பிரிவுகள்
இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை

பிரதீபன் கவிதைகள்

ராஜமார்த்தாண்டன் தொகுத்த “கொங்குதேர் வாழ்க்கை” என்ற நூல் நவீன தமிழ் கவிதையின் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது எனலாம். தமிழின் முக்கியமான கவிஞர்கள் (பிரம்மராஜன் நீங்கலாக) 94 பேரின் சில கவிதைகளை உள்ளடக்கிய பெரும் தொகுதி இது. நா. பிச்சமூர்த்தி, ப்ரமிள், சு. வில்வரத்தினம் போன்ற பரிச்சயமான பெயர்களூக்கிடையே, அறிமுகமில்லாத சில பெயர்களும் கண்ணில் பட்டன. அதில் ஒன்று பிரதீபன் (பக்கம் 160). இந்நூலின் வெளியே பிரதீபனின் பெயரை கேள்விப்பட்டதில்லை. நூலின் பின்குறிப்பு தரும் தகவல்கள் மிக சொற்பமே.

பிரதீபன்
(1952) தூத்துக்குடியில் வங்கி அலுவலராக பணியாற்றுகிறார்.
நானா உன் எதிரி (1982), மொட்டை கோபுரம் (1989)

அவ்வளவே.

தொகுப்பில் பிரதீபனின் 11 கவிதைகள் தரப்பட்டிருந்தன. இவரது கவிதைகளில் தெரிந்த கச்சிதமும் கவிதையினூடாக காணக்கிடைத்த ஆளுமையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாதிரிக்கு, நான் ரசித்த மூன்று கவிதைகளை இங்கு இடுகிறேன்.

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பது போல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை.

*

ஒளியை மட்டும்
உண்டு வாழும் புள்
ஓர்
அழகிய கற்பனை என்று
தோன்றாதா?

எச்சிலும் மிச்சிலும் கொறித்துண்ண
இருளில் வந்து நடமாடி
சப்தம் கேட்ட மாத்திரத்தில்
பாய்ந்து சென்று
வளைக்குள் பதுங்கும் வாழ்வே
தான் என்று துலங்காதா?

புள் அன்மை புரிந்தாலும்
ஊரும் நிலை ஓர்ந்தபின்னும்
கண்களால் வானம் தழுவி
களிக்கும் பழக்கம்
எதில் சேர்த்தி?

*

புனல் ஓடிப்போனப்பின்
வெண்மையாய்
மெத்துமெத்தென்று
மணல் பரந்து கிடந்தது
ஓடை;
பார்க்கப் பார்க்க
ஆசையாயிருந்தது குழந்தைக்கு;
சரி,
தன் காலைப் பதித்துத்
தடம் செய்ய வேண்டுமென்று
ஏன் தோன்றுகிறது.

இவரை பற்றிய தகவல்கள் யாருக்கேனும் தெரியுமா? அந்த இரு கவிதை தொகுப்புகளும் எங்காவது கிடைக்குமா இப்போது?

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

8 replies on “பிரதீபன் கவிதைகள்”

அன்புள்ள சித்த்தார்த்,
பிரதீபன் அருமையான கவிஞர். அவர் சிண்டிகேட் வங்கியில் வேலை பார்க்கிறார்.நீண்ட நாட்களாக ராஜ பாளையம் கிளையில் இருந்தார். பின்னர் தூத்துக்குடி. இப்பொது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.ராஜ பாளையம் நண்பர்களிடம் விசாரிக்க முயலுகிறேன்.நானா உன் எதிரி தொகுப்பு என்னிடமிருந்தது தேடிப் பர்க்கிறேன்.(இது ஒரு தகவலா என்கிறீர்களா, உங்கள் கண்டுபிடிப்பை உடனே பாராட்டத் தோன்றியதால் இதை பதிவிடுகிறேன்)
கலாப்ரியா

அன்புள்ள சித்தார்த்
பிரதீபன் கோவில்பட்டி கவிஞர். 1970 கள் காலகட்டம் முதல் கவிதைகள் எழுதிவரும் முக்கியக் கவிஞர். ஆனால் அதிகம் எழுதியதில்லை. அவரது கவிஞர்கள் இப்போதும் புதுமையாக இருப்பவை, சிண்டிகேட் வங்கியில் பணியாற்றி பணிநிறைவு செய்து தற்போது கோவில்பட்டியில் வசிக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s