எல்லாமும் விரைகின்றன – ரோபர்ட்டோ யூரோஸ்

மணி காற்றால் நிரம்பியிருக்கிறது
ஒலிக்காத போதும்
பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது
அசையாதபோதும்
வானம் முழுதும் மேகங்கள்
தனித்திருக்கையிலும்
சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது
யாரும் உச்சரிக்காதபோதும்
எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன
சாலைகளே இல்லாத போதும்

எல்லாமும் விரைகின்றன
அவற்றின் இருத்தலை நோக்கி

– ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry)

ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin
http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html

தமிழில் : சித்தார்த்

புகைப்பட மூலம் : http://www.flickr.com/photos/chemilo/3669746390/in/photostream/

மணி காற்றால் நிரம்பியிருக்கிறது
ஒலிக்காத போதும்
பறவையில் பறத்தல் நிரம்பியிருக்கிறது
அசையாதபோதும்
வானம் முழுதும் மேகங்கள்
தனித்திருக்கையிலும்
சொல்லில் குரல் நிரம்பியிருக்கிறது
யாரும் உச்சரிக்காதபோதும்
எல்லாமுமே ஓட்டத்தில் இருக்கின்றன
சாலைகளே இல்லாத போதும்

எல்லாமும் விரைகின்றன
அவற்றின் இருத்தலை நோக்கி

– ரோபர்ட்டோ யூரோஸ் (Sixth Vertical Poetry)

ஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin
http://theswisslounge.blogspot.com/2010/07/roberto-juarroz.html

வியட்நாம்

அகதி

 

வியட்நாம்

”பொண்ணே, உன் பேர் என்ன?” ”தெரியாது.”
”உன் வயசென்ன? எங்கிருந்து வர்ர?” “தெரியாது.”
”ஏன் இந்த குழிய தோண்டின? ” “தெரியாது.”
“எவ்வளவு நாளா ஒளிஞ்சிருக்க?” ”தெரியாது.”
”என் விரல ஏன் கடிச்ச?” ”தெரியாது.”
”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு? ” ”தெரியாது.”
“யார் பக்கம் இருக்க நீ? ” ”தெரியாது.”
“இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.”
”உன்னோட கிராமம் இன்னும் இருக்கா?” ”தெரியாது.”
”அவங்க உன்னோட குழந்தைங்களா? ”ஆமாம்.”

– விஸ்லாவா சிம்போர்ஸ்கா

கவிஞர் குறித்து : http://en.wikipedia.org/wiki/Wisława_Szymborska

ஆங்கில மூலம் : http://theyeschurch.blogspot.com/2009/10/szymborska-vietnam.html

சிம்போர்ஸ்காவின் சில கவிதைகள் : http://info-poland.buffalo.edu/web/arts_culture/literature/poetry/szymborska/poems/link.shtml

தமிழில் : சித்தார்த்.

ஆட்டம் – மலையாள கவிதை மொழிபெயர்ப்பு.

மரத்தில்
எஞ்சியிருக்கும்
கடைசி இலைக்கு
பெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?

வாய்க்கும்.

உச்சிவெயிலில்
தரையில் ஒரு சிற்றெறும்பு
நடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.

காற்றில் ஆடியபடி
தொடர்ச்சியாக
எறும்பின் பாதையில்
நிழலிட
அந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.

ஆட்டத்தின் உச்சத்தில்
இலை
மரத்தை விட்டு அகலலாம்.

அப்போதும்,

ஓர் குடையாய்
எறும்பின் மேலேயே
விழ வாய்த்தால்,

தாய் வந்து
குட்டியை ஒளித்ததற்காக
கண்சிவக்க கோபிக்கும் வரை
அந்த இருப்பு தொடருமானால்,

அதுவே
பெருமகிழ்ச்சி.

– வீரன்குட்டி.

மலையாள மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=9993

தமிழில் : சித்தார்த்.

எளிமை – மலையாள கவிதை

எளிமை

எனது இருப்பை அறிவிக்க
ஒரு சிறு கூவல்.

நான் இங்கு இருந்ததை கூற
ஒற்றைச்
சிறகுதிர்ப்பு

இனியும் இருப்பேன்
என்பதன் சாட்சியாய்
அடைகாத்தலின்
வெம்மை

எப்படி இயல்கிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினை கூற?

– பி. பி. இராமசந்திரன்

தமிழில் : சித்தார்த்.

மலையாள மூலம் : http://international.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14010

மிலோராட் பாவிச்சின் தன்வரலாறு

மிலோராட் பாவிச் செர்பிய நாவலாசிரியர். இரண்டு மாதங்களுக்கு முன் இவர் இறந்தார். அவரது வலைதளத்தில் அவரே எழுதிய “என் தன்வரலாறு” என்ற சிறிய கட்டுரையை இங்கே மொழிபெயர்த்துள்ளேன். பாவிச்சின் மொழி ஒரு வித கனவினை போன்றது. எந்த தர்கத்துக்குள்ளும் அடைபடாது மிதப்பது. இந்த தன்வரலாறும் அதே மொழியினால் ஆனதே. இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்திருக்கலாம். பாவிச்சின் ஆங்கில கட்டுரையையும் வாசித்துவிடுங்கள்.

