பிரிவுகள்
அயல் இலக்கியம் இலக்கியம் சிறுகதை மொழிபெயர்ப்பு

பயமறியா ஜான் – இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ
இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ இத்தாலிய இலக்கியவாதி. Invisible Cities, If on a winter’s night a traveller போன்ற நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர். Invisible Cities, தொலைந்த புலப்படாத நகரங்கள் என்ற பெயரில் (ச. தேவதாஸ் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்) தமிழில் வந்துள்ளது. இவர் எழுத்தாளராக மட்டுமல்லாது இத்தாலிய நாடோடிக்கதைகளை சேகரித்து தொகுத்து வெளியிட்டவரும் ஆவார். 1956ல் இவர் வெளியிட்ட Italian Folktales என்ற நூல் வாசிக்க கிடைத்தது. ஆங்கில நாடோடிக் கதைகளை க்ரிம் சகோதரர்கள் தொகுத்தது போல இத்தாலியில் செய்யப்படவில்லை. இக்கதைகள் தொலைந்துபோய் விடக்கூடாது என்ற முனைப்புடன் தான் இக்கதைகளை தொகுத்ததாக இதன் முன்னுரையில் கூறுகிறார். எனக்கு மாயக்கதைகள் என்றால் கொள்ளை இஷ்டம். நார்நியா, ஹாரி பாட்டர் தொடங்கி ஆர்டிமஸ் ஃபௌல் வரை எதையும் விடுவதில்லை.  பாடும் காக்காய்கள் பேசும் நரிகள் பேராசை பிடித்த ஆமைகள் வஞ்சக பாம்புகள் அன்பான சற்றே சற்று கர்வமுடைய முயல்கள் வாழும் மாய உலகிலிருந்தே கதை சொல்லுதல் நமக்கு அறிமுகமாகின்றன என்பதனாலேயே மாயக்கதைகளிலிருந்து நம்மை நம்மால் பிரித்துக்கொள்ள முடியவில்லை என்றெல்லாம் பேச ஆரம்பித்தால் அது மாயக்கதைகள் வாசித்தலுக்கு எதிரான செயலாக இருக்கும் என்பதனால், பேச்சை நிறுத்திவிட்டு, இத்தொகுப்பிலிருந்து ஒரு கதையை மொழிபெயர்த்து இங்கு இடுகிறேன்.

இத்தாலிய நாடோடிக்கதைகள்
இத்தாலிய நாடோடிக்கதைகள்


பயமறியா ஜான்.  – இடாலோ கால்வினோ

(தமிழில் : சித்தார்த்)
முன்னொரு காலத்தில் பயமறியா ஜான் என்றொருவன் இருந்தான். எதை கண்டும் அஞ்சாதவன் என்பதால் அவனுக்கு இந்த பெயர். உலகமெல்லாம் சுற்றித்திரிந்த ஜான் ஒரு விடுதிக்கு வந்து சேர்ந்தான். ”அறை எதுவும் காலியாக இல்லை” என்று கூறிய விடுதி உரிமையாளர், “உங்களுக்கு பயம் இல்லையென்றால் வேறொரு இடம் சொல்கிறேன், அங்கே போய் தங்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

“நான் எதற்கு அஞ்ச வேண்டும்?”

“மக்கள் அந்த மாளிகையை பற்றி நினைக்க கூட அஞ்சுவர். அங்கு போன எவருமே உயிருடன் திரும்பியதில்லை. காலையில் தேவாலைய ஊழியர்கள் சென்று இரவு அங்கே தங்கச்சென்றவர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்”

என்ன செய்தான் ஜான்? வேறென்ன, கையில் ஒரு விளக்கு, வைன் புட்டி, கொஞ்சம் கோழி இறைச்சி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நேராக மாளிகை நோக்கி நடந்தான்.

நள்ளிரவில், மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து அந்த குரல் கேட்டது.

“அதை கீழே போடட்டுமா?”

“ம்ம். போடு” என்றான் ஜான்.

உடனே, புகைகூண்டு வழியாக ஒரு மனிதனின் கால் மட்டும் வந்து விழுந்தது.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு”

இன்னொரு காலும் விழுந்தது. கோழி இறைச்சியை கொஞ்சம் கடித்துக்கொண்டான் ஜான்.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு” ஒரு கை வந்து விழுந்தது. ஜான் ஒரு ராகத்தை சீட்டி அடிக்கத்தொடங்கினான்.

“அதை கீழே போடட்டுமா?”

”தாராளமாக.” இன்னொரு கை விழுந்தது.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம்.”. ஒரு மனிதனின் உடல் மட்டும் கீழே விழுந்தது. கைகளும் கால்களும் அதனுடன் ஒட்டிக்கொள்ள தலையற்ற மனிதன் அங்கே நின்றுகொண்டிருந்தான்.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு”

கீழே விழுந்த தலை நேராக உடலில் போய் ஒட்டிக்கொண்டது. அந்த உருவம் ஒரு பூதமே தான். ஜான் தன் கோப்பையை அதன் திசையில் உயர்த்தி, “உனது ஆரோக்கியத்திகாக” என்றான்.

“விளக்கை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றது பூதம்.

ஜான் விளக்கை எடுத்துக்கொண்டான். ஆனால் நகரவில்லை.

”நீ முதலில் நட” என்றது பூதம்.

“ம்ஹும். உன் பின்னால் வருகிறேன்” என்றான் ஜான்.

“முதலில் நீ” என்று உறுமியது பூதம்.

”நீ முன்னால் போ” என்று கத்தினான் ஜான்.

