கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.
வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்
யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.
இராமன் முடிசூட்டிக்கொள்ள செல்லும்போது அவனை காணும் அயோத்தியா மக்களின் மனநிலையை விளக்கும் பகுதியில் உள்ள பாடல் இது. இதன் கடைசி வரி என்னவோ செய்துவிட்டது. காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார். ஏன் காரணமின்றி அழவேண்டும்? சாதாரண அயோத்தியாவாசிக்கும் இராமனுக்கும் என்ன சம்மந்தம்? இவ்வரியை படித்த போது ஜெயமோகன் சுந்தர ராமசாமியை குறித்து எழுதிய ”நினைவின் நதியில்” நூலினில் ஒரு பகுதி நினைவிற்கு வந்தது. காந்தியை பற்றி சுரா கூறியதாக ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.
“காந்தியை பத்தின நினைவுகள்ல ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வர்ரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரை பாத்ததும் அப்படியே மனசு பொங்குது அவங்களுக்கு…”
காத்லீன் ஃபல்சானி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரின் வலைப்பதிவில் கீழ்கண்ட வரி இருந்தது.
“கிராண்ட் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு பத்து மணிக்கு வுல்ஃப் ப்லிட்சரின் குரல் “ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்” என்று ஒலித்தபோது அங்கு குழுமியிருந்த அனைவரும் (பல பத்திரிக்கையாளர்கள் உட்பட) ஆராவாரம் செய்தனர்.
பின்பு பலர் அழுதனர்.”
ஒபாமாவும் கிட்டத்தட்ட இராமன் போல தான். இன்னும் எதுவுமே செய்யத்தொடங்கவில்லை. இனி தான் தெரியும் அவர் யார்… என்ன செய்யக்கூடியவர் என்று. காந்தியின் முன் அமர்ந்து அழுத இப்பெண்களுக்கு காந்தியின் தென்னாப்பிரிக்க வெற்றிகள், காங்கிரஸ் தலைமை செயல்பாடுகள், அவர் எழுதிக்குவித்த பல நூறு பக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனில் ஏன் அழ வேண்டும்?
கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திலேயே இன்னொரு பாடலில் ஒரு வரி வருகிறது. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதற…. உள்ளே பொங்கிப்பெருகும் மகிழ்ச்சி கண்களில் நீராய் வழிகிறது…
யோசிக்கையில் தோன்றுகிறது. தண்ணென்ற ஓர் ஆளுமைக்காக, வெயில்காய் நிலம் போல மக்கள் ஏங்கியபடி உள்ளனர். சாதாரண தண்மை இங்கு நொடிப்பொழுதில் உரிஞ்சப்பட்டு இல்லாதாகின்றது. ஆழம் வரை செல்லக்கூடிய, மனதையும் ஈரமாக்கவல்ல ஒரு நீர்சுனையை அவர்கள் தேடியபடியே, ஒரு அதிநாயகனுக்காய் ஏங்கிய படி உள்ளனர். அறம் பேணுவான் இவன் என அவர்களுக்கு தோன்றினாலே போதும், எம்முளும் உளன் ஒரு பொருனன் என்று உரக்கக் கூவி விடுவார்கள். கம்ப ராமாயணத்தில் பாடலுக்கு பாடல் இராமனின் பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அவர் அறத்தான் என்பதே அப்பிம்பத்தின் ஆதாரம். வீரன் என்பதோ, சாந்தமானவன் என்பதோ அல்ல. அறத்தான் என நம்பத்தகுந்தவனை அதிநாயகனாய் பாவித்து பாவித்து எத்தனைப்பாடல்கள்…….
புறநானூற்றில் ஔவையின் பிரபலமான பாடல் ஒன்று உள்ளது.
களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே
போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.
என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ
முன்நின்று கல்நின் றவர்.
என்கிறார் வள்ளுவர்.
என் அரசனின் முன் நிற்காதீர்கள் பகைவர்களே. பலர் என் அரசனின் முன் நின்று இப்போது நடுகற்களாக நிற்கிறார்கள்.
அதிநாயகமாக்கம் இதை விட சிறப்பாய் தமிழில் வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?
16 replies on “அதிநாயகமாக்கம்”
We always need some figure for us to sit and weep around (or cheer )
எப்பா… தூள்!
நன்றி பாலாஜி.
நன்று. உங்கள் பதிவினை படித்தப்பின் இந்த pop திரைப்படத்தின் வசனம் தான் நினைவுக்கு வந்தது:
Everybody loves a hero. People line up for them, cheer them, scream their names. And years later, they’ll tell how they stood in the rain for hours just to get a glimpse of the one who taught them how to hold on a second longer. – Mary Parker, Spiderman
good quote santhosh. நமக்கு ஒரு சாய்மானம் தேவைப்படுகிறது. நமது அதிநாயகர்கள், கடவுளர்கள் எல்லாமே அது தானே… 🙂
அழவைத்துவிட்டாய் நண்பா 😦
நன்றி நிலா.
ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கும் போது எத்தனை பேர் கண்களில் நீர் துளிர்த்திருக்கும் என்பதையும் நினைத்துப்பார்க்கலாம். எனக்கென்னவோ உடம்பு சிலிர்த்ததும் நீர் துளிர்த்ததும் உண்மை. பல சமயங்களில் ஜனகன பாடும் போதும் அது ஏற்பட்டிருக்கிறது.