மிலொராட் பாவிச்சுயசரிதை – மிலொராட் பாவிச்

நான் கடந்த இருநூறு ஆண்டுகளாக எழுத்தாளனாக இருக்கிறேன். வெகு காலத்திற்கு முன்பு, 1766ல் புடிம் நகரில் வாழ்ந்த ஒரு பாவிச் தனது கவிதை தொகுப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து எங்களை எழுத்தாளக் குடும்பமானவே நினைத்துவந்திருக்கிறோம்.

நான் 1929ல் சொர்கத்தின் நான்கு நதிகளுள் ஒன்றின் கரையினில் பிறந்தேன். நான் பிறந்தது துலாம் ராசியில் (அல்லது ஆஸ்டெக் ஜாதகப்படி பாம்பு ராசியில்).

முதன்முறை என் மேல் குண்டுகள் பொழிந்த போது எனக்கு வயது பன்னிரெண்டு. இரண்டாம் முறை நிகழும் போது எனக்கு பதினைந்து வயது. இவ்விரண்டு பொழிவுகளுக்கு இடையே முதல் முறையாக காதலில் விழுந்ததும், ஜெர்மானிய ஆட்சியில் கட்டாயத்தினால் ஜெர்மன் மொழி பயின்றதும் நிகழ்ந்தது. வாசமான புகையிலையை புகைத்த ஒருவரிடம் ரகசியமாக ஆங்கிலமும் கற்றேன். இதற்கிடையில் முதல் முறையாக ப்ரென்ச் மொழியை மறந்தேன் (பின்னாட்களில் மேலும் இரு முறை மறந்தேன்).

இறுதியாக, அமெரிக்க-பிரித்தானிய படைகளின் குண்டுபொழிவிலிருந்து தப்பிக்க ஒரு முகாமில் தங்கிய போது, ருஷ்ய அதிகாரி ஒருவர், அவரிடம் இருந்த ருஷ்ய நூல்களை (ஃபெட் மற்றும் ட்யுட்ஷெவ்வின் கவிதை தொகுப்புகள்) கொண்டு எனக்கு ருஷ்ய மொழியை கற்பித்தார். மொழிகளை கற்பது என்பது வசீகரிக்கும் மிருகங்களாக உருமாறும் அனுபவம் என்று இன்றெனக்கு தோன்றுகிறது.

இரண்டு ஜான்களின் மீது அன்பு கொண்டிருக்கிறேன் – தமாஸ்கஸின் ஜான் (2)  மற்றும் ஜான் க்ரைசோஸ்டம் (3) (தங்க நாவினன்).

என் வாழ்வினை காட்டிலும் எனது புத்தகங்களில் வரும் காதல்களில் அதிக வெற்றி கண்டிருக்கிறேன். இதில் ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு, இன்றும் தொடர்கிறது அது.  நான் உறங்குகையில் இரவு இனிமையாக என் கன்னத்தை பிடித்துக்கொண்டிருக்கிறது.

1984 வரை, நான் தான் நாட்டிலேயே மிக குறைவாக படிக்கப்பட்ட எழுத்தாளன். அதன் பிறகு மிக அதிகமாக படிக்கப்பட்ட எழுத்தாளனானேன். (4)

நான் ஒரு நாவலை அகராதியின் வடிவில் எழுதினேன். இரண்டாம் நாவல் குறுக்கெழுத்து வடிவிலானது. மூன்றாம் நாவல் நீர்கடிகார வடிவம் (5). நான்காம் நாவல் டாரட் சீட்டுகளின் வடிவில். எனது நாவல்களுக்கு நான் அதிக தொந்தரவு தரக்கூடாதென நினைக்கின்றேன். நாவல் ஒரு வகை வைரஸ் கிருமி போன்றது என்பது என் நம்பிக்கை – அது தானாகவே பரவிப் பரவி வளர்கிறது.

ஆச்சரியகரமாக, எனது நூல்கள் 73 முறை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், என்னிடம் சுயசரிதை எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் நூற்பட்டியல் தான்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டு விமர்சகர்கள் என்னை 21ஆம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளன் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் “குற்றமல்ல, குற்றமின்மையே நிரூபிக்கப்படவேண்டியதாக” கருதப்பட்ட 20ஆம் நூற்றாண்டில் தான் நான் வாழ்ந்தேன்.

என் கனவுகளில் இறந்தவர்களை தீண்டிய அதே கரம் கொண்டு உயிரோடிருப்பவர்களை தீண்டக்கூடாது என்பதை அறிந்திருந்தேன்.

