பிரிவுகள்
இலக்கியம் கடந்து சென்ற கவிதை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு

உயரத்திருந்து யாசித்தல்

பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 – 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு “அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,” என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு வள்ளல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வரலாற்று ரீதியில் முக்கியமான பாடலாக இருக்கலாம். மற்றபடி வேறெந்த சிறப்பும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை. ஆனால் அடுத்த பாடல் சட்டென வேறோர் தளத்திற்கு தாவி விடுகிறது. இதுவும் ஒரு யாசகப்பாடல் தான். ஆனால் தட்டையான, “எனக்கு ஏதாவது தா” என்ற தொனி இல்லை இப்பாடலில்.

புறம் 159 :

`வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;

பசந்த மேனியொடு படர்அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்ப்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;

என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்

கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என்,
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-

உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

“என் வாழ்நாளைக் கடந்தும் பல ஆண்டுகள் உயிரோடிருக்கிறேன். இன்னும் என் உயிர் பிரியவில்லையே” என புலம்புகிறாள் என் தாய். ஊன்றுகோலை காலாக கொண்டு சிறு சிறு அடிகளாக நடக்கிறாள். நூலை விரித்தாற்போன்ற கூந்தல் அவளுடையது. கண் பார்வை மங்கியதால் முற்றத்திற்கு கூட செல்ல முடியாமல் கிடக்கிறாள்.

பிள்ளைப்பேற்றால் சோர்ந்த உடம்புடன் துயரத்தால் வருந்துபவள் என் மனைவி. இடுப்பில் இருக்கும் குழந்தைகள் பிசைந்து பிசைந்து வாடிய முலைகளுடையவள். குப்பைக்கீரையின் இளந்தளிரினை பறித்து உப்பு இடவும் வழியின்றி நீரையே உலையாக ஏற்றி காய்ச்சி  சமைத்து மோரில்லாமல் உண்கிறாள்.  அழுக்கேறி கிழிந்திருக்கின்றன அவளது உடைகள். இருந்தும் இல்லற வாழ்வை பழிக்காதவள்.

இவர்கள் இருவரும் மகிழ வேண்டும்.

காட்டை எரித்த நிலத்தில் நடப்படும் பயிர் பசுமையாக வளர்ந்து, கோடையில் வாடுகையில், இழும் என்ற முழக்கத்துடன் மழை பொழியும் வானத்தை போல நீ தரும் பொருளால், பசியால் வாடிய என் சுற்றத்தார் உனை பாராட்ட வேண்டும்.

ஆனால் ஒன்று. அழகிய தந்தங்களை உடைய யானையையே எனக்கு பரிசாக தருவதானாலும் அதை அன்போடு தரவில்லையெனில் எனக்கு அது வேண்டாம். உள்ளத்தில் அன்புடன் நீ எனக்கு தரும் பரிசு மிகச்சிறியதானாலும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்.

கூரிய வேலினைக்கொண்ட குமணனே, உன்னை பாராட்டி பாடிக்கொண்டிருக்கும் நான் பெருமைமிக்க ஓர் குடும்பத்தில் பிறந்தவன்.
பாடலின் முதல் பகுதி முழுவதும் வறுமையின் கொடுஞ்சித்திரம் சிறு சிறு குறிப்புகளின் மூலம் தீட்டப்படுகிறது. மரணத்திற்கான காத்திருப்பு , ஊன்று கோலுடன் சிறுசிறு அடிகளாலான நடை, நிறைய குழந்தைகள்,  பிசைந்து பிசைந்து வாடிய முலைகள், குப்பை கீரையின் சிறிய தளிர்களை உப்பும் மோரும் இன்றி சமைத்தல்…. பின் மழையுடன் குமணனை ஒப்பிடும் நான்கு வரிகள். இப்பகுதியை எழுதியது பெருஞ்சித்திரனார் என்ற தன் குடும்பத்து வறுமையை ஆற்றாமையுடன் நோக்கிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனாகத்தான் இருக்க வேண்டும். ஈ என இரத்தலின் இழிநிலையில் வாடும் ஒரு பெருங்கவிஞன் இப்பாடலில் கடைசி பகுதியை எழுதுகிறான். ஆம். என் வீட்டில் சோறு கூட இல்லை. கீரையை நீரில் கொதிக்க வைத்து உண்கிறோம். அதனால் என்ன?  இசைமேந்தோன்றல் உனை பாடிய யான். கவிஞன். எனக்குறிய கௌரவத்துடன் தா, தரும் பொருளை. அப்படி தருவதானால் சிறு பொருளை தந்தாலும் ஏற்றுக்கொள்வேன். இல்லையா? பெரிய யானையையே கொடுத்தாலும் வேண்டாம்.

வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்கிறான் பாரதி. இசை மேந்தோன்றல் நினை பாடிய யானே என்கிறார் பெருஞ்சித்திரனார். கவிமனத்தின் உயரத்திற்கும் வாழ்வியல் அல்லல்களின் பள்ளத்திற்குமான இடைவெளியே இக்கவிதையின் கூரிய முரணாய் தெரிக்கிறது.

பெருஞ்சித்திரனாரின் கவிதைகளை வாசித்தபோது மு. சுயம்புலிங்கம் நினைவிற்கு வந்தார். இவர் எழுதிய மிக சில கவிதைகளையே படித்திருக்கிறேன். இருப்பினும் வறுமையை குறித்து எழுதும் கவிஞர் என்ற பிம்பம் என்னளவில் இவருக்கு விழுந்துவிட்டது. எப்போதோ படித்த ஒரு கவிதையில் வறுமையில் வாடும் மனைவியை பார்த்தபடியே நின்றிருப்பார். நைந்த புடவை, வாடிய உடல், ஒளியிழந்த கண்கள், நகை அணியாத கழுத்து கை காதுகள். தாலிக்கொடியில் இருக்கும் சிறு தங்க ஊக்கு கண்ணை பறிக்கிறது. கேட்கலாம் தான். கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்தும் விடுவாள் தான். ஆனாலும்…. அறுந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்தபடியே கவிதையை விட்டு வெளியேறுவார் சுயம்புலிங்கம். வறுமையை பார்க்க நேரும் போதும் அது குறித்து படிக்கும் போதும் இந்த காட்சி வந்து மறையும்.

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாய் கிடைக்கிறது
இச்சையை தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால் நீட்டி தலைசாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்கு கிடைக்கும்
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.

– மு. சுயம்புலிங்கம்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

10 replies on “உயரத்திருந்து யாசித்தல்”

நல்ல பதிவு. பாரதி, “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்று சொன்னது மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எனக்கு சக்தி கொடு என்பதல்லவா? அது இங்கே எப்படி பொருந்திப் போகிறது?

வணக்கம் சாணக்கியன். பாரதி அக்கவிதையை எழுதிய போது அவன் குடும்பம் ஏழ்மையில் வாடிக்கொண்டு தான் இருந்திருக்கும். ஆயினும் அவ்வரிகளில் தொனிப்பது ஏழ்மையின் யாசக மொழி அல்ல. கவியின் உயர்ந்த மேடையில் அமர்ந்தபடி இந்த மாநிலத்தை வாழ வைக்க வல்லமை தா என்கிறான். இவ்வரிகளின் ஆதார மனநிலை, பெருஞ்சித்திரனாரின் மனநிலையோட ஒத்துப்போவதை போல தோன்றியதாலேயே இதை எழுதினேன்.

\\எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.\\

மிகுந்த வேதனையளிக்கின்றது.

சுயம்புலிங்கத்தின் கவிதை இதயத்தைக் கனக்கச் செய்தது!! பல வேளைகளில் வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிக்கும் போது, அது பற்றி இன்னொருவரால் சொல்லப்படும் வர்ணனைகள் கண்ணீரை வரவழைப்பது தவிர்க்க முடியாதது தான்.

நல்ல பதிவு சித்தார்த்.

வாழ்த்துக்கள்.

தனது வறுமையை ஒழிவு மறைவு இன்றிப் பாடிய புலவர் பெருஞ்சித்திரனார். ஆனால், அந் நிலைமையிலும், மானம் மரியாதை பார்ப்பவர். இப் பாடல் அதற்கொரு சான்று.

|| உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே||

இதை, /விறற்புகழ் வசைஇல் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றல் கூர்வேற் குமண, நிற் பாடிய யானே, உவந்து நீ இன்புற விடுதி யாயின் சிறிது குன்றியும் கொள்வல்; அதற்பட அருளல் வேண்டுவல்./ என்று வாசிக்க வேண்டும். அதாவது, குலப்பெருமை குமணனுக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s