடுபொருளாக வரலாறு ஆகும் போது என்னாகிறது? கவிதைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) வரலாற்றின் நிகழ்வுகளல்ல… விளைவுகளே முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் நுட்பமாக வரலாறு தத்துவமாக உருமாறியே கவிதைக்குள் நுழைகிறது.

சமீபத்தில் வரலாறை மையமாக கொண்ட சில கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. முதல் வாசிப்பிலேயே கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது “புரிந்துவிடுகிறது”. ஆனால் எதைப்பற்றி பேசுகிறது? இக்கவிதையில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வு என்ன? என எதுவும் தெரியாது. இருக்கவே இருக்கிறதே கூகுள். ஒரு நடை போய் தேடிப்படித்துவிட்டு வந்து மீண்டும் கவிதையை வாசித்தால்… மூக்குக்கண்ணாடி கடையினில் கண்ணாடியை மாற்ற மாற்ற காட்சியின் தெளிவு கூடிக்கொண்டே வருமே… அப்படித்தான் புரிதல் கூடிக்கொண்டே வந்தது.

Kerry Hardy எழுதிய “On Derry’s Walls” என்ற கவிதை.

டெர்ரியின் சுவரின் மேல்… – கெர்ரி ஹார்டி.

ஒரு பொருளை, அதனினும் நுட்பமான
ஒன்றை கொண்டே விளக்க முடியும்.
அன்பினும் நுட்பமான வேறொன்றில்லை.
எனில்
எதை கொண்டு அன்பை விளக்க?

– சும்னன் இப்ன் ஹம்சா அல்-முஹைப்

கல்லறைத்தோட்டத்தில் வாழும் கரும்பறவை
குளிர்கால நாளொன்றின் அந்தியில் சுவரில் வந்தமர்கிறது.
அது புழுக்களை தின்றிருக்கிறது.
புழுக்கள், இறந்த புரொட்டஸ்டண்ட்களின் களிமண்ணை.

ஆயினும் அப்பறவை நுட்பமானது.
பிரகாசமானதும் கூட.
அதை விளக்கும்,
விளக்கவியலா அன்பை போல.

மற்றவற்றை குறித்து ஏதுமில்லை சொல்ல,
“அது இப்படி தான் இருந்தது” கூட இல்லை.
ஏனெனில் நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்
“அது இப்படி தான் எனக்கு தெரிந்தது” – என்பதை மட்டுமே.

கரும்பறவையின் வளைந்த குடலினுள்
அனைத்தும் நிறைவுறுகின்றன.

ஆங்கில வடிவம் இங்கே

அயர்லாந்த் கவிஞர் கெர்ரி ஹார்டியின் இந்த கவிதையில்

”ஏனெனில் நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்
“அது இப்படி தான் எனக்கு தெரிந்தது” – என்பதை மட்டுமே”

(because all we can ever say
is This is how it looked to me – )

என்ற வரி தான் முதல் வாசிப்பில் என்னை ஈர்த்தது. வரலாறு என்பது நிகழ்வுகளின் ஒரு கோணம் மட்டுமே. நாம் நமதென கொள்ளும் அனைத்துக்கருத்துக்களும் கோணங்கள் மட்டுமே. நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம் “அது அப்படி தான் எனக்கு தெரிந்தது” என்பதை மட்டும் தான். இந்த வரி தான் என்னை இக்கவிதையை மொழிபெயர்க்க உந்தியது.

கவிதையின் பெயர் காரணம் பிடிபடவில்லை. எனக்கு அயர்லாந்து வரலாறு பற்றி ஏதும் தெரியாது. இஸ்ரேல் பற்றிய நாவல்களை எழுதிய லியோன் யூரிஸை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருந்த காலத்தில் அயர்லாந்த் குறித்து அவர் எழுதிய Trinity வாசித்திருக்கிறேன். படித்ததில் பாதி புரியவில்லை. இக்கவிதையை மேலும் புரிந்துகொள்ள டெர்ரி குறித்து கூகுளில் தேடினேன்.

10ஆம் நூற்றாண்டிற்கு பின்னான அயர்லாந்த் ஒரு கத்தோலிக்க பகுதியாகவே இருந்து வந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிகழ்ந்த மத சீர்த்திருத்தங்களால் ப்ரோடெஸ்டண்ட் (சீர்திருத்தவாதம்?) கிருத்துவம் இங்கிலாந்தின் ஆதிக்க மதமாக உருகொள்கிறது. இதே காலகட்டத்தில் இங்கிலாந்த் அயர்லாந்தினுள் கால் வைக்கத்தொடங்குகிறது. அதை அயர்லாந்த் விரும்பவில்லை, எதிர்க்கிறது. பிரச்சனை கத்தோலிக்க மதம் – ப்ரோடஸ்டெண்ட் மதம் என்ற மத அடையாளத்தோடு தொடர்கிறது. கத்தோலிக்கர்களுக்கும் ப்ரோடஸ்டண்ட்களுக்குமிடையே நிறைய சண்டைகள் நிகழ்கின்றன. இரு பிரிவுகளுமே பெரும் இழப்பை சந்தித்துவிட்டனர். டெர்ரி நகரம் அயர்லாந்த் இங்கிலாந்த் எல்லையில் உள்ள நகரம் என்பதால் இந்நாடுகளின் வரலாறு டெர்ரியில் குவிமையம் கொள்கிறது.

இங்கே போர்களில் இறந்த ப்ரோடெஸ்டண்ட்களின் உடல் செறிந்த மண்ணை உண்டபடியே அமர்ந்திருக்கிறது கல்லறைத்தோட்டத்து பறவை. காலம் உறைந்து நிற்கும் அந்தப் பறவை நம் ”வரலாறு”களை எல்லாம் மெல்ல மெல்ல உண்டு செறித்துகொண்டிருக்கிறது.

தேவதேவனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
விருட்டென்று தாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரீலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன்

நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை

ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

தேவதேவனின் குருவியும் கெர்ரி ஹார்டியின் காக்கையும் காண்பது ஒன்றையே தான். தூரத்திருந்து பார்க்கையில் புலப்படும் நம் வாழ்வின் “சிக்கல்”களுக்கு பின்னிருக்கும் அபத்தம்.