அலகிலா சாத்தியங்களினூடே….

ஒரு படைப்பிற்கு, படைப்பாளியை தருவது என்பது அப்படைப்பிற்கு ஓரு முற்றுப்புள்ளியை, முடிவான அடையாளத்தை தந்து, “எழுதுதலை” முடித்துவைக்கும் செயலாகும்.

– ரோலண்ட் பார்த்தெஸ் (”ஆசிரியனின் மரணம்” கட்டுரையில்)

நான் வாசித்தவரை, குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என பொதுவாக வகைப்படுத்தலாம். தலைவியும் தோழியும் தலைவனும் தோழனும் தத்தமக்குள் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையும் ஏதோவோர் நாடகத்தின் உச்சக்காட்சியின் உறைகணமாக நிற்கிறது. அக்கணத்தின் உக்கிர உணர்வுகள் சொற்களாய் வழிந்தோடுவது தான் மீண்டும் மீண்டும் குறுந்தொகையில் நிகழ்கிறது. புறவயமான இச்சொற்களை சரடாகக் கொண்டு வாசக அகம் மேலேறி அதன் உச்சத்தை அடைகிறது. எனில் ஒவ்வொரு கவிதையும் ஒரு வாசல் மட்டுமே… அதனூடே நாம் செல்லும் தூரத்தை நமது அகமே தீர்மானிக்கிறது. இதை ரோலந்த் பார்தஸ் என்ற பிரென்ச் மொழியியலாளர் “வாசித்தல்-எழுதுதல்” (Reading-Writing) என்கிறார். வாசகன் வாசகன் மட்டுமல்ல. அவனளவில் அவனது வாசிப்பும் ஒருவகை “எழுதுதலே”. வாசிப்பின் அலகிலா சாத்தியங்களினூடே அவன் நிகழ்த்தும் பயணம் அது.

ஒரு குறுந்தொகை கவிதை. கவிதையை தனிப்பரப்பாய் கொண்டால், இது ஒரு விவரணை மட்டுமே…

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.

-தாமோதரனார்.

சூரியன் அகன்ற வானத்தில்
பாவம் இந்தப் பறவை
நெடிந்துயர்ந்த மரக்கிளைகளில் காத்திருக்கும்
பிள்ளைகளின் உள்வாய்க்கு புகட்ட
இரை கொண்டு விரைகிறது

தலைவி கூற்றாக வரும் இக்கவிதை பிரிவின் துயரை, தலைவனின் நிலையை குறித்த வருந்தத்தை, தந்தையை எதிர்நோக்கி நிற்கும் தன் பிள்ளைகளின் ஏக்கத்தை, இப்பறவையை கண்டாவது அவன் திரும்பக்கூடாதா என்ற ஆதங்கத்தை பேசுகிறது.

ஆனால் இதை தலைவியின் கூற்றாக மட்டும் ஏன் காண வேண்டும்? தலைவனின் ‘தனைப் போல் பறவை” என்ற கழிவிரக்க வெளிப்பாடாக, வெறும் கையுடன் திரும்பும் அவனது ஏக்கமாக, தூரம் வந்துவிட்டவனின் பிள்ளைகள் குறித்த நினைவாக….

இவை ஏதுமன்றி, கவிஞனின், அந்திவேளையில் இரைகொண்டு விரையும் பறவையைக் குறித்த மென்சோகமாகவும் காணலாம் அல்லவா?

ஒரு படைப்பு என்பது ஒவ்வொரு வாசிப்பிலும் நீட்சி கொள்ளும் பரப்பு. படைப்பாளி படைத்து முடித்தவுடன் அது தனி உரு கொள்கிறது. இனி அதன் பயணத்தை அது தொடரும். அந்த படைப்பாளியின் மூலம் பிறந்தது அதற்கு ஒரு எதேச்சை மட்டுமே. படைப்பாளியே முக்கியமில்லை எனும் போது, உரையாசிரியர்கள் வகுத்த திணை துறை கூற்று இத்தியாதிகள் குறுந்தொகையின் கவிதை அனுபவத்தை பெற அத்தனை முக்கியமா என தெரியவில்லை. எனக்கு இவற்றின் முழு ஆழம் தெரியாததால் வரும் கூற்றாக இருக்கலாம் இது. ஆனால் குறுந்தொகையிலிருந்து நான் எதை பெற்றேனோ, அதை பெற எனக்கு இவை தேவைப்படவில்லை. இப்படி சொல்வதன் நோக்கம் மேலும் ஓர் வாசிப்பிற்கான சாத்தியத்தை கண்டடைதலேயன்றி சங்கப்பாடல்களின் மீது நிகழ்த்தப்படும் மறபார்ந்த வாசிப்பை புறம்தள்ளுதல் அல்ல.

