பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கவிதை சமூகம் மொழிபெயர்ப்பு

கவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு…

”சங்க காலக்கவிதைகள் எதை குறித்து பேசும் போதும் மனதை பற்றியே பேசுகின்றன” என்று ஜெயமோகன் சங்கச்சித்திரங்களில் எழுதி இருந்தார். சங்க கவிதைகளுக்கு மட்டுமல்ல, இதுவே கவிதைக்கான பொதுப்பண்பு. கவிதை எதை பற்றி பேசினாலும் எத்தனை போலியாக/உண்மையாக இருந்தாலும் அது கவிஞனின் மனப்பதிவு தான். கவிதையின் பாடுபொருளாக வரலாறு ஆகும் போது என்னாகிறது? கவிதைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) வரலாற்றின் நிகழ்வுகளல்ல… விளைவுகளே முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் நுட்பமாக வரலாறு தத்துவமாக உருமாறியே கவிதைக்குள் நுழைகிறது.

சமீபத்தில் வரலாறை மையமாக கொண்ட சில கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. முதல் வாசிப்பிலேயே கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது “புரிந்துவிடுகிறது”. ஆனால் எதைப்பற்றி பேசுகிறது? இக்கவிதையில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வு என்ன? என எதுவும் தெரியாது. இருக்கவே இருக்கிறதே கூகுள். ஒரு நடை போய் தேடிப்படித்துவிட்டு வந்து மீண்டும் கவிதையை வாசித்தால்… மூக்குக்கண்ணாடி கடையினில் கண்ணாடியை மாற்ற மாற்ற காட்சியின் தெளிவு கூடிக்கொண்டே வருமே… அப்படித்தான் புரிதல் கூடிக்கொண்டே வந்தது.

Kerry Hardy எழுதிய “On Derry’s Walls” என்ற கவிதை.

டெர்ரியின் சுவரின் மேல்… – கெர்ரி ஹார்டி.

ஒரு பொருளை, அதனினும் நுட்பமான
ஒன்றை கொண்டே விளக்க முடியும்.
அன்பினும் நுட்பமான வேறொன்றில்லை.
எனில்
எதை கொண்டு அன்பை விளக்க?

– சும்னன் இப்ன் ஹம்சா அல்-முஹைப்

கல்லறைத்தோட்டத்தில் வாழும் கரும்பறவை
குளிர்கால நாளொன்றின் அந்தியில் சுவரில் வந்தமர்கிறது.
அது புழுக்களை தின்றிருக்கிறது.
புழுக்கள், இறந்த புரொட்டஸ்டண்ட்களின் களிமண்ணை.

ஆயினும் அப்பறவை நுட்பமானது.
பிரகாசமானதும் கூட.
அதை விளக்கும்,
விளக்கவியலா அன்பை போல.

மற்றவற்றை குறித்து ஏதுமில்லை சொல்ல,
“அது இப்படி தான் இருந்தது” கூட இல்லை.
ஏனெனில் நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்
“அது இப்படி தான் எனக்கு தெரிந்தது” – என்பதை மட்டுமே.

கரும்பறவையின் வளைந்த குடலினுள்
அனைத்தும் நிறைவுறுகின்றன.

ஆங்கில வடிவம் இங்கே

அயர்லாந்த் கவிஞர் கெர்ரி ஹார்டியின் இந்த கவிதையில்

”ஏனெனில் நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்
“அது இப்படி தான் எனக்கு தெரிந்தது” – என்பதை மட்டுமே”

(because all we can ever say
is This is how it looked to me – )

என்ற வரி தான் முதல் வாசிப்பில் என்னை ஈர்த்தது. வரலாறு என்பது நிகழ்வுகளின் ஒரு கோணம் மட்டுமே. நாம் நமதென கொள்ளும் அனைத்துக்கருத்துக்களும் கோணங்கள் மட்டுமே. நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம் “அது அப்படி தான் எனக்கு தெரிந்தது” என்பதை மட்டும் தான். இந்த வரி தான் என்னை இக்கவிதையை மொழிபெயர்க்க உந்தியது.

