இன்று எதேச்சையாக The Codeless Code என்ற நல்ல தளத்தில் சென்று முட்டினேன். Koanகள் என்றால் ஜென் மதத்தில் சொல்லப்படும் தத்துவார்த்தமான சிறு கதைகள். இந்த தளத்தில் ஓர் கணினி நிறுவனத்தில் நிகழ்வது போல சொல்லப்படும் அழகான சிறு கதைகள் உள்ளன. வெறும் கணினி வல்லுனர்களுக்கான கதைகள் அல்ல இவை… அனைவருக்குமானது.
மிகவும் பிடித்த கதை ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன் :
ஆகப்பெரிய விழைவு
திங்கட்கிழமையன்று ஓர் இளம் துறவி குரு பான்சனிடன் கேட்டான் : குருவே, ஆகப்பெரிய விழைவாக எது இருக்க முடியும்?
பான்சன் சொன்னார் : அறியக்கூடியதனைத்தையும் அறிந்து, ஒருவன் எழுதிய நிரலை இதற்கு மேலும் நேர்த்தியாக்க முடியாது என்ற நிலையை அடைவது.
செவ்வாய்க்கிழமையன்று வேறொரு இளம் துறவி பான்சனிடன் கேட்டான் : குருவே, ஆகப்பெரிய விழைவாக எது இருக்க முடியும்?
பான்சன் சொன்னார் : எப்போதும் தன்னினும் அறிவார்ந்த நிரலாளர்கள் சூழ இருப்பது… அதன் மூலமாக தொடந்து கற்றுக்கொண்டே இருந்து நிலையினை அடைவது.
புதன்கிழமையன்று மூன்றாவது இளம் துறவி, மேற்சொன்ன இரு பதில்களும் ஒன்றிற்கு ஒன்று எதிரானவை என்பதை உணர்ந்தான்.
ஆம், என்றார் பான்சன்.
குருவினும் உயர்ந்த இடத்தில் தான் இருப்பதாக எண்ணிக்கொண்ட இளம் துறவி கேட்டான் : ஆகப்பெரிய விழைவை ஒருவன் அடைவது எப்படி?
எரிச்சலுற்ற பான்சன் சொன்னார் : திங்களன்று ஆகப்பெரிய எண் எது என்று கேட்கப்பட்டேன். செவ்வாயன்று அதன் பாதியளவு எண் எது என்று கேட்கப்பட்டேன். இரு கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஆனால் உனக்கு, அந்த இரு எண்களில் ஏதேனும் ஒன்று வரை எண்ணவும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், நாம் தொடங்குவதற்கும் நிலவே மண்ணாகிவிடக்கூடும்.
இளம் துறவி வெட்கி தலைகுனிந்து சென்றான்.
பான்சனின் மேஜை மேலிருந்த போன்சாய் மரத்தில் களையெடுத்துக்கொண்டிருந்த தோட்டக்காரர் கேட்டார் : அந்த இளம் துறவியிடம் தவறிருப்பதாக எனக்கு படவில்லை. உங்களிடம் கேட்கப்பட்ட இரு கேள்விகளும் ஒன்றே அல்லவா?
பான்சன் சொன்னார் : போன்சாய்க்கு நீர் தேவை. என் சன்னலுக்கு வெளியே இருக்கும் தேக்கு மரத்திற்கும் நீர் தேவை.
ஆங்கில மூலம் : http://thecodelesscode.com/case/46