சென்ற ஆண்டு ஜூன் மாதம் ஈரோடு சென்றிருந்த பொழுது எழுதி வைத்தது….
******
கடந்த 20 நாட்களாக ஈரோட்டில் இருக்கின்றேன். பெரும்பாலும் வீட்டில் காயத்ரி, அமுதினியுடன். அவ்வப்போது நகர்வலம் செல்வதும் உண்டு. ஈரோட்டில் தனியாக சுற்றும் அனுபவம் இம்முறை தான் வாய்த்திருக்கிறது. சாலைகள் தங்களின் பூடகத்தன்மையை மெல்ல இழக்கத்துவங்கி விட்டன. 3 நாட்களுக்கு முன்னால் “இப்படியே நேரா போனீங்கன்னா எம்.ஜி.ஆர் சிலை நால்ரோடு வரும்… அங்க இருந்து சிக்னல் தாண்டி நேரா போனா பஸ் ஸ்டாண்ட்” என்று ஒருவருக்கு வழி கூட சொன்னேன். 🙂
இரயில் நிலையம் தாண்டி கொல்லம்பாளையம் வரும் வழியில் ஒரு இரயில் பாலம் இருக்கிறது. பாலத்தின் அடியில் அழுக்கேறிய உடலுடன் ஒருவர் எப்பொழுதும் அமர்ந்திருக்கிறார். அவரின் தலைக்கு மேலே சுவற்றில் ஒரு இடம் பலான படங்களுக்கான சுவரொட்டிக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஊர்களில் இப்படி ஒரு சுவர் இருப்பது தான். என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்த 20 நாட்களில் அங்கே கிட்டத்தட்ட 7 – 8 சுவரொட்டிகளை மாற்றிவிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு படம் – டர்ன் ஓவர் ரேட் மலைக்க வைக்கிறது 🙂
“நல்ல மரியாதையான மக்கள்” என்ற சொற்றொடரை போட்டால் பெருநகரவாசி ஒருவன் குக்கிராமத்தை குறித்து கருத்து சொல்லும் தொணி வந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் நிஜமாகவே மிகவும் மரியாதையாக பேசுகிறார்கள். அண்ணா என்ற suffix மிக சரளமாக வந்து விழுகிறது வாக்கியங்களில். மூன்று நாட்களுக்கு முன்னால் காயத்ரிக்கு ஒரு தள்ளுவண்டி கடையில் நாவல்பழம் வாங்கும் போது புதிதாக பிள்ளை பெற்றவர்கள் சாப்பிடலாமா என்று விசாரித்தேன். இன்று மீண்டும் அந்த கடைக்கு பழம் வாங்க சென்றேன். அந்த பையன் “அக்கா நல்லா இருக்காங்களாண்ணா?” என்றான். 🙂
ஃப்ளெக்ஸ் போர்ட் இல்லாத சாலைகள் ஈரோட்டில் காணக்கிடைக்கவில்லை. நான் ஈரோடு வந்த முதல் வாரத்தில் ஈரோடு முழுக்க சே குவாரா வேடத்தில், முறுக்கு மீசையுடன் கை கட்டி நின்றபடி, கையில் ஏ.கே 47 துப்பாக்கி ஏந்திய படி, இராணுவ உடையுடன், மேடையில் கழுத்து நரம்புகள் புடைக்க ஆவேசமாக பேசிய படி என்று எங்கு நோக்கினும் திருமாவளவனின் திரு உருவம். “வாழும் அம்பேத்கரே, சீறும் சிறுத்தையே” போன்ற வாசகங்களும். சிறுபான்மை கிருத்துவர் கழகம் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை மாநாட்டினில் பேச வருகிறார் என்பதனால் இந்த வரவேற்பு பலகைகள். இது ஓய்ந்ததும் ஊரெல்லாம் செம்மொழி மாநாட்டிற்கான வாழ்த்தும் வரவேற்பும் (கோவையில் நிகழும் மாநாட்டிற்கு இங்கு ஏன் வரவேற்பு பலகைகள்?) ஊரை நிறைத்தன. எம்.