பூதம் முன்னால் நடக்க விளக்கை எந்தியபடியே ஜான் பின் தொடர, அவர்கள் ஒவ்வொரு அறையாக கடந்து கடந்து இறுதியில் ஒரு படிக்கட்டுக்கு கீழே இருந்த சிறிய கதவை அடைந்தனர்.

“அதை திற” உத்தரவிட்டது பூதம்.

“நீ திற” என்றான் ஜான்.

பூதம் தன் தோளால் முட்டி அக்கதவை திறந்தது. உள்ளே சுழற்படிக்கட்டுகள் தெரிந்தன.

“கீழே போ” என்றது பூதம்.

“உன் பின்னால்” என்றான் ஜான்.

அவர்கள் கீழே செல்ல அங்கே ஒரு சிறிய அறை இருந்தது. தரையில் கிடந்த ஒரு கல் பலகையை சுட்டி “அதை தூக்கு” என்றது பூதம்.

”நீ தூக்கு” என்றாரன் ஜான். பூதம் அதை ஒரு கூழாங்கல்லை தூக்குவதை போல எளிதாய் தூக்கி போட்டது.

கல்லின் கீழே தங்கக்காசுகள் நிறைந்த மூன்று குடங்கள் இருந்தன.

“அவற்றை மேலே தூக்கிச்செல்” என்று உத்தரவிட்டது பூதம்.

“நீ தூக்கிச்செல்” என்றான் ஜான். பூதம் ஒவ்வொன்றாக மேலே தூக்கிச்சென்றது.

அவர்கள் மீண்டும் மாளிகையின் கூடத்தை அடைந்த போது பூதம் கூறியது, “ஜான், சாபம் நீங்கிவிட்டது!”, இதை கூறியதும் அதன் ஒரு கால் மட்டும் தனியாய் பிரிந்து புகை கூண்டின் வழியே மேலேறியது.

”இதில் ஒரு பானை தங்கம் உனக்கானது. ” ஒரு கை பிரிந்து மேலேறியது. ”இரண்டாவது பானை, நீ இறந்துவிட்டாய் என்று நினைத்து உன் உடலை தூக்கிச்செல்ல காலையில் வருவார்களே, அந்த தேவாலைய ஊழியர்களுக்கு.” இன்னொரு கையும் பிரிந்து முதல் கையை தொடர்ந்து சென்றது. “மூன்றாவது பானை, உனை காண வரும் முதல் ஏழைக்கானது.” இன்னொரு காலும் பிரிய, பூதம் தரையில் கிடந்தது. ”இந்த மாளிகையை நீயே வைத்துக்கொள்”. தலையை பிரிந்த உடல் மேலேறிச்சென்றது. “இம்மாளிகையின் உரிமையாளர்களும் அவர்களது குழந்தைகளும் இனி திரும்பப்போவதில்லை”. இதை கூறியதும் தலையும் புகைக்கூண்டின் வழியே மறைந்துவிட்டது.

விடிந்த போது அந்த ஒலி எழுந்தது, “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்.”. இறந்த உடலை தூக்கிச்செல்ல தேவாலைய ஊழியர்கள் வந்திருந்தனர். அவனோ சன்னலருகே நின்றபடி புகைபிடித்துக்கொண்டிருந்தான்!

பயமறியா ஜான் அந்த தங்கங்களினால் செல்வந்தனாகி அந்த மாளிகையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான். பின்னொரு நாள் பின்னால் திரும்பி தனது நிழலை பார்த்தான். பயத்தில் அந்த இடத்திலேயே அவனது உயிர் பிரிந்தது.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

15 replies on “பயமறியா ஜான் – இடாலோ கால்வினோ”

நன்றி ரகு. இந்த கடைசி வரியை படிக்கையில், இவ்வரி கதையை வேறொரு தத்துவத் தளத்திற்கு எடுத்து செல்கிறதென்றும், இவ்வரி அதிர்ச்சி மதிப்பிற்காக கால்வினோவால் சேர்க்கப்பட்ட வரிகளாக இருக்கலாமென்றும் ஒரே சமயத்தில் தோன்றுகிறது. ஆனால் இவ்வரி கதைக்கு ஒரு open-endednessஇனை தருவது என்னவோ உண்மை.

அன்புள்ள சித்தார்த்,
சற்று தாமதமாக்வே வாசிக்கிறேன்… உங்களை. கால்வினோ சொல்லும் நாடோடிக் கதை போல இங்கேயும் உண்டு. ரத்ன குமார் என்று பி.யு சின்னப்பா, பானுமதி(எம்.ஜி.ஆர் ஒரு குட்டி வேடத்தில் வருவார்) நடித்து வந்த படத்தின் கதை இதுதான். அதுவே பின்னாளில் மாய மோதிரம் என்ற பெயரில் காதாராவ் \, பாரதி, விஜயலலிதா நடிக்க விட்டலாசார்யா தயைப்பில் வந்து சக்கைப் போடு போட்டது.ம்ஹூம் அதெல்லாம் ஒரு காலமப்பா
கலாப்ரியா

”கடைசி வரியை படிக்கையில், இவ்வரி கதையை வேறொரு தத்துவத் தளத்திற்கு எடுத்து செல்கிறதென்றும், இவ்வரி அதிர்ச்சி மதிப்பிற்காக கால்வினோவால் சேர்க்கப்பட்ட வரிகளாக இருக்கலாமென்றும் ஒரே சமயத்தில் தோன்றுகிறது “

சித்தார்த் தங்களுக்குத் தோன்றிய தத்துவ விளக்கம் என்னவென்று சொல்லுங்களேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s