
சில மாதங்களுக்கு முன்பு “அதிநாயகமாக்கம்” என்ற பதிவினை எழுதி இருந்தேன். அந்த பதிவை ஒரு நடை படித்துவிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை. அந்த பதிவின் சாரம் இது தான். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை நம் சமூகம் “அதிநாயகர்களை” உருவாக்கியபடியே உள்ளது. ஔவை, வள்ளுவன், கம்பன் துவங்கி நம் கவிதைகள் முழுக்க இந்த அதிநாயகமாக்கத்தை காண்கிறோம். இராமன், காந்தி, ஒபாமா என அதிநாயகர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் ஏதோ ஒரு தேவையை இந்த அதிநாயகர்கள் பூர்த்தி செய்கிறார்கள்.
அந்த பதிவினை ஒரு கேள்வியுடனேயே முடித்திருந்தேன்.
இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?
இது பல வருடங்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் கேள்வி. அந்த கேள்வியை நினைக்கும் தோறும் ஒரு காட்சி தோன்றி மறையும். அருணாசலம் படம் வெளியாகி இருந்த நாள். முகப்பேர் பேருந்து நிலையம் அருகே ஒரு இளைஞர் கூட்டம் ரஜினியின் பெரிய படம் ஒன்றினை தங்களது தோளில் தூக்கி சென்றனர். யார் இந்த இளைஞர்கள். இவர்களுக்கு அந்த நடிகருக்குமான பந்தம் என்ன?
இரு வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தக சந்தை சென்றிருந்த போது ஒரு புத்தகம் வாங்கினேன். புத்தகத்தின் பெயர் : ஔவையில் உளவியல் & ப்ராய்டு – லெக்கானின் மனஅலசல். – ஐ.க. பாண்டியன் என்பவர் எழுதிய நூல் (கார்முகில் பதிப்பகம்). அப்பொழுது குறுந்தொகையில் லயித்திருந்ததாலும், நான் கவித்துவ நோக்கில் வாசித்த ஔவையை இவர் மனஅலசலின் (psychoanalysis) துணை கொண்டு ஆராய்கிறார் என்பதாலும் இந்த புத்தகம் ஈர்த்தது.
இந்நூலினை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் பகுதியில் ப்ராய்டு மற்றும் லக்கானின் மனஅலசல் கோட்பாடுகளை மிக சுருக்கமாக விளக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் எத்தனை படித்தும் புரிபடாது இருந்த ப்ராய்ட் மெல்ல எனக்கு புரியத்துவங்கினார். நூலின் இரண்டாம் பகுதி ஆத்திச்சூடி மற்றும் கொன்றை வேந்தன் பாடல்களை அலசுகிறது. மூன்றாம் பகுதி ஔவையின் தனிப்பாடல்களை. நான்காவது பகுதியில் சங்கஇலக்கியத்தில் (குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு) ஔவை எழுதிய பாடல்களை அலசுகிறது.
ஏதோ காரணத்தால் இந்த நூலை முன்னுரையை தாண்டி படிக்கவில்லை. இரு வருடங்களாக அலமாரியில் தூங்கிக்கொண்டிருந்த நூலினை உறக்கம் கொள்ளாத நேற்றிரவு சும்மா புரட்டலாம் என்று எடுத்தேன். “அதிநாயகமாக்கம்” கட்டுரையில் மேற்கோள்காட்டப்பட்டிருந்த ஔவையின் “களம் புகல் ஓம்புமின்…” என்ற பாடல் இந்நூலில் ஆராயப்பட்ட பகுதி கண்ணில் பட்டது. அந்த பாடலும் அதன் விளக்கமும் :
களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே
– ஔவையார் (புறநானூறு 87)
போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனுக்கு எதிராக எதிரிகளின் படை திரள்கிறது. அப்போது எதிரிகளை எச்சரித்து ஔவை பாடுவதாக அமைந்த பாடல் இது. கட்டுரையாளர் இந்த கவிதை உருவாக காரணமாக என்ன இருந்திருக்கும் என்பதை ஆராய முற்படுகிறார். இந்த கவிதையின் துணைகொண்டு ஔவையின் மனஓட்டத்தை கணிக்க முயல்கிறார். இவர் வந்து சேரும் இடம் சட்டென ஒரு திறப்பை உருவாக்கியது. அதியமானுக்கு எதிராக போர் புரிய படை ஒன்று வரும் பொழுது ஔவைக்கு ஏன் இத்தனை கோவம் வர வேண்டும்?
