ஒரு விஷயத்தை பற்றி யோசித்தால் சிந்தனை அப்படியே கிளைத்து கிளைத்து வேறு எங்கோ போய் முடியும் எனக்கு. கட்டுரை எழுதுவதே கூட தோன்றியதை எல்லாம் எழுதி வைத்துவிட்டு பிறகு கோர்த்தெடுத்து தான்… ஆக என்னால் கதையெல்லாம் எழுத முடியாது என்று தெளிவாகவே தெரியும். ஆனாலும் ஒரு சின்ன உந்துதல் இருந்துகொண்டே இருந்தது, சிதறிய வடிவத்திலேயே ஒரு கதை எழுதிப்பார்த்தால் என்ன என்று…
எழுத நினைத்த கதையின் கரு இது தான் :
எதிர்கால தமிழ்நாடு (தனி நாடு). அதன் பிரதான மதம் குமரம். இம்மதத்தின் வளர்ச்சியும் தமிழக இனம் சார்ந்த அரசியலும் பின்னிப்பிணைந்தவை. ஒன்று மற்றதன் சாய்மானம் என்பது போல… அம்மதத்தின் அச்சாணியாக விளங்கும் நம்பிக்கைகளில் ஒன்று நவீன குமரமதத்தை தோற்றுவித்தவராக கருதப்படும் முதலாம் வேழன் குமரனடியின் மரணமும் அதை சூழ்ந்துள்ள அதிசயத்தன்மையும். இவர் வழிவந்தவரான இன்றைய வேழன் குமரனடியின் மரபணுக்களை, மரபணு வரலாற்றியல் என்ற புதிய அறிவியல் துறையின் உதவியுடன் ஆராயும் ஆராய்ச்சியாளர் ஒருவர் முதலாம் குமரனடியின் உடல்நலம் குறித்த, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையையே ஆட்டிவைக்கக்கூடிய, உண்மையினை கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்பை அரசியல் தலைமையும் எதிர்ப்பு போராட்டக்குழுவும் எப்படி கைப்பற்ற நினைக்கின்றன என்பதை குறித்த சிதறிய வடிவ கதையாக எழுத நினைத்தேன்….. அதாவது தமிழக அரசியல் நிலை குறித்த கட்டுரையின் ஒரு பகுதி… குமரமதத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவலின் ஒரு பக்கம், மரபணு வரலாற்றியல் குறித்த பேட்டியின் ஒரு சிறு பகுதி என்று போன்றவற்றின் தொகுப்பாக நியூ யார்க்கர் இதழில் வெளிவந்த ஒரு ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு என்ற வடிவில்…. கொஞ்சமாக எழுதவும் துவங்கினேன்.
கதைக்கருவை படிக்கும்பொழுதே உங்களுக்கு தோன்றியிருக்கும். அப்படியே அப்பட்டமாக கிருத்துவ மத அரசியலை பேசும் படைப்பாக வந்திருக்கும். Dan Brown பாதிப்போ என்னவோ… இப்படி தோன்றியவுடன் எழுதுவதை அப்படியே நிறுத்திவிட்டேன். ஆனால், மேற்கோள்கள் மூலமாக மட்டுமே கதை சொல்லும் உத்தி, மரபணு வரலாற்றியல் ஆகிய அம்சங்கள் பிடித்திருந்ததால் ஜெயமோகனின் “தமிழிலக்கியம் : நேற்று இன்று நாளை” கதையின் வடிவில் எழுதிப்பார்க்கலாம் என்று நினைத்து எழுதியது ”பேசுதல் அதற்கின்பம் – நூல் வரலாறு” கதை. அப்போது அறிவிக்கப்பட்ட உரையாடல் சிறுகதை போட்டிக்கு அனுப்பி, முதல் பட்டியலில் கூட இடம் பெறாததால் அப்படியே விட்டுவிட்டேன்.
இன்று என் ஆதர்சமான ஜெயமோகன் இதை பகிர்ந்திருந்தது மிகுந்த நிறைவினை அளிக்கிறது…. it made my day. 🙂 நன்றி ஜெ.
