இன்று உலகம் திறந்த வடிவங்களை (open formats) நோக்கிப்போய் கொண்டிருக்கிறது. உதாரணமாக, உரைகோப்புகளுக்கான அடிப்படை வடிவமாக “திறந்த ஆவண வடிவம்” (Open Document Format) உருவாகியுள்ளது. இந்த வடிவத்திலான கோப்பை நாம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் நிரலினை கொண்டு உருவாக்கலாம். பின்னர் அதை ஓபன் ஆஃபிஸ் நிரலினை கொண்டு திருத்தி, ஆப்பிள் பேஜஸ் (Pages) நிரலினை கொண்டு அச்சிடலாம். நிரல்கள் வெவ்வேறாக இருந்தாலும் வடிவம் ஒன்றே. எல்லா நிரல்களும் ஒரே வகையான கோப்பு வடிவங்களை கொண்டிருந்தால் நிரல்களின் விற்பனை பாதிக்காதா என்றால், இதற்கு இரண்டு பதில்களை கூறலாம். ஒன்று, ஒவ்வொரு நிரலுக்கும் பிரதான வடிவமாக அந்நிறுவனம் உருவாக்கிய வடிவம் இருக்கும். மைக்ரோசாஃப்டிற்கும் word வடிவம், ஆப்பிளுக்கு .pages வடிவம் என… ஆனால் இக்கோப்புகளை திறந்த ஆவண வடிவிற்கு மாற்றும் வசதியும் அந்நிரலிலேயே இருக்கும். அதனால் அந்நிரலிலிருந்து நம் கோப்புகளை விடுவிப்பது மிக எளிதான காரியமாக இருக்கும். இரண்டாவது… நிரலின் தரமும் நேர்த்தியுமே அதன் விற்பனையை உறுதி செய்யும் காரணிகளாக இருக்க வேண்டுமே தவிர, அது பயன்படுத்தும் வடிவமல்ல.
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் நீங்கள் மின் நூல் ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எந்த வடிவத்திலான (format) மின் நூல் என்று முதலில் முடிவு செய்ய வேண்டி இருந்திருக்கும். ereader.com, ebook.com என அன்று மின் நூல் விற்றுக்கொண்டிருந்த ஒவ்வொரு தளமும் தனக்கென ஒரு வடிவத்தினையும் அவ்வடிவத்தை வாசிக்கக்கூடிய நிரலினையும் கொண்டிருந்தது. அந்த தளத்தின் நிரலினை கொண்டே இந்த மின் நூல்களை வாசிக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஒருங்குறி வருவதற்கு முன்பு தமிழில் திஸ்கி, தாப், தாம், பாமினி, முரசு துவங்கி ஓராயிரம் எழுத்துரு வடிவங்களை பயன்படுத்தினோமே, அது போல… பின்பு epub என்ற ஒரு திறந்த வடிவம் (open format) உருவாக்கப்பட்டது. எல்லா தளமும் இந்த வடிவத்தில் நூல்களை வெளியிட்டதனால் எந்த தளத்தில் விலை குறைவு என்பதை பார்த்து வாங்கிக்கொள்ள முடியும், எங்கு வாங்கினாலும் epub reader கோப்பினை கொண்டு வாசிக்க முடியும் என்ற நிலை உருவானது. மெல்ல, எழுத்துருக்களுக்கு ஒருங்குறியினை போல மின் நூல்களுக்கு epub அடிப்படை வடிவம் என்றானது.
இந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் தன் மின்நூல் வாசிப்பானான iBooks நிரலில் இரண்டாம் பதிப்பை வெளியிட்டுள்ளது (iBooks 2). iBooks, epub வடிவினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு iPhone, iPod Touch மற்றும் iPadகளில் செயல்படும் நிரல். இதன் புதிய பதிப்பில் epubல் இருந்து சிறிது விலகி ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த வடிவினை சேர்த்திருக்கிறார்கள். இந்த புதிய வடிவத்தினை கொண்டு பள்ளிப்பாடநூல்களை வடிவமைக்கும் ஒரு இலவச மென்பொருளையும் உருவாக்கி இருக்கிறார்கள் (iBooks Author). இந்த மென்பொருள் கொண்டு உருவாக்கப்படும் நூல்களை வாசிக்க iPad கைக்கணினியை ஒவ்வொரு மாணவருக்கும் பள்ளிகள் வழங்க வேண்டியிருக்கும். இப்போதுள்ள iBooks Author பதிப்பில் இக்கோப்புகளை epub வடிவிற்கு மாற்றும் வசதியும் இல்லை. அதாவது, இந்நிரலினை கொண்டு உருவாக்கப்பட்ட நூல்களை வேறு எந்த மென்பொருள் கொண்டும் வாசிக்க இயலாது… மைக்ரோசாஃப்டின் வீழ்ச்சி இது போன்ற செயல்பாடுகளாலேயே நிகழ்ந்தது. மைக்ரோசாஃப்ட் தனது உலாவியான Internet Explorerல் பத்தாண்டுகளுக்கு முன் செய்த இது போன்ற செயல்பாடுகளுக்கு இணையத்தள நிரலாளர்களான நாங்கள் இன்னும் விலை தந்துகொண்டிருக்கிறோம். எல்லா உலாவிகளுக்குமான நிரலினை எழுதிவிட்டு, பிறகு internet explorerல் சரியாக தெரியவேண்டும் என சில மாறுதல்களை செய்ய வேண்டி இருக்கும்.
உலகம் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒற்றை நிறுவனத்தின் பிடிக்குள் சிக்கும் அளவிற்கு உலகம் சிறியதாகவோ எந்த ஒரு நிறுவனமும் பெரியதாகவோ இல்லை.
இன்று காலை, ஆப்பிளின் புதிய iBooks வடிவத்தின் பிரச்சனைகளை குறித்து இந்த கட்டுரையில் படிக்க நேர்ந்தது. மிக முக்கியமான கட்டுரை இது….