என் வாழ்வின் ஆகப்பெரிய ஏமாற்றங்கள் எனது வெற்றிகளிலிருந்தே முளைத்தன. வெற்றி எதையும் தருவதில்லை.

நான் யாரையும் கொன்றதில்லை. ஆனால் அவர்கள் என்னை கொன்றுவிட்டனர், நாம் இறப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே. எனது புத்தகங்களின் ஆசிரியன் ஒரு துருக்கியனாகவோ ஜெர்மானியனாகவோ இருந்திருந்தால் அவற்றிற்கு நல்லதாக இருந்திருக்கும். மோசமாக வெறுக்கப்பட்ட ஒரு தேசத்தின் – செர்பிய தேசத்தின் –  ஆகப்புகழ்பெற்ற எழுத்தாளனாக அறியப்பெற்றேன்.

21ஆம் நூற்றாண்டு எனக்கு 1999ல் ஆரம்பித்தது. நாட்டோ (NATO) படைகள் பெல்கிரேடின் மீதும் செர்பியாவின் மீதும் குண்டு வீசத்துவங்கிய போது. அன்றிலிருந்து எதன் கரையில் பிறந்தேனோ, அந்த டான்யூப் நதி பயணம் செய்ய ஏதுவற்றதாகப் போய்விட்டது.

எழுத்தின் அலாதியான இன்பத்தை அளித்ததன் மூலம் கடவுள் எனக்கு அளக்கவியலா நன்மையினை செய்தார் என்றெண்ணுகிறேன். அந்த இன்பத்தை கொண்டே என்னை தண்டித்தும் விட்டார் என்றும் தோன்றுகிறது.

குறிப்புகள் :

(1) பாவிச் என்பது மிலொராட் பாவிச்சின் குடும்பப்பெயர்.
(2) தமாஸ்கஸின் ஜான் (John of Damascus) ஒரு தமாஸ்கஸ் நகரில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபு கிருத்துவர். நீதி, இறையியல், தத்துவம், இசை என பல துறைகளில் ஆர்வமாக ஈடுபட்ட அறிஞர். தமாஸ்கஸின் இஸ்லாமிய காலிஃபின் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். இவர் எழுதிய கிருத்துவ பாடல்கள் பல இன்றும் கிழக்கத்திய தேவாலயங்களில் பாடப்படுகின்றன.
(3) ஜான் க்ரைசோஸ்டம் (John Chrysostom) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிருத்துவ பாதிரியார். அவரது பேச்சுத்திறமைக்காக அவரை தங்க நாவுடையவர் (Golden Tongued) என்று அழைத்தனர்.
(4) 1984ல் தான் பாவிச்சின் முதல் நாவலான கசார்களின் அகராதி வெளிவந்தது.
(5) இதன் மூலச்சொல் clepsydra. அதாவது ஒரண்டு முனைகளும் திறந்திருக்கும் ஒரு குழாய். பாவிச்சின் மூன்றாம் நாவலான Inner Side of the Wind இவ்வடிவதிலான நாவல். அந்நாவலை இரண்டு பக்கங்களில் இருந்து படிக்கலாம்.

இதன் ஆங்கில வடிவம் : http://www.khazars.com/en/autobiography/
பாவிச் குறித்த எனது பழைய பதிவுகள் : https://angumingum.wordpress.com/?s=பாவிச்

கவிதை – ரோபர்டோ யூரோஸ்

ரோபர்டோ யூரோஸ்

ரோபர்டோ யூரோஸ்

ஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம்,
ஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை சுவாசிக்க செய்கின்றது.

எல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல்,
எல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை மீண்டெழச் செய்கின்றது.

எல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு,
எல்லா மரணமும் இன்னொரு உரு.
ஆனாலும்,
இவற்றின் இணைவு
நமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது.

ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து)

யூரோஸின் சில கவிதைகள் இத்தளத்தில் உள்ளன : http://medusaskitchen.blogspot.com/2006/05/fleeing-toward-our-presence.html

வென்றவர்கள்

வென்றவர்கள் – யோ ஃபெங்

எவரெஸ்ட் மீது ஏறியவர்களுள்
பலர் வழியிலேயே இறக்க
எஞ்சியவர்கள் சிகரமடைந்தனர்.
காமெராக்களை பார்த்தபடி கொடியசைத்தனர்.
அகில உலகமும் அறிந்துகொள்ளட்டும்
உலகின் பெருஞ்சிகரம் தங்களால் வெல்லப்பட்டதை.
காமெராக்கள் காட்டாது விட்டன
அமைதியாய் ஓரத்தில் நின்றிருந்த ஷெர்ப்பாக்களை.
அவர்கள் சுமைதூக்கிகள்
வென்றவர்களாய் கருதப்படுவதில்லை
இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தந்தால்
சோமோலுங்மாவை* வெல்ல
யாருக்கும் உதவுவார்கள் அவர்கள்.

சோமோலுங்மா – இமய மலையின் திபெத்திய பெயர்.

ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்