கீழே உள்ளது எழுதி நிறுத்திய அந்த கதை 🙂
***************
[கதையின் பெயர்]
[helper timeline : கட்டுரை காலம் : 2299;மொழிபெயர்ப்பு காலம் : 2380;தமிழகம் – உருவாக்கம் : 2080]
மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் :
* நியூ யார்க்கர் எனும் ஆங்கில மின்னிதழின் 2199ஆம் ஆண்டு நவர்பர் மாத (திருவள்ளுவர் ஆண்டு 2230, ஐப்பசி) பதிப்பில் வெளி வந்த “DNA and the God of Tamil land” என்ற தொகுப்புக்கட்டுரையின் மொழியாக்கம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த கட்டுரையை உள்வாங்கிக்கொள்ள தொகுப்புக்கட்டுரை என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். தொகுப்புக்கட்டுரை என்பது 21ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பின்நவீனத்துவ எழுச்சியின் நீட்சியாய் உருவான இலக்கிய வடிவம் ஆகும். இலக்கியத்தில் புதிதாய் கூறுவதற்கு எதுவும் இல்லை என்ற கோட்பாட்டிற்கு உட்பட்டு, கட்டுரை எதை கூற முயல்கிறதோ அதை குறித்த பல்வேற மூலங்களில் இருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்களை மட்டுமே அடுக்கி அதன் மூலம் கருத்தை நிறுவுவதே தொகுப்புக்கட்டுரையின் பாணி. தொகுப்புக்கட்டுரையாளனின் திறமை என்பது மேற்கோள் தேர்ந்தெடுப்பிலும் அவற்றை கலைத்து அடுக்கும் விதத்திலுமே உள்ளது. ஒரு வகையில் இது Collage வகை ஓவியம் போன்றது. பத்திகளாலான கொலாஜ். இவ்வடிவம் தமிழகத்தில் இருந்து தோன்றியது எனும் கூற்றும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அப்போதெல்லாம் மேற்கோள்களின் மூலங்களை குறிப்பிடும் பழக்கம் இல்லை என்பதால் இக்கருத்து இன்னும் சர்ச்சைக்குறியதாகவே உள்ளது.
* இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள திருவள்ளுவர் ஆண்டுகள், வாசகர்களின் புரிதலுக்காக மொழிபெயர்ப்பாளரால் சேர்க்கப்பட்டது.
* ஆங்கில கட்டுரையில் பல பகுதிகள் தமிழில் வெளிவந்த கட்டுரைகள், பேட்டிகள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆகும். அவை மூல வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
*************
சிங்கம் துரத்துவது பசிக்காக, மான் ஓடுவது உயிருக்காக. எத்தனை அழகான சொற்றொடர். யார் கூறியது இதை? சினுவா ஆச்சிபி*? ஜீவாதாரப்போராட்டம் ஒன்றினை அழகியல் மிளிரும் சொற்றொடராக சுருக்கி விட்டோம். அல்லவா? எதை சாதித்தோம் இது கொண்டு? மானும் சிங்கமும் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஆட்டத்தை சாவித்துவாரம் வழியாக பார்ப்பதில் ஏன் இத்தனை கோவம் என்கிறீர்களா? ஏனெனில் அந்த மான் இந்த வரியை வாசித்தால் என்ன நினைக்கும் என உங்களுக்கு தெரியாது. நான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதால் எனக்கு தெரியும். அந்த வரியில் இல்லாதவற்றில் இருந்து துவங்கலாம் இந்த கதையை. என் நுரையீரல் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. கணுக்காலுல் நரம்புகள் முறுக்கிக்கொண்டிருக்கின்றன. வின் வின் என அங்கிருந்து ஊற்றெடுக்கும் வலி மூளையை மோதிச்சரிகிறது. உதடுகள் மீன் போல திறந்திருக்க, அதனூடாக நான் மூச்சு வாங்கும் ஒலி எனக்கே கேட்க சகிக்கவில்லை. வழியும் வியற்வை வாய் நுழைந்து கரிக்கிறது. அதோ புள்ளியாய் தெரிகிறார்கள் என்னை துரத்துபவர்கள். எனது சிங்கங்கள்…..