ஔவையின் மனதினில் ஒரு வீரனின் பிம்பமாக அதியமான் இருக்கிறான். ஔவையின் மனதினில் உள்ள அந்த அதியமானும் ஔவையின் ஒரு பகுதியே. உண்மையான அதியமான் பகைவர்களால் சீண்டப்படும் போது ஔவையினுள் இருக்கும் அதியமானும் சீண்டப்படுவதாக, அதன் மூலம் தானே சீண்டப்படுவதாக உணர்கிறாள் ஔவை. அந்த உணர்வில் இருந்தே எழுகிறது “எம்முளும் உளன் ஒரு பொருனன்” என்ற வரி. இந்நிலையை உளவியலில் பிணைப்புத் தற்காதல் (Anaclytic Attachment) என்பார்கள் என்கிறார் பாண்டியன். பாண்டியனின் சொற்களில் :
ஔவை அதியமானின் பகைவரைக் கண்டதும், அவர்களை எச்சரிப்பதற்கான பிரக்ஞைபூர்வமான சொல்லாடல் அல்ல இது. மாறாக ஔவையின் சுயமோகத்தில் (Anaclytic Type) ஒரு பகுதியாக பங்கேற்றிருக்கும் அதியமானுக்கு ஏற்பட்ட காயமே, கிளர்ந்து ஒரு வானளாவிய வீரத்தைப் பகைவர் முன் தற்காப்பாக அவர்களை அச்சுறுத்த வைக்கிறது.
சாதி அரசியலை அல்லது மத அரசியலைத் தம் பகுதியாக கொண்ட தன்னிலைகள் எங்கோ நடப்பதை ஆய்வுக்குறிய எதுவும் இல்லாத போதும் தன் attachmentற்கு ஏற்ப நியாயப்படுத்தி பேசுவதைக் காணமுடியும். ரசிகர்களின் அரசியலும் இந்த வகை தான். தன்னையும், தான் ரசிக்கும் அபிமான நடிகரின் தொப்புள் கொடியில் கட்டுண்டு கிடப்பது பிரிக்கப்படவேண்டியது அவசியம் என்ற பிரக்ஞை இல்லாமல் இருப்பர்.
சுயமோக வெளியின் வானளாவியம் அத்தகையது. அறிஞனையும் ஞானியையும் ஏமாற்றக்கூடியது.
ஆக, ரஜினியின் உருவத்தை பல்லக்கில் எடுத்துச்செல்லும் ரசிகன் உண்மையில் தூக்கிச்செல்வது தன்னுள் நிறைந்த ரஜினியை தான். அதாவது தன்னையே பல்லக்கில் தூக்கிச்செல்கிறான் அவன். அதிநாயகமாக்கம் என்பது உண்மையில் நம்மை அதீதமாக்கும் முயற்சி தானா? யோசித்தால் இது அத்தனை எதிர்மறையானது அல்ல என்று தோன்றுகிறது. காந்தியின் தியாகம் நம் கண்களை நனைப்பது எதனால்? காந்தியை வாசிக்கும் தோறும் அவரை நாமாக மாற்றுவதினால் தானா?
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
4 replies on “அதிநாயகமாக்கத்தின் வேர்”
சித்து
நல்லதொரு கட்டுரை. சில வரிகளில் ஒத்துப் போக முடியவில்லை எப்போதும் போல் நாமிருவிரும் விலகும் புள்ளிதான் அது.:)
அதிநாயகமாக்கத்தின் பின் விளைவுகள் குறித்தான சிந்தனையை சிறிது விஸ்தாரமாக்கினால் அதில் பிரதானமாய் தெரியும் ஒற்றைத் தன்மை தன் குரூரங்களை மிக அழகிய போர்வையினைக் கொண்டு மூடியிருப்பது தெரியவரும். பன்மைவாதம் குறித்தான புள்ளியில் யோசிக்கும்போது ஒருபோதும் அதிநாயகமாக்கத்தை அத்தனை எதிர்மறையானதில்லை என தவிர்த்துப் போய்விட இயலாது என்கிற முடிவினுக்குத்தான் நான் திரும்பத் திரும்ப வருகிறேன்.