ஜி.ஆர். சிலை அருகே “வாழ்த வயதில்லை வனங்குகிறோம்….. அலைகடலேன திரண்டுவாரீர்” என்று எழுத்துப்பிழைகளுடன் அத்தனைப்பெரிய பலகை. இரயில் நிலையத்தை ஒட்டிய சாலையில் அமைந்திருக்கும் 3 மிகப்பெரிய விளம்பர பலகைகள் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தன. முதல் பலகையில் பெரியாரும் அண்ணாவும் சிரித்தபடி அமர்ந்திருக்கின்றனர். இரண்டாம் பலகையில் இளம் வயது கருணாநிதி சிரித்த முகத்துடன் கை நீட்டிய படி அமர்ந்திருக்கிறார். மூன்றாம் பலகையில் அழகிரியும் ஸ்டாலினும் சிரிக்கிறார்கள். எல்லா பலகைகளிலும் மேலே என்.கே.கே. பெரியசாமி சிரிக்கிறார். கீழே என். சிவக்குமார் உம்மென்று இருக்கிறார் (பலகைக்கான செலவு இவருடையது போல). மருந்துக்கு கூட அ.தி.மு.கவை எங்கும் காணவில்லை. ஒரு காலத்தில் அ.தி.மு.கவின் கோட்டையாக இருந்த ஊராம் இது.
முன்னால் அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவிற்கு மாறி இருக்கிறார். கட்சி மாறியபின் முந்தாநாள் தான் ஈரோடுக்கு வருகிறார். அதற்கு முந்தைய நாளில் இருந்தே ஊரெல்லாம் கருணாநிதி மற்றும் முத்துசாமி ஆகியவர்களின் புகைப்படங்களும் “ஈரோட்டின் சரித்திரமே.. எங்கள் விடிவெள்ளியே… நாங்கள் என்றும் உன் பின்னால் நிற்கின்றோம்” போன்ற வாசகங்களுமாய் பலகைகள். கீழே ஜெ. ஶ்ரீராம் என்பவரின் படத்துடன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எல்லா பலகைகள் மற்றும் சுவரொட்டிகளிலும் மேல் மூலையில் ஈரோடு தி.மு.க முக்கியஸ்தர் என்.கே.கே. பெரியசாமியின் மிகச்சிறிய புகைப்படம். சுவரொட்டி தயாரான பின் ஒட்டப்பட்ட படம் என்று நன்றாக தெரிகிறது. ஆட்டம் ஆரம்பம். 🙂
இதெல்லாம் கிடக்கட்டும். முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். ஈரோட்டில் எனக்கு மிக மிக பிடித்த விஷயங்களில் ஒன்று – மாமன் பிரியாணி ஸ்டாலில் கிடைக்கும் பரோட்டாவும் சால்னாவும்.
5 replies on “ஈரோடுக்கு போன சென்னைவாசி. :)”
என்ன இவ்ளோ சுருக்கமா முடிச்சிட்டீங்க. நல்லால்ல போயிட்டு இருந்துது?
அது ஒன்னும் இல்லைங்க திருமா அவரோட அலுவலகம் கொல்லம்பாலையத்துல தாங்க இருக்கு அதனாலதாங்க இந்த அட்டகாசம் :-))
கார்த்திக்… இந்த படங்கள நான் கொல்லம்பாளையம் பக்கத்துல பாக்கல. S.K.C ரோட்ல தான் இந்த அணிவகுப்பு 🙂
//“அக்கா நல்லா இருக்காங்களாண்ணா?”// – இதுதான் இந்த மண்ணின் மகிமை
முன்பெல்லாம் பன்னீர்செல்வம் பார்க் அருகில் ஒன்றிரண்டு தட்டிகளை வைப்பதோடு விளம்பரக் களேபரங்கள் முடிந்து விடும். இப்போது ஃப்ளெக்ஸ் புகாத இடங்களே இல்லை..