– வேழன் குமரனடி , உயிருக்காய் ஓடும் மான், பக் : 3. [Stag’s run for life – Vezhan Muruganadi, oxford univ. press, 2091]
* சினுவா ஆச்சிபி – இருபதாம் நூற்றாண்டு நைஜீரிய* எழுத்தாளர்.
(* – நைஜீரியா – இன்றைய ஐக்கிய ஆப்பிரிக்க கூட்டமைப்பின் ஒரு பகுதி)
**********************
பேராசிரியர். பெருவழுதியுடன் ஓர் உரையாடல் : தமிழேறு நாளிதழிலிருந்து.
தமிழேறு : தமிழகம் தனி நாடாக உருவாகி 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இது உண்மையாகவே ஒரு வரலாற்று தேவையா? இதை தடுத்திருக்க முடியுமா? வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் உங்களின் கருத்து என்ன?
பேரா. பெருவழுதி: எனது “தமிழக உருவாக்கம் : வேரும் விழுதும்” என்ற நூலினில் இதை குறித்து விரிவாக பேசியுள்ளேன். இக்கேள்வியை இரண்டு விதங்களில் எதிர்கொள்ளலாம். முதலாவதாக தமிழகத்தின் உருவாக்கம் குறித்து பார்க்க வேண்டும். தமிழகம் அதிகாரப்பூர்வமான நாடாக உருவானது 2080 (தி. ஆ : 2111) ல் தான் என்றாலும் இதற்கான விதைகள் இதற்கு வெகு முன்னமே விழுந்து விட்டதற்கான சான்றுகள் பல, வரலாற்றில் காணக்கிடைக்கின்றன. 2075ஆம் ஆண்டின் நீர்வறட்சியும், அதன் நீட்சியாய் உருவான நிகழ்வுகளும் நேரடியாய் தமிழகம் உருவாக காரணமாக அமைந்தன. ஆனால் இதற்கு வெகு முன்னமே பிளவுகள் உருவாக ஆரம்பித்து விட்டிருந்தன. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கருநாடகம் என்ற மாநிலத்திற்கு (இன்றைய கீழை இந்தியாவின் 501 தொடங்கி 543 வரையிலான மாகாணங்கள்) எதிராக வெளியான பல மின்கட்டுரைகள் அன்றைய பொது மனநிலைக்கு காட்டாக அமைகின்றன. இந்தி மொழிக்கு எதிராக பல போராட்டங்கள் நிகழ்ந்ததற்கான குறிப்புகளும் கிடைத்துள்ளன. சுருக்கமாய் கூறினால், 2075ஆம் ஆண்டின் நீர்வறட்சி, மிகப்பெரிய நிகழ்வுச்சங்கிலி ஒன்றின் கடைசி கண்ணி மட்டுமே.
இரண்டாவதாக இதை தமிழக மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று ஆழ்ந்து நோக்க வேண்டும் நாம். அவர்கள் இதை வரவேற்றார்கள் என்றே கூற வேண்டும்.தமிழர்களின் தனிப்பெரும் சமயமான குமர சமயத்தின் வளர்ச்சியே இதற்கு தக்க சான்று. முதலாம் வேழன் குமரனடியின் தலைமையில் குமரம் தனி சமயமாக உருவாவதற்கு வெகு முன்னமே அதற்கான வேர்கள் தமிழகத்தில் இருந்தன. குமரம் தமிழர்களின் ஆதி சமயம் எனும் உணர்வு என்றுமே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு நமக்கு காட்டுவது. தமிழகம் தனி நாடாக ஆனது தமிழர் தமக்கான அடையாளத்தை மீட்டெடுத்ததன் விளைவே ஆகும்.
One reply on “கதையின் கதை (அ) கொசுவத்திச்சுழற்சி :)”
இதை முடிக்காம விடறது நாட்டுக்கு நல்லதில்லை, சித்தார்த். 🙂
அருமையான premise. இந்த மாதிரி கதை சொல்லும் உத்தியைப் பற்றி முதல்முறை கேள்விப்படறேன். Dan Brown பாதிப்புன்னு சொல்றத விட, pastiche ன்னு சொல்லி மேற்கொண்டு எழுதலாமே?
(ஒற்றுப் பிழைகள் intentional?)