தன்னை முன்னிருத்துவது தன்னை பிறவற்றில் பொருத்தி மகிழ்வது இருத்தலின் தவிர்க்க இயலாத வாதை அதை அதிநாயகமாக்கத்தோடு பொருத்தி திருப்தியடைவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
சமூகம் வரலாறு பிற விளிம்பு என்பதின் மீதான அக்கறைகள் அதிநாயகமாக்கத்தை ஒருபோதும் வரவேற்பதில்லை.
அவ்வப்போதாவது எழுதிக்கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது.
அய்ஸ்..
நீண்ட நாட்களுக்கு பிறகு….
நான் இந்த அதிநாயகமாக்கத்தை அல்லது அதன் வேராக இருக்கும் பிணைப்புத் தற்காதலை ஒரு givenஆக பார்க்கிறேன். அது இருக்கிறது. எல்லோரிடமும் இல்லையெனினும் பெரும்பாலோரிடம். எல்லோருக்குள்ளும் ஒரு தன்மோகி இருக்கின்றான் என்பது என் எண்ணம். இந்த தன்மோகியின் நீட்சியாகவே அதிநாயகமாக்கம் நிகழ்கிறது. இந்த புள்ளியை பிடித்துக்கொண்டு போனால் கடவுளையும் போய் சேர்ந்துவிடலாமோ என்னமோ. எனில் இதை இல்லாதாக்கும் நிலை குறித்து சிந்திப்பதோ, மனிதனுக்கு சாய்மானமே தேவையில்லை என்று கூறுவதோ யதார்த்தம் அல்ல.
இப்போது நாம் பிரியும் இடத்திற்கு வருகிறோம். 🙂 நான் நேர்நிலை என்றொன்று நன்மை என்றொன்று உன்னதம் என்றொன்று இருப்பதாக நம்புகிறேன். ஆழமாக. இந்த அதிநாயகமாக்கம் அந்த புள்ளியை நோக்கி நகரும் பொழுது அது சரியோ என்று தோன்றுகிறது என்கிறேன்.
இன்னொரு முகமும் இருக்கிறது. இப்பொழுது மார்டின் லூத்தர் கிங் ஜூனியரின் கடைசி ஆண்டை குறித்து படித்துக்கொண்டிருக்கிறேன். அவர் 1968ஆம் ஆண்டின் அமெரிக்க கருப்பின மக்கள் அனைவருக்கும் அதிநாயகர். அவரது கருத்தியல் எதிர் தரப்புகள் கூட அவரது நல்லெண்ணத்தை குறை சொல்லவில்லை. ஆனால் அவர் இறந்த உடன் நாடெங்கும் வன்முறை வெடித்தது. வன்முறை வெடித்த பெரும்பாலான இடங்கள் கருப்பின மக்களின் சேரிகள் தான். வசதியான கருப்பின மக்களின் மத்தியிலோ கிங்கின் விசுவாசிகளாக இருந்த வெள்ளையர்களின் மத்தியொலோ அல்ல… எனில் இந்த உளவியலுக்கும் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு?
சித்து
பொருளாதாரமே எல்லா உளவியல் நிலைகளையும் தீர்மானிக்கிறது. கலகம்,வன்முறை,போராட்டம்,வன்புணர்வு,படுகொலைகள் என எல்லா குரூரங்களும் மேல் தட்டு வர்க்கத்தினுக்கோ அல்லது அரசாங்கத்தினுக்கு நெருக்கமானவர்களுக்கோ நிகழ்வதில்லை. மய்யத்திலிருப்பவர்களுக்கு அல்லது மிகப்பெரும் மய்யமாய் இருப்பவர்களுக்கு வாழ்வு எப்போதும் கொண்டாட்டம்தாம். ஆக ஒவ்வொரு தனிமனிதனும் மய்யமாக விரும்புகிறான். அதிகாரத்தின் சுவையை ருசிக்க விரும்புகிறான். அதற்காக அவன் எதையும் செய்யத் துணிகிறான். அதற்கான விழைவுகளில் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை நசுக்கவும் அவன் தயங்குவதில்லை. இப்படியாய் விளிம்புகள் பெருகுவதற்கான முக்கிய காரணம் மய்யத்தின் வளர்ச்சியாக் இருக்கிறது.
