பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் மொழிபெயர்ப்பு

மிலோராட் பாவிச்சின் தன்வரலாறு

மிலோராட் பாவிச் செர்பிய நாவலாசிரியர். இரண்டு மாதங்களுக்கு முன் இவர் இறந்தார். அவரது வலைதளத்தில் அவரே எழுதிய “என் தன்வரலாறு” என்ற சிறிய கட்டுரையை இங்கே மொழிபெயர்த்துள்ளேன். பாவிச்சின் மொழி ஒரு வித கனவினை போன்றது. எந்த தர்கத்துக்குள்ளும் அடைபடாது மிதப்பது. இந்த தன்வரலாறும் அதே மொழியினால் ஆனதே. இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என் மொழிபெயர்ப்பில் நிகழ்ந்திருக்கலாம். பாவிச்சின் ஆங்கில கட்டுரையையும் வாசித்துவிடுங்கள்.
மிலொராட் பாவிச்சுயசரிதை – மிலொராட் பாவிச்

நான் கடந்த இருநூறு ஆண்டுகளாக எழுத்தாளனாக இருக்கிறேன். வெகு காலத்திற்கு முன்பு, 1766ல் புடிம் நகரில் வாழ்ந்த ஒரு பாவிச் தனது கவிதை தொகுப்பை வெளியிட்டார். அன்றிலிருந்து எங்களை எழுத்தாளக் குடும்பமானவே நினைத்துவந்திருக்கிறோம்.

நான் 1929ல் சொர்கத்தின் நான்கு நதிகளுள் ஒன்றின் கரையினில் பிறந்தேன். நான் பிறந்தது துலாம் ராசியில் (அல்லது ஆஸ்டெக் ஜாதகப்படி பாம்பு ராசியில்).

முதன்முறை என் மேல் குண்டுகள் பொழிந்த போது எனக்கு வயது பன்னிரெண்டு. இரண்டாம் முறை நிகழும் போது எனக்கு பதினைந்து வயது. இவ்விரண்டு பொழிவுகளுக்கு இடையே முதல் முறையாக காதலில் விழுந்ததும், ஜெர்மானிய ஆட்சியில் கட்டாயத்தினால் ஜெர்மன் மொழி பயின்றதும் நிகழ்ந்தது. வாசமான புகையிலையை புகைத்த ஒருவரிடம் ரகசியமாக ஆங்கிலமும் கற்றேன். இதற்கிடையில் முதல் முறையாக ப்ரென்ச் மொழியை மறந்தேன் (பின்னாட்களில் மேலும் இரு முறை மறந்தேன்).

இறுதியாக, அமெரிக்க-பிரித்தானிய படைகளின் குண்டுபொழிவிலிருந்து தப்பிக்க ஒரு முகாமில் தங்கிய போது, ருஷ்ய அதிகாரி ஒருவர், அவரிடம் இருந்த ருஷ்ய நூல்களை (ஃபெட் மற்றும் ட்யுட்ஷெவ்வின் கவிதை தொகுப்புகள்) கொண்டு எனக்கு ருஷ்ய மொழியை கற்பித்தார். மொழிகளை கற்பது என்பது வசீகரிக்கும் மிருகங்களாக உருமாறும் அனுபவம் என்று இன்றெனக்கு தோன்றுகிறது.

இரண்டு ஜான்களின் மீது அன்பு கொண்டிருக்கிறேன் – தமாஸ்கஸின் ஜான் (2)  மற்றும் ஜான் க்ரைசோஸ்டம் (3) (தங்க நாவினன்).

என் வாழ்வினை காட்டிலும் எனது புத்தகங்களில் வரும் காதல்களில் அதிக வெற்றி கண்டிருக்கிறேன். இதில் ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு, இன்றும் தொடர்கிறது அது.  நான் உறங்குகையில் இரவு இனிமையாக என் கன்னத்தை பிடித்துக்கொண்டிருக்கிறது.