கவிதையின் பெயர் காரணம் பிடிபடவில்லை. எனக்கு அயர்லாந்து வரலாறு பற்றி ஏதும் தெரியாது. இஸ்ரேல் பற்றிய நாவல்களை எழுதிய லியோன் யூரிஸை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருந்த காலத்தில் அயர்லாந்த் குறித்து அவர் எழுதிய Trinity வாசித்திருக்கிறேன். படித்ததில் பாதி புரியவில்லை. இக்கவிதையை மேலும் புரிந்துகொள்ள டெர்ரி குறித்து கூகுளில் தேடினேன்.

10ஆம் நூற்றாண்டிற்கு பின்னான அயர்லாந்த் ஒரு கத்தோலிக்க பகுதியாகவே இருந்து வந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிகழ்ந்த மத சீர்த்திருத்தங்களால் ப்ரோடெஸ்டண்ட் (சீர்திருத்தவாதம்?) கிருத்துவம் இங்கிலாந்தின் ஆதிக்க மதமாக உருகொள்கிறது. இதே காலகட்டத்தில் இங்கிலாந்த் அயர்லாந்தினுள் கால் வைக்கத்தொடங்குகிறது. அதை அயர்லாந்த் விரும்பவில்லை, எதிர்க்கிறது. பிரச்சனை கத்தோலிக்க மதம் – ப்ரோடஸ்டெண்ட் மதம் என்ற மத அடையாளத்தோடு தொடர்கிறது. கத்தோலிக்கர்களுக்கும் ப்ரோடஸ்டண்ட்களுக்குமிடையே நிறைய சண்டைகள் நிகழ்கின்றன. இரு பிரிவுகளுமே பெரும் இழப்பை சந்தித்துவிட்டனர். டெர்ரி நகரம் அயர்லாந்த் இங்கிலாந்த் எல்லையில் உள்ள நகரம் என்பதால் இந்நாடுகளின் வரலாறு டெர்ரியில் குவிமையம் கொள்கிறது.

இங்கே போர்களில் இறந்த ப்ரோடெஸ்டண்ட்களின் உடல் செறிந்த மண்ணை உண்டபடியே அமர்ந்திருக்கிறது கல்லறைத்தோட்டத்து பறவை. காலம் உறைந்து நிற்கும் அந்தப் பறவை நம் ”வரலாறு”களை எல்லாம் மெல்ல மெல்ல உண்டு செறித்துகொண்டிருக்கிறது.

தேவதேவனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
விருட்டென்று தாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரீலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன்

நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை

ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

தேவதேவனின் குருவியும் கெர்ரி ஹார்டியின் காக்கையும் காண்பது ஒன்றையே தான். தூரத்திருந்து பார்க்கையில் புலப்படும் நம் வாழ்வின் “சிக்கல்”களுக்கு பின்னிருக்கும் அபத்தம்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

12 replies on “கவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு…”

நல்ல பதிவு.மனங்களைப் பற்றி சங்க கால கவிதை மட்டுமே பேசுவதாக தல நச்சென சொல்லிவிட்டார் 😉 இப்படிப்பட்ட பாழும்மனங்களைப் பற்றிய கவிதைகள் ஹில்டனில் எழுத முடியாது போன்ற சுஜாதாதுவ வார்த்தைகள் என்றைக்குமே காட்சி சம்பந்தமான கவிதையை இனம் காணக் கைக்கொடுக்கும். போர் கவிதைகள் வேறுவிதம்;வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் புரிவது கடினம்.

Wilfred Owen வகையினர் கவிதைகள் புரியக்கூடிய யுத்தக் கவிதைகள் – இழப்பு,அபத்தம் மட்டுமே இதன் குறிக்கோள். முதல் மகாயுத்தத்தில் எழுதப்பட்டிருந்தாலும், ஊர், தெரு பேர்களை மாற்றி ஐரிஷ்,ஈராக் களங்களையும் புரிய வைக்கக்கூடிய கவிதைகள்.