அதிநாயகமாக்கம் என்பது தனியொருவனை சமூகத்திலிருந்து பிரித்து மய்யத்தினுக்கு நகர்த்தும் ஒரு செயல்தான். சுயமோகம் அல்லது தன்மோகம் என்பது மனிதனின் வெகு இயல்பான ஒன்று அதை அதிநாயகத்தினுக்கு நகர்த்துவது மிகவும் ஆபத்தான செயலாகத்தான் எனக்குப் படுகிறது.
இந்த அதிநாயகமாக்கம், உன்னதம், நேர்நிலை, நன்மை, உள்வெளி, கடவுள்தன்மை, உள்ளொளி என்பவை எல்லாம் நவீனம் கட்டமைத்த பிரம்மாண்டங்கள். அதன் மூலமாய் மனித குலத்தினுக்கு / தனிமனிதனுக்கு நிகழ்ந்தவைகள் ஏமாற்றங்களாகவும் துரோகங்களாகவும் தற்கொலைகளாகவும்தான் முடிகின்றன. ஒரு கட்டத்தில் வெறும் வார்த்தைகள் சிலாகித்தல் அழகியல் என்பவை யாவும் வெளிறத் துவங்கிவிடுகின்றன.
அகம், அதி உண்மை, மனதின் பைத்தியம், எதிரழகியல், சுய எள்ளல்,பன்மைத் தன்மை, பேசப்படாததை, எழுதப்படாததை அறியப்படாததை நோக்கி நகர்வது போன்றவைகளே சமகாலத்தின் தேவையாய் இருக்கிறது. இலக்கியமும் இசங்களும் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாய் இருப்பதுதான் நேர்மையானதாய் இருக்கமுடியும் மாறாய் அதிநாயகங்களின் துதிப்பாடலாய் இருப்பவை யாவும் சமூகத்தினுக்கு எதிரானதுதான். மேலும் உருவான/ உருவாக்கப்பட்ட அதிநாயகங்களால் துதிப்பாடலைத் தவிர இன்னொன்றை உருவாக்கவும் முடியாது
அய்ஸ்
பொருளாதாரத்திற்கும் (அல்லது பொருளாதார நிச்சயமின்மைக்கும்) அடித்தட்டு மக்களில் இருக்கும் வன்முறைக்கும் ஒரு தொடர்பு இருப்பது உண்மை தான். ஆனால் இதற்கான பழியை முழுக்க முழுக்க பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் இருக்கும் மக்களின் மேல் போடுவது எளிமைப்படுத்தும் வாதமாக தெரிகிறது. உண்மையில் வன்முறைக்கும் ஒற்றை அடையாளப்படுத்தலுக்குமான தொடர்பே அதிகம். ஒரு தனிமனிதனுடைய பலதரப்பட்ட அடையாளங்களை பின்னுக்குத்தள்ளி அவனது ஏதேனும் ஒற்றை அடையாளத்தை (மதம், இனக்குழு, சாதி, இன்னபிற…) மட்டும் முன்நிறுத்துவதே சமூக வன்முறைகளின் மிகப்பெரிய காரணியாக இருக்கிறது. இந்த ஒற்றை அடையாளம் பொறுத்துதல் நமது இனக்குழு மனப்பான்மையின் நீட்சியாக இருக்கலாம். சமூக நீதிக்கான பெரும் தடையாக இருப்பது இந்த ஒற்றைத்தன்மை தான். ஒரு தாழ்த்தப்பட்டவன் மருத்துவனாக வாசகனாக கணவனாக இருக்கும் பொழுது அவன் தாழ்த்தப்பட்டவன் என்ற ஒற்றை அடையாளம் முன்னிருத்தப்படுவது அநீதி.