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.

– வெள்ளிவீதியார்

கால்கள் ஓய்ந்தன, கண்கள்
பார்த்துப் பார்த்து வலுவிழந்தன
அகண்டு இருண்ட வானத்து வின்மீன்களை விட
அதிகம், இந்த உலகத்தில் பிறர்.

என்ற கவிதை செவிலித்தாயின் கூற்றாக வருகிறது. இக்கவிதையின் குவிமையம் “பிறர்” என்ற அந்த ஒரு சொல். கவிதையின் அத்தனை சொற்களும் சூரியகாந்தி மலர்களைப் போல, ஞாயிறெனச் சுடரும் அப்பிறரை நோக்கியே திரும்பியுள்ளன. இக்கவிதையின் எல்லை செவிலித்தாயின் “பிறருடன்” மட்டுமே முடிவடைகிறதா என்ன?

“கசார்களின் அகராதி” நாவலில் மிலோராட் பாவிச், அர்த்தங்கள் கொள்ளும் அலகிலா சாத்தியங்களை குறித்து இப்படி எழுதுகிறார்.

…yet, once I tell you what it is, it will no longer be all the things it is not.

– Milorad Pavic (Dictionary of Khazhars)

பின்னிரவும் கபிலரும் சந்தித்த போது…

இரு குறுந்தொகை கவிதைகள். கபிலர் எழுதியவை. இரண்டையுமே பெண்கள் பாடுகிறார்கள், இழப்பின் வலியின் வெளிப்பாடாய். இக்கவிதைகளின் அழகியல் அப்பெண்கள் தங்களது இன்னலுக்கு இயற்கையை சாட்சிக்கு அழைக்கும் விதத்தில் ஒளிந்திருக்கிறது.

முதல் கவிதை :

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.

-கபிலர். (குறுந்தொகை 25)

யாரும் இல்லை. அந்த திருடன் மட்டும் தான் இருந்தான்.
அவன் பொய் உரைத்தால் நான் என்ன செய்வேன்?
தினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன்
ஓடும் நீரில் ஆரல் மீனுக்காக காத்திருந்த
கொக்கும் இருந்தது நாங்கள் கூடியபோது.

கள்வன் கொக்கு… இரையாகிவிட்ட ஆரல் இவள்…

இரண்டாவது கவிதை :

காமம் ஒழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத் தியம்பு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயி னானே.

-கபிலர். (குறுந்தொகை 42)

நமது காதல் தீர்ந்து போனாலும், இரவெல்லாம்
மழை பெய்ததென அருவி
சப்தமிட்டு அறிவிக்கும் நாட்டினைச் சேர்ந்தவனே, நமது
தொடர்பும் தேய்ந்துபோகுமோ?

இரவெல்லாம் பெய்த மழையின் எதிரொலியாய் எழுகிறது காலையில் அருவியின் பேரிரைச்சல். முறிந்து போன காதல் உள்ளமெங்கும் வலியென எதிரொலிப்பதைப் போல….

இவ்விரு கவிதைகளிலும் “போல” வரவில்லை. மிக சன்னமாக நிகழ்கிறது இந்த தொடர்புறுத்துதல். காதல் கவிதைகளைப் வாசிக்க தனிமையில் மட்டுமே வாய்க்கும் உள்ளம் நெகிழ்ந்த பின்னிரவுகள் தான் சரியான நேரம். குறுந்தொகைக்கும்…

ஔவையின் அகவன் மகள்

அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.-ஔவையார். (குறுந்தொகை – 23)

அகவனின் மகளே, அகவனின் மகளே
வெள்ளைச் சங்கினையொத்த நரைத்த நெடும் கூந்தலை உடைய
அகவன் மகளே, பாடுக பாட்டே
இன்னமும் பாடுக பாட்டே, அவர்
நல்ல நெடிய மலையினைப் பற்றி பாடிய பாட்டே

இதில் அகவன் மகள் என்றால் குறி கூறி பாட்டு பாடும் பாணர் இனத்துப் பெண் என்கிறது தமிழ் இணைய பல்கலைக் கழகம். தோழி அவளிடம் தலைவியின் காதலனது நாட்டைப் பற்றி பாட கூறுகிறாள் என்பது பாடலின் பொருள் என்கிறது அவ்வுரை.