Wilfred Owen கவிதைகளையும் படித்துப் பாருங்கள்.

வில்ஃப்ரெட் ஓவன் அறிமுகத்திற்கு நன்றி கிரிதரன். இறக்கி விட்டேன். படித்துப்பார்க்கிறேன்.

http://www.gutenberg.org/files/1034/1034-h/1034-h.htm

//மனங்களைப் பற்றி சங்க கால கவிதை மட்டுமே பேசுவதாக தல நச்சென சொல்லிவிட்டார் // அவர் அப்படி சொல்லவில்லை கிரிதரன். அவரது தமிழ் ஆசிரியர் சொன்னதாக வரும் வரி அது. ”சங்கப்பாடல்கள் எதை பற்றி பேசும் போதும் மனதை பற்றி மட்டுமே பேசுகின்றன.”

//பாழும்மனங்களைப் பற்றிய கவிதைகள் ஹில்டனில் எழுத முடியாது போன்ற//

ஹில்டன்?? இது என்ன?

// அவர் அப்படி சொல்லவில்லை கிரிதரன். அவரது தமிழ் ஆசிரியர் சொன்னதாக வரும் வரி அது//

நான் தவறான முறையில் எழுதிய வரி.வார்த்தைகள் மாற்றியதால் அர்த்தமும் மாறிவிட்டது.

//ஹில்டன்?? இது என்ன?//

ஃபை ஸ்டார் அறைகளில் ஏ.சிக்கு அடியில் இப்படிப்பட்ட கவிதைகளை எழுத முடியாது என சுஜாதா சொல்லியதாய் ஞாபகம். ஹில்டன்(Hilton) அப்படிப்பட்ட ஹோட்டல் என்பதால்,இங்க சும்மா அடிச்சு விட்டேன்.வேற ஒண்ணுமில்லை.

ம்ம்… புரிந்தது கிரிதரன்.

//ஃபை ஸ்டார் அறைகளில் ஏ.சிக்கு அடியில் இப்படிப்பட்ட கவிதைகளை எழுத முடியாது என சுஜாதா சொல்லியதாய் ஞாபகம். // நீண்ட நாட்களுக்கு முன் வாசித்த ஈழத்து கவிதை ஒன்றில், மிக வசதியாக ஐரோப்பாவில் வாழும் அகதி ஒருவர், இப்பொழுதும் ஹெலிக்காப்டர் சத்தம் கேட்டால் பதுங்கு குழியை தேடும் பதட்டம் குறித்து எழுதி இருப்பார். இதை எழுத இவர் ஏழு நட்சத்திர விடுதியிலும் இருக்கலாம். 🙂

சித்தார்த்,

அருமையான பதிவு. பகிர்வு. அருமையான மொழியாக்கமும் கூட. ஆனாலும்,

“as the love that might explain him
yet may not be explained.”

என்னும் வரி சொல்வதை “அதை விளக்கும்,
விளக்கவியலா அன்பை போல.” முழுதும் சொல்கிறதா என்று தெரியவில்லை. வேறு மாதிரி முயற்சி செய்தாலும் வரவில்லை. சரியாகத்தான் இருக்கும்.

ஒரு வேளை “அதை விளக்கக்கூடிய, ஆயினும் விளக்கவியலா அன்பை போல” என்று வரலாமோ!

போலவே ‘resolved’ இந்தத் தருணத்தில் ‘நிறைவுறுகின்றன’ சரியான பொருளைத் தருகிறதா? எனக்கு என்னவோ ‘தீர்க்கப் படுகின்றன’ அல்லது ‘சமனாகின்றன’ என்றெல்லாம் யோசித்தாலும் திருப்தி வரவில்லை.