அதிநாயகமாக்கம் குறித்து பேசும் பொழுது இதை முழுக்க முழுக்க அகம் சார்ந்த பிரச்சனையாகவோ முற்றிலும் புறக்காரணிகளின் செயலாகவோ பார்க்க முடியாது. சமூகத்தின் அத்தனை செயல்பாடுகளையும் போல இதுவும் மிக அதிகமான காரணிகளைக்கொண்ட (அதனாலேயே மிக சிக்கலான) விஷயம். இதை இந்த விவாதத்தில் முழுக்க வரையறுத்து விடமுடியாது நிச்சயமாக.
ஒரு தனிமனிதனின் தன்மோகத்தின் அதீத நீட்சி தான் அதிநாயகமாக உருவாகிறது என்று கொண்டாலும், அப்படி உருவாவதற்கான அடிப்படைகள் அந்த புறப்பொருளுக்கு இருந்தாகவேண்டியுள்ளது. இது விவாதத்தை வேறு எங்காவது எடுத்துச்சென்றுவிடும் என்ற அச்சத்துடனேயே சொல்கிறேன் – அறம் என்று ஒன்று உண்டு. தான் அல்லாத பிறவற்றின் மீதான அன்பு என்று அதை சுருக்கிக்கொள்கிறேன். இந்த அறம் சார்ந்த விழைவிலிருந்து அதிநாயகமாக்கம் எழுமானால் அது அத்தனை தீமையானது அல்ல. ஒரு மார்டின் லூத்தர் கிங் அல்லது காந்தி யை அதிநாயகனாக கொண்ட ஒருவன் அவனை சூழ்ந்திருக்கும் ஒற்றைப்படுத்தல்களில் இருந்து விடுபட முடியும் என்றே தோன்றுகிறது. இந்த அளவில் இது சரி என்கிறேன்.
ஆனால் அதிநாயகமாக்கம் புனிதமாக்கப்படுவதில் தான் முடிகிறது. எப்பொழுதும். மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் இது தவிர்க்க முடியாததாகிறது. இதற்கும் கல்விக்கும் தொடர்பு இல்லையென்று படுகிறது. ஹிட்லர் பதவிக்கு வரும்பொழுது ஜெர்மனி ஐரோப்பாவிலேயே அதிக கல்விவிகிதம் கொண்ட நாடு. ஆனால் “ஆரியர்” என்ற (பொய்யான) ஒற்றை அடையாளம் அவர்களை போதையேற்றியது. இது நிகழாதிருக்க வேண்டுமானால் இந்த தலைமையை விமர்சிக்கும் குரல் அணையாது இருக்க வேண்டும். அதுவே கலகக்காரர்களின் பணி என்று தோன்றுகிறது. அந்த தலைமை ஒவ்வொரு கட்டத்திலும் கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டும். அவன் செயல்கள் குறித்த துதிபாடல்கள் அல்ல, சமூக விவாதங்கள் நிகழவேண்டும். சுருக்கமாக, அவர் கடவுளாவது தடுக்கப்படவேண்டும். இங்கு அதிநாயகமாக்கப்படும் மனிதரின் நல்லெண்ணத்தின் மீதான நம்பிக்கையும் முக்கியம்.
எழுதப்படாதவை எழுதப்படவேண்டும். அறியப்படாததை நோக்கி நகர வேண்டும். பன்மைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். இது சரி. ஆனால் எதிர்காலம் முழுக்க முழுக்க நாம் இதுவரை பயணம் செய்த திசைக்கு எதிர்திசையிலேயே இருக்கிறது என்பதை நான் மறுக்கிறேன். சமூகம் என்பது பல்வேறு தனிமனிதர்களின் கூட்டு, தனிமனிதன் என்பவன் சமூகத்தின் அங்கம் என்ற இரண்டு நிலைகளுக்கும் இடையே உள்ள சமரசப்புள்ளி தான் மனிதனின் சமூக வாழ்க்கைத்தளம். இந்த புள்ளி ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம் மாறிக்கொண்டே உள்ளது. இப்பொழுது அது தனிமனிதனுக்கு சாதகமான இடத்தில். குழு அடையாளத்தில் இருந்து விலகி தனி அடையாளம் நோக்கி நகரவது நிகழ்கிறது. ஆனால் அந்த பயணத்தில் ஒரு சமூகமாக நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் இழந்துவிட வேண்டுமா?