ஆனால் நான் இதை முதன் முதலாக வாசித்த போது அர்த்தப்படுத்திக்கொண்டது வேறு விதத்தில். இப்போது அகவன் மகளுக்கு வயதாகி விட்டது. முடியெல்லாம் நரைத்து விட்டது. இன்னமும் அவள் அவனைப் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டே இருக்கிறாள்… அவன் கிடைக்காத ஏக்கத்திலா, அல்லது கிடைத்த நிறைவிலா? அது படிக்கும் வாசகரின் அச்சமய மனநிலையைப் பொருத்தது.

மிளைப் பெருங்கந்தனாரும் கலாப்ரியாவும்

கலாப்ரியாவின் “வனம் புகுதல்” என்ற கவிதைத் தொகுப்பில் இரு கவிதைகள். “தெரு விளக்கு”, “வீதி விளக்குகள்” என்ற அந்த இரு கவிதைகளிலும்,

“திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீஸோ
கல்லா மண்ணாவோ”

என தொடங்கி தொடரும் 10 வரிகள் பொதுவாய் வரும். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட மற்ற வரிகளின் மூலம் அவ்விரு கவிதைகளும் தத்தம் தனித்தன்மையினை அடையும்.

தெரு விளக்கு
————–

திடீரென அணைந்த நேரம்
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென நிறுத்திவிட்டு
தன்னிலும் சிறுசுகளை
பயமுறுத்தி…
தடைப்பட்ட மின்சாரம்
மீண்டும் பளீரென வரும் போது
தன்னிச்சையாய்க்
கைதட்டி பிள்ளைகள்
கும்மாளமாய் கூக்குரலிடும்
ஜாடைகளற்ற
சந்தோச மொழி வழியே
எந்த மாநிலத்தை
பிரிக்கப்போகிறார்.

வீதி விளக்குகள்
——————

அருகே வரும் வரை
பின்னாலிருந்தது

தாண்டும் வரை
காலடியில்

தள்ளிப்போக தள்ளிப்போக
பூதாகரமாய்
முன்னால் விரிகிறது
வெறுங்கையுடன்
வீடு திரும்புவனின் நிழல்

திடீரென அணைந்த பொழுது
கள்ளன் போலீசோ
கல்லா மண்ணாவோ
சட்டென விளையாட்டை
நிறுத்திவிட்டு
ஒன்றுக்கொன்று பயமுறுத்தி
தடைப்பட்ட மின்சாரம்
பளீரென மீளும் போது
தன்னிச்சையாய்க் கை தட்டி
கூக்குரல் எழுப்பும்
குழந்தைகளின்
ஜாடைகளற்ற
சந்தோச வெளிச்சம்
காணமலாக்கும்
கவலையின் நிழல்களை

இந்த கவிதைகளை முதல் முறை வாசித்த போது என்னை ஈர்த்தது இந்த “பொதுவாய் சில வரிகள்” அம்சம் தான். படித்த போது கவிதை மட்டுமே தரக்கூடிய குறுகுறுப்பை தந்த கவிதைகள் இவை. ஆனால் வடிவத்தையும் தாண்டி தனித்தனியாகவும் மிகச்சிறந்த கவிதைகள்.

குறுந்தொகையில் மிளைப்பெருங் கந்தனார் எழுதிய இரு கவிதைகளில் இது போன்ற ஓர் வடிவத்தை காண முடிந்தது.

“காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே”

என்ற இரு வரிகள் பொதுவாய் கொண்ட கவிதைகள் அவை. இரு கவிதைகளும் காமத்தின் இரு வேறு அம்சங்களைப் பற்றி பேசுகின்றன. மிளைப்பெருந்தனாரையும் கலாப்ரியாவையும் அருகருகில் நிறுத்திப்பார்ப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது.

காமங் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுத்தலுந் தணிதலும் இன்றே யானை
குளகுமென் றாள்மதம் போலப்
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே.

– மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 136)

காமம் காமம் என்கிறாயே, காமம் வருத்தமோ நோயோ அல்ல. அது குறைவதும் இல்லை, தணிவதும் இல்லை. தழை தின்ற யானையின் மதத்தைப் போல, பார்ப்பவர் பார்த்தால் அது வெளிப்படும்.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.

– மிளைப்பெருங்கந்தனார் (குறுந்தொகை 204)

காமம் காமம் என்கிறாயே, காமம் வருத்தமோ நோயோ அல்ல. மேட்டு நிலத்தில் விளைந்த முற்றாத இளம்புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புறுவது போல, நினைக்க நினைக்க இன்பம் தருவது நண்பா அது.