Not sure whether I am conveying properly. Resolved in this case is something was amiss and it is sorted out.

வரலாறு பற்றி என்னுடைய எண்ணமும் உங்களைப் போலத்தான். History is a story as told by the victor என்பார்களே. It is only a version.

தேவதேவன் கவிதையும் பொருத்தம். Could relate to the similar thought process.

கிரிதரனுக்கும் நன்றி. Wilfred Owen கவிதைகள் நல்லா இருக்கும்னு தோணுது. “Strange meeting” and its ‘Another version’ was quite interesting. சித்தார்த், நீங்க அதையும் மொழியாக்கம் செய்யலாமே.

ரொம்ப சாரி, இவ்வளவு பெரிய பின்னூட்டத்திற்கு.

அனுஜன்யா

நன்றி.நான் மொக்கைத்தனமாக தமிழாக்கம் செய்த Wilfred Owen இங்கே -http://beyondwords.typepad.com/beyond-words/2009/04/wilfred-owen.html

அதை நாகார்ஜுனன் அற்புதமாக மாற்றியது இங்கே –

http://beyondwords.typepad.com/beyond-words/2009/04/wilfred_nagarjunan.html

என்ன செய்ய, நமக்கு முடிந்தவரையில் தானே செய்யமுடியும்.

கிரி.

வணக்கம் அனுஜன்யா.

நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. 🙂

முதல் படியில் ”ஆயினும்” போட்டே மொழிபெயர்த்திருந்தேன். பின்பு, அந்த வரியினில் வந்த yet என்ற சொல்லை அப்படியே தமிழில் தர வேண்டாம், yetன் பணியினை “,” செய்கிறது என நினைத்தேன். தொடர்புள்ளி போடாமல் ”விளக்கவியலா அன்பை போல” என்பதை அடுத்த வரியினில் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என இப்போது தோன்றுகிறது.

resolved – நிறைவுருகின்றன. இது எனக்கும் நெருடலாகவே இருக்கிறது. ஆனால் நான் நினைத்த பொருளினை (it all comes to an end here) நிறைவுருகின்றன கிட்டத்தட்ட தந்ததாக தோன்றியதால் வைத்தேன். வேறு சரியான சொல் கிடைத்தால் மாற்றலாம்.

//நீண்ட நாட்களுக்கு முன் வாசித்த ஈழத்து கவிதை ஒன்றில், மிக வசதியாக ஐரோப்பாவில் வாழும் அகதி ஒருவர், இப்பொழுதும் ஹெலிக்காப்டர் சத்தம் கேட்டால் பதுங்கு குழியை தேடும் பதட்டம் குறித்து எழுதி இருப்பார். இதை எழுத இவர் ஏழு நட்சத்திர விடுதியிலும் இருக்கலாம்.//

??????

//நீண்ட நாட்களுக்கு முன் வாசித்த ஈழத்து கவிதை ஒன்றில், மிக வசதியாக ஐரோப்பாவில் வாழும் அகதி ஒருவர், இப்பொழுதும் ஹெலிக்காப்டர் சத்தம் கேட்டால் பதுங்கு குழியை தேடும் பதட்டம் குறித்து எழுதி இருப்பார். இதை எழுத இவர் ஏழு நட்சத்திர விடுதியிலும் இருக்கலாம்.//

இது உங்கள் கருத்தா?

வணக்கம் சன்னாசி.

////நீண்ட நாட்களுக்கு முன் வாசித்த ஈழத்து கவிதை ஒன்றில், மிக வசதியாக ஐரோப்பாவில் வாழும் அகதி ஒருவர், இப்பொழுதும் ஹெலிக்காப்டர் சத்தம் கேட்டால் பதுங்கு குழியை தேடும் பதட்டம் குறித்து எழுதி இருப்பார். //

இது வரை கவிதையில் இருந்தது.

//இதை எழுத இவர் ஏழு நட்சத்திர விடுதியிலும் இருக்கலாம்.//

இது என் கருத்து.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s