குறுங்கதை மொழிபெயர்ப்பு

Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது. (http://www.wnyc.org/shows/shorts/). எனது “கட்டாயம் கேட்கப்படவேண்டியவை” பட்டியலில் உள்ள பாட்காஸ்ட் இது.

ஜெ. ராபர்ட் லென்னன் (J. Robert Lennon) ஒரு அமெரிக்க எழுத்தாளர். இவர் எழுதிய  Pieces for the Left Hand என்ற புத்தகம் 100 குறுங்கதைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் 1 – 2 பக்கங்களே உள்ள கதைகள். 100 கதைகளுமே ஒரே கதைசொல்லியின் பார்வையிலிருந்து விரிகின்றன என்பதனால் இதனை ஒரு வகையில் சிதறிய நாவல் என்றும் கொள்ளலாம். இந்த புத்தகம் இன்னும் கைக்கு கிடைக்கவில்லை. ஆனால் இதிலிருந்து 8 கதைகளை சமீபத்தில் Selected Shorts நிகழ்ச்சியின் மூலம் கேட்க நேர்ந்தது. கேட்ட எட்டு கதைகளுமே கதை எனும் வடிவத்தின் அலாதித்தன்மையை கொண்டிருந்தன. இக்கதைகளின் கதைசொல்லி, நம் காதுகளின் வந்து அவர் கண்ட – கேட்ட ரகசியங்களை பகிர்ந்துகொள்கிறார் என பட்டது எனக்கு. இக்கதைகளை கேட்கையில் நமக்கு ஏற்படுவது – 1. குறுகுறுப்பு 2. உடனடியான யாருக்கேனும் சொல்ல வேண்டும் என்ற விழைவு. இரண்டுமே இவற்றின் “புறம் சொல்லல்” அம்சத்தில் இருந்தே கிளைத்தெழுகின்றன என நினைக்கிறேன். இந்த எட்டு கதைகளின் இருந்து எனக்கு பிடித்த ஒரு கதையை மட்டும் மொழிபெயர்த்து இங்கு தந்துள்ளேன். ஒலிக்கோப்பை கேட்டு அதை மொழிபெயர்ப்பதை விட கொடுமையான விஷயம் வேறில்லை. இந்த குறுங்கதையை முடிப்பதற்குள் ஐயோ என்றாகிவிட்டது. புத்தகம் கைக்கு வந்ததும் இன்னமும் சில கதைகளை மொழிபெயர்க்கலாம் என நினைக்கிறேன். இனி கதை…
*****
தேசிய அளவில் அறியப்பட்ட அந்த உள்ளூர் கவிஞர் தனது புதிய தொகுப்பிற்கான கவிதைகளை எழுதிமுடித்திருந்தார். சில வலிமிகுந்த துக்ககரமான நிகழ்வுத்தொடர்ச்சிகளினால் தொகுப்பு வெளிவருவது சில வருடங்களாக தாமதமாகிக்கொண்டே இருந்தது. இறுதியாக எல்லா திருத்தங்களும் செய்து முடிக்கப்பட்டதும் கவிஞர் இதனை ஒரு இறுதி படி எடுத்தார். அதை நகல் எடுக்க நகலகம் செல்வதற்காக காரில் ஏறினார்.
செல்லும் வழியில் சிகப்பு விளக்கில் நிற்காமல் சென்றதால் காவலதிகாரியால் நிறுத்தப்பட்டபோது,  கவிஞர் குடித்துவிட்டு வாகனமோட்டினார் என்று தெரியவந்தது. எங்கள் மாநிலத்தில் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இறுகிய வாகன விதிகளின் காரணமாக அவரது வாகனம் பரிமுதல் செய்யப்பட்டு அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தன்னிலை அடைந்ததும் கவிஞருக்கு தனது கவிதை தொகுப்பின் ஒரே படி வாகனத்திற்கு உள்ளே இருப்பது நினைவிற்கு வர, அதை தருமாறு காவல் அதிகாரிகளிடம் கோரினார். ஆனால், வாகனத்தின் உள்ளிருக்கும் எதுவுமே இனி அவருக்கு சொந்தமானதல்ல என கூறி திரும்பத்தர மறுத்துவிட, இந்த மறுப்பு நீண்டதொரு நீதிச்சமராக உருவெடுத்தது.  இதனிடையில் நமது பிரியப்பட்ட கவிஞர் இறந்துவிட்டார்.
கவிஞரின் வெளியீட்டாளர்களுக்கு இந்த சமயத்தில் கவிஞரின் தொகுப்பு வெளிவந்தால் நல்லது என தோன்ற, அவர்கள் காவல்துறையுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தனர். அதாகப்பட்டது, காவல் நிலையத்தில் உள்ள யாரேனும் படியில் உள்ளதை தொலைபேசியின் மூலம் படித்தால் அதை பதிப்பகத்தில் ஒருவர் எழுதிக்கொண்டுவிடுவார். படி கைமாறாமல், உள்ளடக்கம் மட்டும் இதன் மூலம் கைமாறி விடும். சொல்லப்போனால், படி காவல்துறைக்கு சொந்தமானதென்றாலும் அதன் உள்ளடக்கம் வாகனத்திற்கு வெளியே தான் உருவானது என்பதால், அது அவர்களுக்கு சொந்தம் அல்ல, அல்லவா? காவல்துறை இதற்கு சம்மதித்ததும், தொலைபேசியில் வாசிப்பு நிகழ, விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களுடன் புத்தகம் வெளிவந்து, கவிஞர் தன் வாழ்நாளில் அனுபவிக்காத இலக்கிய அந்தஸ்தை அவருக்கு பெற்றுத்தந்தது.
காவல்துறைக்கும் கவிஞரின் குடும்பத்தினருக்கும் இடையே நிகழ்ந்த வழக்கில் கவிஞருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதும், கவிதைகளின் அசலான படி திரும்பத்தரப்பட்டது. இதற்கும் நூல் வடிவிற்கும் சம்மந்தமே இல்லாதிருந்தது அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உண்மை வெளிவர வெகுநாட்கள் பிடிக்கவில்லை. கவிதை வாசிப்பின் போது சில திருத்தங்களை செய்ததாக ஒரு காவல் அதிகாரி ஒத்துக்கொண்டார். இதற்கான காரணமாக அவர் கூறியது : கவிதைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் நிறைய இருந்தன; அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருத்தங்கள் செய்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த காவலதிகாரி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். மிகுந்த பாராட்டினை பெற்ற அந்த புத்தகமும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது. உண்மையான தொகுப்பு வெளியாகி, மோசமான விமர்சனத்திற்கு ஆளானது.
அந்த காவலதிகாரி தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். கவிதைகள் மிக அருமையாக உள்ளதாக பலரும் ஒத்துக்கொண்டாலும், நேர்மையற்றவராய் அறியப்பட்ட ஒருவரது படைப்புக்களை வெளியிட பதிப்பகங்கள் தயங்குகின்றன.