1984 வரை, நான் தான் நாட்டிலேயே மிக குறைவாக படிக்கப்பட்ட எழுத்தாளன். அதன் பிறகு மிக அதிகமாக படிக்கப்பட்ட எழுத்தாளனானேன். (4)

நான் ஒரு நாவலை அகராதியின் வடிவில் எழுதினேன். இரண்டாம் நாவல் குறுக்கெழுத்து வடிவிலானது. மூன்றாம் நாவல் நீர்கடிகார வடிவம் (5). நான்காம் நாவல் டாரட் சீட்டுகளின் வடிவில். எனது நாவல்களுக்கு நான் அதிக தொந்தரவு தரக்கூடாதென நினைக்கின்றேன். நாவல் ஒரு வகை வைரஸ் கிருமி போன்றது என்பது என் நம்பிக்கை – அது தானாகவே பரவிப் பரவி வளர்கிறது.

ஆச்சரியகரமாக, எனது நூல்கள் 73 முறை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சுருங்கச் சொன்னால், என்னிடம் சுயசரிதை எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் நூற்பட்டியல் தான்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டு விமர்சகர்கள் என்னை 21ஆம் நூற்றாண்டின் முதல் எழுத்தாளன் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் “குற்றமல்ல, குற்றமின்மையே நிரூபிக்கப்படவேண்டியதாக” கருதப்பட்ட 20ஆம் நூற்றாண்டில் தான் நான் வாழ்ந்தேன்.

என் கனவுகளில் இறந்தவர்களை தீண்டிய அதே கரம் கொண்டு உயிரோடிருப்பவர்களை தீண்டக்கூடாது என்பதை அறிந்திருந்தேன்.

என் வாழ்வின் ஆகப்பெரிய ஏமாற்றங்கள் எனது வெற்றிகளிலிருந்தே முளைத்தன. வெற்றி எதையும் தருவதில்லை.

நான் யாரையும் கொன்றதில்லை. ஆனால் அவர்கள் என்னை கொன்றுவிட்டனர், நாம் இறப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே. எனது புத்தகங்களின் ஆசிரியன் ஒரு துருக்கியனாகவோ ஜெர்மானியனாகவோ இருந்திருந்தால் அவற்றிற்கு நல்லதாக இருந்திருக்கும். மோசமாக வெறுக்கப்பட்ட ஒரு தேசத்தின் – செர்பிய தேசத்தின் –  ஆகப்புகழ்பெற்ற எழுத்தாளனாக அறியப்பெற்றேன்.

21ஆம் நூற்றாண்டு எனக்கு 1999ல் ஆரம்பித்தது. நாட்டோ (NATO) படைகள் பெல்கிரேடின் மீதும் செர்பியாவின் மீதும் குண்டு வீசத்துவங்கிய போது. அன்றிலிருந்து எதன் கரையில் பிறந்தேனோ, அந்த டான்யூப் நதி பயணம் செய்ய ஏதுவற்றதாகப் போய்விட்டது.

எழுத்தின் அலாதியான இன்பத்தை அளித்ததன் மூலம் கடவுள் எனக்கு அளக்கவியலா நன்மையினை செய்தார் என்றெண்ணுகிறேன். அந்த இன்பத்தை கொண்டே என்னை தண்டித்தும் விட்டார் என்றும் தோன்றுகிறது.

குறிப்புகள் :

(1) பாவிச் என்பது மிலொராட் பாவிச்சின் குடும்பப்பெயர்.
(2) தமாஸ்கஸின் ஜான் (John of Damascus) ஒரு தமாஸ்கஸ் நகரில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரபு கிருத்துவர். நீதி, இறையியல், தத்துவம், இசை என பல துறைகளில் ஆர்வமாக ஈடுபட்ட அறிஞர். தமாஸ்கஸின் இஸ்லாமிய காலிஃபின் தலைமை நிர்வாகியாக பணியாற்றினார். இவர் எழுதிய கிருத்துவ பாடல்கள் பல இன்றும் கிழக்கத்திய தேவாலயங்களில் பாடப்படுகின்றன.
(3) ஜான் க்ரைசோஸ்டம் (John Chrysostom) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிருத்துவ பாதிரியார். அவரது பேச்சுத்திறமைக்காக அவரை தங்க நாவுடையவர் (Golden Tongued) என்று அழைத்தனர்.
(4) 1984ல் தான் பாவிச்சின் முதல் நாவலான கசார்களின் அகராதி வெளிவந்தது.
(5) இதன் மூலச்சொல் clepsydra. அதாவது ஒரண்டு முனைகளும் திறந்திருக்கும் ஒரு குழாய். பாவிச்சின் மூன்றாம் நாவலான Inner Side of the Wind இவ்வடிவதிலான நாவல். அந்நாவலை இரண்டு பக்கங்களில் இருந்து படிக்கலாம்.