நன்றி சுந்தர். நமக்குள் இருக்கும் ”குழுவின் அங்கமாக விழையும்” ஆசையும் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கார் வாங்கிய காட்சியை பார்த்த போதும் அந்த மேடையில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் சொல்ல கேட்ட போதும் எனக்கும் சிலிர்த்தது. இது நான் தமிழனாக பிறந்ததனால் வந்த உவகை. ஆனால் நம் ஆதர்சங்களை நாமே கண்டுகொள்ளும் தருணங்களும் அமைவதுண்டு. ஜார்ஜ் கார்லின் இறந்த செய்தி கேட்ட போது, மார்டின் லூத்தர் கிங் ஜூனியரின் i have a dream உரையை கேட்ட போதெல்லாம் கண் கலங்க செய்வது எது?
வணக்கம் தோழா,
நல்ல கவனிப்பு. மேலும் இவ்வாறான அழுகை சூழல் எல்லோருக்குமே உருவாகி இருக்கிறது. பள்ளியில் நான் பேச்சுப் போட்டியில் ( அனைத்து மீயம்களிலும்- இந்தி, மராத்தி, குஜராத்தி உட்பட ) முதல் பரிசு பெற்ற போது எனது ஆசிரியை திருமதி செல்வி ராஜசேகர் அவர்கள் அழுதபோது எனக்கு காரணம் தெரியவில்லை. நான் எதாவது தப்பு செய்து விட்டேனோ என்பது போலத்தான் விழித்தேன். நான் பரிசு பெற்ற சந்தோஷமும் மறைந்து போய் விட்டது.
எனது நண்பர்கள் அழுதார்கள். இத்தனைக்கும் எனக்கு மாநகராட்சி பள்ளியில் கிடைத்த பரிசு 25 ரூபாய் கவர் தான். ஆனால் என்னுடைய தலைமை ஆசிரியர் எனக்கு BSA Racer சைக்கிள் வாங்கிக் கொடுத்தார் ( கண்டிப்பாய் அவரும் அழுதிருப்பார்)
எனது அந்த அழுகைக்கெல்லாம் பட்டப் படிப்பின் போது மனவியல் கூறுகள் குறித்த வாசிப்பின் போது தான் காரணம் தெரிந்தது.
அதிநாயகமாக்கம் நல்ல சொல்லாடல். எம்ஜிஆர் அவர்களுக்காக இப்படி அழுதவர்களை நாம் அறிவோம் தானே..
யப்பா.. சிலிர்க்குதப்பா.. இப்படி இன்னும் நிறைய சிலிர்க்க வையுங்கள்.
இதை வலைப்பதிவில் அப்டேட் செய்ய வேண்டாம்.. கொஞ்சம் சுயபுராணமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்..
எழுதுங்கப்பா..
மதி
சித்தார்த்,
நன்றாக இருந்தது உங்கள் பதிவு.
மனிதர்கள் எல்லோருமே உணர்வெழுச்சிகளுக்கு அடிமைப்பட்டவர்கள்தான். உணர்வுகள்தான் நம் செய்கைகளை தீர்மானிக்கின்றன. ஒரு விஷயத்தை சரியென்றும், தவறென்றும் தீர்மானிக்கச் செய்வது நம் அனுபவமும், அதன்பொருட்டு எழும் உணர்வுகளும்தான்.
பகிர்தலுக்கு நன்றி.
(நான் மதுராந்தகத்தில் வசிக்கிறேன்)
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
நன்றி அகநாழிகை.
மதுராந்தகமா? நம்மூராச்சே… என் தாத்தா ஒ.ந. துரைபாபு தெரியுமா உங்களுக்கு? எத்தனை வருஷமா மதுராந்தகத்துல இருக்கீங்க?
Sir,
fine
[…] மாதங்களுக்கு முன்பு “அதிநாயகமாக்கம்” என்ற பதிவினை எழுதி இருந்தேன். அந்த […]
Good post.
Chanced upon your blog via the link in your email to JeMo (which was good to – particularly agree with the disappointing superficiality in the characterization of the British officer in ஊமைச்செந்நாய்).
Coming to this topic – it is not coincidence that the etymologyical root for the word for liking (பிடி) is the same as the one for having a hold/attachment. Why heros, even for trivia we are likely to find it hard to distinguish between what we like and what we are. I am so and so (and in way of explanation we add) I like such and such.
முதன்முறை படித்துபின் கடந்துபோன நாட்களின் (வருடங்களின்?) சுவடே தெரியாவண்ணம் மனதுள் ஒட்டிக்கொள்ளும் பதிவுகளில் இதுவும் ஒன்று.
அண்மையில் (தமிழ் அறியா) நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அதிநாயகமாக்கல் குறித்தும் அதன் வேர் குறித்தும் நீங்கள் எழுதியவற்றைக் குறிப்பிட்டேன். இவ்விரண்டு பதிவுகளையும் படிக்க அவன் மிகவும் விழைந்தான். இவ்வரிய கருத்துகள் இன்னும் பலரைச் சென்றடைய பரவ மொழி ஒரு தடையாய் இருப்பது உறுத்தியது.
ஆங்கில மொழியாக்கம் கிடைக்குமா?