இதன் ஆங்கில வடிவம் : http://www.khazars.com/en/autobiography/
பாவிச் குறித்த எனது பழைய பதிவுகள் : https://angumingum.wordpress.com/?s=பாவிச்

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

5 replies on “மிலோராட் பாவிச்சின் தன்வரலாறு”

சித்து,

முதலில் அருமையான மொழி பெயர்ப்புக்கு நன்றி. சில எண்ணங்கள்:

பிரெஞ்சு மொழி பேசுபவர்களுக்கு பொதுவாக ஆங்கிலத்தின் மீது மரியாதை குறைவு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். (இலக்கியச் செறிவைப் பொருத்த வரை). அதனால், ஆங்கிலம் கற்ற அதே வேளையில் பிரெஞ்சை மறந்தேன் என்பதை ஒரு Tongue-in-cheek statement ஆகப் பார்க்கலாமோ? அப்படி இருக்கும் பட்சத்தில் ‘இதற்கிடையில்’ என்பதற்கு பதிலாக ‘அதே சமயத்தில்’ என்று வந்திருக்கலாம் என்று தோன்றியது.

” மாயத்தால் கட்டுண்ட மிருகங்களாக உருமாறும் அனுபவம்” (transformation into different bewitching animals.) இது எனக்கு “மாயத்தால் நம்மைக் கட்டிப்போடும் அல்லது வசீகரிக்கும் மிருகங்களாக உருமாறும் அனுபவம்’ என்று வந்திருக்கலாமோ என்று தோன்றியது. Thought there is a subtle difference btw bewitching & bewitched.

//”ஆனால் “குற்றமற்றதன்மை அல்ல, குற்றமே நிரூபிக்கப்படவேண்டியதாக” கருதப்பட்ட// (when innocence not guilt had to be proven.) – பொருள் தவறாகிவிடும் சாத்தியம் இங்கு உள்ளது. “ஆனால் ‘நிரபராதத் தன்மையை, குற்றத்தை அல்ல, நிருபிக்கப்பட வேண்டியதாக’ என்று வர வேண்டும்.

Hope you don’t mind my saying all these.

ஆனால், மிக எளிதாக, சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் தன்மையில் மொழியாக்கம் செய்கிறீர்கள். நான் எதை மொழியாக்கம் செய்ய முனைந்தாலும் அதற்கு ஒரு இருண்ட தன்மை (something gloomy) வந்து விடுகிறது.

நீங்கள் இன்னும் அதிகம் அல்லது அடிக்கடி எழுதலாமே சித்து.

அனுஜன்யா

மிமிலோராட் பாவிச்சின் சிறு வரலாற்றை பலருக்கும் பயன்படும் வண்ணம் மிகவும் எளிமையாக மொழிப்பெயர்த்து பதிவிட்டதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நன்றி.

சித்து,

ரொம்பவே லேட் கமெண்ட் தான், இருந்தாலும். ஆகா, இவரின் புத்தகத்தை பற்றி படித்தே ஒரு மயக்கம் வந்து விட்டது, இப்போது உங்கள் பதிவு இன்னும். இங்கு கிடைக்கத்தான் மாட்டேங்கின்றது. ஒரு மூன்று-நான்கு வருடமாக அலைகின்றேன். அவரின் வலையில் உள்ள இரு கதைகள் படித்து இன்னுமும் ஆவல் கூடுகின்றது. ரொம்ப படிக்காமல் hypeவை வளர்க்க கூடாது என்று நினைத்தாலும் முடிவில்லை. (பார்க்காமலே காதல் rangeக்கு போகி விடும் போல என் நிலை) இந்த புத்தகத்தை படித்தவர்களை பார்த்தால், எங்கே இவர்களுக்கு இது கிடைத்தது என்ற பொறாமை கூட வந்து விடும் போல சில களம் கழித்து.

நன்றி
அஜய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s